23 – அரி அயனும் அறியாத அண்ணல் அடி போற்றி!

करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो
विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्याः फलमिति |
पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन् पक्षिमृगता
मदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शंकर विभो ||२३ ||
கரோமி த்வத்பூஜாம் ஸபதி3 ஸுக2தோ3 மே ப4வ விபோ4
விதி4த்வம் விஷ்ணுத்வம் தி3ஶஸி க2லு தஸ்யா: ப2லமிதி |
புனஸ்1ச த்வாம் த்3ரஷ்டும் தி3வி பு4வி வஹன் பக்ஷிம்ரு2க3தாம்
அத்3ரு2ஷ்ட்வா தத்கே2த3ம் கத2மிஹ ஸஹே ஶங்கர விபோ4 ||23|
ஆரா தனைகள்என்று ஐயா நினையும்நன்று
பூஜா வழிகள்நின்று – புகழ்வேனே
அதனால் உடனுவந்து அடைவாய் பதவியென்று
அருள்வாய்ப் பேருயர்வு – அடைவேனே
ஆனால் பிரமனெனில் அரிமால் உருவமெனில்
ஆஹா புள்மிருகம் – அவையாகி
அடியேன் தேடியுனை அலையும் கோடியிடர்
சகியேன் சிவசங் – கரநேயா
(23)

நிறை பொருளே, தினமும் அர்ச்சனை, ஆராதனை என்று யான் உம்மை வழிபடுகிறேன். அதனால் உடனடியாக என் முன்னால் எழுந்து, தாங்கள் பேரின்பத்தைத் தரவேண்டும். ஒரு வேளை, பிரம்மாவின் பதவியையோ, அல்லது திருமாலின் பதவியையோ, எனது வழிபாட்டின் பலன் என்று அளிப்பீரேயானால், அந்தோ, அன்னமாகப் பிரம்மனும், பன்றியாகத் திருமாலும், நினைத் தேடி அலைந்து பட்ட துன்பத்தைப்போல (எனக்கு) ஏற்பட்டால், அதனை எப்படித் தாங்குவேன், நிறைவைத் தருகின்ற இறையுருவே!

குறிப்பு:
ஶிவானந்த3லஹரீ எனும் பரசிவப் பரசுகப் பரவச நிலையே பெரும் பயன். அந்நிலையிலேயே இருந்து, இரண்டறக் கலத்தலே முக்தி. ஆனால், நம்முடைய துதிக்கும், அன்புக்கும், ஆராதனைகளுக்கும் இரங்கி, இறைவன் பெரிய பதவிகள் கிடைக்கட்டும் என்று கசிந்து, பிரம்மாவாகவோ, திருமாலாகவோ இருக்கும் உயர்பதவியினைத் தந்துவிட்டால்…

அப்பதவியில் இருந்தும், அயனும், அரியும் அதைவிடப் பெரிதான நினது உருவை அறியும் தவத்திலே, முறையே அன்னமாயும், பன்றியாயும் நினைத்தேடி அலைந்து, அலைந்து களைத்தார்களே! அப்படி யானும் களைப்படைய வேண்டுமா, வேண்டாம்! எப்போதும் சிவ சுகப் பெருவெள்ளத்தில் திளைத்திருக்கும் நந்நிலை ஒன்றே எனக்கு வேண்டும்.

17-ம் பாடலில் கூறியபடி, தேவருலகப் பிறவியும், வைகுந்தப் பதவியும் கூட, ஓர்நாள் முடிந்துவிடும் என்பதால், நிலையற்ற இவற்றை எல்லாம் விட்டு, பரசுகப் பெருவெள்ளத்தில் எப்பொழும் நிலைத்திருக்கும் பயனையே நாடுகின்றது, ஞானியின் மனம். (23)

22 – திருட்டு மனந்திருடி தீர்விப்பான் அடி போற்றி!

24 – கயிலையிலே பரசிவனைக் காணும் நாள் போற்றி!

Share this Post

Related Posts