Sri Rajarajeswari Mantra Mathrukastwam

மந்த்ர மாத்ருகா ஸ்தவம்

(ஆதிசங்கரர் அருளியது)

ஸ்ரீ விநாயகர் துணை

முனையமனம் கனியமதி முதிரபரம் பொருளறிய
முழுமுதலே கணபதியே முன்னின்று வழிகாட்டு!
இணையமனம் குருவினுரை இனியதமிழ்க் கவிவளர
இன்புருவே அன்புடனே இருளகற்றி ஒளிகாட்டு!

ஸ்ரீ காஞ்சிப்பெரியவர்கள் ஆசியுரை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள், “மந்த்ரமாத்ருகா ஸ்தவம்” என்கின்ற மந்திராக்ஷர மாலையை சகல செªபாக்யங்களையும் தரவல்ல ஸ்ரீ சக்ரநாயகி ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்குச் சமர்ப்பித்தார். இந்த ஸ்லோகங்கள் ஒவ்வொன்றின் ஆரம்பமும் பஞ்சதசாக்ஷரி எனும் மந்திர அக்ஷரங்கள் ஒவ்வொன்றுடனும் ஆரம்பமாவது இதன் விஷேசம். இந்த ஸ்லோகங்களை சப்தப்ராஸம் பொருளறிவுடன் படித்துத் துதித்தால், அம்பாளின் கருணை நிச்சயம் கிடைக்கும். பக்தியினால் உந்தப்பட்டு, செல்வன் ஸ்ரீ ராஜகோபாலன் இவ்வரிய மந்திர மாலையை எளிய இனிய தமிழிலே மொழி பெயர்த்து ஆஸ்திகர்களுக்கு உதவும் பொருட்டுச் செய்த பணியினை ஆசீர்வதிக்கிறோம். எல்லோரும் இறையருளால், இந்நூலின் உதவியுடன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியைப் பஜித்துக் கொண்டு, எல்லா மங்களங்களையும் அடைவார்களாக.

நாராயணஸ்ம்ருதி


மந்த்ர மாத்ருகா ஸ்தவம்

க – ஏ – ஈ – ல – ஹ்ரீம்

ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம்

ஸ – க – ல – ஹ்ரீம்

எனும் பஞ்சதசி மந்திர அட்சரங்களை முதலெழுத்தாக்கி ஸ்ரீ சக்கரநாயகியான  ஸ்ரீ லலிதாம்பாள் எனப் போற்றப்படுகின்ற ஆதிசக்தியை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி எனத்துதிக்கின்ற அரும்பொருட் பாடல்களை ஆதிசங்கர பகவத்பாதாள் அருளியுள்ளார். அதன் தமிழ் வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது.

‘க’ல்யாணாயுத பூர்வ சந்த்ரவதனாம்
ப்ராணேஸ்வரா நந்திநீம்
பூர்ணாம் பூர்ணதாம் பரேச மஹிஷீம்
பூர்ணாம்ருதாஸ் வாதிநீம்
ஸம்பூர்ணாம் பரமோத்த மாம்ருதகலாம்
வித்யாவதீம் பாரதீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||1||
‘க’ல்யாண குணவதி முழுமதி முகவதி
கைலாயர் மகிழ் நந்தினி
உல்லாசி உலகெலாம் உறையருள் பூரணி
உயரீசர் அருட்துணைவி நீ |
எல்லாமு மாயமிர்தம் ஏற்றபரி ஹாரினி
எழுஞானச் சுடர் ரூபிணி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (1)

கல்யாண குணங்கள் நிறைந்து பதினாயிரம் பூரண நிலவினைப் போன்ற முகத்தையுடையவளும், ஈசனை மகிழும்படிச் செய்பவளும், எங்கும் நிறைந்து விளங்குபவளும், பரமேசனின் துணைவியும், நிறை அமுதமே தனது ஆகாரமாகக் கொண்டவளும், வித்யையின் உருவானவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை வணங்குகிறேன். (1)

‘ஏ’காராதி ஸமஸ்தவர்ண விவிதா
காரைக சித்ரூபிணீம்
சைதன்யாத்ம சக்ரராஜ நிலையாம்
சந்த்ராந்த ஸஞ்சாரிணீம் |
பாவாபாவ விபாவிநீம் பவபராம்
ஸத்பக்தி சிந்தாமணீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||2||
‘ஏ’னென்ற பலவான எழுத்துருவு மந்திர
எழுச்சிநீ மலர்ச்சி யான
மாவென்ற ஸ்ரீசக்ர மாசற்ற நிலையுநீ
மதியுலக சஞ்சா ரிணி
மேநின்ற உளதிலா மேலான ஈஸ்வரி
மெய்யோரின் சிந்தா மணி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (2)

