ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ த்₃விதீயோ(அ)த்₄யாய​: . ஸாங்க்₂யயோக₃​:

பாகம் 2 – ஸாங்கிய யோகம் (அறிவு நெறி)

ஸஞ்ஜய உவாச

தம் ததா₂ க்ருபயாவிஷ்டம் அஶ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீத₃ந்தம் இத₃ம் வாக்யம் உவாச மது₄ஸூத₃ன​: 2.1

சஞ்சயன் உரை

1 (1) இவ்வாறு இரக்கம் மிஞ்சியவனாய், அர்ச்சுனன் ஆணவம் அடங்கி, மனம் குழம்பி, கண்ணீர் வழிய இருப்பதைக்கண்டு இறைவனாகிய கண்ணன் சொல்லத் தொடங்கினார்.

மதுசூதனன் மாலன் கண்ணன் மாயாவி நோதன் நேயன்
அருள்சூழச் சொன்ன வாக்கு அர்ச்சுனன் நெகிழக் கேட்டு
எதுசெய்வ தேதே செய்ய என்பதை அழியாக் கோலம்
மருள்சூழ மழையாய்க் கண்ணீர் மாலையைச் சூடி நின்றான்
ஶ்ரீப₄க₃வான் உவாச

குதஸ் த்வா கஶ்மலம் இத₃ம் விஷமே ஸமுபஸ்தி₂தம்
அனார்யஜுஷ்டம் அஸ்வர்க்₃யம் அகீர்திகரம் அர்ஜுன 2.2

ஸ்ரீகிருஷ்ணர் உரை

2 (2) (சரணடைந்த விசயனின் மேல் பரிவு கொண்டு பகவான் சொல்லும் ஞான உரை.) அர்ச்சுனா, ஆரியர்களுக்கு நேரத்தில் பொருந்தாததும், உயர்பதவியைத் தடுப்பதுமான சோகத்தில் ஏன் ஆழ்ந்து விட்டாய்?ச்

அர்ச்சுனா அவலக் கோலம் ஆனது ஏனிது பாவம்
கர்ச்சனைக் களிறாய் வீரம் காட்டுவ தாகும் நேரம்
துச்சனைப் போலே துயரம் துகித்த ததனாலே சோகம்
நச்சினை அருந்தி விட்டாய் நட்டாற்றில் இறங்கி விட்டாய்

3 ( ஆரியன் என்பது இனமோ, சாதியோ அல்ல. அற நெறிப்படி வாழ்பவரே ஆரியர் என்பது வேதவாக்கு. )

ஆரியன் என்று வேதம் அனுசரித் திருக்கும் சொல்லே
காரியம் ஆற்றித் தருமக் கடமையை நடத்தும் மேலோர்
யாரவர் குறித்த தாகும் யாதொரு இனமோ இல்லை
பாரினில் பண்பால் வாழப் பணிபவர் ஆரியர் தானே

4 (ஆன்ம பலமும், பொது நலமும் உடையவனே ஆரியன். ஆன்ம பலம் என்பது நேர்மையான வாழ்க்கையாலும், சிந்தனையாலும் வளர்க்கப்பட்ட நல்லறிவும் உறுதியும் ஆகும். பொதுநலப் பண்பு தியாக நடத்தையால் உணரப்படுவதாகும்.)

ஆன்ம பலமே உண்மை ஆரியன் என்று காட்டும்
காண்ப ததனால் கடமை கற்றவர் செய்த சீலம்
மாண்ப தளிப்ப தாகும் மற்றவர் நலனே மூச்சு
என்ப தாகத் தானே எழுந்தது இறைவன் பேச்சு
க்லைப்₃யம் மா ஸ்ம க₃ம​: பார்த₂ நைதத் த்வய்ய் உபபத்₃யதே
க்ஷுத்₃ரம் ஹ்ருத₃யதௌ₃ர்ப₃ல்யம் த்யக்த்வோத்திஷ்ட₂ பரந்தப 2.3

5 (3) பார்த்தா, பேடித்தனத்திற்கு இடம்தராதே! எழுந்திரு, விழித்திரு. தலைவன் என்ற முறையில் உன் தருமம் நடத்திடு.

எழுந்திரு விழித்திரு உந்தன் எதிரிகள் அழித் திடு
பழுதெனப் படரும் நெஞ்சப் பயத்தினை முறித் திடு
நழுவிடும் காண்டீபம் ஏற்று நன்மையை நடத் திடு
வழுதிடத் தலைவன் என்ற வகையினில் நடந் திடு
அர்ஜுன உவாச

கத₂ம் பீ₄ஷ்மம் அஹம் ஸாங்க்₂யே த்₃ரோணம் ச மது₄ஸூத₃ன
இஷுபி₄​: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவ் அரிஸூத₃ன 2.4

விசயன் உரை

6 (4) ஏ மதுசூதனா! நீ என்ன சொன்னாலும், வணங்குதற்குரிய குருவான துரோணரையும், பாட்டன் பீஷ்மரையும் கொல்வது அறிவுடைமை ஆகாது. என்னால் முடியாது.

இல்லை இல்லை மாதவா என்னால் கொல்வ தென்பது
எல்லை இல்லாக் கல்வியே எனக்குத் தந்த துரோணரைச்
சொல்லை ஈந்த பிதாமகர் சொந்தம் வந்த பேர்களை
வில்லை மீட்டுக் கொல்வது விவேக மாவது எப்படி
கு₃ரூன் அஹத்வா ஹி மஹானுபா₄வான்
ஶ்ரேயோ போ₄க்தும் பை₄க்ஷ்யம் அபீஹ லோகே
ஹத்வார்த₂காமாம்ஸ்து கு₃ருனிஹைவ
பு₄ஞ்ஜ்ஜீய போ₄கா₃ன் ருதி₄ரப்ரதி₃க்₃தா₄ன் 2.5

7 (5) வணங்கத்தக்க பெரியவர்களைக் கொல்வதைக்காட்டிலும், பிச்சையெடுத்து வாழ்வது மேல். இவர்களைக் கொல்வதால் கிடைக்கும் வெற்றி, இரத்தக் கறை படிந்ததல்லவா?

பிச்சை எடுப்பான் கையினில் பிடித்துள பிண்டம் வேண்டியே
இச்சை அடங்கச் செய்யினும் இசைவேன் ஆனால் இவ்விடம்
மிச்சம் இன்றி நண்பரை மீளாச் சாவினில் ஆழ்த்தியே
துச்சம் அமையும் ராஜ்ஜியம் துவளும் உதிரம் போர்த்தியே
ந சைதத்₃ வித்₃ம​: கதரன் நோ க₃ரீயோ
யத்₃ வா ஜயேம யதி₃ வா நோ ஜயேயு​:
யான் ஏவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தேவஸ்தி₂தா​: ப்ரமுகே₂ தா₄ர்தராஷ்ட்ரா​: 2.6

8 (6) அன்றியும், ஐயோ, யார் இங்கே ஜெயிப்பது, யார் தோற்பது? எவரைக் கொன்று உயிர்வாழ்தல் அரிதோ அப்படிப்பட்ட துரியோதனாதிகளே எதிரில் நிற்கிறார்களே? மனம் குழம்புகிறதே. (மனதில் கலக்கம் ஏற்படுவதால், சிந்தையில் தெளிவு மறைந்து, செய்யும் காரியங்களுக்குக் காரணம் புரியாமல், குழப்பமும், அமைதிக்குப் பங்கமும் ஏற்படும். விசயனின் நிலை அதைப் போன்றதே.)

நாம் இவரை வெல்வோமா இவர் நம்மை வெல்வாரா
யார் ஜெயித்தால் நன்மை யார் அறிவார் உண்மை
யார் அழிந்தால் நாமே பேர் துயரப் படுவோம்
பார் அவரே எதிரே பழி இதுவோ அறியேன்
வெற்றி அடைவது யாரோ வேதனை அடைவது யாரோ
முற்றி வெடித்த பஞ்சென மூலைக் கலைவது யாரோ
பற்றி யிழுக்கும் பாவமே பாவிகள் அழிவது ஆனதும்
நற்ற வமாவது இல்லையே நாம்வாழ்ந் தாவதும் இல்லையே
கார்பண்யதோ₃ஷோபஹதஸ்வபா₄வ​: ப்ருச்சா₂மி த்வாம் த₄ர்மஸம்மூட₄சேதா​:
யச் ச்₂ரேய​: ஸ்யான் நிஶ்சிதம் ப்₃ரூஹி தன் மே ஶிஷ்யஸ்தேஹம் ஶாதி₄ மாம் த்வாம் ப்ரபன்னம் 2.7

9 (7) இரக்கத்தின் மிகுதியால் எனது மன இயல்பு ஒடுங்கியது. என்னுடைய கடமை யாது எனக் குழப்பமடைகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். எது எனக்கு நன்மை பயக்கும் எனக்கூறு. நான் உன் சீடன். உன்னையே சரண்மென்று வந்த என்னை ஆதரி.

இரக்கத்தால் இறக்கும் உள்ளம் இயல்புதான் மறக்கும் வெள்ளம்
கலக்கத்தால் பிறக்கும் கண்ணீர் கடமைதான் மறக்கும் தன்மை
விளக்கத்தால் நன்மை தீமை விவரத்தை நிறைக்கும் உண்மை
துலக்கத்தான் சரணம் கண்ணா துணையென வருவாய் கண்ணா
கலங்கிட உள்ளம் மாறும் கடமைதான் யாது என்று
துலங்கிடச் செய்க கண்ணா தோன்றிட இன்பம் எங்கும்
விளங்கிட உனது பாதம் விசயன்யான் சரண டை ந்தேன்
நலங்கெடக் களம் புகுந்து நாசம்யான் செய்யே னய்யா
ந ஹி ப்ரபஶ்யாமி மமாபனுத்₃யாத்₃ யச் சோ₂கம் உச்சோ₂ஷணம் இந்த்₃ரியாணாம்
அவாப்ய பூ₄மாவ் அஸபத்னம் ருத்₃த₄ம் ராஜ்யம் ஸுராணாம் அபி சாதி₄பத்யம் 2.8

10 (8) உலகில் பல செல்வங்களப் பெற்று ஆட்சி செய்தாலும், அல்லது வானுலகையே ஆளும் பதவி பெற்றாலும், புலன்களை எரிக்கும் இத்துயரம் என்னை விட்டு நீங்காது எனத் தோன்றுகிறது.

