22 – திருட்டு மனந்திருடி தீர்விப்பான் அடி போற்றி!

प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते |
इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ||२२ ||
ப்ரலோபா4த்3யை: அர்தா2ஹரண பரதந்த்ரோ த4னிக்3ரு2ஹே
ப்ரவேஸோ1த்3யுக்தஸ்ஸன் ப்4ரமதி ப3ஹுதா4 தஸ்கரபதே
இமம் சேதஸ்1சோரம் கத2மிஹ ஸஹே ஶங்கர விபோ4
தவாதீ4னம் க்ரு2த்வா மயி நிரபராதே4 குரு க்ரு2பாம் ||22 ||
பேராசை யாமுதலாய்ப் பிழையாசைக் கோள்மனது
பிறராசை யால்நலிய – எப்போதும்
பேதித் தலைந்துழலும் சாதித் தயர்பொருளை
ஊதிப் புனைந்துருவித் – தப்போதும்
தீராசைச் சோரமிது திருடாக ஆனதிது
வேராட வீழ்த்துவது – உன்வேலை
திருடாப் பெருந்திருடா திருசங் கராஹரனே
தருவா யபயம்குரு – இதுவேளை
(22)

பேராசை கொண்டு, தவறான பல குணங்களினால், மனமாகிய திருடன் எப்போதும் பிறர் பொருளைக் கவர்வதிலேயும், அத்திருட்டுக்காக, பலவகையில் புரட்டும் (பொய்யுமாக) எப்பொழுதும் முயல்கின்றது. இம்மனமாகிய திருடனை எப்படி யான் ஏற்பேன்? திருடரில் திருடரான திருவருளே! இம்மனதை உமக்கு அடங்கியதாய் எடுத்துக் கொண்டு எமக்குக் குருவாக இருந்து அருள் புரிவீர்களாக!

குறிப்பு:
ஆட்டுவிப்பான் இறைவன் என்பதால், இறைவனே தமது மனமாகிய குரங்கினை அன்புக் கயிற்றால் கட்டி ஆட்டட்டும் என்று விழைந்த பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில், மனம் ஒரு திருடன் என்றும் அத்திருடனைக் கவர்வதில் தேர்ந்த பெரிய திருடன் இறைவன் என்றும் அன்புடன் துதிக்கிறார்.

ஆசைகளின் கூடாரமாயும், அலைகின்ற குரங்காயும் இருக்கின்ற மனது, திருடனாகவும் இருக்கிறது. நல்ல வழியில் அறிவும் உணர்வும் போகாமல் தடுத்து, அவற்றைக் கவர்ந்து, அல்ல வழிகளில் திணிக்கின்ற கள்வனாக மனம் இருக்கிறது.
‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல, திருடானகிய மனதை, திருடர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபிரானிடம் கொடுத்தால் போதுமே! ‘தஸ்கரானாம் பதயே’ – அதாவது திருடர்களின் தலைவன், ‘வஞ்சதே பரிவஞ்சதே’ – திருடன், பெரிய திருடன் என்றெல்லாம் ஸ்ரீ ருத்திரம் புகழ்கிறது.

ஏன் எம்பிரான் திருடன்? திருடன் என்பவன் அழையாமலே வீட்டினுள் புகுபவன். அதிக மதிப்பான பொருளைக் கவர்பவன். பரம்பொருளும் அப்படியே! நாம் அறியாமலேயே நமது உள்ளே அமர்த்திருக்கிறது! சிதாகாசம் எனும் ஆழ்மனமேடையிலே மறைந்து இருக்கிறது. அப்பெரிய திருடனாகிய பரம்பொருள், இச்சிறிய திருடனாகிய மனதினைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வாரே!
அதாவது மனக்கட்டுப்பாடு ஆன்ம அறிவுக்கு இன்றியமையாத தேவை. அதற்கு குருவின் அருளும், வழிகாட்டலும் தேவை. இறைவனே குரு அல்லது குருவே இறைவன் என்பதும் இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது. (22)

21- மனமென்னும் நாடாளு மன்றத்தான் அடி போற்றி!

23 – அரி அயனும் அறியாத அண்ணல் அடி போற்றி!

Share this Post

Related Posts