Log in to download as PDF

(Read in ENGLISH)

நான் பக்தனா

ஐயாவுடன் உரையாடல் (35)

“அவர் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு பெரிய பக்தர்”, என்று உமா எங்கள் குடும்ப நண்பரைப்பற்றிச் சொன்னார்.

“ஏனென்றால் அவர் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்! அவரிடம் ஒரு டஜன் ப்ரார்த்தனை என்றென்றும் கைவசம் உண்டு.”

உமா குறிப்பிட்ட அந்த நண்பரைப் பற்றி நினைத்தேன். சொந்தமாகத் தொழில் செய்கின்ற அவர் பல பூஜைகளைப் பெரும்பாலும் பெரிய அளவில் செய்கின்றவர்.

உமா தொடர்ந்தார்.

“நமது ஹாரோ கோவிலில் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்ய மறக்காதீர்கள்! அடுத்த வாரமோ அல்லது அதற்கு அடுத்த வாரமோ இருக்கலாம்.”

நான் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் செல்ல முனைந்தபோது, உமா  இதனை இரண்டாவது முறையாக என்னிடம்  சொன்னார்.

‘இதை நான் செய்தாக வேண்டும்’ என எனக்குள் சொல்லிக் கொண்டு, நடைப் பயிற்சிக்காகப் பூங்காவை நோக்கி மெதுவாக ஓடத் தொடங்கினேன். அங்கே ஐயா வருவார். அவருடனான எனது நடைப்பயிற்சிகள் எப்போதும் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன.

ஐயா பூங்காவில் ஏற்கனவே எனக்காகக் காத்திருந்தார்.

“வணக்கம் ஐயா, நமஸ்காரம்.”

“எல்லாம் நலமா?”, ஐயா கேட்டது, நான் நடைப்பயிற்சிக்கு முன்னதாக, மன நிம்மதியுடையவனாக இருக்கிறேனா என அறியவே ஆகும்!

“நிச்சயமாக ஐயா!” –

இப்படிச் சொல்லிக்கொண்டே,  வீட்டுக்குத் திரும்பும் வழியில் கோயிலில் அபிஷேகத்திற்கான முன்பதிவினக் கோவிலில் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என நினைவூட்டுவதற்காக எனது தொலைபேசியில் ஒரு அலாரம் வைத்துக் கொண்டேன்.

“கோயிலில் ஒரு பூஜைக்கு முன்பதிவு செய்வது பற்றி உமா என்னிடம் சொன்னதை போனில் நினைவுக்கு வைத்தேன் ஐயா!”

“அது நல்லதுதானே! என்ன விசேஷம்?”

நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.

“ஒன்றுமில்லை ஐயா!  ஒருவேளை உமாவுக்கு ஏதேனும் ஒரு ‘பிரார்த்தனா’ இருக்கலாம்! அல்லது நாங்கள் கோவிலில் அபிஷேகம் செய்து சில காலம் ஆகிவிட்டது என்றிருக்கலாம்!”

“அப்படியானால் உங்களுக்கு என்று ப்ரார்த்தனா எதுவும் இல்லை என்று அர்த்தமா?” – ஐயா என்னை

கிண்டலாகக் கேட்டார்.

“அப்படி இல்லை ஐயா. இந்நாட்களில் எல்லாம், என்னவோ எனக்கு இறைவனிடம் என்ன கேட்பது என்று கூடத் தெரிவதில்லை!”

“எல்லாம் சாதிச்சதுனாலயா”, என்று சிரித்தபடி கேட்டார் ஐயா.

அப்படிச் சொல்லும்போது அவர் எவ்வளவு சீரியஸாக இருக்கிறார் என்று பார்க்க, அவரைக் கூர்ந்து கவனித்தேன்!

“அப்படி இல்லை ஐயா! எனது பக்தி பலவீனமடைந்து வருகிறது என்றுதான்  நான் நினைக்கிறேன். என்னிடம் நிறையப் பிரார்த்தனைகள் இல்லைதான். எனினும், நான் கோவிலுக்குச் செல்வதில் மகிழ்ச்சி உள்ளவனாகத்தான் இருக்கிறேன்.”

ஐயா எதுவும் பேசவில்லை.

“என் பக்தி பின்னடைவில் உள்ளதா ஐயா?” – மெதுவாக விசாரித்தேன்.