நிலமதில் செல்வாக் குள்ள நிலையுள்ள அரசாள் பதவி
உலகதில் வானேர்க் குள்ள உயர்வினை ஆளும் தகுதி
பலனெனப் பெறினும் புலனைப் பற்றவைத் தெரிக்கும் துன்பம்
விலகுவ தரிது கொடுமை விதையிது தோன்றும் எனவே
ஸஞ்ஜய உவாச

ஏவம் உக்த்வா ஹ்ருஷீகேஶம் கு₃டா₃கேஶ​: பரந்தப​:
ந யோத்ஸ்ய இதி கோ₃விந்த₃ம் உக்த்வா தூஷ்ணீம் ப₃பூ₄வ ஹ 2.9

சஞ்சயன் உரை.

10 (9) இவ்வாறு ரிஷிகேஸனிடம் கூறிவிட்டு, பகைவரை அழிக்கும் குடாகேஸன் எனும் விஜயன், பசுக்களைக் காக்கும் பரந்தாமனாகிய கிருஷ்ணனிடம் இனிப் போர் புரியேன் எனக்கூறிவிட்டுப் பேசாமலிருந்தான்

பகைவரை அழிக்கும் வீரன் பார்த்தனே பதிலைச் சொல்லி
அனைவரை அணையும் ஈசன் ஆண்டவன் பதத்தை நல்கி
தகையிலை அதனால் யுத்தம் தானினிச் செய்வ தில்லை
எனமொழி விட்டு மோன எண்ணத்தில் தவித்தி ருந்தான்

11 ( இறைவனிடம் சரணடைவது ஒன்றே உலகில் நமக்கு நலம் விளைக்கும்.)

புலன்களால் விளையும் மோகம் புகுந்ததால் உள்ளம் கெட்டு
கலங்கலாய் மாறி விட்டால் கருணையாம் நீதி சாகும்
நலம்பெற மனதாம் மேகம் நாயகன் பாத கமலத்
தலமதில் வைப்ப தாலே தண்மழை பொழிவ தாகும்

12 ( புலன்களால் மயங்கி தன்னிலை இழக்கும்போது, இறையருளே, ஞானமும், அமைதியும் தருவதல்லவா? )

பூவுல குயிர்கள் பெற்ற புலன்களால் கவரப் பட்டு
காவுள நிலவைப் போலே கற்றதை இழக்கும் போது
மேவுல காளும் எந்தை மெய்த்தவன் ஞானச் சீலன்
நாவுள கேற்றி னாலே நற்கதி அடையக் கூடும்

13 ( குழந்தை பசி வந்தால் எப்படி எல்லாவற்றையும் போட்டு விட்டு, அம்மாவின் அன்பில் அடைக்கலம் அடையுமோ, அதுபோலவே, விசயனும் பகவானிடம் சரணடைந்தான். )

அம்மாவை அண்டிப் பசியில் அழுதிட்ட குழந்தை யாகப்
பெம்மானை அறிவை ஆளும் பெருமாளை விசயன் அண்டிச்
சும்மாவே நின்றான் கண்ணீர் சுடர்மாலை யாகச் சொற்கள்
தம்மாலே வாரா ததனால் தடுமாறித் தலை குனிந்தான்
தம் உவாச ஹ்ருஷீகேஶ​: ப்ரஹஸன்ன் இவ பா₄ரத
ஸேனயோர் உப₄யோர் மத்₄யே விஷீத₃ந்தம் இத₃ம் வச​: 2.10

14 (10) “ஏ பாரதா! என அழைத்து இரண்டு படைகளுக்கும் நடுவே மனமுடந்து நின்ற பார்த்தனை நோக்கி சிரித்தவாறு ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார்.

(கண்ணீருடன், தனது கர்வத்தை இழந்து, மனம் குழம்பி நின்ற விசயனின் மேல் இரக்கப் பட்டு, இறைவன் கூறிய வாய்மையே, ஸ்ரீபகவத்கீதை என்ற வேதமாகும். இதனைச் சஞ்சயன் தொடர்ந்து கேட்டுரைக்கின்றான்.)

உகுத்தனன் கண்ணீர் ஆங்கு ஊமையாய் நின்ற நேரம்
வகுத்தவன் மாயன் கண்ணன் வாய்மொழி வேதம் ஆகும்
பகுத்தறிந் திடவே பார்த்தா பாற்கடல் மேலோன் கீதை
தொகுத்ததை சஞ்சய னையன் தொடர்ந் திடக்கூறு கின்றான்

15 (10 -2) உலகத்தில் செயல்கள் நல்லவை என்றும், இன்பமானவை என்றும் இரண்டு வகைப்படும். நல்ல செயல் செய்வது கடினம் ஆயினும், அதையே செய்ய வேண்டும் என்று உபநிடதங்கள் கூறுகிறது. ஆனால் இன்பமான செயல்களைத்தானே மனம் நாடுகிறது!

உலகிலே செயல்கள் என்று உபநிஷத் சொல்வது இரண்டு
நலமிதே என்பது ஒன்று நமக்கின்பம் என்பது ஒன்று
நல்லதைச் செய்தல் நன்று நம்முயிர் பிரிந்தா லென்ன
அல்லதைச் செய்யும் இன்பம் அளிப்பதைச் செய்வ தாலே
ஶ்ரீப₄க₃வான் உவாச

அஶோச்யான் அன்வஶோசஸ் த்வம் ப்ரஜ்ஞாவாதா₃ம்ஶ் ச பா₄ஷஸே
க₃தாஸூன் அக₃தாஸூம்ஶ் ச நானுஶோசந்தி பண்டி₃தா​: 2.11

ஸ்ரீகிருஷ்ணர் உரை

15 (11) வருந்தக் கூடாத விஷயங்களுக்கு நீ வருத்தப்படுகிறாய். ஆனாலும் விவேகமுள்ள வார்த்தைகளைக் கூறுகிறாய். அறிஞர்கள் (உயிர்கள் மறைவதில்லை என்பதை அறிவார்கள். அதனால்) இருப்பவர்க்ளுக்காகவும், இறப்பவர்களுக்காகவும், வருந்துவதில்லை.

வருத்தப் பட்டாலும் ஞானம் வாக்கில் கூட்டு கின்றாய்
திருத்தப் படாத பேரைத் தீர்க்கத் துணிவ தற்கு
பொருத்த மில்லை உயிர்கள் போவது உண்மை யோகம்
வகுத்த பாதை செல்வோர் வருந்தத் தேவை இல்லை
நத்வ் ஏவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதி₄பா​:
ந சைவ ந ப₄விஷ்யாம​: ஸர்வே வயம் அத​: பரம்
2.12

16 (12) இதற்கு முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்ததில்லை. இந்த அரசர்களும் அவ்வாறே. இனிமேல் என்றைக்கும் நாம் இல்லாமற் போகமாட்டோம்.
(உடலை விட்டு மாறிமாறிச் செல்லும் உயிர்கள் என்றும் அழியாமல் இருக்கும். இதுவே இயற்கை விதி என்கின்ற ஒப்பற்ற உண்மையை இறைவன் விளக்குகிறார்.)

இருந்தேன் இருக் கிறேன் இருப்பேன் யான் இவண்
இருந்தாய் இருக் கிறாய் இருப்பாய் பார்த் தனே
இருந்தார் இருக் கிறார் இருப்பார் உயிர் எலாம்
இருப்பதும் இறப் பதும் எப்பொதும் நடப் பதே
தே₃ஹினோஸ்மின் யதா₂ தே₃ஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா₂ தே₃ஹாந்தரப்ராப்திர் தீ₄ரஸ் தத்ர ந முஹ்யதி 2.13

17 (13) சீவனுக்கு எவ்வாறு குழந்தைப் பருவம், இளமை, மூப்பு எனத்தோன்றுகிறதோ அதே வகையில்தான் மறுபிறவியும் வருகிறது. உறுதியுடையவன் இதனால் கலங்க மாட்டான். (பிறந்து, வளர்ந்து, மெலிந்து, மறைந்து போவது உடலே. உயிர் எங்கேயும் செல்வதில்லை.)

பிள்ளையும் நல்லி ளமைப் பிராயமும் மூப்பெனுந் துயர்த்
தொல்லையும் உயிர் பெறுந் தோற்றமும் போல்மறு பிறப்
பெல்லையும் இருப் பதை எண்ணுக உயிர் எலாம்
செல்வதும் இல்லை அவை சேர்வதும் இல்லை காண்க
மாத்ராஸ்பர்ஶாஸ் து கௌந்தேய ஶீதோஷ்ணஸுக₂து₃​:க₂தா₃​:
ஆக₃மாபாயினோனித்யாஸ் தாம்ஸ் திதிக்ஷஸ்வ பா₄ரத 2.14

18 (14) புறப்பொருளுடன் புலனுணர்வகள் புணர்வதால் வெப்பதட்பங்களும், இன்பதுன்பங்களும், ஆரம்பமுடிவுகளும் தரிகிறது. இவை நிலையில்லை. அதனால் பாரதா, இவற்றை உறுதியுடன் பொறுத்துக்கொள்.

வெப்பமும் தட்பமும் இன்ப வேட்கையும் துயரும் தொடக்கம்
நிற்பதும் முடிவும் புலன்கள் நிகழ்த்திடும் புறப்பயன் புணர்ச்சி
எப்பவும் நிலைப்பது இல்லை என்பது கரக்கனி அதனால்
துப்பறி துணிவுடன் வரவைத் துகித்திடு சகித்திடு பார்த்தா

19 (14-2) புலன்களால் பெற்ற சுகதுக்கங்கள் நிலைப்பதில்லை. அவை ஆத்மாவைத் தொடுவதில்லை. இதை உணராமல் எப்படி உன்னால் முன்னேற்றம் அடைய முடியும்?

பொறிகளால் நீவிர் பெற்ற போகமோ நிலைக்கும் நல்ல
அறிவதால் ஆய்ந்து பெற்ற அழிவில்லா ஞானம் உள்ள
நெறியினால் காண்பாய் விசய நேர்மையில் வாழு கின்ற
செறிவினை உணரா உயிர்கள் செழிப்பது ஆகா தய்யா
யம் ஹி ந வ்யத₂யந்த்ய் ஏதே புருஷம் புருஷர்ஷப₄
ஸமது₃​:க₂ஸுக₂ம் தீ₄ரம் ஸோம்ருதத்வாய கல்பதே 2.15

19 (15) எவனொருவன் இவற்றால் கலக்கமடையாமல் இருப்பானோ, எவனுக்கு சுகமும் துக்கமும் சமமானதாகத் தோன்றுகிறதோ, அந்தச்சிறந்த மனிதன் ஆத்மாவின் அழிவற்ற தன்மையை அறிந்து கொள்ளும் தகுதிஉடயவனாகிறான்.