“ஏ” காரம் முதலாகிய எழுத்துக்களைக் கொண்ட எல்லா மந்திரங்களின் வடிவமானவளும், சைதன்யமான ஸ்ரீ சக்ரத்தில் நிலைப்பவளும், சந்திர மண்டலத்தில் வசிப்பவளும், நிலையானது, நிலையற்றது இவற்றுக்கு அப்பாற்பட்ட ஈஸ்வர பரமானவளும், நியமப்படி துதிப்பவர்களுக்கு கற்பகத்தருவாகவும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (2)

‘ஈ’ஹாதிக் பரயோகி ப்ருந்த விநுதாம்
ஸ்வாநந்த பூதாம்பராம்
பச்யந்தீம் தநுமத்யாம் விலஸிநீம்
ஸ்ரீவைகரி ரூபிணீம் |
ஆத்மாநாத்ம விசாரிணீம் விவரகாம்
வித்யாம் த்ரிபீஜாத்மிகாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||3||
‘ஈ’ர்த்தவ யோகியர் இறைஞ்சிடும் சுயம்புநீ
இயல்பான ஆனந்தினி
நேற்பரா பச்யந்தி மத்யமா எனும்வாக்கு
நிலைக்கின்ற மெஞ்ஞானம் நீ
வேரான ஆத்மவி சாரணை வித்தைநீ
விளங்குமுப் பீஜாட் சரம்
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (3)

யோகிகள் கூட்டத்தால் வணங்கப்படுபவளும், தன்னுள்ளேயே ஆனந்த்தை அனுபவிப்பவளும், பரா, பச்யந்தி, மத்யமா எனும் மூன்று விதமான வாக்கு வடிவானவளும், அழிவற்றது, அழிவது என்பன குறித்து விசாரிக்கும் தகுதியுடைய குருவடிவானவளும், ஸ்ரீ வித்தையாயும், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம் என்ற மூன்று எழுத்து வடிவானவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (3)

‘ல’க்ஷ்யா லக்ஷ்ய நிரீக்ஷ்ணாம் நிரூபமாம்
ருத்ராக்ஷ் மாலா தராம்
த்ரைக்ஷ்யார்த் தாக்ருதி தக்ஷ்வம்ச கலிகாம்
தீர்காக்ஷ் தீர்க்க ஸ்வராம் |
பத்ராம் பத்ர வரப்ரதாம் பகவதீம்
பத்ரேச்வரீம் முத்ரிணீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||4||
‘ல’ட்சியா லட்சியம் லயக்கின்ற பார்வையும்
லயமிகு ருத்ராட்ச மணியும்
ஒப்பிலாள் முவ்விழி விசாலி தக்ஷக்ஷகுல
ஈம்காம கலையின் வடிவம்
பவித்திர சுகத்தினை குவித்தருள் பகவதி
பத்ரேஸ முத்திரேஸ் வரி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (4)

லட்சியமும் லட்சியமற்றதுமான பார்வையும், தனக்குவமை இல்லாதவளாய், உருத்திராட்சமாலை அணிந்து, முக்கண்களுடன் தட்சனின் வம்சத்தில் தோன்றி, விசாலமான விழிகளுடன் ஈம் என்கின்ற காம கலையாகி, மங்களவடிவினளாய், மங்கலத்தையே தருபவளாயும், பத்ரேஸ்வரி என்ற பெயருடன் முத்திரைகளால் துதிக்கப்படுபவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை வணங்குகிறேன். (4)

‘ஹ்’ரீம் பீஜாகத நாதபிந்து பரிதாம்
ஓம்கார நாதத்மிகாம்
பிர?மானந்த கநோதரீம் குணவதீம்
ஞானேஸ்வரீம் ஞாநதாம் |
இச்சா ஞாக்ருதீம் ம?ீம் கதவதீம்
கந்தர்வ ஸம்ஸேவிதாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||5||
‘ஹ்ரீம்பீஜம் தந்த தாம்நாத பிந்து
ஓம்காரம் உந்தன் பதம்
மேல்பூத்த கொங்கை யால்நூற்ற வதனம்
ஹ்ூம்வேத சப்தஸ் வரம்
சிதையாத சித்தந் தருஞான சித்தி
அழகான குருவா னவி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (5)

ஹ்ரீம் எனுமெழுத்தில் எழுகின்ற நாதம், பிந்து இவற்றால் ஆனதும், பருத்து, உயர்ந்த மார்பக பாரங்களால் வளைந்த உடலும், ஹூம் என வேத யாகங்களில் சொல்லப்படும் சப்தநிறைவுகளில் அடங்கியவளும், அழியாத ஞானத்தைத் தருகின்றவளும், தேவர்களும் வணங்குபவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (5)

