16 – விதித்தானை விதித்தாளும் வேந்தன் அடி போற்றி!

विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर
श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् |
विचारः को वा मां विशद कृपया पाति शिव ते
कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ||१६ ||
விரிஞ்சிர் தீ3ர்கா4யுர் ப4வது ப4வதா தத்பரஶிரஸ்1 சதுஷ்கம்
ஸம்ரக்ஷ்யம் ஸ க2லு பு4விதை3ன்யம் லிகி2தவான் |
விசார: கோ வா மாம் விஶத3 க்ரு2பயா பாதி ஶிவ தே
கடாக்ஷ வ்யாபார: ஸ்வயமபி ச தீ3னாவனபர: ||16 ||
ஆயுள் பலமாக நான்கு தலைமீள
வாழ அயனார்க்கு – அருள்வாயே
அவர்கை எழுத்தாகத் தலையில் அழுத்தாள
அயர இளைத்தேனே – அதனாலே
ஏது இனிசோகம் ஈதுசிவ யோகம்
நாத னருட் கருணை – விழியாலே
எளியர்க் கருளபய வழியிற் பரிவுதரும்
எந்தை நின்கருணை – விடையாமே
(16)

இறைவா, (எம்மை இடர் படப் படைத்த) பிரம்ம தேவனும் நீண்ட ஆயுளுடன், தங்கள் அருளால் வாழட்டும்! மிஞ்சிய அவருடைய நான்கு தலைகளும் நிலைக்கட்டும்! யான் அல்லலுறும்படியாக, அவரின் கை என் தலையில் அழுத்தி எழுதிய விதி (என் வினைப் பயன்) ஏதாயினும் என்ன கவலை? பரசிவனே, எளியருக்கு அருள்கின்ற நினது கடைக்கண் பார்வை எனும் பரிவான செயல் ஒன்றே பெரிது; அதனை ஈர்த்து அடைகின்ற சிவயோகமே எமைக் காக்கும் பேரரிய பயன்.

குறிப்பு:
‘தீதும் நலமும் பிறர் தர வாரா’ என உணர்ந்து, எல்லாத் துயருக்கும் நம்முடைய செயலே காரணம் என்பதையும் தெளிந்து கொண்டு விட்டால், விதியின்படி எது நடந்தாலும் ஏற்கும் உறுதி வரும் அல்லவா? அப்படி என்றால், தலை எழுத்தை எழுதிய பிரம்ம தேவன் மேல் எதற்குக் கோபம் வரவேண்டும்? அவர் நன்றாக வாழட்டும். அவரையும் வாழவைக்கும் வள்ளலாகிய சிவபிரானின் கடைக் கண் பார்வை தெரிக்கின்ற சிவ சுகப் பெருவெள்ளம் நமக்குக் கிடைத்து விட்டால், பிறகு ஏது துயர்!

‘கடாக்ஷ வ்யாபார’ எனும் சொல்லினால், கருணை செய்தல் எனக் காட்டி, செயலிலாப் பரம்பொருளுக்கும் செயல் கற்பிக்கும் சிறப்பு, பகவான் ஆதி சங்கரருக்கே உரித்தானது. (16)

15 – விதியெதையும் மாற்றும் வித்தன் அடி போற்றி!

17 – மறையாற் காலடியை மறைப்பான் அடி போற்றி!

Share this Post

Related Posts