நாஸதோ வித்₃யதே பா₄வோ நாபா₄வோ வித்₃யதே ஸத​:
உப₄யோர் அபி த்₃ருஷ்டோ.அந்தஸ் த்வ் அனயோஸ் தத்த்வத₃ர்ஶிபி₄​: 2.16

20 (16) இல்லாதாது உள்ள பொருளாகாது. உள்ளது இல்லாமல் போகாது. உண்மையை அறிபவர்கள் இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை அறிவார்கள். (இல்லாதது என்பது உள்ளது போல் தோன்றுது. உள்ளது என்பது என்றும் நிலைத்திருப்பது).

அவினாஶி து தத்₃ வித்₃தி₄ யேன ஸர்வம் இத₃ம் ததம்
வினாஶம் அவ்யயஸ்யாஸ்ய ந கஶ்சித் கர்தும் அர்ஹதி 2.17

21 (17) உலகமுழுதும் நிறைத்துள்ள பொருள் அழிவற்றது எனப்புரிந்து கொள். யாராலும் அதனை அழிக்க முடியாது. அது என்றும் அழியாது விளங்குவது.

வையம் நிறைத்த சக்தி வடிவம் பிணைத்த சக்தி
மெய்யாய் விரித்த சக்தி மேவும் ஜகத்தின் சக்தி
நையா நலியா சக்தி நாளும் நிலைத்த சக்தி
மையா லமைத்த வரியாய் மனதில் வரித்தல் புத்தி

20 (17) (அத்வைத உண்மை என்ன? குடத்துக்குள் இருக்கும் வெளியும், குடத்துக்கு வெளியே பரந்த வெளியும் ஒன்றல்லவா? குடம் உடைவது போல் இந்த உடல் உடைந்தால், உயிர், எங்கும் நிறைந்த அந்த சக்தியில் கலக்கும் அல்லவா?)

வெட்ட வெளியே பிரம்மம் வெல்வினை யாலே குடத்துள்
இட்ட வகையே சீவன் இருப்ப ததனால் உயிரைத்
தொட்ட தழிவும் இல்லை தொய்வ துடையப் பானை
விட்ட உடனே ஆன்மா விரைவில் அடையும் சிவனை
அந்தவந்த இமே தே₃ஹா நித்யஸ்யோக்தா​: ஶரீரிண​:
அனாஶினோப்ரமேயஸ்ய தஸ்மாத்₃ யுத்₄யஸ்வ பா₄ரத 2.18

21 (18) ஆத்மாவைத் தன்னகத்தே கொண்ட உடலனாது அழியக்கூடியது. ஆனால் ஆத்மா அழிவற்றது. ஆகவே பாரதா, நீ (இந்த உண்மையை நீ புரிந்து கொண்டாயென்றால்), புறப்பட்டு யுத்தம் செய்வாய் என்றார்.

(உடலை உருவாக்கி, நிருவகிக்கும் அதிகாரி உயிரே. உடலே கோவில் என்றும், உடலை ஒட்டி அமைந்த புலன்களும், பொறிகளும் கடமை யாற்றும் சேவகர்கள் என்றும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்குமே கோவிலை நடத்தும் தலைமைச் செயலர்கள் எனவும், சாட்சியாகப் பார்த்திருக்கும் ஆன்மாவே இறைவன் எனவும் உபநிடதங்கள் உருவகிக்கின்றன. )

மெய்யிதில் புகுந்து நின்ற மெய்ப்பொரு ளுயிரே ஆகும்
மெய்யிதில் பூசப் பெற்ற மேலுடல் பொய்யே ஆகும்
மெய்யிதன் மேனிப் பூச்சு மெலிவுறும் ஓர்நாள் என்ற
மெய்யிதன் மெய்ப் பொருளே மேவிடும் விசயா காண்க
புரிந்து கொண்டா யென்றால் புறப்பட்டு பாணம் விட்டு
அரிந்து தள்ளச் செய்க அமைந்திட்ட தேகப் பானை
முறிந்த தாகக் கொள்க முடிந்திட்ட கடமை யாகத்
தெரிந்த பாதை செய்தேன் தேர்ந்தெடு பரதா என்றான்
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யஶ் சைனம் மன்யதே ஹதம்
உபௌ₄ தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே 2.19

21 (19) ஆத்மாவைக் கொல்பவனாக நினப்பவனும் அல்லது கொல்லப்படுபவனாக நினைப்பவனும் அகிய இருவருமே உண்மையை உணராதவர்கள். (இதனை உணர்ந்து கொள்ளுதலே உண்மை அறிவு)

ஆன்மாவைக் கொல்வோம் என்றோ ஆன்மாவைக் கொன்றார் என்றோ
வீண்வாதம் செய்வோர் மூடர் விளக்கத்தை அறியாப் பேடர்
ஊன்போனால் உள்ளே உள்ள உயிர்போகும் பயணம் வேறு
காண்போரே கற்றோர் உண்மை கண்டவர் அடைவார் பேறு
ந ஜாயதே ம்ரியதே வா கதா₃சின்
நாயம் பூ₄த்வா ப₄விதா வா ந பூ₄ய​:
அஜோ நித்ய​: ஶாஶ்வதோயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே 2.20

22 (20) (ஏனென்றால்), ஆத்மா பிறப்பதில்லை; அதனால் இறப்பதில்லை. ஒருமுறை பிறந்து இருந்து பிறகு இல்லாமற் போனதிம் இல்லை. இவன் பிறப்பற்றவன், என்றும் உள்ளவன், மாறுதலற்றவன் ஆகயால், உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லபடுவதில்லை.

கொல்வது உயிரே அல்ல கொன்றதும் உயிரே அல்ல
செல்வது உயிரே அல்ல செத்ததும் உயிரே அல்ல
பல்வகைத் தீய வாழ்வே பாவமாய் உடலைச் சாய்க்கும்
சொல்வது உண்மை உயிரே சோதியாய் நிலைத்து வாழும்
வேதா₃வினாஶினம் நித்யம் ய ஏனம் அஜம் அவ்யயம்
கத₂ம் ஸ புருஷ​: பார்த₂ கம் கா₄தயதி ஹந்தி கம் 2.21

23 (21) ஆன்மா அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்ற உண்மையை அறிந்தவன் யாரைக் கொல்வான்? யாரால் கொலையுற்வான்? (அதாவது ஆன்மா அழிவற்றது என உணர்ந்து, பலனைத் தியாகம் செய்து பற்றற்றுச் செய்யும் எந்தச் செயலாலும் , எந்தப் பாவமும் வராது.)

மறையாது குறையாது ஆன்மா மாறாது ஊறாது தோற்றம்
சரியாகப் புரிந்திதனை உணர, சாவித்தல் சாவடைதல் ஏது
மரியாது உயிருந்தன் உண்மை மாசற்றுச் செயலாக்கும் போது
தரியாது பாவங்கள் விலகும் தானான நிலையங்கே விளங்கும்
அழிவற்றது ஆன்மா என்ற அறிவினைப் பெற்ற பின்னே
பழியற்றது வாழ்க்கை பார்த்தா பணியினைச் செய்தல் நன்றே
வழியற்றது இல்லை வேதம் வகுத்தவை கடமை ஆசை
துளியற்றது தியாகம் செய்யும் தூய்மையே வழக்கம் ஆகும்
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா₂ விஹாய நவானி க்₃ருஹ்ணாதி நரோபராணி
ததா₂ ஶரீராணி விஹாய ஜீர்ணானி அன்யானி ஸம்யாதி நவானி தே₃ஹீ 2.20

24 (22) நைந்த துணியை விட்டு உடலில் புதிய துணியை மாற்றுவது போன்றதே, உயிர் உடலை மாற்றுவது. (இதனை எப்படி மறக்க முடியும்?)

மேனியில் புகுந்த ஆவி மேவிடும் ஓர்நாள் வேறு
மேனியில் என்ற வாக்கு மெய்யது மெய்யிது அன்று
மேனியில் போர்த்த ஆடை மெலிந்ததும் மாற்றும் மக்கள்
மேனியில் மாறும் உயிரின் மெய்யினை மறப்ப தேனோ
நைனம் சி₂ந்த₃ந்தி ஶஸ்த்ராணி நைனம் த₃ஹதி பாவக​:
ந சைனம் க்லேத₃யந்த்ய் ஆபோ ந ஶோஷயதி மாருத​: 2.23

25 (23) ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டாது; அதனைத் தீ சுடாது; அதைக் காற்று உலர்த்தாது. நீர் நனைக்காது. (அதாவது ஆத்மாவைப் பாதிப்பது உலகில் எதுவும் இல்லை. புறப்பொருளால் உடலும், புலன் அறிவால் மனமும் பாதிக்கப்பட்டாலும், எதனாலும் பாதிக்கப்படாத பரிசுத்தமானது அன்றோ ஆத்மா?)

வெட்டுமோ கத்தி இதை வெந்தீ சுட வருமோ
ஒட்டுமோ நீர் இதனை உலரவோ வருங் காற்று
எட்டுமோ காலம் இதை என்றும் கலை யாதோ
மட்டுமோ ஆன்ம னிவன் மகிமை புரியாதோ
அச்சே₂த்₃யோயம் அதா₃ஹ்யோயம் அக்லேத்₃யோஶோஷ்ய ஏவ ச
நித்ய​: ஸர்வக₃த​: ஸ்தா₂ணுர் அசலோயம் ஸனாதன​: 2.24

25 (24) உயிரான ஆத்மா துணித்தற்கரியது; எரிக்க முடியாதது; நனைக்க முடியாதது; உலர்த்த அரிதானது. அவன் நித்யன். எங்கும் விரிந்தவன். அடையாமல் காலத்தைக் கடப்பவன்.

சுட்டுப் பொசுக்க எனச் சோதி இல்லை உயிரைத்
தொட்டு நனைக்க எனத் துளி நேரப்பனி யில்லை
இட்டு உலர்த்த என வளி இல்லை எப்போதும்
கட்டுக் கடங்க வில்லை காலத்தால் கட்ட வில்லை
அவ்யக்தோயம் அசிந்த்யோயம் அவிகர்யோயம் உச்யதே
தஸ்மாத்₃ ஏவம் விதி₃த்வைனம் நானுஶோசிதும் அர்ஹஸி 2.25

26 (25) (ஆன்மாவனது) தெளிதற்கறியாதது, சிந்தனைக்கெட்டாதது, நித்தியமானது என் உணர்ந்து நீ வருத்தப்படாதிருக்க வேண்டும்.