‘ஹ’ப்ஷோந்மந்த ஸுவர்ண பாத்ர பரிதாம்
பீநோந்நதா கூர்ணிதாம்
ஹூங்காரப் பிரிய சப்தஜால நிரதாம்
ஸாரஸ்வ தோல்லாஸிநீம் |
ஸாராஸார விசார சாரு சதுராம்
வருணாச்ரமா காரீணீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||6||
‘ஹ’ரீணி பொற்கல சாமிர்த கரணி
ஹூம்கார மறை ரூபிணி
சாரஸ் வதமெனும் சாராம்ஸ போதினி
சப்த ஜால சாதினி
சாரான சாரம் ஆராயும் ஞானி
சன்மார்க்க தர்மப் பிரியே
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (6)
ஆனந்தத்துடன் பொற் கலசத்தில் அமிருதத்தைக் கையில் ஏந்தி, ஹூம் முதலான வேதசப்தங்களில் நிலைபெற்று, ஸாரஸ்வதம் எனும் பீஜத்தை விளங்கச்செய்து, சாரம், சாரமற்றது இவற்றை ஆராய்ச்சி செய்கின்ற குரு வடிவமானவளும், பண்படுத்துவதற்கான ஆசிரம தர்மங்களின் உருவானவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை வணங்குகிறேன். (6)

‘ஸ’ர்வேசாங்க விஹாரிணீம் ஸகருணாம்
ஸந்தாதீம் நாதிநீம்
ஸம்யோகப் பிரிய ரூபிணீம் ப்ரியவதீம்
ப்ரீதாம் பிரதாபோந்நதாம் |
ஸர்வாந்தர் கதிசாலிநீம் சிவதநுஸ்
ஸந்தீபிநீம் தீபிநீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||7||
‘ஸ’ர்வேசர் மடியமர் சாலினி காருணி
சகலமருள் தீர வதனி
சக்தியோக ப்ரியே சாதகி பிரஹ்மணி
சதா னந்த ஜனனி
வேரான சிவதனுசு விளக்கிடும் தீபம்நீ
வித்தகி வீர்ய மதனி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (7)

பரமேஸ்வரனது மடியில் அமர்ந்திருப்பவளும், கருணையானவளும், வீரத்தில் உயர்ந்தவளும், எல்லாஇடத்திலும் நிறைந்து விளங்குகின்ற சிவதனுசுவுக்கு ஒளியைத் தருகின்றவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (7)

‘க’ர்மா கர்ம விவர்ஜிதாம் குலவதீம்
கர்மப்ரதாம் கெªலிநீம்
காருண்யாம்புதி ஸர்வ காம நிரதாம்
ஸிந்து ப்ரியோஸல்லாஸிநீம் |
பஞ்சப் பிரஹ்ம ஸநாதநா ஸநகதாம்
கேயாம் ஸூயோகாத்மிகாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||8||
‘க’ர்மம் கடந்ததாய்க் கடவுளாய்க் குலமகளிர்
காருண்ய தெய்வ நிலையாய்
சர்வம் அளந்ததாய் சாட்சியாய் செய்கருமச்
சம்பளம் தரும் அழகியாய்
அயனரி அரசதா சிவமகே சமெனும்
ஐயரரி யாசனம் அமர்
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (8)

கருமம், கருமமில்லாமை ஏதுமில்லாதாவளும், குலமகளிரின் தெய்வமும், வினைகளுக்கான பலன்களைத் தருபவளும், பாற்கடலில், மணித்வீபத்தில் வசிப்பவளும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் எனும் ஐந்து பேர்களால் ஆன கட்டிலிலே அமர்ந்திருப்பவளும், யோகிகளால் துதிக்கப்படுவளும் ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (8)

‘ஹ’ஸ்த்யுத் கும்ப நிபஸ்தநத் விதயத:
பீநோந்நதா தாநதாம்
ஹாராத்யா பரணாம் ஸூரேந்திர விநுதாம்
ச்ருங்கார பீடாலயாம் |
யோந்யாகாரக யோநி முத்ரித கராம்
நித்யாம் நவார்ணாத்மிகாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||9||
”ஹ’ஸ்தக மத்தக மொத்தமுலை பாரமும்
ஆரமணி சுவரண அழகும்
தவராஜ தேவர்தொழும் பவமான சிருங்காரம்
தருகின்ற கோல உருவே
சித்தநிலை யோனிவடி வொத்தநெறி முத்திரையுன்
சித்துநவ அட்சர கருவே
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (9)

யானையின் மத்தகம் போன்ற பருத்த மார்பகங்களுடன், தங்கத்தினாலான மாலை முதலிய நகைகள் அணிந்து, தேவாதிபதியினால் துதிக்கப்படுபவளும், சிருங்காரத்தின் இருப்பிடமாய், யோநி முத்திரையிலே மகிழ்ச்சி கொண்டு, நித்தியமாயும் நவாட்சர மந்திர உருவமாயும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (9)

