17 – மறையாற் காலடியை மறைப்பான் அடி போற்றி!

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् |
कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां
निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ||१७ ||
ப2லாத்3வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ4
ப்ரஸன்னே(அ)பி ஸ்வாமின் ப4வத3மல பாதா3ப்3ஜ யுக3லம் |
கத2ம் பஸ்1யேயம் மாம் ஸ்த2க3யதி நம:ஸம்ப்4ரம ஜுஷாம்
நிலிம்பானாம் ஸ்1ரேணிர் நிஜ கனக மாணிக்ய மகுடை: ||17 ||
நல்லுழியின் பயனாகி நல்லருளின் தயவாகி
நன்றுதியும் பரிசான – நிறைவேநின்
நல்லடிகள் வயமாகி உள்ளுதய மயமாகி
பின்னுமது மறைவான – பிழையேகேள்
வல்லமுனிச் சடையாகி நல்லமரர் குடையாகி
வண்ணமணி முடியான – மகுடாவும்
உள்ளுவழித் தடையாகி என்னுளவித் திரையாகின்
உய்யுவழி அறியாமல் – உழல்வேனே
(17)

நல்ல வினைப் பயனாலோ, நினது அருட்பயனாகிய பரிசாலோ, இறைவா, நினது திருவடி அருள் என் முன்னே தெரியலானது. அந்தோ, அப்போது, நினை வணங்கி, பல சுக அருளையும் வேண்டி அடையும் முனியோர், வானவர்களின் உயர்ந்த முடியும், பொன், மணிகளாகிய கீரிடங்களும், என் முன்னே எழுந்து, நினது திருவடிகளை யான் தரிசிக்க முடியாமல் மறைக்கின்றனவே, யாது செய்வேன்? (அதாவது, நல்வினையாலும் இறையருளாலும், நமக்குள் எப்போதேனும் இறை உணர்வு உதித்தாலும், அப்போதெல்லாம் பலபொருளும், பல சுகமும் வேண்டுகின்ற, நிரந்தரமில்லாச் சுகங்களின் மீதான எண்ணம், அவ்விறைவுணர்வை நாம் முழுதும் உணரமுடியாமல் மறைத்து விடுகின்றன).

குறிப்பு:
இறைவனை உணரவேண்டும் என்ற வேட்கை வந்து விட்டது. ஏழையாகிய நமக்குத் துணையாக இருப்பவன் இறைவன் என்னும் அறிவும் உறுதிப்பட்டுவிட்டது. எந்தப் பிறவி ஆனால் என்ன, எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன, அலைய வேண்டிய வேலை இல்லாமல், இருந்த இடத்திலேயே இருந்து, தன்னுள்ளேயே கடவுளைத் தேடும் வழியே சிறப்பு என்பதும் அறியப்பட்டு விட்டது.

ஆனால், மனம் ஒருமுகப்பட்டு, ஆத்மாவாகிய பரம்பொருளைத் தரிசிக்க முயலும்போதெல்லாம், பொன்னும், மணியும், போகங்களும், கண்களை மறைக்கின்றனவே! அற்பப் பயனை விரும்பி, அவற்றைப் பெற்றுச் சுகிப்பவரின் நினைவுகள், நமக்குள்ளும் ஆசைத் திரையைப் போட்டு, ஆத்மனின் தரிசனத்தை மறைக்கின்றனவே! இதற்கு என்ன வழி! இப்படி எல்லாம் கவலைப்பட்டு, இறைவனிடமே, அவரது திருவடிகளை அறியவிடாமல் மறைக்கின்ற அனைத்தையும் (அது தேவலோக சுகமானாலும் கூட) அகற்ற வேண்டித் துதிக்கிறது இப்பாடலமுதம். (17)

16 – விதித்தானை விதித்தாளும் வேந்தன் அடி போற்றி!

18 – மாறாச் சுகந்தந்த மறையோன் திறம் போற்றி!

Share this Post

Related Posts