83 – அல்லற் பிறவி அறுத்தருள்வான் அடி போற்றி!

जननमृतियुतानां सेवया देवतानां
न भवति सुखलेशः संशयो नास्ति तत्र |
अजनिममृतरूपं साम्बमीशं भजन्ते
य इह परमसौख्यं ते हि धन्या लभन्ते ||८३ ||
ஜனன-ம்ரு2தி-யுதானாம் ஸேவயா தே3வதானாம்
ந ப4வதி ஸுக2 லேஸ1ஸ்ஸம்ஸ1யோ நாஸ்தி தத்ர |
அஜனிமம்ரு2த ரூபம் ஸாம்ப3மீஸ1ம் ப4ஜந்தே
ய இஹ பரம ஸௌக்2யம் தே ஹி த4ன்யா லப4ந்தே ||83 ||
பிறந் தழிந்துழல வரந் தருமதிப
ரிடம் பணிந்துலகில் – பயனேது
நிரந் தரமிலது சுகம் பிறழுமெனுந்
திடம் முனிந்தறிவு – திரியாது
பிறந் தழிந்துருவ விதங் கழியுசிவ
பரந் தமையுமையின் – பதியோகம்
எவர் அறிவரிவண் தவம் புரிவரெனில்
அவர் பெருநிதியம் – அடைவாரே!
(83)

பிறந்தும் அழிந்தும் வாழும் வழிக்கு ஆட்படுத்தும் வினைப் பயன்களை மட்டுமே தருகின்ற தெய்வங்களை வணங்குவதால் சிறிதும் பயனில்லை என்பதில் சற்றும் ஐயம் இல்லை. பிறப்பும் இறப்பும் அற்ற வடிவமுடையவரும், அன்னையுடன் கூடியவருமான பரசிவனை இப்பொழுதே (இப்பிறவியிலேயே) தொழுபவர் எவரோ, அவரே பெரும் பேரான நந்நலத்தை அடைகின்றார்.

குறிப்பு:
இப்பாடலில் பிரம்மமாகிய பரம்பொருள் ஒன்றே பிறத்தல், அழிதல் எனும் ஆளுமைகளுக்கு உட்படாமல், சத், சித், ஆனந்தம் என்று இருக்கிறது என்றும், அப்பரம்பொருளாகிய பரசிவத்தை எவர் தொழுது உணர்கிறார்களோ அவர்களுக்கே நிரந்தரமான சுக நிலை விளையும் என்றும் காட்டப்படுகின்றது.

82-ம் பாடலில் திருமாலாக விளங்கும் பரம்பொருளின் சக்தி விளக்கத்தை விட வணங்கத் தக்கது வேறு ஏதுமில்லை எனக் காட்டிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில் பரம்பொருளை நாடுவதே முக்திக்கு வழி என்று காட்டுகின்றாரே என்றால், இதில் முரண்பாடு ஏதுமில்லை.
தர்மம் காட்டியபடி வாழ்க்கையை நடத்திச் செல்வதே, நற்பிறவிக்கு வழிகாட்டும். அது புவியில் நந்நிலையையும், பிறகு நற்செயலின் விளைவால் ஏற்படும் விழுப்பத்தால், மேலுலக வாழ்வையும் அளிக்கும். பரம்பொருளின் சக்தியின் வெளிப்பாடான பல தெய்வ வடிவங்களும், அப்படியான பிறவிச் சுகங்களுக்கு வழிகாட்டி, வரம் கூட்டி அருள்கின்றன.

அத்தகைய தர்ம வழியில் வாழ்க்கை நடத்தும் சீலன், தர்மச் செயல்களின் விளைவால், நற்குண மாற்றங்கள் அடைந்து, அதன் பயனாக, மனத் தெளிவும், மதித் திடமும் பெருகி, பிறவிச்சுகத்தை விடப் பெருமை தருவது நிலைத்த சுகமான முக்தி என்பதை உணர்ந்து, அதனால் அதனையே நாடுகின்றான். அத்துணிவு அவனுக்கு ஞானமாகிய உயரிய பாதையைத் திறந்து கொடுக்கிறது.

‘தான்’ எனும் அகந்தை அழிந்து, தன்னுள்ளேயே நிறைவான அறிவாயும், எப்போதும் உள்ள சுகமாயும் நிலைத்தலே முக்தி எனும் விடுதலை என அவனுக்குப் புரிகிறது. (83)

82 – அரியரனாய் ஆகிநின்ற அய்யன் அடி போற்றி!

84 – அறிவாய் ஆட்கொண்ட அண்ணல் அடி போற்றி!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*