Prata Smarana Stotra

ப்ராத: ஸ்மரண ஸ்தோத்திரம்

குருவின் திருவடிகள் சரணம்

ஐங்கர சங்கர அருமறை முதலே
அனுதின முதலிருந் தருள்தரு திருவே
மங்களக் காலடி மலர்முகிழ் நிதியே
மறைமெய் மொழிதரு மதிவருங் குருவே

விழித்தும் விடைத்தும் விதைத்துள் மடமை
பதித்தும் கிடக்கும் பழியவை உடைத்து
எழுமின் எனயெமை எழுப்பிடும் குருவை
தொழுமென் னுள்ளம் துணைகுரு வடிவே

பணிவுரை

பகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது. அதனை நாம் நன்றாகப் புரிந்து, உணர்ந்து நடந்தால், இவ்வாழ்க்கையில் நமக்கு மிகப் பெரிய வலிமையும், விடுதலையும் கிடைத்துவிடும்.

ஆனால் வேதாந்தம் என்றாலே, “இதெல்லாம் நமக்குப் புரியாதது” என்று நம்மில் பெரும்பாலோர் ஒதுங்கி விடுகின்றோம். வேதாந்தமும், அவற்றின் விளக்கமாக ஆதி சங்கரரும், அவரைப் போன்ற பல ஞானிகளும் தந்திருக்கும் உரைகள் எல்லாமும், சம்ஸ்கிருத மொழியிலேயே அமைந்திருப்பதாலும், அம்மொழியை நாம் நன்கு அறிந்திராத காரணத்தாலும், விரும்பினால் கூட, நம்மால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. அவற்றின் மொழி பெயர்ப்புக்களாகப் பலர் அளித்திருக்கும் உரை நூல்களும், விளக்கங்களும் எளிதில் புரிந்து கொள்வதற்கு உதவாமல் மிகவும் கடினமானதாக இருப்பதாகவே தோன்றுகின்றன.

மற்றும் வேதாந்தம் என்பது, வயதான காலத்தில் மட்டுமே படிப்பது என்றும், அல்லது உலக வாழ்க்கையை உதறிவிட்டுத் துறவு கொள்பவருக்கு மட்டுமே என்றும் சிலர் நினைப்பதுண்டு.

மேலும் நம்மில் பலருக்கு, வேதாந்தம் மற்றும் ஆதி சங்கரர் போன்ற ஞானியரின் நூல்கள் எல்லாம், ஒரு மதத்தினைச் சார்ந்த கருத்துக்கள் என்பதாகவும், கடவுள்கள் பற்றிய நம்பிக்கையை ஒட்டியே அவை எல்லாம் உள்ளன என்பதாகவும், அத்தகைய நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை ஏற்க முடியாது என்பதாகவும் பல எண்ணங்கள் உண்டு. அறிவியல் முன்னேற்றம் அடைந்து வரும் நமக்கு, வேதாந்தப் படிப்பெல்லாம் தேவையற்றது எனவும் நினைத்து, இவற்றைத் தவிர்ப்பவர்களும் உண்டு.

இதன் காரணமாக, மனிதர்கள் எல்லாம் அறிந்து, உணர்ந்து, உயர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட, இவ்வரிய அறிவுப் பொழிவு எல்லாம், பாலை நிலத்திலே கொட்டி வீணாகும் பருவ மழையைப் போலவே இருக்கின்றன.

வேதாந்தமும், பகவான் ஆதி சங்கரர் போன்ற ஞானிகளது விளக்கங்களும் நிச்சயமாக ஒரு மதத்தினைச் சார்ந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்துக்கு மட்டுமென்றோ, நிரூபணத்திற்கு அப்பாற்பட்ட வெறும் நம்பிக்கையால் மட்டுமே விளந்தவை என்றோ கொள்வதும் தவறு. அவை பொதுவுடமை, எல்லா மனித சமுதாயத்துக்கும் கிடைத்துள்ள பரிசு! ஏனென்றால் வேதாந்தம் என்பது, முழுக்க முழுக்க நம்மைப் பற்றியது மட்டுமே. அது, நம்மையும், நாம் வாழும் உலகத்தையும், இவை எல்லாவற்றுக்குக் காரணமான சக்தியையும் பற்றிய அறிவே ஆகும்.

வேதாந்தப் படிப்பு என்பது போல வேறு எந்தப் படிப்பும் இருப்பதில்லை. வேதாந்தப் படிப்பு, நம்மையே நாம் படிப்பது. அதுவே தன்னறிவும், தன்னுணர்வும் தரக்கூடிய ஆய்வு. அதன் உண்மை, நம்மை உயர வைப்பது, உயர்த்தி வைப்பது. உலக அனுபவங்களை எல்லாம் இனிமையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தரக்கூடியது. எல்லோரும், எப்போதும் முனைந்து அறிந்து கொள்ள வேண்டிய மருந்து, உண்மை விருந்து.

