53 – மறைவனத்துள் ஆடும் மயிலோன் அடி போற்றி!

आकाशेन शिखी समस्तफणिनां नेत्रा कलापी नता
ऽनुग्राहिप्रणवोपदेशनिनदैः केकीति यो गीयते |
श्यामां शैलसमुद्भवां घनरुचिं दृष्ट्वा नटन्तं मुदा
वेदान्तोपवने विहाररसिकं तं नीलकण्ठं भजे ||५३ ||
ஆகாஶேன ஶிகீ₂ ஸமஸ்தப₂ணினாம் நேத்ரா கலாபீ நதா
(அ)நுக்₃ராஹிப்ரணவோபதே₃ஶனினதை₃: கேகீதி யோ கீ₃யதே |
ஶ்யாமாம் ஶைலஸமுத்₃ப₄வாம் க₄னருசிம் த்₃ருஷ்ட்வா நடந்தம் முதா₃
வேதா₃ந்தோபவனே விஹாரரஸிகம் தம் நீலகண்ட₂ம் ப₄ஜே ||53 ||
உச்சஞ்சிர மெச்சுஞ் சடைகொடி
கச்சந்தகு மெச்சப் பெருசிற
கச்சந்தரு பட்சப்பட வுரு – அரவோனே
அர்ச்சிப்பவ ருட்சித்சுகமென
நற்சுப்பிர ணவமென முதுபொருள்
கற்பித்தகு கேகீஎனமொழி – கரவேயான்
முட்டக்கிரி தொட்டுஞ் சதிமுகில்
எட்டக்களி கொட்டத் திருவிழி
நட்டத்தகு நடனேதிருமறை – வனமேவி
நச்சுக்கரி மிச்சத்தகுகழுத்
தச்சுப்பெறு மிச்சைத்திருமயில்
பட்சிக்கடி பற்றிப்பதமலர் – பணிவேனே (53)

உச்சிக் கொண்டையாக வானத்தை உடையவரும் (உயர்ந்து நிற்கும் கொண்டை உடையதும்), அரவங்களின் விழிகளால் நிறைத்த உடலைக் கொண்டவரும் (அரவங்களின் விழிகளைப் போன்ற முத்திரைகளை உடைய தோகையினை உடலில் கொண்டதும்), அடிபணிந்து வணங்குபவருக்குள் விளைந்து (காண்பவர்கள் வியக்கும்படியாக) பிரணவமாகிய ஒரே நாதத்தை அருள்பவரும் (கேகீ எனும் ஒரே ஒலியினை எழுப்புவதும்), உயர்ந்த மலைகளில் ஒளியாய் விளங்கும் உமையினைக் கண்டு களிப்படைந்தவரும் (உயர்ந்த மலைகளில் தவழும் மேகத்தினைக் கண்டு களிப்படைந்ததும்), அதனால் மறையாகிய வேதங்களின் நடுவில் (அதனால், விரிந்த பெருங்காட்டின் நடுவில்), கருநீலமான விடத்தைக் கழுத்தில் கொண்டு நடனமாடும் (கருநீலக் கழுத்தினைக் கொண்டு, நடனமாடும்) சிவபெருமானை (மயிலை) யான் வணங்குகிறேன் (யான் மனத்தில் நிறுத்துகிறேன்).

குறிப்பு:
கருண மழை மேகம் வந்துவிட்டது என முந்தைய பாடலில் காட்டிய பகவான் ஆதி சங்கரர், அக்கருணை மேகங்களைக் கண்டு களித்தாடும் மயில்களையும் பார்க்கிறார். எதையும் சிவமாகப் பார்க்கும் ஞானியல்லவா அவர்! அதனாலே, மயிலும், சிவனும் ஒப்பு எனும்படியாக இப்பாடலை அமைத்துள்ளார்.

‘அர்ச்சிப்பவருட் சித்சுகமென’ என்பது சிவனைத் துதிப்பவர் மனதில் சிவானந்த வெள்ளமாக எனவும், பார்ப்பவருக்கு மகிழ்ச்சி தருவதெனவும், ‘நச்சுக்கரி மிச்ச’ என்பது ‘விடம் மிஞ்ச’ என்றும், ‘விடம் போன்ற கருமை மிஞ்ச’ என்றும், ‘தகு கழுத்தச்சுப்பெறு’ என்பது அத்தகைய அச்சினைக் கழுத்தில் கொண்ட என்றும், ‘இச்சைத் திருமயில் பட்சி’ என்பது விரும்பத்தக்க, வளமுடைய மயிற்பறவை என்றும், திரு மயிலை ஆளும், விரும்பத்தக்க சிவன் என்றும் பொருள்பட தமிழில் தரப்பட்டது. (53)

52 – கருணை மழைமேகம் காட்டும் அடி போற்றி!

54 – சந்திப் பொழுதாடும் சடையன் அடி போற்றி!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*