ஐயா கேட்டார்.

“பக்தி என்றால் என்ன?”

“ஐயா, அது கடவுள் மீதான நமது உணர்வு! சர்வ வல்லமையுள்ள இறைவனிடம் நாம் காட்டும் அன்பு, நம் அனைவரின் நலனுக்காகவும் அருளை வேண்டுகின்ற செயல்!”

“அவ்வளவுதானா!”

“ம்ம்ம்…. அதாவது, கடவுளை நமக்குத் துணையாக இருக்கும்படியும், எந்தத் தீமையிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது!”

“அதாவது பக்தி என்பது நமக்குச் சேவை செய்ய, இறைவனை அழைப்பதற்கான வழிமுறை எனச் சொல்கிறீர்கள்!”

“தயவுசெய்து அப்படிக் கூறாதீர்கள் ஐயா! ஒரு குழந்தை தாயிடம் கேட்பது போல, இறைவனிடம் நாம் வைக்கும் வேண்டுகோள்தானே பிரார்த்தனை! அது அன்பின் காரணமாகும்.”

“அப்படியானால், பக்தி என்பது அன்பினால் ஆனது, இல்லையா!” ஐயா கேட்டார்!

“ஆமாம் கண்டிப்பாக! அது ‘ ப்ரேமா’ என்பது, கடவுள் மீதான அன்பு.”

“அப்படியானால் அதில் பிரார்த்தனையின் பங்கு என்ன? பிரார்த்தனை என்பது, நமக்குத் தேவையான அனுகூலங்களைப் பெறச் செய்கின்ற வேண்டுகோள் அல்லவோ!”

“ஐயா, நம் நல்வாழ்வையும், துக்கத்தில் இருந்து நமக்கான பாதுகாப்பையும் இறைவனிடம்தானே வேண்ட வேண்டும்! நாம் வேறு யாரிடம் செல்ல முடியும்?”

“நிச்சயமாக! அதுதான் பக்தி என்றால், பிறகு ஏன் அதற்கு அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்? உமது பிரார்த்தனை உமது தேவைக்காக அல்லவா!”

எப்பொழுதும் அப்படித்தான் என்பதால், நான் பதில் சொல்லவில்லை.

ஐயா என் தோள்களைத் தொட்டார்.

“குற்ற உணர்வு வேண்டாம். அது முற்றிலும் நல்லதுதான்! நமது தேவைகள் மற்றும் நமது துன்பங்களிலிருந்து விடுதலை என நாம் கடவுளிடம் கேட்பது சரியான செயல்தான். வடமொழியில்

‘அர்த்த’  எனும் தேவைகளுக்காகவும், ‘ஆர்த்தா’ எனும் துயரங்களின் நிவர்த்திக்காகவும், அவற்றில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, அதற்காக நாம்  கடவுளின் தலையீட்டை நாடுகின்றோம்! அதனால்தான் நாம் எதை விரும்புகிறோமோ, அது ஒரு சாதனையாக இருந்தாலும் சரி அல்லது துக்க நிவாரணமாக இருந்தாலும் சரி, அதனைக் கடவுளித்தில் ‘பிரார்த்தனை’ என விண்ணப்பிக்கின்றோம்.”

“அதுதானே பக்தி, சரியா?”, நான் கேட்டேன்.

“நிச்சயமாக! ஆனால் அது ஒரு வியாபாரம் ஆகிவிடுகிறதே! சிலவற்றை அடையப் பிரார்த்தனை செய்து, அதன் நிறைவேற்றத்திற்கு நன்றிக்கடனைக் கடவுளுக்கு அளித்து, நாம் பக்தியைக் காட்டுகின்றோம். ‘பிரார்த்தனை’ என்பது சில துக்கங்களை நீக்குவதற்காக இருந்தால், அதை ஒரு பரிகாரச் சடங்கு அல்லது ‘ப்ராயசித்த கர்மா’ எனச் செய்கிறோம்! இந்தக் கருத்து உங்களுக்குப் புரிகிறதா?”

“புரிகிறது ஐயா, ஆனாலும் அதுவும் பக்தி என்றுதானே கருதப்படுகிறது!” – நான் விரைந்து ஆர்வத்துடன் கேட்டேன்.