அத்தகைய வேத சாரத்தை மட்டுமே தருகின்ற இந்த நூலைப் படிக்க ஆரம்பித்துவிட்ட உங்களுக்கு, இதை படித்து முடிக்கும்போது, உங்களுக்குத் தேவையான,வாழ்க்கைக்கு உறுதுணையான ஓர் மறை பொருள் உண்மையினையே இந்த நூல் தந்து விட்டது என்ற உறுதி வர வேண்டும், அப்படியே வரும். அதன் பொருட்டே, இவரிய நூலை, ஆழ்ந்து பயிலுங்கள் எனப் பரிந்து அழைக்கிறேன்.

முதலில் இந்நூலின் தலைப்பைப் புரிந்து கொள்வோம்.

“ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இந்நூலின் தலைப்பின் பொருள், “அதிகாலையில் சிந்திக்கப்பட வேண்டிய பேருண்மை” என்பது ஆகும்.
சம்ஸ்கிருத மொழியில், பொதுவாக, “ஸ்தோத்திரம்” எனும் சொல்லுக்கு, “புகழுதல்” என்பதே பொருள். இந்த நூலினை ஆய்ந்தால், இத்தலைப்பில், “ஸ்தோத்திரம்” என்பதற்குப் “போற்றுதற்குரிய உண்மை” என்று நாம் பொருள் கொள்வது சரியாகப்படும். அப்படிப் போற்றுதற்குரிய மறை பொருள் உண்மை, ஒரு பரம ரகசியம் ஆகும்.
பொதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ, அதையே நாம் ரகசியம் என அழைப்போம். ஆனால் அந்த ரகசியமே, ஒருவரால், ஒரு முறையேனும் வெளிப்படையாகக் கூறப்பட்டு விட்டால், அதற்குப் பிறகு அதை நாம் ரகசியம் என்று அழைப்பது இல்லை. ஏனெனில், அறிவினாலோ, புலனினாலோ அதை நாம் அறிந்து கொண்டு விட்டால், அதற்கு அப்புறம் அது ரகசியமாய் விளங்குவதில்லை. எல்லா அறிவியற் கண்டுபிடிப்புக்களும் கூட இப்படித்தான் – ஒரு சமயத்தில், ரகசியமாய் இருந்து, பிறகு வெளிப்படையாகி விடுவன. ஆனால் ஆன்மிகக் கண்டுபிடிப்பான மறை பொருள் உண்மை, எப்பொழுதுமே ஒரு பரம ரகசியமாகவே இருப்பது.
பரம ரகசியம் என்றால், எந்த ரகசியம், பல முறையும் “இதுதான் அது” எனக் காட்டப்பட்டிருந்தாலும், அது தொடர்ந்தும் ஒரு ரகசியமாகவே இருந்து வருவது. “இதுதான்” என அந்த மறை பொருள் உண்மை ஒருக்கால் விளக்கப்பட்டாலும், அது ஒவ்வொருவருடைய தனி அனுபவத்திலே மட்டுமே உணரப்படக் கூடியதாகவே இருக்கிறது. அதனால்தான், ஒருவரின் படிப்பினாலோ, கேள்வியினாலோ, புலனறிவினாலோ, மனதினாலோ அடையப்படாமல், ஒவ்வொருவரின் அனுபவத்தில் மட்டுமே உணரப்படும் உண்மையாக, அது எப்பொழுதும் “பரம ரகசியமாக” இருக்கிறது. அந்தப் பரம ரகசியம் என்ன என்பதைத்தான், வேதாந்த சாரமான இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

நூலின் தலைப்பில் உள்ள, இரண்டாம் சொல்லான “ஸ்மரணம்” என்பதற்கு “அறிவால் சிந்தித்தல்” என்பது பொருள். இவ்வாறு “சிந்தித்தல்” என நூலின் தலைப்பில் நாம் பொருள் கண்டாலும், நூலில் இருக்கும் மூன்று பாடல்களையும் ஆராயும் பொழுது, முதற்பாடலிலே “ஸ்மராமி”, இரண்டாம் பாடலில் “பஜாமி”, மூன்றாம் பாடலிலே “நமாமி” – அதாவது முறையே, “சிந்திக்கிறேன்”, “துதிக்கிறேன்”, “பணிகிறேன்” எனத் தொடங்கி இருப்பதால், அறிவு, மனம், உடல் என எல்லா வகையிலும் ஏற்கப்பட வேண்டிய மறை பொருள் உண்மை என்பதையே, நாம் தலைப்பின் ஆழ்ந்த பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நூலின் தலைப்பில் உள்ள முதற்சொல்லாகிய “ப்ராத:” என்பது “அதிகாலை” என்றாகும். சம்ஸ்கிருத மொழியில் “ப்ரா” என்பதற்கு “முன்னதாக” என்பது பொருள். உதாரணமாக, “ப்ரதோஷம்” என்றால் “தோஷ:” எனும் இரவுக்கு முந்தைய நேரம், அதாவது மாலை நேரம். “ப்ரபோத” என்றால் “போத:” எனும் காலைக்கு முந்தைய நேரம். “ப்ராத:” என்பதும் அவ்வாறே, அதிகாலையைக் குறிப்பது.
அப்படியானால் தலைப்பின் கருத்து, அதிகாலைப் பொழுதில், அறிவாலும், மனதாலும், உடலாலும், சிந்தித்துத் துதித்துப் பணிகின்ற மேலான மறை பொருள் உண்மை என்பதே ஆகும்.