மதியால் அறியா தது மனதால் உணரா தது
விதியால் நிலையா னது விவரம் அரிதா னது
புதிராய் உயிரா னது புலரும் உணர்வா னது
கதியால் கடையா னது கவலை எதனா லிது?

27 (25-2) (உடலின் மாற்றங்கள் உயிரின் கருணையால்தான் நடக்கிறது என்பதை ஏன் மறந்து கவலை கொள்கிறாய்?)

சிறுத்த தனம் பருப்பதுவும் பருத்தஉடல் விரைப்ப துவும்
எரித்த வுடன் இல்லையடா எண்ணமெனு மான் மாவோ
மரிப்ப துவும் இல்லையது மாறுவது மில்லை எனும்
அரிச்சு வடி அறியாமல் ஆடுகின்ற வையம் என்றான்
அத₂ சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம்
ததா₂பி த்வம் மஹாபா₃ஹோ நைவம் ஶோசிதும் அர்ஹஸி 2.26

27 (26) அப்படியே நீ இந்த ஆன்மாவை நித்தமும் பிறந்து நித்தமும் இறப்பவனாக நினைத்தாலும் அதற்காகக் கவலைப்படாதே.

நித்தம் பிறப்ப தென நேரத்தில் இறப்ப தென
சித்தம் நினைத் தாலும் சிரமம் ஒன்றும் இல்லை;
மொத்த மாவெ தென? முடியும் ஆரம்ப மெனில்
கொத்தும் கவலை அழி கொள்கை உண்மை அறி

28 (26 – 2) கவலை வந்தால், ஒன்று அந்தக் கவலையைத் தீர்க்கும் முயற்சியில் நிலைக்க வேண்டும். தீர்க்க முடியாது என்று தெரிந்தால், வருவதை ஏற்க வேண்டும். இதைவிட்டுக் கவலைப்படுவது ஏன்?

கவலை வருவது ஏனடா கஷ்டம் என்று வருகையில்
அதனைத் தீர்ப்பது எப்படி அறிவது ஒருவழி அல்லவா
அதுவோ நம்மால் ஆவது ஆகா தென்பது அறிகையில்
அதனால் கவலை அடைவது அறியா மையினால் வருவது
ஜாதஸ்ய ஹி த்₄ருவோ ம்ருத்யுர் த்₄ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத்₃ அபரிஹார்யேர்தே₂ ந த்வம் ஶோசிதும் அர்ஹஸி 2.27

28 (27) பிறந்தோர் போவது உறுதி. இறந்தவன் பிறப்பதும் நிச்சயம் என்றால், எதற்காகக் கவலை? (இப்படிப் போய்வருவது உறங்கி விழிப்பதற்கு ஒப்பானது. எனவே, இதற்காக விசனப்படாதே.)

பிறந்தது ஒருநாள் போவது பிறவிகள் யாவரும் அறிவது
இறந்தது மறுநாள் எழுவது இயற்கை நாடகம் புரிவது
மறந்தது தருமம் மறைப்பது மயக்கத் துயிலிது விழித்திரு
சிறந்தது அதனால் கடமையைச் செய்வது நல்லது எழுந்திரு
அவ்யக்தாதீ₃னி பூ₄தானி வ்யக்தமத்₄யானி பா₄ரத
அவ்யக்தனித₄னான்ய் ஏவ தத்ர கா பரிதே₃வனா 2.28

29 (28) உயிர்களின் தொடக்கம் தெரியவில்லை. நடுநிலை தெளிவாகத் தெரிகிறது; முடிவோ புரியவில்லை. எனவே எதற்காக இத்தனை வேதனை?

வந்ததுவும் தெரிய வில்லை வளர்வதுவும் புரிய வில்லை
எந்தவொரு நாளில் இவன் ஏடதுவும் முடியும் என்ற
சந்ததமும் புரிவ தற்குள் சத்தியமே என்று எண்ணி
சொந்தமுடன் சுகம் தேடிச் சோர்கின்ற மனித இனம்
ஆஶ்சர்யவத் பஶ்யதி கஶ்சித்₃ ஏனம்
ஆஶ்சர்யவத்₃ வத₃தி ததை₂வ சான்ய​:
ஆஶ்சர்யவச் சைனம் அன்ய​: ஶ்ருணோதி
ஶ்ருத்வாப்ய் ஏனம் வேத₃ ந சைவ கஶ்சித் 2.29

29 (29) (இந்தப் பயணத்தை) ஒருவன் வியப்புடன் பார்க்கிறாதோருவன் வியப்புடன் சொல்கிறான்; ஒருவன் வியப்புடன் கேட்கிறான். என்றாலும் இதனை முற்றும் உணர்ந்தவர் யாருமில்லை.

புனிதப் பயணம் இதனைப் புதிராய் வியக்கும் ஒருவன்
மனிதப் பயனாய் ஒருவன் மறையாய் தெரிவிக் கின்றான்
கனியச் செவியால் ஒருவன் கருதிக் கேட்டயர் கின்றான்
எனினும் முழுதும் இதனை எடுத்தறிந் தவர்கள் இல்லை
தே₃ஹீ நித்யம் அவத்₄யோயம் தே₃ஹே ஸர்வஸ்ய பா₄ரத
தஸ்மாத் ஸர்வாணி பூ₄தானி ந த்வம் ஶோசிதும் அர்ஹஸி 2.30

29 (30) எல்லா உடலிலும் உள்ள இந்த ஆத்மா அழிவற்றவன். எனவே நீ எதற்காகவும் வருந்த வேண்டியதில்லை. (எனவே தருமத்திற்கேற்ற கடமையைச் செய்ய காண்டீபத்தை எடு).

மெய்யெலாம் மேயும் ஆன்மா மெய்ப் பொரு ளாவதறிக
ஐயநீ அதனால் இனிமேல் ஐயமும் பயமும் விலக
செய்வன தகுமின் செய்க செய்யாது வருந்தும் நோவு
கைவிடு கவலை விடுக காண்டீபம் ஏற்றுக் கொள்க

30 (30-2) (இதெல்லாம் அறிந்து, பலரும் பலவிதமாகத் தனது கடமைகளைச் செய்வார்கள். சிலர் மனமே கோவில் என்று மனதை ஆராதித்தும், சிலர் மதியில் தன்னையறியும் முயற்சியிலும், சிலர் புற உலகில் அமைதி தேடியும் பலவிதமாக ஆத்ம சாந்தி தேடும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நீயும் சோதித்துப் பார்த்துத் தேர்வது நல்லது.)

தன்னிலை அறிதல் சிலரின் தன்மை இதனைக் கண்டு
எண்ணமே எல்லாம் என்று எண்ணிட யோசனை கொண்டு
மன்னுவர் உண்டு எதையும் மதியா தவரும் உண்டு
சொன்னது அறிவால் உணர்ந்து சோதிப் பதுவே நன்று
ஸ்வத₄ர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
த₄ர்ம்யாத்₃ தி₄ யுத்₃தா₄ச் ச்₂ரேயோன்யத் க்ஷத்ரியஸ்ய ந
வித்₃யதே 2.31
யத்₃ருச்ச₂யா சோபபன்னம் ஸ்வர்க₃த்₃வாரம் அபாவ்ருதம்
ஸுகி₂ன​: க்ஷத்ரியா​: பார்த₂ லப₄ந்தே யுத்₃த₄ம் ஈத்₃ருஶம்
2.32

31 (31-32) உன்னுடைய இயற்கை தருமத்தின்படி நீ சலனமற்று இருத்தல் அவசியம். க்ஷத்திரியனாகிய நீ உனக்கான வீரம், தியாகம் நிறைந்த கடமையைச் செய்து, நல்லகதியடைக.

க்ஷத்திரிய தருமம் என்ன சார்ந்துள்ள உயிர்கட் கெல்லாம்
நித்திய கருமம் செய்தல் நீதியை இயற்றல் காக்கப்
புத்தியால் யுத்தம் எய்தல் போக்கினால் சுவர்க்கம் ஏகி
சித்தியால் புகழை ஏற்கும் சீலத்தை அடைதல் அன்றோ

31 (32) தருமப் போரில் பங்கெடுக்கத் தானகவே விளைந்த வாய்ப்பு சுவர்க்க வாயில் திறந்தது போன்றதாகும். இத்தகைய வாய்ப்புக் கிடைக்க அரசர்கள் பெறும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அறப் போரில் பங்கு ஆற்று கின்ற காலம்
வரப் பேறு சுவர்க்க வாயி லெனும் கோலம்
பெறப் பேணி மன்னர் பெருங் காய மெல்லாம்
பிறப் பாலே நன்மை பெறும் போக மென்பார்
அத₂ சேத் த்வம் இமம் தா₄ர்ம்யம் ஸங்க்₃ராமம் ந கரிஷ்யஸி
தத​: ஸ்வத₄ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி 2.33

32 (33) இந்த அறப்போரில் நீ பங்காற்றாவிட்டால், உன்னுடைய தருமத்தையும், புகழையும் வெறுத்தொதுக்கிய காரணத்தல் பாவத்தைச் செய்தவனாவாய்.

அகீர்திம் சாபி பூ₄தானி கத₂யிஷ்யந்தி தேவ்யயாம்
ஸம்பா₄விதஸ்ய சாகீர்திர் மரணாத்₃ அதிரிச்யதே 2.34

32 (34) மக்கள் உனக்கு மாறாத இன்சொல்லைக் கூறுவர். மக்களுடைய புகழுக்குப் பாத்திரமானவன், பின்னர் இகழ்வு பெற்றால், அந்த நிலை மரணத்தைவிடக் கொடியது.

வீரத்தை விதவை யாக்கி விசனத்தை உடமை யாக்கி
நேரத்தை விழலை யாக்கி நியமத்தை விட்டுத் தரும
பாரத்தைத் தாங்க வொண்ணா பாவத்தைச் செய்வ தாலே
சாரத்தை அறிந்த சீலர் சந்திப்பர் கேலிப் பேச்சு
ப₄யாத்₃ ரணாத்₃ உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா₂​:
யேஷாம் ச த்வம் ப₃ஹுமதோ பூ₄த்வா யாஸ்யஸி லாக₄வம் 2.35

32 (35) அதைத் தவிர, மாவீரர்கள் நீ போருக்குப் பயந்து ஒளிந்ததாக் நினைப்பார்கள். உன்னையும், உன்னுடைய வில் திறமையையும் மதித்து வந்தவர்கள், உன்னை துச்சமாக எண்ணுவார்கள்.