“ஆமாம், கடவுளை வணங்கும் எந்த விதமான வழிபாடும், அது எந்தக் காரணத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அது பக்தி மட்டுமே. ஆனால் அதன் உயர்வும், மதிப்பும் பல நிலைகளில் மாறுபடுகின்றது.”

“எப்படி ஐயா?”

ஐயா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“உங்களுக்குப் பிரார்த்தனை எனும் வேண்டுதல்கள் நிறைய இல்லை என்று சொன்னீர்கள் அல்லவா! ஒருவேளை பிரார்த்தனை என எதுவுமே இல்லை என்று சொன்னீர்களோ! அப்படித்தானே!”

“இல்லை ஐயா, இப்போதெல்லாம் எனது மனம்,  உலக விஷயத்திற்காக, அடையும் பொருள் இன்பத்திற்காக ஏங்குவதில்லை என்றுதான் சொன்னேன். வாழ்க்கையில் வரும் சோதனைகளின் போது கூட, என் மனதை அமைதியால் நிரப்புவதற்காக மட்டுமே நான் கோயிலுக்குச் செல்கிறேன்! உண்மையில் கடவுளிடம் அந்தக் கஷ்டங்களை நீக்கி உதவி செய்யுங்கள் எனவும்  கேட்பதில்லை. இது எனது அறியாமையா, அகங்காரமா, முதிர்ச்சியா – அது  எனக்குத் தெரியவில்லை.”

ஐயா பலமாகச் சிரித்தார்.

“அறியாமையோ அகங்காரமோ அல்ல நண்பரே! முதிர்ச்சி! அப்படித்தான் இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்! உங்கள் வாழ்க்கை அனுபவங்கள், அதனால் வந்த முதிர்ச்சி இவை எல்லாம் உங்களுக்குள் ஒரு சுய பரிசோதனைக்கான வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கலாம்.”

நிதானமாக நடந்து கொண்டிருந்தேன்.

“நண்பரே! நீங்கள் கடவுளிடம் எதையும் கேட்பதில்லையா?”

“ஐயா, அப்படி இல்லை! நான் இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறேன். கோவிலுக்குப் போவது, மந்திரங்கள் சொல்வது, பஜனைகள் பாடுவது போன்றவை எனக்கும் பிடிக்கும்தான்! ஆனால் வேலையில் பதவி உயர்வு கேட்டு, என் பிள்ளைக்கு நல்ல திருமணம் அமைய வேண்டும் அல்லது பொருளாதாரச் சுமையைக் குறைக்க லாட்டரிப் பரிசு கிடைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்க நினைத்தால் – அவற்றிலிருந்து நான் பின்வாங்குகின்றேன்.”

“ஏன்?”

“எனக்குத் தெரியாது! அது எனது புரிதலின் காரணமாக இருக்கலாம், அதுவும் எனது குறைவான அறிவினால் இருக்கலாம்…. என்ன நடந்தாலும் அது எனது கடந்த காலக் கர்மாக்களின் காரணம் என்பதைப் புரிந்து கொண்டதால், அவற்றை எல்லாம் நான் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.”

“அப்படியானால், எந்த வேண்டுகோளும் இல்லாதபோதும் நீங்கள் ஏன் கடவுளைத் துதிக்கிறீர்கள்?”

“ஏனென்றால் அதில் எனக்கு நிம்மதி கிடைக்கிறது ஐயா. கடவுள் எனது பக்திக்கு இரங்கி, நான் அவர்மீது வேண்டுகோள் எனும் சுமைகளை ஏற்றாதபோதும், வரும் எல்லாச் சோதனைகளையும் சுமந்தே கடந்தவனாக, எந்தக் காயமும் இன்றி என்னை வெளிவரச் செய்வார் என நினைக்கிறேன்.“

“பக்தர்களின் வேண்டுகோள் எல்லாம் இறைவனுக்குச் சுமை என்றுதான் நினைக்கிறீர்களா?”

“ஐயா, நமது வேண்டுகோள் எனும் சுமைகளை ஆண்டவனால் கையாள முடியாது என்பதல்ல! ஆனால் எனது சிற்றறிவின்படி, அத்தகைய சுமைகள் இறைவனையும்  ஒருவித இக்கட்டில் வைக்குமோ எனப் பார்ப்பதால்தான்!”

