15 – விதியெதையும் மாற்றும் வித்தன் அடி போற்றி!

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां
दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् |
शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते
कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ||१५ ||
உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப4வத்3த்4யான விமுகா2ம்
து3ராஸா1பூ4யிஷ்டா2ம் விதி4லிபி மஶக்தோ யதி3 ப4வான் |
ஶிரஸ்தத்3வைதா4த்ரம் ந நக2லு ஸுவ்ரு2த்தம் பஸு1பதே
கத2ம் வா நிர்யத்னம் கர நக2 முகே2னைவ லுலிதம் ||15 ||
வெறுப்பு எனக்கருள உனக்கு இல்லையெனில்
விருப்பும் கெடுவாச – மடையாகி
விரைத்து நினையுணர மறுத்த எனதுமனம்
படைத்த பிரமனெழுத் – தழியாயோ
சிறப்புப் பலமிலையோ மருட்டுந் திறனிலையோ
சிதையப் பிரமன்முடி – பலமாக
சிரத்தில் எளிதாக நகத்தின் நுனியாலே
சிதைத்த கதையாதும் – தெரியாதோ
(15)

(அவ்வாறு என் வினையினை மாற்றி, எனைக் காக்க என் மேல்) வெறுப்பு ஏதும் உமக்கு இல்லை என்றால், எனைக் காப்பாற்றாமல், கொடிய ஆசைகளினாலும், தீய நடத்தையாலும், கனிவற்று, நினைத் துதிக்கவும் மறந்து இருக்கும்படியான மனதினை என்னுள் படைத்த பிரம்ம தேவனது எழுத்தினை (அதாவது எனது விதியை), இன்னும் ஏன் மாற்றவில்லை? அதற்கான சக்தி இல்லாதவரா தாங்கள்! வலிமையான, அகற்ற முடியாத பிரம்ம தேவனின் தலையினை, வெறும் கை நக நுனியினாலேயே கீறி, வடுவினை விதைத்த தங்கள் வலிமை, யாருக்கும் தெரியாதா, என்ன!

குறிப்பு:
ஏழைப் பங்காளன் என்றால், ஏழையாகிய எனக்கு நல்ல உறவினன் என்றால், ஏன் என்னுடைய தலை எழுத்தைத் துயர்படும்படி எழுதிவைத்த பிரம்மனுடைய தலையைக் கிள்ளி எறியவில்லை?

இப்படி உரிமையுடன் கேட்டு, எல்லார் விதிகளையும் மாற்றி அருளும் வல்லமை இறைவனுக்கே உண்டு என்றும், அவர் கருணையே, வினை விலக்கும் மருந்து என்றும் இப்பாடலில் காட்டப்பட்டது.

நமக்குத் துன்பம் வந்தால், அத்துன்பத்திற்கு மற்றவரோ, மற்ற பொருளோதான் காரணம் என்று நம்புவதும், தலைஎழுத்து, விதி என்றெல்லாம் கவலை கொள்வதும், பிறகு அதற்குப் பரிகாரம் செய்தல் என்றும், இறைவனிடம் விதியினை மாற்றச் சொல்லி முறையிடுதல் என்றும், நாம் நடந்து கொள்வது இயற்கைதானே! அதுவே இப்பாடலில் காணப்படுகிறது.

‘வைதாத்ரம்’ எனும் சொல்லினால் பிரம்மன் சுட்டிக் காட்டப்பட்டது. முன்னிரு பாடல்களைப் போலவே, இப்பாடலிலும், பொறுப்பை எல்லாம் இறைவனின் தலையிலேயே (திருவடிகளிலேயே) கட்டிவிடும் சாமர்த்தியம், பகவான் ஆதி சங்கரரின் பக்தியின் பழுத்த அன்பு நிலை என்பது தெளிவாகிறது. (15)

14 – எளியோர் உயிரான இனியோன் அடி போற்றி!

16 – விதித்தானை விதித்தாளும் வேந்தன் அடி போற்றி!

Share this Post

Related Posts