பேடியே விசயன் வெறும் பேச்சிலே வீரன் யுத்தம்
நாடியே வந்தான் வந்து நாணியே நின்றான் சித்தம்
மூடியே பயத்தா லிளைத்து மூலையில் பதுங்கிக் கொண்டு
ஓடியே மறைந்தா னென்ற ஓய்ச்சலை விளைப்பா யய்யா
அவாச்யவாதா₃ம்ஶ் ச ப₃ஹூன் வதி₃ஷ்யந்தி தவாஹிதா​:
நிந்த₃ந்தஸ் தவ ஸாமர்த்₂யம் ததோ து₃​:க₂தரம் நு கிம்
2.36

32 (36) உன்னுடைய விரோதிகள் உன்னுடைய வலிமையைப் பழிப்பர். இதனைவிடத் துன்பம் தருவது ஏதெனும் உண்டா?

இறப்பதைவிட பிறர் பழிக்க இருப்பது கொடுமை அல்லவா? அர்ச்சுனன் கோழை என்றும், தனது கடமையைச் செய்யத் துணிவில்லாதவன் என்ற பழியும், அவனை பார்த்துப் பயந்திருந்த எதிரிகளும்கூட சுமத்துவார்களே? இவவறிவினைக் கூறிவிட்டு, பிறகு, ‘கொல்வது பாவம்’ என்று கூறிய அர்ச்சுனனுக்கு, கடமை பற்றியும் பாவ புண்ணியங்கள் பற்றியும் பகவான் விளக்குகின்றார்.)

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க₃ம் ஜித்வா வா போ₄க்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத்₃ உத்திஷ்ட₂ கௌந்தேய யுத்₃தா₄ய க்ருதனிஶ்சய​: 2.37

34 (37) பூமியில் இறந்தால் உனக்கு சொர்க்கம். வெற்றி பெற்றால் உலகாளும் வாய்ப்பு. எனவே எழுந்து சண்டைக்குத் துணிந்து நில்.

இறந்தால் என்ன நீயே இணைவாய் சுவர்க்க லோகம்
சிறந்தால் வெற்றி மாலை சிறக்கும் பூமி யோகம்
துறந்தால் விசனம் மனம் துணிந்தால் கவலை அகம்
மறந்தால் மறவன் எனும் மாண்பு அடைவ தாகும்
ஸுக₂து₃​:கே₂ ஸமே க்ருத்வா லாபா₄லாபௌ₄ ஜயாஜயௌ
ததோ யுத்₃தா₄ய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி 2.38

34 (38) இன்பம் துன்பம், லாபம் நஷ்டம் இரண்டையும் சமமாகப் பாவித்து கடமையாக எண்ணி, இங்கே போர் செய். அப்போது உனக்கு வெற்றி கிடைக்கும். பாவம் ஏதும் அணுகாது.

இடரும் சுகமும் சமம் இழப்பும் ஈர்ப்பும் சமம்
படரும் அறிவால் மனம் பார்வை சரியாய் வரும்
கடமை அதனால் களம் காரியம் ஆற்றும் திறம்
உடமை பயனே ஜெயம் உதிரும் வினையே நிஜம்
ஏஷா தேபி₄ஹிதா ஸாங்க்₂யே பு₃த்₃தி₄ர் யோகே₃ த்வ் இமாம் ஶ்ருணு
பு₃த்₃த்₄யா யுக்தோ யயா பார்த₂ கர்மப₃ந்த₄ம் ப்ரஹாஸ்யஸி 2.39

35 (39) இது வரை நான் உனக்குச் சொல்லி வந்த அறிவுரைகள் விவாத வழியிலே ஆனவை. இனி யோக வழியிலே கூறுகிறேன். பார்த்தனே, இதனைப் புரிந்து கோண்டபின், நீ கரம்த்தளைகளிலிருந்து விலகிவிடுவாய். ( தரும நீதியும், சமுதாயப் பொறுப்பும் சொல்லி உனக்கு புத்திமதி செய்தும், நீ தெளியவில்லை. இப்போது ஞான நெறி சொல்கிறேன். இதனைக் கேட்டுத் தெளிக.)

ஆட்சியின் நீதி காட்டி அறிவுரை சொன்ன போதும்
மாட்சியை விட்டு நீயோ மன்னனின் செயல் மறந்தாய்
காட்சியில் கண்ட தருமக் கருமங்கள் விடுக மனச்
சாட்சியில் யோகம் பெற்று சத்தியம் அறிந்து வாழ்க
நேஹாபி₄க்ரமனாஶோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்₃யதே
ஸ்வல்பம் அப்ய் அஸ்ய த₄ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப₄யாத்
2.40

37 (40) (கர்ம யோகாமகிய) இதில் சிறு முயற்சியும் பயனளிக்ககூடியது. இதனைப் பயிற்சி செய்வதால் தீங்கு வராது. இந்த யோகத்தைப்பற்றிய அறிவு சிறிதளவாவேனும் கொண்டு இருப்பவனயும், இந்த யோகத்தைச் சிறிதளவானும் பயிற்சியில் ஏற்பவனையும், இது பெரும்அச்சத்திலிருந்தும் காப்பாற்றும்.

கரும யோகமே மருந்து கற்பதால் மனதில் இருந்து
மரும ரோகமே பறந்து மதியினில் ஞான விருந்து
தருவ தாகுமே நிரந்து தன்னால் முயற்சி கரந்து
வருவ தாலே பிறந்து வாழ்வ தாகுமே சிறந்து
வ்யவஸாயாத்மிகா பு₃த்₃தி₄ர் ஏகேஹ குருனந்த₃ன
ப₃ஹுஶாகா₂ ஹ்ய் அனந்தாஶ் ச பு₃த்₃த₄யோவ்யவஸாயினாம் 2.41

38 (41) இங்கு, குருகுலக்கொழுந்தே, உறுதி உடையவனுடைய மனது ஒரே வழியிலான முயற்சியில் ஈடுபடும் தன்மை உடையது. உறுதியில்லாதவன் மனம் பலவிதமாகப் பிரிந்து, சிதறிப் போகும். (கருமயோகின் முதல் தகுதி மனதில் உறுதியும் கட்டுப்பாடும் கொள்வதுதான். இல்லை என்றால், செய்கின்ற செயலினால், செய்பவன் இறுதியில் அழியவே நேரிடும்.

(பகவான் கிருஷ்ணர், அப்படி மன உறுதி இல்லாதவர்களது வழிகளை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.)

முக்கியத் தகுதி என்ன முயற்சியில் கரும யோகம்
தக்கிய தன்மை யாளர் தன்னிலே உறுதி வேண்டும்
மக்கிய தானால் மனதில் மாறிய தானால் ஆசை
சிக்கிய தானால் செயலும் சிதறிய தாகும் அறிக
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத₃ந்த்ய் அவிபஶ்சித​:
வேத₃வாத₃ரதா​: பார்த₂ நான்யத்₃ அஸ்தீதி வாதி₃ன​: 2.42

38 (42) மலர்களைப் போன்ற கவர்ச்சியான வேத வாக்கியங்களை எடுத்துக் கூறி (அதாவது வேத நுட்பங்களை அறியாமல், பலனுக்காக மந்திர காரியங்களைச் செய்யச் சொல்லி) இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை எனக்கூறுவர் புத்தியில் குறைபாடுள்ளவர்கள் சிலர்.

காமாத்மான​: ஸ்வர்க₃பரா ஜன்மகர்மப₂லப்ரதா₃ம்
க்ரியாவிஶேஷப₃ஹுலாம் போ₄கை₃ஶ்வர்யக₃திம் ப்ரதி 2.43

39 (43) ஆசைகளால் அடைபட்டு சுவர்க்கத்தைத் தங்கள் இலக்காக வைத்து, அலங்காரச் சொற்களால் கருமத்திற்குப் பலன்கள் கூறி, அப்பலன்களை அடைய பல புதிய பிறவிகளை அடையவேண்டும் எனவும், அனுபவிப்பதற்கும் ஆட்சிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் கூறுவர். (அதாவது அறிவிற் சிறந்த வேதியர்கள் கூட, தன்னுடைய ஆன்ம பலத்தினை இழந்து, பூசை, நோன்புகளை ஆசையால் மட்டுமே செய்யலாயினர்.)

அதாவது இன்பத்தை அனுபவிப்பது மனிதப்பிறவியின் குறிக்கோள் அல்ல. உண்மையான குறிக்கோள், முழுநிறைவு அடைதலும் அதனால் முழுமைப் பொருளான இறைவனுள் இணைவதுமே ஆகும். ஆனால் வேதியர் என்று அத்தகைய பாடங்களைப் பயின்றவர்கள்கூட இவ்வுலகிலும், மேலுலகிலும் இன்பத்தை அனுபவிப்பதற்காகவே தனது வாழ்வையும், ஆன்ம பலத்தினையும் செலவிடுகின்றனர்.

வேதியர் சொர்க்கம் என்று விண்ணுல கின்பம் எண்ணி
சோதியை மறந்தார் நல்ல சோடனைச் சொற்கள் கூறி
ஆதியைத் தேடிப் பிறிதோர் அந்தமும் தேடித் தன்னுள்
பாதியாய் நிறைந்த ஆன்ம பலத்தினை இழந்து விட்டார்

36 (43) ஆசையிலிருந்து எழுந்ததே அத்துணை இடர்களும்.

ஆசையோர் பெரு நெருப்பு அறிவினைத் தீய்க்கும் வெள்ளம்
பாசமோர் மோகச் சிக்கல் பண்பினை மாய்க்கும் காலன்
காசுமோர் காதற் சுகமும் கண்முனே ஆடும் மாயம்
வீசுமோர் மூச்சுப் போனால் விட்டிடும் விலகிப் போகும்
போ₄கை₃ஶ்வர்யப்ரஸக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா பு₃த்₃தி₄​: ஸமாதௌ₄ ந விதீ₄யதே 2.44

40 (44) இன்பத்தையும், ஆட்சியையும், விரும்புவோருக்கு உறுதியும் கட்டுப்பாடும் இருக்காது. அவர்கள் மனதைக் கட்டுப்படுத்தும் தகுதியற்றவர்கள்.
(அப்படியானால் வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன? இதனை அருத்துவரும் ஸ்லோகங்கள் விளக்குகின்றன.)