நான் தொடர்ந்தேன்.

“உதாரணமாக, பலரும்  ஒரே பொருளை வேண்டலாம். அதனைத் தாம் மட்டுமே அடைந்து அனுபவிக்க இறைவனிடம்  எல்லோரும் பிரார்த்தனை செய்தால், ​​கடவுள் எப்படி அனைவருக்கும் சமமானவராக இருந்து அந்தப் பிரார்த்தனைகளை எல்லாம் பாகுபாடின்றி நிறைவேற்ற முடியும்?”

“அவர் அப்படி நிறைவேற்ற மாட்டார்!”, அழுத்தமாகச் சொன்னார் ஐயா.

“என்ன சொல்கிறீர்கள், ஐயா! கடவுள் அனைவருக்கும் பொது, நியாயமானவர் இல்லையா?”

“ஆம்! அனைவருக்கும் பொதுவானவர், நேர்மையானவர் என்பதால் மட்டுமே கடவுளைப்பற்றி அப்படிச் சொல்கிறேன். அதனால்தான் பிரார்த்தனை என்பது கடவுள் உங்களிடம் மட்டுமே கருணை காட்ட வேண்டும் எனும் எதிர்பார்ப்பில்  செய்வதாக இருந்தால், அது கடவுளை ‘பாரபக்ஷம்’ எனும் குறை உள்ளவராக ஆக்கிவிடும்! அது தவறு!”

“அப்படியானால், கடவுள் நமது வேண்டுகோளை எல்லாம் நிறைவேற்ற மாட்டாரா?” சற்று ஏமாற்றத்துடன் கேட்டேன்.

“அப்படியல்ல! தாராளமாக  இறைவனிடம் வேண்டுங்கள்! ஆனால் சரியாகக் கேளுங்கள்! எனினும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ‘அர்த்த -ஆர்த்த பக்தி’, அதாவது தேவைகள், துயரங்களால் விளையும் பக்தி, கடவுள்மீது, அவர் உங்களது கடந்த கால வினைப் பயனில் மாற்றத்தைச் செய்தாக வேண்டும் எனும் கட்டாயத்தைத் திணிக்கின்றது. கடவுள் எப்படி அதனைச் செய்வார்! நமது செயல் அனைத்திற்கும், அவற்றுக்குத் தக்க பலன்களைச் சரியான நேரத்தில் மற்றும் நியாயமான முறையில் வழங்குவதற்கு இறைவன் ஒரு சாட்சி மட்டுமே அல்லவா!”

“ஆமாம் ஐயா! புரிகிறது! நமது  துக்கம் நீங்க வேண்டும் அல்லது சில ஆதாயங்களைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது, ஏற்கனவே எழுதப்பட்ட கர்ம விதிகளை மாற்றுமாறு நாம் இறைவனைக் கட்டாயப்படுத்துவது ஆகிறது! அதைத்தானே சொல்கிறீர்கள்!”

“அதைத்தான்!”, ஐயா சுருக்கமாக முடித்தார்.

“ஐயா, கடவுள் நமக்கு உதவி செய்ய அப்படி அட்ஜஸ்ட் பண்ண மாட்டாரா? குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதால், தண்டனை குறையும்தானே!” – நான் கொஞ்சம் ஆறுதலான பதிலைத் தேடினேன்.

“ஒருவேளை இறைவன் அப்படிக் கருணை செய்யலாம்! உங்களது வினைப்பலனின் தாக்கத்தின் விகிதத்தையோ அல்லது அதன் தாக்க  நேரத்தையோ கூட்டியும் குறைத்தும், உங்களது ஆழமான பிரார்த்தனையின் அளவுக்கேற்பச் சரிசெய்யலாம். ஆனால் வினைப்பலனை முழுவதுமாக அனுபவிக்க வேண்டிய நியதியை, ஏற்கனவே எழுதியதை, ஒருக்காலும்  கடவுள் மாற்றி எழுத மாட்டார்!”

“அதாவது, நாம் நமது வினைப்பளுவின் தாக்கத்தை  தாங்கித்தான் ஆக வேண்டும், அப்படித்தானே!”