அந்தப் பரம ரகசியமான மறை பொருள் உண்மை என்ன? அதை சிந்திப்பதால் என்ன பயன்? அதுவும், அதிகாலையிலேயே அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு நாம் நிச்சயமாக விடை வேண்டுகின்றோம். எனவே இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.
முதலில் நம்முடைய நாட்களைப் பார்ப்போம்.

நம்மைப் பொறுத்தவரை, துயிலில் இருந்து காலையில் எழும் போதுதான், நமக்கெல்லாம் அன்றைய வாழ்க்கையே தொடங்குகிறது. பிறகு இரவில் படுத்து உறங்கத் தொடங்கியவுடன் அன்றைய வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதனால், விழித்திருக்கும் நிலைதான் முதன்மையானது என நமக்குத் தோன்றுகின்றது. அந்த நிலையில்தான், நாம் உலகத்துடன் உறவாடுகின்றோம். விழிப்பு நிலையில் உள்ள உலகத்து விவகாரங்களில்தான் நாம் நமது வாழ்க்கையை நடத்துகின்றோம். அதனால் உலக அனுபவம்தான் நமது வாழ்க்கை என்று எண்ணுகின்றோம்.

நாம் அனுபவிக்கும் உறக்கம் என்பது ஒரு அறியாமை என்பதும், நமது உலக நடைமுறைச் செயல்களுக்கு, உறக்கம் ஒரு அவசியமான தினசரி ஓய்வு என்பதும் நம் எண்ணம். அதனால் உறக்கம் என்பது நமது வாழ்க்கைக்கு இயற்கை விதிக்கும் இடைச்செருகல் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.

நாம் உறங்கும் பொழுது, ஒருவேளை கனவுகளில் வீழ்ந்தால், அந்தக் கனவு அனுபவங்களையும், இடைச் செருகல்களாகத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். உலக விழிப்பு அனுபவத்தைப் போலவே, கனவு அனுபவங்களும் நமக்கு பாதிப்பைத் தந்தாலும், கனவை நாம் ஒரு கற்பனையாகத் தள்ளி விடுகிறோம்.

அதாவது, விழிப்பு, கனவு, துயில் எனும் அனுபவங்கள் நமக்கு மாறி மாறி வந்தாலும், நமது வாழ்க்கை விழிப்பு அனுபவங்களில் மட்டுமே இருக்கிறது, அதனால் அதுவே உண்மை என்று இருக்கிறோம். விழிப்புலக அனுபவங்களை எல்லாம் இனிதாக மாற்றிக் கொள்ளத்தான் நாம் தினமும் போராடுகின்றோம். அதற்கான செயல்களைச் செய்யவும், அச்செயலுக்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதுமே, வாழ்வில் நமது முக்கியக் குறிக்கோள்.

இதைப் புரிந்து கொண்டவர்கள்தான், தம்மைத் தயார் செய்து கொள்ள, தினமும், நாள் தொடங்கும் முன்னேயே எழுந்து, உலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும் வளப்படுத்திக் கொள்ள உழைப்பார்கள். அது அவசியம்தானே! உதாரணமாக, படிக்கும் மாணவன் அதிகாலையில் படிப்பதும், விளையாட்டுப் போட்டிக்குத் தயார் செய்பவன், விளையாட்டுப் பயிற்சியைச் செய்வதும், இப்படி அவரவர் தேவைக்கேற்ப, நாள் தொடங்கும் முன்னேயே, பயிற்சியும், அவை பற்றிய சிந்தைனையும் கொண்டு இருத்தல் நல்லதல்லவா! இதைத்தானே நமக்கு உலக வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான பாடமாகச் சொல்லி இருக்கிறார்கள்!

அப்படி இருக்கும் போது, அதிகாலையில் எழுந்து விட்டால், அந்த நேரத்தையும், இவ்வாறான உலக அறிவு, ஆற்றலுக்குப் பயன்படுத்தாமல், மறை பொருள் உண்மை எனும் ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவைதானா?

இக்கேள்விக்கு முதலில் உலக வாழ்க்கைத் தேவையை ஒட்டியே விடை தேடுவோம்.