இவ்வாறு ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல கதி அளிப்பதில்லை. அவை முதலில் இன்பத்தைத் தருவதாகத் தோன்றினாலும் இறுதியில் துன்பத்தையே தருகின்றன.

பதவியும் புகழும் தேடிப் பணிதனைச் செய்யக் கூடின்
கதியிலை மனதில் கோடி காட்சியும் குழப்பம் மூடி
உதவிடத் துணியும் சித்தி உண்மையை ஒதுக்கித் தள்ளி
மெதுவிடப் பூச்சால் புத்தி மெலிந்தது போகக் கூடும்
த்ரைகு₃ண்யவிஷயா வேதா₃ நிஸ்த்ரைகு₃ண்யோ ப₄வார்ஜுன
நிர்த்₃வந்த்₃வோ நித்யஸத்வஸ்தோ₂ நிர்யோக₃க்ஷேம ஆத்மவான் 2.45

41 (45) வேதங்கள் இந்தச் செயல்களுக்கு மூலகாரணமான (ஸாத்வீகம், ராஜஸம், தாமஸம் ஆகிய) முக்குணங்களையும் உரைக்கின்றன. அர்ச்சுனா, நீ இவற்றைக் கடந்து பணியாற்றுவதே சிறப்பு. இருமைகளிலிருந்து விலகி எப்போதும் நற்குணத்திலேயே நிலைத்திரு. ஒருபொருளை அடைய வேண்டும் என்றோ அடைந்த பொருளைப் பாதுகாக்க வேண்டும் என்றோ ஆசைப் படாமல், நீ உன்னிடத்திலேயே நிலைத்திரு. ( எனவே, மாயத்து|க்கத்திலிருந்து விழித்தெழு. செய்கின்ற செயலிலே உறுதி வைத்துச் செகத்திலே வெற்றியுடன் வாழ்க.)

ஸாத்விகம் ராஜஸ தாமஸம் சதுர்மறை காட்டும் முக்குணம்
போர்த்திய தாகும் உயிரினம் போகத்தில் நிறுத்தும் சங்கடம்
பார்த்திபா எழுந்திரு விழித்திரு பற்றற்று மேலே நிலைத்திடு
சேரத்திடு ஞானம் செழித்திரு செகத்திலே செயலிலே செயித்திரு
யாவான் அர்த₂ உத₃பானே ஸர்வத​: ஸம்ப்லுதோத₃கே
தாவான் ஸர்வேஷு வேதே₃ஷு ப்₃ராஹ்மணஸ்ய விஜானத​: 2.46

42 (46) (அவ்வாறு) ஆன்மாவைப்பர்றிய உண்மையை அறிந்த ஞானிக்கு, வேதங்களில் சொல்லப்பட்ட (பயன் கருதிச் செய்யும் கருமங்களும், பலன்களும்) பகுதி பயனற்றது. அது எங்கும் நீர் நிறைந்திருக்கும்போது, கிணற்றுநீர் பயனற்று இருப்பது போலாகும்.

(மேலே கூறப்பட்ட முக்குணங்க்களையும் கடந்து வாழ்வதினால் என்ன பயன் என்பது இங்கே விளக்கப்படுகின்றது.)

(அதனால் விழித்திருப்பாயெனில், எடுத்த கடமைகளை முடித்திருப்பாயெனில்,) நீரால் நிரம்பிய கிணற்றைப்போல, தனக்குள்ளே சாந்தமும், சந்தோஷமும் கொண்டு வாழ்வாய்.

நீருடைக் கிணறு என்றும் நிலையுறும் தாகம் என்றும்
பேரிடர் இல்லை யன்றோ பெற்றவர் இன்பம் தன்னுள்
ஊறிடும் பேறு பெற்றோர் உத்தமர் யோக சித்தர்
நேரிடும் துன்பம் இல்லை நித்தமும் இன்பம் தானே
கர்மண்ய் ஏவாதி₄காரஸ் தே மா ப₂லேஷு கதா₃சன
மா கர்மப₂லஹேதுர் பூ₄ர் மா தே ஸங்கோ₃ஸ்த்வ் அகர்மணி
2.47

38 (47) உன்னுடைய கடமை செய்கையில் ஈடுபடுவதே; பலனை எதிர்பார்த்தல்ல. செய்யும் வேலையின் பயனாக வேறொன்றை எதிர்பார்க்காதே. அதற்காக, செயலில் ஈடுபாடு கொள்ளாமல் சும்மா இருந்துவிடாதே.

வேலையின் நோக்கம் கடமை விளைவதில் இல்லை உரிமை
வேலையின் ஆக்கும் கடனே வேறெது நோக்கம் மடமை
வேலையில் சேர்க்கும் உடமை விரும்புதல் தவிர்த்தல் அருமை
வேலையில் நோக்கம் இல்லா ….
யோக₃ஸ்த₂​: குரு கர்மாணி ஸங்க₃ம் த்யக்த்வா த₄னஞ்ஜய
ஸித்₃த்₄யஸித்₃த்₄யோ​: ஸமோ பூ₄த்வா ஸமத்வம் யோக₃ உச்யதே
2.48

43 (48) தனஞ்செயா, ஒருமைப்பட்ட மனதுடன் பற்றற்று, வெற்றி தோல்விகளைச் சமமாக நினைத்துக் கடமையைச் செய். அதுவே யோகம் எனப்படும்.
(செய்வது மட்டுமே நமது கடமை. அதன் முடிவு நமது கைகளில் இல்லை. இதை உணர்ந்து செய்யப்படும் செயலே உண்மைத் தவம் ஆகும்.)

செய்வது செயற் கடன் சேர்ப்பது செயற் பயன்
உய்வது உயிற் கடன் உணர்வது உளப் பயன்
பெய்வது முகில் எனில் பிறவியின் முற் பயன்
மெய்யது உணர்ந் திடில் மெய்த் தவம் அதுவே
தூ₃ரேண ஹ்ய் அவரம் கர்ம பு₃த்₃தி₄யோகா₃த்₃ த₄னஞ்ஜய
பு₃த்₃தௌ₄ ஶரணம் அன்விச்ச₂ க்ருபணா​: ப₂லஹேதவ​: 2.49

43 (49) புத்தி யோகத்தைக் காட்டிலும் (பலனைக் கருதிச் செய்யும்) வெறும் செயல் மிகவும் தாழ்வானது. நீ புத்தியில் நிலைத்து இரு. பலனைக்கருதுபவர்கள் பயனற்றவர்கள். பலன் கருதும் எண்ணம் மனதில் சலனத்தை ஏற்படுத்தி செயல்திறனைக் குறைத்துவிடும்.

பு₃த்₃தி₄யுக்தோ ஜஹாதீஹ உபே₄ ஸுக்ருதது₃ஷ்க்ருதே
தஸ்மாத்₃ யோகா₃ய யுஜ்யஸ்வ யோக₃​: கர்மஸு கௌஶலம் 2.50

44 (50) இவ்வாறான ஆசையற்ற புத்தியால் மனதைச் சமநிலையில் வைத்து, நன்மை,தீமை இரண்டையும் துறந்து செய்யப்படும் கடமைகளே, யோகம் பயில்வதற்கான முக்கியத் தகுதி. அதில் நீ இரு. அத்தகைய கைத்திறனே யோகமாகும்.

புத்தியே யோகம் செய்யும் புதியதோர் செயலில் உள்ளம்
சித்தியே வேண்டி நின்றால் சிதைந்திடும் விசய மனிதர்
உத்தியே பெரிது ஆசை உள்ளத்தில் தோன்றல் பாவம்
நித்தியம் பொறியில் இல்லை நிர்மலம் புலனில் என்றான்
கர்மஜம் பு₃த்₃தி₄யுக்தா ஹி ப₂லம் த்யக்த்வா மனீஷிண​:
ஜன்மப₃ந்த₄வினிர்முக்தா​: பத₃ம் க₃ச்ச்₂ஹந்த்ய்
அனாமயம் 2.51

45 (51) ஆசையற்ற புத்தியால், பலனைப்பற்றி யோசிக்காது, தருமப்படி கடமையாற்ற்பவர்கள், பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பது உறுதி.
(ஆசையில்லாத கருமயோகத்தால், மரணம் அடைந்த போது, சீவன் மென்னுடலின் ஆசையற்ற காரணத்தால், வேறு பூத உடல் கூடிப் பிறப்பது விட்டு, நல்ல கதி அடைவதாக நான்மறை நவில்கிறது. )

அறிவினால் ஆய்ந்து அறிந்து ஆற்றினால் தனது கடமை
செறிவினால் உயிர்கள் சிறந்து செகத்திலே சேரும் பெருமை
பரிவினால் பகவன் அருளால் பக்குவம் பெறுவ ததனால்
புரிவரே கடமை பிறவிப் பூசலைக் கடப்ப துறுதி
யதா₃ தே மோஹகலிலம் பு₃த்₃தி₄ர் வ்யதிதரிஷ்யதி
ததா₃ க₃ந்தாஸி நிர்வேத₃ம் ஶ்ரோதவ்யஸ்ய ஶ்ருதஸ்ய ச 2.52

43 (52) உன்னுடைய புத்தி ஆசையாகிய குழப்பத்தைக் கடந்து செல்லும் என்றால், நீ இதுவரை கேட்ட அனுபவங்கள், இனிமேலும் கேட்கப்போகிற அனுபவங்கள் ஆகியவற்றால் கலக்கமில்லாதிருப்பாய்.

ஶ்ருதிவிப்ரதிபன்னா தே யதா₃ ஸ்தா₂ஸ்யதி நிஶ்சலா
ஸமாதா₄வ் அசலா பு₃த்₃தி₄ஸ் ததா₃ யோக₃ம் அவாப்ஸ்யஸி 2.53

46 (53) அதாவது, புத்தி ஒரு நிலையில் இருக்குமாயின் நீ தன்னை உணர்ந்தவன் ஆவாய். (இந்த ஆசைக்கு வித்து, மனதில் ஏறிய மமதையே. அறிவை, சூரியனைப் போல, குறித்த திசைநோக்கி உறுதியுடன் செல்லவிடாமல், மமதையும் ஆசையும் இடர் கொடுக்கும்.)