“ஆம், எனவே அவரின் கருணையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பிரார்த்தனைகளின் பலனால், இறைவனின் கருணை உங்கள் மீது இருக்கும்போது,  நீங்கள் உங்களை அறியாமலேயே சில கஷ்டங்களை கடந்துவிட்டீர்கள் எனுமாறு அவை வந்து போய்விடலாம்! எனவே பிரார்த்தனை செய்யுங்கள், வேண்டுகோள் வையுங்கள்! ஆனால் அதனை மட்டுமே பயன்படுத்தி, சாமர்த்தியமாக எதையும் சாதித்துவிட நினைக்காதீர்கள்!”

“ஐயா என்ன சொல்றீங்க?”

“உங்கள் பங்குக்கு, ‘பிரயத்னம்’ எனும்  நன்முயற்சி இல்லாமல், ஆதாயத்திற்கோ, ஆபத்திலிருந்து விடுபடுவதற்கோ, நீங்கள் வெறுமனே கோரிக்கையை மட்டும் கடவுளிடம் வைப்பதனால் எப்பலனும் இல்லை! படிக்காமல், கடவுளை வேண்டிக்கொண்டு மட்டும் ஒருவரால்  தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி இயலும்!”

“கண்டிப்பா ஐயா! நமது உழைப்பும், முயற்சியும் முக்கியம்!”

ஐயா தொடர்ந்தார்.

“ஒருவேளை பிரார்த்தனையின் பயனால், தேர்வுக் கூடத்தில் உங்கள் ஞாபக சக்தி வலுவாக இருந்து தேர்வில் உங்களைத் தாழ்த்திவிடாமல் இருக்க உதவலாம். எனவே, உங்கள் சரியான முயற்சியும், கடின உழைப்பும் மூலதனமாக்கி, கடவுளின் கிருபையால் நீங்கள் முழுமையான நீங்கள் அடையலாம்.”

“உண்மைதான் ஐயா! நான் அப்படியான எந்த உலக விஷயங்களுக்காக இறைவனிடம் எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவில்லை என்றால்……?”

“நல்லதுதானே! அப்படியான பக்தி உங்களிடம் இருக்குமாயின் அது சிறப்பே! அப்போதுதானே பக்தியின் உண்மைப் பொருளான ‘ப்ரேமா’ எனும் கடவுள் மீதான அன்பு வெளிப்படுகின்றது. நீங்கள் இறைவனை நாடுவது, அவரை நேசிப்பதால் மட்டுமே அன்றி, வேறு ஒன்றைத் தேடுவதற்காக அல்ல என்பதுதானே!”

“ஐயா, நானும் தேடுகின்றேனே!  அமைதியைத் தேடுகின்றேனே! இன்னும் எனக்கு வழிகாட்ட கொஞ்சம் வெளிச்சம்

தேவையாகிறதே! ஐயா, எனது தேவை எது என்பதை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. நான் கோவிலுக்குச் செல்லும் போது, ​​ஒன்றையும் தேடி ஏங்கிச் செல்லாமல் இல்லை!  ஆனால் அது என்னவென்று தெரியவில்லை! அங்கு இருக்கும் போது என் உள்ளத்தில் நிறையும் அமைதிக்காக இருக்கலாம். ஆனாலும், அந்த அமைதி பிறகு போய்விடுவதால், அமைதியற்றவனாக மாறி மீண்டும் கடவுளை நாடிச் செல்கின்றேன். இதுவும் செல்லுபடியான பக்திதானா?”

“நிச்சயமாக! மற்ற இரண்டையும் விட  இது ஒருபடி மேலானது. நீங்கள் எதையும் கேட்காவிட்டாலும், உங்கள் உள்ளார்ந்த தேடலானது உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவுபடுத்துவதாகும். நீங்கள் கடவுளைப் பற்றி, உங்களைப் பற்றி, உண்மையைப் பற்றிய அறிவைத்தான் தேடுகிறீர்கள்.”

“அந்த மூன்றையுமேவா!”, நான் யோசித்தேன்.

“அந்த மூன்றும் ஒன்றே! அதுவே உண்மையான மகிழ்ச்சி! அதுவே, உங்களிடம் கடவுளிடம் கேட்பதற்கு என  எதுவும் இல்லாவிட்டாலும், உங்களைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறது!”

மேலும் கேட்கக் காத்திருந்தேன்.

ஐயா தொடர்ந்தார்.