வாழ்வில், நமது குறிக்கோள்கள் பலவாயும், வேறு வேறாகவும் இருந்தாலும், எல்லோருடைய அடிப்படை நோக்கமும் சுகமான வாழ்க்கை என்பதுதான். பயமும், துயரும் இல்லாமல், மேன்மேலும் இன்பம் விழைதலே உயிர்களின் குறிக்கோள். அதற்குத்தான் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறோம், பயன்படுத்துகிறோம்.

அப்படியாயின், ஏன் அறிவும், ஆற்றலும் கொண்டு செயலாற்றினாலும், விளைவுகள் எல்லாவற்றாலும், நமக்குச் சுகம் வருவதில்லை? ஒரு விளைவே, ஒருவரின் பார்வையில் உயர்வாயும், மற்றவர் பார்வையில் குறையாயும் ஏன் தெரிகிறது? தோல்வியில் நாம் ஏன் துவண்டு போய் விடுகிறோம்? சில சமயம், ஏன் சுகத்தைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை? லாட்டரியில் முதற்பரிசு வந்தது எனும் இன்ப அதிர்ச்சியில் இதயம் வெடித்து இறந்தவர்களைப் பற்றிய செய்தியும் இருக்கிறதே!
இதை எல்லாம் ஆய்ந்தால், அறிவும் ஆற்றலும் மட்டுமே, நமது அனுபவங்களை இனியதாக்குவதில்லை. நம்முடைய “பாவனை” அல்லது “அணுகு முறை” மிகச் சரியாக இருந்தால் மட்டுமே, செயலையும், பயனையும் முறையாகக் கையாள முடியும் எனவும், விளைவுகளைச் சரியாக ஏற்க முடியும் எனவும் புரிகிறது.

நாம் குழுந்தைகளுடன் விளையாடும்போது, தோற்றாலும் துயரம் அடைவதில்லை. நாடகத்தில் நோயுற்றவனாக ரசித்து நடிப்பவருக்கும், தனது உடலில் நோய் வரும்போது, பயமும் துயரும் வருகிறது. ஏன்?

ஏனென்றால், ஒன்று விளையாட்டு, இன்னொன்று உண்மை. ஒன்று நடிப்பு, இன்னொன்று பாதிப்பு – இப்படித்தான் நாம் பார்க்கின்றோம். ஆனால், நம்முடைய விழிப்புநிலை அனுபவங்கள் எல்லாமே, ஒரு விளையாட்டுத்தான், ஒரு நடிப்புத்தான் என்று மட்டும் ஆகிவிட்டால்……! அப்புறம் தினசரி நாம் சந்திக்கும் இன்ப துன்பங்களை எல்லாம், நம்மால் மிகச் சுலபமாக ஏற்றுக் கொண்டுவிட முடியுமே! நம்முடைய அணுகுமுறை முற்றிலும் மாறிவிடுமே!

நாம் காணும் உலகத்தையும், அதில் நமது செயல்களையும், எப்படி விளையாட்டாகவும், நாடகமாகவும் நம்மால் அணுக முடியும்? இதை ஆய்வோம். நமது அணுகுமுறைகளுக்கு, நம்முடைய மனமே ஆதாரம். எனவே மனம்தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

எல்லாச் செயல்களுக்கும், எல்லா விளைவுகளுக்கும் அவசியமானது “சரியான அணுகுமுறை” என்பதாலும், அது நம்முடைய மனத்தையும், குணத்தையும் பற்றியது என்பதாலும், மனதை நாம் முதலில் சரியாகக் கையாள வேண்டும். மனமும், அணுகுமுறையும் எல்லாச் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் பொதுவானது என்பதால், அவற்றைச் சரியாகப் பண்படுத்த வேண்டும்.

சரியான அணுகுமுறை மட்டும் நமக்கு இருந்து விட்டால், விடிகின்ற ஒவ்வொரு நாளையும் நன்றாக நம்மால் எதிர்கொள்ள முடியும். எந்த ஒரு வெற்றியும், தோல்வியும், எந்த விதத்திலும் நம்மைப் பாதிக்காமல், அடுத்தடுத்து எவை நமது இலக்கோ, அவற்றை நோக்கி நம்மால் போய்க் கொண்டே இருக்க முடியும். அதற்கான தயார் நிலையையே, வெற்றி பெற விழைபவர்கள் எல்லோரும், அதிகாலையிலேயே சிந்திப்பார்கள்.