மனமெனுங் கூட்டில் ஏறும் மமதையாம் நச்சுப் பாம்பு
உணவெனும் ஆசை கூட்டி உள்ளத்தைப் பேதம் ஆக்கும்
குணமெனும் நன்மை போகும் குழப்பத்தைச் செய்யும் புத்தி
தினகரன் போலே என்றும் திசையொரு மிக்கா விட்டால்
அர்ஜுன உவாச

ஸ்தி₂தப்ரஜ்ஞஸ்ய கா பா₄ஷா ஸமாதி₄ஸ்த₂ஸ்ய கேஶவ
ஸ்தி₂ததீ₄​: கிம் ப்ரபா₄ஷேத கிம் ஆஸீத வ்ரஜேத கிம் 2.54

விசயன் உரை

(அர்ச்சுனனுக்கு தன்னை உணர்ந்தவன் எப்படி இருப்பான் எனும் ஐயம் வருகின்றது. நாம் எப்படி நம்முடைய ஆன்ம ஞானத் தெளிவை கண்டு கொள்வது? நாம் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை எப்படி நாமே உணர்ந்து கொள்கிறோமோ அதுபோல, நம்மை நாமே அறிந்து கொண்டதை எப்படி உணர்ந்து கொள்வது? )

47 (54) கேசவா, எனக்குப் புரிய வைப்பாய். திடபுத்தி உள்ளவனும், தன்னை அறிந்து தன்னுள்ளே கலந்தவனும் எப்படி இருப்பான்? அவன் எவ்வாறு பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?

( மனதில் பேதமை கொள்பவர் யார்? மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பவர் யார்?)

மாதவா முகுந்தா உந்தன் மலரடி சேர்ந்தேன் எந்தன்
வேதனை தீர்த்து வைக்க விடைதர வேண்டும் உள்ளம்
பேதமை கொள்வ தாரோ பேரறி வாளர் யாரோ
சாதனை செய்வ தாரோ சாற்றுக என்றான் வீரன்
ஶ்ரீப₄க₃வான் உவாச

ப்ரஜஹாதி யதா₃ காமான் ஸர்வான் பார்த₂ மனோக₃தான்
ஆத்மன்ய் ஏவாத்மனா துஷ்ட​: ஸ்தி₂தப்ரஜ்ஞஸ் ததோ₃ச்யதே 2.55

ஸ்ரீகிருஷ்ணர் உரை

43 (55) எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் துறந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் திடபுத்தி உள்ளவன் எனக் கூறப்படுவான்.

து₃​:கே₂ஷ்வ் அனுத்₃விக்₃னமனா​: ஸுகே₂ஷு விக₃தஸ்ப்ருஹ​:
வீதராக₃ப₄யக்ரோத₄​: ஸ்தி₂ததீ₄ர் முனிர் உச்யதே 2.56

43 (56) துன்பங்கள் மனதில் வருத்தினாலும் கலங்காதவனாய், இன்பங்களிலே ஆர்வம் இல்லாதவனாய், (அதனால்) அச்சமும் கோபமும் நீங்கியவனாய் இருப்பவனைத் திடபுத்தி உள்ளவன் எனக் கூறுவார்கள்.

ய​: ஸர்வத்ரானபி₄ஸ்னேஹஸ் தத்தத்ப்ராப்ய ஶுபா₄ஶுப₄ம்
நாபி₄னந்த₃தி ந த்₃வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி₂தா 2.57

43 (57) எவன் எங்கும் பற்றில்லாதவனாய், நன்மை தருவதைப் பெற்றதால் மகிழாமலும், தீமை தருவதைப் பெற்றால் துவளாமலும் இருப்பானோ அவனுடைய அறிவு உறுதி அடைகிறது.

48 ( ஆசையில் அலைபவரே மனதில் பேதமை கொள்பவர். ஆசையை அடக்கி, எல்லாம் இறையருள் என்ற வழி நடப்பவரே யோகி.)

ஆசையாம் மாயத் தீயில் அகப்பட்டு அச்சப் பட்டோர்
மாசெனும் வெகுளி யாலே மயங்குவர் குழப்பங் கொள்வர்
தூசென நினைத்து நெஞ்சத் துயரத்தை வெட்டிச் சாய்ப்போர்
ஓசையாய் நிலைத்து ஞான ஓங்கார மறிந்து கொள்வர்
யதா₃ ஸம்ஹரதே சாயம் கூர்மோங்கா₃னீவ ஸர்வஶ​:
இந்த்₃ரியாணீந்த்₃ரியார்தே₂ப்₄யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி₂தா 2.58

49 (58) ஆமை எவ்வாறு தன்னுடைய உறுப்புக்களை (ஆபத்து வரும்போது) அடக்கிக் கொள்கிறதோ, அதேபோல புத்தி உடையவன் (வேண்டும்பொழுது) தன்னுடைய புலன்களை ஆசையாகிய அபாயத்திலிருந்து அடக்கி ஆள்வான். பின்பு (அதனால்) அவனுடைய புத்தி உறுதிப்படுகிறது.

ஆபத்து வருகு தென்றால் ஆமைதன் அவய வத்தை
தேகத்துள் மறைக்கும் உண்மை தெரிந்தவர் புலன்க ளைந்தை
மோகத்தீ கொல்லா திருப்பர் முழுமையாம் ஞானம் என்னும்
தாகத்தைத் தீர்க்கும் திண்மை தன்னுள்ளே பெற் றிருப்பர்
விஷயா வினிவர்தந்தே நிராஹாரஸ்ய தே₃ஹின​:
ரஸவர்ஜம் ரஸோப்ய் அஸ்ய பரம் த்₃ருஷ்ட்வா நிவர்ததே 2.59

50 (59) தம்மால் கவர்ப்படாத சீவன்களிடமிருந்து, வெளிப்பொருட்கள் தமாகவே விலகிவிடுகின்றன. ஆனல் அவற்றினிடமுள்ள ஈடுபாட்டினை இவன் மறப்பதில்லை. வெளிப்பொருட்களைவிட உயர்வான, ஒப்புமை இல்லாத உன்னத நிலையினை (தனக்குள்ளே) உணர்வான் என்றால், அந்த ஈடுபாடும் அவனை விட்டு நீங்கிவிடும்.
(பாதரஸத்தைப் போல, பற்றுதல் இன்றி இருந்தால், ஆசையால் கேடு இல்லை.)

பற்றுதல் இன்றிப் போகும் பாதர ஸத்தைப் போலே
ஒற்றுதல் இல்லா நெஞ்சில் ஓர்துளி மோகம் இல்லை
நற்றுவர் இவரை என்றும் நல்கியோர் பயனு மின்றி
இற்றிடும் இந்திரி யங்கள் ஈந்திடும் கேடு எல்லாம்
யததோ ஹ்ய் அபி கௌந்தேய புருஷஸ்ய விபஶ்சித​:
இந்த்₃ரியாணி ப்ரமாதீ₂னி ஹரந்தி ப்ரஸப₄ம் மன​: 2.60

>

51 (60) புத்தியில் சிறந்திருப்பவனுடைய மனதை, அவன் அடக்க முயன்றாலும், அவனது புலன்கள் (வெளிப்பொருளை நோக்கி) வலிய இழுத்துச் செல்கின்றன.
(புலன்கள் புத்தியை இழுத்தாலும், செய்யும் தொழிலே தெய்வம் என்று நடப்போரை ஆசைகள் துன்புறுத்துவதில்லை. அதனால் அவருக்கு என்றும் அமைதியும் ஆனந்தமுமே கிடைக்கும்.)

இந்திரி யங்கள் தத்தம் ஈர்ப்பினால் அறிவை மாய்க்கும்
தந்திரம் செய்யும் புத்தி தவித்திடத் திசையை மாற்றும்
சிந்தனை சிதறா துள்ளச் சிரத்தை குறையாக் கரும
வந்தனை வழியாய்ச் செல்ல வகைப்பது நன்மை ஆற்றும்
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர​:
வஶே ஹி யஸ்யேந்த்₃ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி₂தா 2.61

43 (61) (அதனால்) புலன்களை மனதுள்ளே அடக்கி என்னைக் கருத்தில் நிறுத்தி நிலைத்திடுக்க வேண்டும். எவனுடைய புலன்கள் அத்தகைய கட்டுப்பாட்டில் உள்ளனவோ, அவந்ஹ்உ புத்தி நிலையானது.

த்₄யாயதோ விஷயான் பும்ஸ​: ஸங்க₃ஸ் தேஷூபஜாயதே
ஸங்கா₃த் ஸஞ்ஜாயதே காம​: காமாத் க்ரோதோ₄பி₄ஜாயதே 2.62

43 (62) ஒருவன் புறப்பொருட்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவற்றில் பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து அவற்றை அடைய வேண்டும் எனும் ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து, (அது கிடைக்கவில்லை என்றால்) சினம் பிறக்கிறது.

க்ரோதா₄த்₃ ப₄வதி ஸம்மோஹ​: ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்₄ரம​:
ஸ்ம்ருதிப்₄ரம்ஶாத்₃ பு₃த்₃தி₄னாஶோ பு₃த்₃தி₄னாஶாத் ப்ரணஶ்யதி 2.63

52 (63) (அத்தகைய) கோபத்தால் மதி மயக்கம் வருகிறது. மயக்கத்தால் (மனக்) குழப்பம் வருகிறது. குழப்பத்தால் (எதையும் ஆராய்ந்து உணர்கின்ற) பகுத்தறிவு அழிகிறது. பகுத்தறிவை இழந்த மனிதன் தானும் அழிகிறான்.

(தருமத்திற்கு ஒவ்வாத ஆசையே அழிவுக்குக் காரணம் என்பது காட்டப்படுகின்றது.

புறப்பொருள் மனதில் எண்ணப் புலர்ந்திடும் அதனால் ஆசை
வரப்பெறும் பலனை அடையும் வாய்ப்பிலை என்றால் கோபம்
சினப்பொறி பறக்கும் சிந்தை சிதறிடும் மயக்கம் குழப்பம்
தனக்குறி தாகும் தன்மை தராதரம் அழிந்து போகும்
ராக₃த்₃வேஷவிமுக்தைஸ் து விஷயான் இந்த்₃ரியைஶ் சரன்
ஆத்மவஶ்யைர் விதே₄யாத்மா ப்ரஸாத₃ம் அதி₄க₃ச்ச₂தி 2.64

53 (64) மன (நிறைவும்) அடக்கமும் உடைய மனிதன் புறப்பொருட்களை அடைந்து கலந்து கொண்டாலும், புலன்களை தன்வசம் அடக்கி, விருப்பும் வெறுப்பும் இல்லாமல் அமைதி அடைகிறான்.