“அதாவது, அப்படியான பக்தியில், உங்கள் ஆசை ஒரு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது. அந்த உயர்ந்த இடத்திலிருந்து, அது கடவுளுக்கு ஒரு உயர்ந்த வேண்டுகோளை வைக்கிறது: ‘கடவுளே! நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, என்னைப் பேரின்பத்தில் திளைக்க வைக்கும் ஏதோவொன்றிற்காக நான் ஏங்குகிறேன்; என்னை விடுவிக்கவும், முற்றிலும் மகிழ்ச்சியாகவும், வாழ்வின் நடை முறைகளில் பாதிப்பற்றவனாகவும் ஆக்க வேண்டும்! அந்த அறிவுக்கான பாதையில் என்னை வழிநடத்துங்கள்’ என்பதுதான் அது.”

“அதுபோலத்தான் என்னவோ ஐயா! அது என்ன?”

“அந்த பக்தியின் காரணம் ‘ஜிக்ஞாசா’ எனும் உண்மையை அறியும் ஆழ்ந்த ஆசை. சில வேதாந்த அறிவைப் பெற்றதாலோ அல்லது, உங்களைப் போல, வாழ்க்கை அனுபவங்களினால் கிடைத்த நல்ல ஆசியினாலோ, அவ்விதமான வேட்கை உங்களை உண்மையைத் தேடத் தூண்டுகின்றது!”

“அப்படியானால் நான் சத்தியத்தைத் தேடுபவனா?” – ஆவேசத்துடன் கேட்டேன்!

“நாம் அனைவருமேதான்! நாம்தான் அதை அடையாளம் காண்பதில்லை! உண்மை என்பது களங்கமற்ற மகிழ்ச்சி! ஆனால் அந்த மகிழ்ச்சியை, நாம் ஜடப் பொருட்களில் கிடைக்கும் சுகம் என எண்ணி மயங்குகின்றோம். அத்தகைய பொருள்கள் நம்மை விட்டுப் போனால், வருத்தப்படுகிறோம். அதனால்தான் நாம் ‘அர்த்த-ஆர்த்த’ நிலையில், கடவுளிடம் நமது பிரார்த்தனைகளை விண்ணப்பிக்க உந்தப்படுகிறோம்.”

“நான் நன்றாக உணர்கின்றேன் ஐயா. இந்நாட்களில், எனது பிரார்த்தனைகளின் தீவிரம் குறைக்கப்பட்டதை அறியும் போது நான் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். ஆனால் நான் தோல்வி அடையவில்லை என்பதைத் தற்போது உணர்கின்றேன்!”

“நிச்சயமாக இல்லை. பக்தி என்பது கடவுள் மீதான ‘சிரத்தை’ எனப் புரிந்து கொள்ளுங்கள். அன்பு என்பது பக்தியின் முழுமையான இயல்பு! சிரத்தை என்பது அதன் வெளிப்பாட்டின் நிலை.”

“எனக்கு புரியவில்லை ஐயா.”

“நான் சொல்கிறேன், அர்ப்பணிப்பு இருந்தால்தான் பக்தி; அர்ப்பணிப்புதான் பக்தியாக மலர்கிறது. அதேசமயம், பக்திதான் அர்ப்பணிப்புக்கான அடிப்படைக் காரணம். அத்தகைய பக்திக்கு வேட்கை, எந்தவொரு பொருள் ஆதாயமும் அல்ல, மாறாக முழுமையான சுதந்திரத்திற்கான தீவிர விருப்பம். அப்போதுதான் பக்தி,  மகத்துவம் மிக்கதாகிறது.”

“ஜிக்ஞாசு எப்படி இத்தகைய பக்தியைக் காட்டுகிறார்?”

“அப்படிப்பட்டவருடைய பக்தி, இறைவனுடைய மகிமையைத் துதிப்பதில் மட்டுமே! அவர் அர்ச்சனை, அபிஷேகம்  என அந்த சடங்குகள் அனைத்தையும் செய்யலாம், அல்லது செய்யாமலிருக்கலாம்! ஆனால் உண்மைக்கான சரியான பாதையை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்  இருப்பார். விரிவான சடங்குகளைச்  செய்து பிரார்த்தனை செய்பவர்களுடனும் அமைதியாக உடன் இருந்து, உதவி செய்து மகிழ்வார்.”