அதிகாலை என்பது அமைதியானது. அதுவும் கனவுகள் ஏதுமின்றி ஆழ்ந்த துயிலில் இருந்து எழுகின்ற போது, மொட்டிலிருந்து மலரும் மலரைப் போல, அந்த அதிகாலைப் பொழுதில், நமது மனம் அலைச்சல் இன்றி அமைதியுடன் இருக்கும். அப்போதுதான் நம்மால், நமக்குள் எப்போதும் எழுகின்ற முதல் உணர்வினை, நம்மால் புரிந்து, உணர முடியும்.
நாம் எல்லோருக்கும் எழுகின்ற முதல் உணர்வு “நான்” எனும் உணர்வுதான். அந்த உணர்வினாலேதான் மற்ற எல்லா அறிவும், ஆற்றலும் நம்மால் பிறகு அடையப்படுகின்றன. ஆனால், சட்டென வந்து விடும், இந்த “நான்” எனும் உணர்வின் தன்மையை, நாம் சற்றும் யோசிப்பதில்லை. அது மட்டுமில்லாமல், அந்த “நான்” எனும் உணர்வுக்கு விளக்கமாக, நமது உடலையும், மனதையும் தவறான அடையாளங்கள் என அறியாமல், பொருத்தி விடுகிறோம். அத்தவற்றினாலேயே, அறியாமையும் அதனால் விளையும் துயரங்களும் வந்து விடுகின்றன. அத்தவறு திருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, “நான்” எனும் அந்த உணர்வை நாம் சிந்திக்க வேண்டும் என்றும், அந்த உணர்வு எழும் அதிகாலை நேரத்திலேயே அதைப் பிடித்துக் கொள்வது எளிது என்பதையும் முக்கியமாகக் காட்டினார்கள் நமது பெரியோர்கள்.

எனவே ஆழ்துயிலில் இருந்து எழும் நேரத்தை, “நான்” எனும் உணர்வு உதிக்கின்ற நேரமாகப் பார்க்கிறோம். அப்படியாயின், மறைபொருள் உண்மையாகிய பரம ரகசியம் என்ன என்ற கேள்விக்கும், “நான் யார்” எனும் ஆய்வில் அறியப்படும் விடை எனவும் பொருள் கொள்ளலாம்.

முற்றிலும் கனவுகள் இல்லாது ஆழ்ந்து உறங்குவதும், அப்படியான ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பதும், நமக்கு எப்போதும் கிடைப்பதில்லை. அறிவியலும் ஆய்ந்து சொன்னபடி, கனவுகளே பெரும்பாலும் வந்து போவதுமாய் இருக்கும் உறக்கத்தில், தினமும் குறிப்பிட்ட சில நேரங்களில், கனவுகள் எதுவும் இல்லாத ஆழ்ந்த துயில் இருக்குமாம்.
உதாரணமாக அதிகாலை மணி 3-4:30 எனும் காலம் பொதுவாக கனவற்ற, ஆழ்துயில் இருக்கும் காலம் எனவும் கணித்திருக்கிறார்கள். இந்த அதிகாலை நேரத்தை, “பிரம்ம மூகூர்த்தம்” என மறைகள் அழைக்கின்றன. அதன் காரணம், இந்த அதிகாலை நேரம், “பிரம்மம்” எனும் பரம ரகசியத்தைச் சிந்திக்க வேண்டிய நேரம் என்பது ஆகும். அந்த வகையிலே, மறைபொருள் உண்மையாகிய பரம ரகசியம் என்ன என்ற கேள்விக்கு, “பிரம்மம்” என்பதும் ஒரு விடை என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
“நான்” எனும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்திருக்கும் உணர்வுக்கும், அதே போல “பிரம்மம்” என எல்லா உயிர்களுக்குள்ளும் உயிர்த்திருக்கும் உணர்வுக்கும், பொதுவாக “ஆத்மா” எனும் பெயரை வேதாந்தம் வைத்திருக்கிறது. அப்படியானால், முக்கியமாகக் கருதப்படும் அதிகாலைப் பொழுது, “ஆத்மாவின் தன்மை” பற்றிச் சிந்திக்கின்ற நேரம் என்றே ஆகிறது.

“தன்மை” என்பதனை சம்ஸ்கிருதத்தில் “தத்துவம்” எனும் சொல்லால் குறிக்கலாம். “தத்” என்றால் “அது” எனவும், “த்வம்” எனும் விகுதி “தன்மை” எனவும், அதனால் ஒரு பொருளின் தத்துவம், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் குறிப்பது என்று ஆகும்.

மேலும், சம்ஸ்கிருதத்தில் “தத்வம்” எனும் சொல்லுக்கு மற்றுமொரு விளக்கமாக, “அது நீ” எனவும் பொருள் இருப்பதால், “நான்” எனும் ஆத்மாவும், “பிரம்மம்” எனும் பரமாத்மாவும் ஒன்று என மறைபொருள் உண்மையைக் காட்டுவர் பெரியோர்.

தமிழிலும் அவ்வாறே “தன்மை” எனபதை “தன் மெய்” எனக் கொண்டு, தனக்குள் ஒளிரும் “நான்” எனும் ஆத்மாவே மெய், அதனால் அதுவே பிரம்மம் எனவும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

எனவே, மறைபொருள் உண்மை என நாம் அதிகாலைப் பொழுதிலே சிந்திக்கின்ற ரகசியம் “ஆத்ம தத்துவம்” என்பதே ஆகும். அதாவது “நான்” எனும் உணர்வின் தன்மை.

