45 – மனப்பறவை கூட்டுவித்த மணியடிகள் திறம் போற்றி!

छन्दःशाखिशिखान्वितैर्द्विजवरैः संसेविते शाश्वते
सौख्यापादिनि खेदभेदिनि सुधासारैः फलैर्दीपिते |
चेतःपक्षिशिखामणे त्यज वृथासंचारमन्यैरलं
नित्यं शंकरपादपद्मयुगलीनीडे विहारं कुरु ||४५ ||
ச₂ந்த₃:ஶாகி₂ஶிகா₂ன்விதைர்த்₃விஜவரை:
ஸம்ஸேவிதே ஶாஶ்வதே
ஸௌக்₂யாபாதி₃னி கே₂த₃பே₄தி₃னி
ஸுதா₄ஸாரை: ப₂லைர்தீ₃பிதே |
சேத:பக்ஷிஶிகா₂மணே த்யஜ வ்ருதா₂
ஸஞ்சாரமன்யைரலம்
நித்யம் ஶங்கரபாத₃பத்₃மயுக₃லீனீடே₃
விஹாரம் குரு ||45 ||
மறைகள் கிளையாகி நிறைவு முதலாகி
நெறியர் குறியாகி – நிலையாக
மகிழப் பிணிமாறி அமிழ்தக் கனியாகி
மணியுள் ஒளியாகி – மரமாக
உறையு மலராகி நிறையு மிருபாத
மடைய நலங்கூடி – மகிழ்வாலே
உயரு மனமான பறவை இனிவாடி
உழலு மிடர்நீங்கி – உயர்வாயே
(45)

மறைகள், சாகை எனும் கிளைகளும், உபநிடதங்கள் எனும் உயர் நிலைகளும் உடையதாய், அறவோராகிய பறவைகளால் விரும்பி நாடப்பட்டதாயும், அழிவற்ற இன்பம் அளிப்பதாயும், இன்னல் அழிப்பதாயும், மிக இனிய கனிகளைத் தருவதாயும் ஒளியுடன் விளங்கும் மரமாக விளங்குகிறது. அம்மரத்தில் விளங்கும் பரசிவனின் பாதங்களாகிய கூட்டில், ஏ மனமாகிய மிகச்சிறந்த பறவையே, நீ விருப்புடன் விளையாடுக! வீணாய் அலைவதைத் தவிர்த்து விடு! வேறு அலைச்சல்கள் வேண்டாம்.

குறிப்பு:
42, 43, 44-ம் பாடல்களில், மனதில் சிவனை இருத்திய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில், சிவனில் மனதை இருத்துகின்றார்.
மனம் ஒரு பறவையாகவும், சிவபெருமானின் திருவடிகள் மனப்பறவைக்கு அடைக்கலம் தரும் கூண்டாகவும், அக்கூண்டு, மறைகளாகிய வேதமரத்தின் நடுவில் விளங்குவதாயும் காட்டுகின்றார்.

மனம் அலைவது இயற்கை. தெளிவான மனம் அதனாலேயே மிகச் சிறந்த பறவைக்கு உதாரணமாகக் கூறப்பட்டது. சிறப்படைந்த மனப்பறவைக்கு விருப்பமானது, இறையடியாகிய அழகிய கூடு என்றும், அக்கூடு, வேதமாகிய பெரு மரத்தில் அமைந்து இருக்கிறது என்றும், அதனைக் கண்டறிய, தருமம் முதலான பல கிளைகளுக்குள்ளும், நிறைந்த உபநிடத ஞானமாகிய உச்சாணிக் கொம்புகளுக்குள்ளும், மனப்பறவையானது திரிந்து, அதன் பயனாக, இன்பத்தை அளிக்கின்ற சிவபெருமானின் திருவடிகளாகிய அழகிய கூடினை அடைந்து அங்கேயே அடங்கி இருக்க வேண்டும் என்றும், அதனை விட்டு, அழியும் பொருட்களில் ஆசைப்பட்டு, மனமாகிய பறவை வேறு எங்கும் அலைய வேண்டாமே என்றும் காட்டப்படுகின்றது.

கூடு என்பது, ஆத்ம தரிசனம் கிடைக்கின்ற ஆழ் மனது. அத்தரிசனத்திற்கு விதை, ஆழ் மனத்தில் சிவனுடைய திருவடிகளை நிரப்பி இருத்தல். அத்தகு ஞானம் வர வேண்டுமெனில், அதற்கு முதலில், தர்மமாகிய பல கிளைகளிலே திளைத்துப் பிறகே ஞானமாகிய கூட்டினை அடைய முடியும் என்பதையும் இப்பாடல் புலப்படுத்துகின்றது. (45)

44 – அரியாய்ப் பகையழிக்கும் அத்தன் அடி போற்றி!

46 – மனமடையும் திருவடியாம் மாடம் அருள் போற்றி!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*