சிறிது நேரம் கழித்து ஐயா தொடர்ந்தார்.

“அதனால்தான் யாருடைய வெளித் தோற்றத்தை வைத்தோ, அல்லது வெளி நடவடிக்கைகளைக் கொண்டோ யாரையும் மதிப்பிட்டுவிட முடியாது. ஆடம்பரமான பூஜைகளில் மிகக் குறைவான ஆர்வம் காட்டுபவர், ஒரு வேளை உயர்ந்த பக்தராக இருக்கலாம், அதேசமயம் பெரிய யாகங்களைக் கூட விடாப்பிடியாகச் செய்பவர், சாதாரணப் பொருளைத் தேடுபவராக இருக்கலாம்.”

“சுவாரஸ்யம் ஐயா! என்றேனும் ஒரு நாள், சத்தியத்தின் சரியான பாதையில் நான் அறிவைப் பெறுகிறேன் என்றால், அந்த நாள் விரைவில் வரும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன், அதற்கு  என்னுடைய ‘ஜிக்ஞாஸ-பக்தி’ காரணமாக இருக்கலாம்! ஐயா, அதற்குப் பிறகு என்ன?”

ஐயா சிரித்தார்.

“கடவுள் முதலில் அந்த வரத்தை உங்களுக்கு வழங்கட்டும்! முடிவில்,  அதன் பயனால், நீங்கள் உங்களுக்கான ஆத்மகுருவைச் சந்திக்கும் வாய்ப்பை அடைவீர்கள். யாருடைய வழிகாட்டலில், உங்களுக்கு முழுமை, நிறைவு, விடுதலைக்கான அறிவு என எல்லாம் கிடைக்குமோ, அந்த குருவினால்,  உண்மைக்கான் முடிவான வழி உங்களுக்குக் கிடைக்கும்.”

“ஐயா ‘முக்தி’ என்பதைச் சொல்கிறீர்களா?”

“ஆம்! ‘ஶோக-விநாஶ-காரணம்’ பற்றிய சரியான அறிவு, உங்களை எல்லா துக்கங்களிலிருந்தும் வெளியேற்றும். அது முதல் அப்படியான துயரங்களிலிருந்து விடுதலை எனும் உயர்ந்த இலட்சியம் மட்டுமே உங்களுக்குள் இருக்கும். அதுவே ‘முமுக்ஷுத்வம்’ எனப்படும், அதுவே  முழுமையில் வைக்கப்படும் அசைக்க முடியாத ஆசை. அந்த ஆசையின் தாக்காத்தால், ‘நிதித்யாசனம்’  எனும் நிலையான அறிவில் மட்டுமே கவனம் கொண்ட, மிக உயர்ந்த  பக்தியை நீங்கள் அடைவீர்கள். அப்போதுமுதல், நீங்கள் சுதந்திரமாக இருக்கத் தயாராக உள்ளீர்கள்.”

“அப்படியானால், அப்போதிருந்து எனக்கு பக்தி தேவையில்லையா?”

“என்ன சொல்கிறீர்கள்! அந்நிலையில் மட்டுமே நீங்கள் இயற்கையாகவே அன்பின் முழுவடிவாக ஆகிறீர்கள்! உங்கள் அன்பு எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கும். எனவே, உங்களது கடவுள் பக்தி முற்றிலும் மேலானது. உங்கள் பரிணாம வளர்ச்சியின் அந்த கட்டத்தில் நீங்கள் ஒரு ‘ஞானி’ ஆக இருக்கிறீர்கள். அப்படியான ஞானியின் பக்திதான் உயர்ந்தது! அந்த பக்திதான் இறைவனை மிகவும் மகிழ்விக்கின்றது. சத்தியத்தை உணர்ந்தவரான ஞானி, எந்தவிதமான தேவைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் கடவுளை வணங்குகிறார். ஒருவேளை அவர் பிரார்த்தனை  எனச் செய்தாலும், அதுவும் உலகின் நலனுக்காக மட்டுமே இருக்கும்! சொந்த தேவைகளுக்காக ஒருபோதும் கேட்க மாட்டார். ஏனெனில், அவருக்கு அதன் பிறகு வேறு எதுவுமே தேவையில்லை!”