நாம் தேடிக் கொண்டிருப்பதோ, நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவக்கூடிய வகையில், நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் வழி. இதற்கு ஆத்ம தத்துவம் எப்படி உதவி செய்ய முடியும்?

இதற்குப் பதில் சொல்லும் வேதாந்தம், முதலில், வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய பார்வையை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

உதாரணமாக, விழிப்பே வாழ்க்கைக்கு ஆதாரம் என்றும், கனவு, துயில் அனுபவங்கள் எல்லாம் இடைச்செருகல் என்றும், அதனால் விழிப்புலக அனுபவத்தையே உண்மை என வைத்திருக்கும் நமது நம்பிக்கைகளை, வேதாந்தம் அப்படியே திருப்பி வைத்து விடுகிறது. நாம் விழிப்பே உண்மை எனச் சொல்வதை வேதாந்தம் ஆராயச் சொல்கிறது.

எது முதலில் இல்லையோ, அது எப்பொழுதும் இல்லை. எது முடிவில் இல்லையோ அது எப்பொழுதும் இருக்கவில்லை. இது ஒரு வேதாந்த உண்மை. அறிவியலின்படியும், மாற்றங்கள் எனும் தொடர் பாதிப்பினால், தோற்றங்கள் எதுவும் நிலையாய் இருப்பதில்லை. அதாவது, நாம் இடையிலே அடைவன எல்லாமே நிலையற்றவை.

கருவிலும் துயிலில்தான் நாம் தொடங்குகின்றோம். முடிவிலும் துயிலில்தான் முடிகிறோம். நம் அன்றாட வாழ்வும், துயிலில் தொடங்கித் துயிலில்தான் முடிகிறது. அதாவது அனுபவங்களிலும், துயில்தான் முதலில் இருக்கிறது. விழிப்பும் கனவும் இடைச் செருகல்களே. அதன் அடிப்படையில், வேதாந்தம் விழிப்பு நிலையையும், கனவு நிலையையும், அதனால் அடையும் அனுபவங்களையும் நிலையற்றதாகவே கருத வேண்டும் என்று சொல்கின்றது. அவை தோற்றப் பிழைகள்.

வேதாந்தம் இதற்குச் சூடும் பெயர் “மித்யா” என்பது.

மித்யா பொய்யல்ல, ஏனெனில் அது அனுபவத்தைத் தருகிறது. ஆனால் அது உண்மையுமல்ல, ஏனெனில், அது நிலையாக உள்ளதல்ல. மித்யா எனும் சொல்லுக்கு “அனுபவத்தைத் தந்தாலும், உண்மையில் இல்லாதிருப்பது” என்று புரிந்து கொள்வோம். அதனால், “மித்யா” எனும் சொல்லையே, மொழி பெயர்க்காமல் தமிழிலும் பயன்படுத்துவோம்.

ஆனால் உலகம் ஒரு மித்யா என்பதை எப்படி ஏற்பது! உலகமும், பொருட்களும் நம் கண்ணுக்குத் தெரிகின்றனவே!

தெரிகின்றனதான், நாம் ஒரு அனுபவ நிலைக்குள் கட்டுப்பட்டிருக்கும்போது! கனவு நிகழும்போது, யாரேனும் நம் கனவில் வந்து, “இதை எல்லாம் நம்ப வேண்டாம், இது மித்யா” என்று சொன்னால் நம்மால் ஏற்க முடிகிறதா, இல்லையே! அப்படித்தான் விழிப்பு நிலையில் நாம் அனுபவிக்கும் உலகமும் ஒரு மித்யா. அந்த விழிப்பு நிலையில் நாம் இருக்கும் வரைதான், அந்த அனுபவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.

நமக்கோ, நம்முடைய வாழ்க்கையை இன்பமாய்க் கழிக்க வேண்டும் என்பது தானே குறிக்கோள், அப்படியிருக்க உலகம் மித்யாவா இல்லையா என்னும் ஆராய்ச்சி தேவையில்லைதான். எனினும் சில அடிப்படை வேதாந்தக் கருத்துக்களை அறிமுகம் கொள்வதில் நமக்கு வாழ்வில் பயன் இருக்கிறது.

எனவே சுருக்கமாக, உபநிடதங்களின் அடிப்படையில், கௌடபாதர், ஆதிசங்கரர் முதலான வேதாந்தப் பெருமுனிவர்கள் காட்டிய அத்வைதக் கருத்துக்களைப் பார்ப்போம்.

“உலக வாழ்க்கை, கனவைப் போல ஒரு மித்யா” என்பது அத்வைத உண்மை. மித்யாவின் பொருளை அறிந்த நமக்கு, கனவுலகம் ஒரு மித்யா என்பதை ஏற்பதில் ஒரு தடையும் இல்லை.