ப்ரஸாதே₃ ஸர்வது₃​:கா₂னாம் ஹானிர் அஸ்யோபஜாயதே
ப்ரஸன்னசேதஸோ ஹ்ய் ஆஶு பு₃த்₃தி₄​: பர்யவதிஷ்ட₂தே 2.65

53 (65) அத்தகைய அமைதியில் எல்லாத் துன்பங்களும் அழிந்துவிடுகின்றன. ஏனெனில், அமைதிஉடையவனுடைய அறிவு உறுதி உடையது.
(எனவே மனதைக் கட்டுப்படுத்தி, ஆசையைத் துறந்து, இன்ப துன்பங்களைச் சமமாய் ஏற்று, வாழ்க்கையில் அமைதியைத் தேடு.)

ஆகையால் மனதை அடக்கி ஆர்ப்பரித் தாளும் ஆசைத்
தோகையை மடியக் கட்டித் தோன்றிடும் பலனை விட்டு
ஈகையை ஏற்பான் காணும் இகழ்ச்சியும் புகழும் சமனாய்
வாகையை உடைய வள்ளல் வாழ்விலே அமைதி யேவான்
நாஸ்தி பு₃த்₃தி₄ர் அயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா₄வனா
ந சாபா₄வயத​: ஶாந்திர் அஶாந்தஸ்ய குத​: ஸுக₂ம் 2.66.

54 (66) உறுதி இல்லாத புத்தி உடையவனுக்கு தன்னைப்பற்றிய (உண்மையான) அறிவு இல்லை. அவ்வறிவு இல்லாதவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவு இல்லை. தன்னை நினையாதவனுக்கு நிம்மதி கிடையாது. நிம்மதி இல்லாதவனுக்கு இன்பமேது?
(எனவே மன வைராக்கியம் இல்லை என்றால், மனிதன் இருள் சேர்ந்த உலகை அடைந்து, அதையே சுகமானது என்று மயங்க நேரிடும்.)

உறுதியே இல்லா மாந்தர் உண்மையே அறியார் தம்மை
இறுதியே இல்லா ஆன்ம இனிமையே உணரார் ஞானப்
பரிதியே இல்லா வுலகப் பாழிருள் படுவர் சுத்தச்
சுருதியே இல்லா கானச் சுகத்தையே வாழ்வு என்பார்

55 (66 – 1) மனம் போன போக்கில் செயலாற்றும் மனிதர்கள், இங்கே நான் சொல்லும் உண்மையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு நல்லோர் கூறும் நல்ல புத்திமதிகளைப் புரிந்து செயலாற்றும் பண்பு இருக்காது. )

தோன்றிடும் பொருளை எல்லாம் தொல்வினை சுகத்தை எல்லாம்
ஊன்றிய உள்ளங் கொண்டு உண்மையாய் நம்பும் மாந்தர்
ஈன்றிவன் சொல்லும் வேதம் இசைந்திடும் ஞானச் செம்மல்
சான்றறி வாளர் காணும் சக்தியை அறிய மாட்டார்
இந்த்₃ரியாணாம் ஹி சரதாம் யன் மனோனுவிதீ₄யதே
தத்₃ அஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவம் இவாம்ப₄ஸி 2.67

56 (67) புலன்கள் புறப்பொருட்களின் கலக்கும்போது, மனமும் அவற்றின் பின்னே சென்று விடுமாயின், அவனுடைய மனம், படகை அடித்துச் செல்கின்ற காற்றினைப்போல், அறிவினை அடித்துச் சென்றுவிடும்.
(அத்தகைய மனிதர்கள், புத்தியால் நிலைப்படுத்தாத மனதையுடையவராய்,காற்றடித்த திசையெல்லாம் போகும் கப்பலாகத் தனது வாழ்க்கையை வீணடித்து, மாண்புடைய மனிதப்பிறவியின் வாய்ப்பை, அதாவது ஆன்ம அறிவு தேடும் பயனைத்தவற விடுவர்.)

தேற்றுவா ரில்லா ஞானந் தெளிந்தவ ரில்லா தாகும்
போற்றுத லில்லா தோடும் புத்தியைப் பெற்றோ ரோடுங்
காற்றுவாழ் திசையி லெலாங் கப்பலும் போகும் நேரம்
நேற்று இன்று நாளைஎன நியமங்கள் இன்றிப் போகும்
தஸ்மாத்₃ யஸ்ய மஹாபா₃ஹோ நிக்₃ருஹீதானி ஸர்வஶ​:
இந்த்₃ரியாணீந்த்₃ரியார்தே₂ப்₄யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி₂தா 2.68

57 (68) எனவே, வலிமை பொருந்தியவனே, எவனுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவனுடைய அறிவே திடமானது என்று அறிந்து கொள்.
(உலகில் தலைவனாகும் தகுதி, புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவனுக்கே உண்டு. அவனே நன்மை அடைவான்.)

வலியனே விசயா கேட்க வகுத்திடு உலகில் எவனின்
புலன்களே கட்டுப் பாட்டில் பொருதுவ னாவான் அவனே
நலனிலே அடைவான் புத்தி நயத்திலே பெறுவான் சித்தி
உலகிலே தலைவன் ஆகும் உயர்நிலை அடையும் சக்தி
யா நிஶா ஸர்வபூ₄தானாம் தஸ்யாம் ஜாக₃ர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்₃ரதி பூ₄தானி ஸா நிஶா பஶ்யதோ முனே​: 2.69

58 (69) எல்லா உயிர்களும் இரவாகின்ற நேரத்தில், தன்னடக்கமுள்ள ஞானி விழித்திருக்கிறான். பிற உயிர்கள் எப்போது விழித்துள்ளனவோ அப்போது, அந்த ஞானிக்கு இரவாகும்.

எல்லா உயிரும் விழிமூடும் இருளாகும் என நோகும்
நல்லான் ஞானிக்கு வழிகூடும் ஒளியாகும் அது நேரம்
கல்லா துயி ரெல்லாம் கண்காணும் களமாகும் பக லாகும்
இல்லா ஒளி யிறந்த இரவாக ஞானிக்கு உரு வாகும்

58 (69-1) (இரவும் பகலும் என்பது இங்கே மயக்கதையும், தெளிவயும் குறிக்கிறது. இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும் செயலில் இல்லை. அதை அனுபவிக்கும் மனதில் தான் இருக்கிறது. ஒன்றே ஒருவனுக்கு நல்லதாயும் மற்றவனுக்குக் கெடுதியாயும் முடியும்.)

எளியோன் விழியில் பகல் எதிரில் தெரியும் மதி
வலியோன் அதனை இருள் வாழ்வு எனத் தெளியும்
சலியா துலகில் நலம் சாதித் திட அலையும்
ஒளியா திருளா தென ஓய்ந்து தலை சாயும்

59 (69) செயலை மட்டும் நீ செய்க. அதனால் வரும் பலன் உன்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.

செய்கிற செயலில் மட்டும் சிந்தையை வைத்தல் யோகம்
செய்கிற செயலில் கிட்டும் செல்வத்தைத் தேடல் பாவம்
செய்வது உந்தன் சேவை சேர்வதும் செலவும் பாவம்
செய்வது அல்ல நீயோர் செயற்படு பொருளே ஆகும்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட₂ம்
ஸமுத்₃ரம் ஆப​: ப்ரவிஶந்தி யத்₃வத்
தத்₃வத் காமா யம் ப்ரவிஶந்தி ஸர்வே
ஸ ஶாந்திம் ஆப்னோதி ந காமகாமீ 2.70

60 (70) எவன் ஆசைகள் வந்து அடையும்போது, கடல் தன்னுள் ஆறுகளைச் சேர்த்துக் கொண்டாலும், (முகிலுக்கு நீரை மழையாகக் கொடுத்தாலும்), என்றும் தன்னளவு குறையாமல் சமமாக இருப்பது போல், குண வேறுபாடுகள் இன்றி சமநிலையில் இருப்பானோ அவன் அமைதி பெறுகிறான்.

அலைகட லேற்றங் காண ஆறுகள் சேர்ந்த போதும்
பலமுறை மேகத் தாகப் பசிதனைத் தீர்த்த போதும்
நிலைபெறுந் திரை நீராக நிற்பவர் யோகி ஐயம்
விலகிட பிரம்ம ஞானம் விளக்கினேன் விசயா நேயம்
விஹாய காமான் ய​: ஸர்வான் புமாம்ஶ் சரதி நி​:ஸ்ப்ருஹ​:
நிர்மமோ நிரஹங்கார​: ஸ ஶாந்திம் அதி₄க₃ச்ச்₂ஹதி 2.71

60 (71) ஆசைகளைத் துறந்து, நான், எனது என்று எதனையும் ஆவலுடன் எதிர்பார்க்காமல் இருப்பவன் அமைதியைப் பெறுகிறான்.

ஆசையை விட்டுப் பின்னே ஆவலாய் நானே என்னும்
ஓசையை விட்டுத் தன்னுள் ஒன்றையும் எதிர் பாராமல்
மாசற இருப்பான் மேலோன் மனதிலே சாந்தம் கூடும்
நேசனே நிமலன் யோகி நிம்மதி அடையும் ஞானி
ஏஷா ப்₃ராஹ்மீ ஸ்தி₂தி​: பார்த₂ நைனாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தி₂த்வாஸ்யாம் அந்தகாலேபி ப்₃ரஹ்மனிர்வாணம் ருச்ச₂தி 2.72

61 (72) பார்த்தா, இதுவே பிரம்மநிலை என்பது. இதை அடைந்தவன் பிறகு மயங்குவதில்லை. (வாழ்வின்) க்டைசி காலத்திலேனும், இதன்படி நடப்பவன் இறுதியில் பிரம்மத்துள் இரண்டறக் கலந்துவிடுகிறான்.

பார்த்தனே இதுவே பிரம்ம பாக்கியம் அளிக்கும் யோகம்
சேர்த்தவன் இதனை உள்ளம் செபித்தவன் கரும யோகம்
நூர்த்தவன் பலனைத் தியாகம் நுழைத்தவன் இறுதி நேரம்
ஏற்பவன் என்னைச் சேரும் ஏற்றத்தைப் பெறுவான் என்றான்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
ஸாங்க்₂யயோகோ₃ நாம த்₃விதீயோ(அ)த்₄யாய​: (2)

இவ்வாறு உபநிஷத்தும் பிரம்ம வித்தையும் யோகநூலும் கிருஷ்ணார்ச்சுன ஸம்பாஷணையுமான மத் பகவத்கீதையில்
‘சாங்கிய யோகம்’ எனும் இரண்டாம் அத்தியாயம் நிறைவுறும்

 1 – அர்ச்சுன விஷாத யோகம்


 3 – கர்ம யோகம்

Related Posts

Share this Post