ஐயா தொடர்ந்ததால் நான் பேசாமல் இருந்தேன்.

“நாம் ஸ்ரீ பகவத்கீதையில் படித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ரிதினோர்ஜுனா

அர்தோ ஜிஜ்ஞாசுரார்தார்த்தி ஞானீ ச பரதர்ஷபா ||”

“நிச்சயமாக ஐயா, நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். ஸ்ரீ பகவத்கீதையின் 7வது அத்தியாயத்தில் உள்ளது. அது ஶ்லோகம் 16 என்றும் எனக்கு  நினைவிருக்கிறது.”

“கருப்பொருளை அறிவதுதான் முக்கியம். எத்தனையாவது மந்திரம் என்பது அல்ல”, ஐயா இதமாகக் கேலி செய்தார்.

“அர்த்த, ஆர்த்த, ஜிக்ஞாச, ஞான பக்தர்கள் என நான்கு வகை பக்தர்களில், ஞானிதான் எனக்கு மிகவும் பிரியமானவன் எனப் பகவான் சொல்கிறார்.   நான்கு பக்தர்கள் என்பதைவிட, நான்கு பக்தி நிலை எனக் கொள்ளுங்கள். ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு நிலையாகப் பக்தியில் உயர்வு கொள்ள வேண்டும்.”

“நன்றி ஐயா. கடவுள் பக்தியில் நானும்  முன்னேறி வருவதாக உங்கள் அறிவுரையால் உணர்கிறேன். நன்றி.”

என் உள்ளம் அமைதியாக இருந்தது.

நாங்கள் ஏரியை ஒட்டி நடந்து கொண்டிருந்தோம். அன்னப் பறவைகள், தங்கள் தலைகளை மீண்டும் மீண்டும்  வீணாக நீருக்குள் நனைத்துக்கொண்டு எதனையோ தேடுவதில் மும்முரமாக இருந்தன. அறியாமை இருளில் எதைத் தேடுகிறேன் எனத் தெரியாமல் பல வருடங்களாக நானும் அப்படியே இருந்துள்ளேன்.

இப்போது, மெலிதாக ஒரு வழியைக் கண்டு கொண்டதாக உணர்ந்தேன்.

“ஐயா, நான் உங்களைக் கோவில்களில் பார்ப்பதே இல்லையே?”

“அதனால்?”

“எனக்கு உங்களிடம் உங்களிடம் இதைப் பற்றிக் கேட்க  ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் இறைவனைத் துதி செய்வீர்கள் இல்லையா?”

“ஆமாம்!”

“ஆயின், ஏன் நீங்கள் கோவில்களுக்குச் செல்வதில்லை?”

“எதற்காக?”

“ஐயா! கடவுளை வணங்கத்தான், வேறு எதற்கு?”

“கடவுள் ஆலயங்களில் மட்டும்தான் இருக்கிறாரா!”

அவர் வேறு எதுவும் பேசவில்லை. கைகளை மெல்ல அசைத்து விடை கொடுத்துவிட்டு, அடர்ந்த காட்டுக்குள் செல்லும் குறுகிய பாதையில் நடந்தார்.

நானும் கை அசைத்து விடை கொடுத்துவிட்டுக் கோவிலை நோக்கி நடந்தேன்.

இப்போது ஒரு புதிய சந்தேகம் என்னுள் துளிர்விட்டதால், ஐயாவிடம் நேரம் கிடைக்கும்போது கேட்க வேண்டும்.

ஒருவேளை அத்வைத வேதாந்தத்தின் மீது கொண்ட தீவிரத்தால், ஐயாவுக்கு பக்தி இல்லாமல் இருக்குமோ? அல்லது அதனாலேயே, அவரது  பக்தி அளவற்றதாக இருக்குமோ? அதனை ஆராயும் ஆர்வம் என் இதயத்தை அரிக்க ஆரம்பித்தது. அதைப் பற்றி அறிய வரும் நாட்களில் ஐயாவிடம் நிச்சயம் கேட்பேன். கேட்க வேண்டும்!

முழுமையாக  ஆமோதிப்பதுபோல,  அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டியதை நினைவுபடுத்தும் வகையில் எனது தொலைபேசி அப்போது ஒலித்தது.

.

Mee. Rajagopalan

22 May 2024

Related Posts

Share this Post