உதாரணமாக, கனவில் “இட நியதி” இல்லை. அதாவது, கொள்ள முடியாத பெரிய பொருட்கள் – மலை, அருவி, யானை, சிங்கம் என – நமக்குள்ளேயே கனவில் வருகின்றன. அது உண்மையாக இருக்க முடியாது. மேலும், கனவில் அமெரிக்காவில் இருந்தாலும், விழித்துக் கொண்டால், முதலில் படுத்திருந்த இடத்திலேதான் எழுகின்றோம்.

கனவில் “கால நியதி” என்பதும் இல்லை. அதாவது, பிறந்து வளர்ந்து, மணந்து, இறந்து என ஒருவரின் வாழ்க்கைச் சரிதமே கனவில் வந்து போகக் கூடும். அதுவும் உண்மையாக முடியாது. எனவே, கனவு ஒரு மித்யா என ஏற்பதில், நமக்கு எவ்விதத் தடையும் இல்லை.
ஆனால், கனவுலகைப் போலவே விழிப்புலகம் என எப்படி ஏற்பது!

கனவில் வரும் பொருட்களோ, அல்லது விழிப்புலகில் காணும் “கானல் நீர்” போன்ற தோற்றங்களோ நமக்கு எந்தப் பயனும் தருவதில்லை. எனவே அவற்றையும் மித்யா எனக் கொள்ளலாம். ஆனால், விழிப்புலகில் காணும் பொருட்கள் நமக்குப் பயன் தருகின்றனவே! அவை எப்படி மித்யாவாகும்? எனவே பயன்படுகின்ற பொருட்கள் எல்லாம் மித்யா அல்ல என்றுதான் நாம் நினைக்கிறோம்.

இதற்கும் வேதாந்தம் கனவினைக் கொண்டே விளக்குகிறது.

கனவிலும், நமக்குக் கனவுப் பொருட்கள் பயனைத் தருகின்றன. கனவில் அப்பயனை நாம் அனுபவிக்கிறோம். கனவு நிலையை விட்டு வெளியே வந்த பிறகே, அதாவது விழிப்பில்தான், கனவு ஒரு மித்யா என உணரப்படுகிறது. கனவில் நன்றாகச் சாப்பிட்டிருப்போம், எனினும், விழித்தால் பசிக்கும். அதே போல, கனவில் பசிக்கும்போது, விழித்திருந்தபோது உண்ட உணவினால் பயன் ஏதும் இல்லை. அதாவது, அந்தந்த உலகங்களுக்குள் மட்டுமே, அவ்வுலகப் பொருட்கள் பயனைத் தர முடியும். எனவே பயன் தருவதாலேயே ஒரு பொருள் மித்யா அல்ல எனச் சொன்னால், அதன்படி, கனவுலகம் மித்யா அல்ல என்றும் ஆகிவிடும். அதில் நமக்கு உடன்பாடு இல்லை அல்லவா!
சரி, கனவில் அனுபவமானது அந்தக் கனவு நேரத்தில் மட்டுமே இருக்கிறது. உலக வாழ்விலோ, நமக்குத் தொடர்ச்சியான அனுபவங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால், விழிப்புலகத்தைக் கனவுடன் ஒப்புமை கூற முடியாது என எண்ணுகிறோம்.

நாம் ஒரு பொருளை அறியும்போது, அவை இரு காலங்களால் உணரப்படுகிறது. வேதாந்தம் இதனை “த்வயகால:” என அழைக்கிறது. அதாவது, “தற்போது அறியப்படும் காலம்” மற்றும், “முன்பு அறிந்திருந்த காலம்” என இரண்டு காலங்கள்.

ஒரு பொருளை தினமும் பார்க்கிறோம் என்றால், அப்பொருளுக்கு, “தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் காலம்” மற்றும் “முன்பெல்லம் பார்த்திருந்த காலம்” என இரண்டு கால அனுபவங்கள் இருக்கின்றன. இவற்றினாலேதான், தொடர்ச்சியாக அப்பொருளைப் பற்றிய அறிவும் நமக்கு இருக்கிறது.

கனவிலும் இப்படியான “த்வயகாலம்” இருக்கிறது. ஆனால், அங்கே இக்காலங்களின் இடைவெளி மிகக் குறைவாய் இருப்பதால், இவ்விரண்டு காலங்களும், ஒன்றி, தற்போது மட்டுமே காணும் காலமாக, “சித்த கால:” என அழைக்கப்படுவதாக இருக்கிறது. எனவே கனவு போன்றதே உலகம் என்பதை, இந்தக் காலநியதியைக் காட்டி மறுக்க முடியாது.

சரி, விழிப்புலகில், நமக்கு எல்லாம் தெளிவாக இருக்கிறதே, கனவில் தெளிவு இல்லாமலும், குழப்பமாகவும் அல்லவா உலகம் இருக்கிறது! அதனால் கனவை உலகிற்கு ஒப்பாகச் சொல்ல முடியுமா? இப்படியும் நமக்குத் தோன்றுகிறது.

கனவில் உடல், பொறி, புலனறிவுகள் என்பன இல்லை. மனம் மட்டுமே இருக்கிறது. ஆனால் விழிப்பு நிலையில், உடல், பொறி, புலனறிவுகள் எல்லாம் மனதிற்கு உதவியாக இருக்கின்றன. அதனால், விழிப்புலகில் பார்க்கும் பொருட்களில், நமக்கு அதிகத் தெளிவு இருக்கிறது. அவ்வாறு கருவிகளின் வலிமையால் தெளிவில் வேறுபாடு இருக்கிறதே தவிர, கனவுலகு போன்றதே விழிப்புலகம் என்று அத்வைத வேதாந்தம் சொல்கிறது.

கனவில் கனவுலகை உண்மையாய் அனுபவிப்பதுபோல, விழிப்புலகில் இருக்கும் வரை, விழிப்புலகத்தை உண்மையாய் அனுபவிப்பது இயற்கைதான். ஆனால் விழிப்பில் கனவை உதறித் தள்ளுவது போலவே, மற்றுமொரு மேலான-விழிப்பு நிலையாகிய “துரீயம்” எனும் உயர்நிலையில், நம்மால் விழிப்புலகையும் “மித்யா” எனத் தள்ளல் முடியும். அந்த நிலையை அறிந்து, ஆழ்ந்து அனுபவித்த பெரியோர்களே, நமக்கு இந்த உண்மையைத் தருகின்றார்கள்.

ஆனால் இம்மாதிரியான தத்துவ விசாரணைகளில் ஈடுபடவோ, அவற்றை ஆராய்ந்து ஏற்கவோ நாம் இன்னும் தயாராகவில்லையே! மேலும் இவைபற்றி எல்லாம் அறிந்து கொள்வதால், உலக வாழ்க்கையில் இருக்கும் நமக்கு என்ன பயன் வந்து விடப் போகிறது!

விழிப்புலகு உண்மையா, பொய்யா என்பது எப்படியோ இருக்கட்டும். ஆனால், அந்த விழிப்புலக அனுபவங்களை, அவை எப்படிப்பட்டவையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளும் அறிவும், ஆற்றலும் கிடைத்தால் போதுமே! அதைவிட வேறு என்ன வேண்டும் நம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ள!
கனவு ஒரு மித்யா என்பதாலேயே, துணிவுடன், எந்த பயமும் இல்லாமல் உறங்கப் போகிறோம். கனவில் எது வந்தாலும், அதனால் பாதிப்பு இல்லாமல் இருப்பவன்தான் “நான்” என நிச்சயமாக நினைக்கிறோம். அத்தகைய துணிவும், பயமின்மையும், எந்த விதமான பாதிப்பும் இல்லாமலும் உலக வாழ்க்கையிலும் “நான்” இருக்கிறேன் என்றால், அது எத்தனை வலிமை! அதற்காகவாவது, “உலக வாழ்க்கையும் ஒரு மித்யா” என நாம் எடுத்துக் கொண்டு விட்டால், வாழ்க்கையை ஒரு விளையாட்டாகக் கருதி, அதனால் பாதிப்பு ஏதுமின்றி வாழலாமே!

அதற்கான உதவியைத்தான் “ஆத்ம தத்துவம்” பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுத்துகின்றது. தினமும் அதிகாலையிலேயே அந்தப் பேருண்மையைச் சிந்திக்கவும், துதிக்கவும், பணியவும் நாம் பழகிக் கொண்டால், உலக வாழ்க்கையை இனிதாக நடத்தவும், உண்மையைப் படிப்படியாகப் புரிந்து உயரவும், நம்மால் முடியும். எல்லா மனிதர்களுக்கும், தேவையானது இவ்வுண்மை.

அதனைச் சுட்டிக் காட்டுகின்ற இப்பாடல்கள், மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், தக்க ஒரு ஆசிரியரிடம் பணிவுடன் கேட்டுப் படித்தறிவது ஒன்றே சாலச் சிறந்த வழி.

எனினும், உங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தை வளர்க்கவாவது பயன்படுமே என்ற நோக்கத்தாலும், அடியேனுடைய பயிலும் ஆர்வத்தினாலும், பகவான் ஆதிசங்கரர் அருளிய “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இந்நூல், தமிழிலும், ஆங்கிலத்திலும், எளிய மொழி பெயர்ப்பாக அமைக்கப்பட்டது.

இம்மொழிபெயர்ப்பு உரைநூல், படிப்போருக்குப் பயனும் நலனும் தரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளுக்கும், இயற்றி நடத்திச் செல்லும் குருவடிகளுக்கும், இவனின் பணிவான வணக்கங்கள்.

மீ. ராஜகோபாலன்.
நவம்பர் 2014

Share this Post