‘ல’க்ஷ்மி லக்ஷண பூர்ண பக்தவரதாம்
லீலாவிநோத ஸ்திதாம்
லாக்ஷாரஞ்சித பாத பத்ம யுகலாம்
பிரஹ்மேந்த்ர ஸம்ஸேவிதாம் |
லோகா லோகித லோககாம ஜனனீம்
லோகா ச்ரயங்கஸ்திதாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||10||
‘ல’க்ஷ்மிஎனும் பரிபூர்ண லட்சணமே பக்தர்களின்
லட்சியமே லீலா வதி
இரட்சகிநின் செம்பஞ்சுச் செவ்வடியே பிரம்மனையர்
இரட்சிக்கப் பணியும் பதி
சிஷ்டபரி பாலனமாய் இஷ்டமளித் தருள்கின்ற
சீதனமே உலகுன் நிதி
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் (10)

நிறைந்த லக்ஷ்மியின் பூரணமான நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவளும், செம்பஞ்சுக் குழம்பினால் அழகிய திருவடிகளைக் கொண்டு, பிரம்ம, இந்திரன் முதலானவர்களால் வணங்கப்பெறுபவளும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவளும், அருள்புரியும் பேருலகைத் தன்னுள்ளே கொண்டவளும் காமேச்வரரது மடியில் அமர்ந்து, ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (10)

‘ஹ்ரீம்’ கார ச்ரித சங்கரப்ரிய தநும்
ஸ்ரீயோக பீடேஸ்வரீம்
மாங்கல்யாயுத பங்கஜாப் நயனாம்
மாங்கல்ய ஸித்திப் பிரதாம் |
காருண்யேன விசேஷிதாங்க ஸூமஹா
வாவண்ய ஸம்சோபிதாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||11||
‘ஹ்ரீம்’எனும் நெறியால் சிவசங் கரனைச்
சேருமுன் வடிவம் புகழ்
ஸ்ரீயோக பீடம் ஆளுமுன் மங்களச்
சீர்விழிதா மரையின் இதழ்
காருண்யப் பேரழகுக் கருணையால் நின்பதம்
காட்டுவரம் கூட்டும் புகல்
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (11)

ஹ்ரீம் எனும் எழுத்தை அனுசரித்து, சங்கரனுக்குப் பிரியமான வடிவினை உடையவளும், யோகபீடத்தில் அமர்ந்து மங்கள் தேவதையாகவும், அன்றலர்ந்த தாமரைக் கண்களால் சுகத்தைக் கொடுப்பவளாயும், கருணையினால் மிக மிக அழகானவளாயும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (11)

‘ஸ’ர்வக்ஞான கலாவதீம் ஸ கருணாம்
ஸர்வேச்வரீம் ஸர்வகாம்
ஸத்யாம் ஸர்வமயீம் ஸகஸ்ர தலஜாம்
ஸத்வார்ண வேயஸ்திதாம் |
ஸங்காஸங்க விவர்ஜிதாம் ஸுககரீம்
பாலார்க்க கோடிப்பிரபாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||12||
‘ஸ’ர்வ ஞானரூபிணி காருணி சத்ய
சாட்சிநீ ஸர்வேஸ் வரி
சாஹரப் பால்பதும சஹஸ்ர இதழமரும்
சாதகி ஏகாந்த நீதி
சேராத் தூய்மைநீ சிறப்பிளம் பரிதிநீ
சேதனச் சுகமருளும் நீ
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (12)

எல்லா ஞானத்தையும் கொண்ட கலைவடிவமாய், கருணையுடன் சர்வேஸ்வரியாய் எங்கும் நிறைந்து, எப்போதும் உண்மையாயும், எங்குமிருந்து, ஆயிரம் இதழ்த் தாமரையில் அமர்ந்து, பாற்கடலில் வசித்து, இணையற்றவளாய், சுகந்தருகின்ற, கோடி இளஞ்சூரியனுக்கு நிகரானவளாய், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (12)

‘கா’திக்ஷாந்த ஸ்வர்ண பிந்து ஸுதநும்
ஸர்வாங்க ஸம்ஸோபிதாம்
நானாவர்ண விசித்ர சித்ர சரிதாம்
சாதுர்ய சிந்தாமணீம் |
சித்ரானந்த லிதாயிநீம் ஸூ சபலாம்
கூடத்ரயா காரிணீம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||13||
‘க’முதலும் க்ஷவரையும் கருவுருவுன் சரீரம்
கவினோர் போற்றும் சரிதம்
களியூட்டும் பலவண்ண கலையுல காவையும்
காக்குமுன் னபயம் உபயம்
திரிகூடம் ஆளும்பதி னைந்துஉரு மந்திர
திவ்யசுக மையம் நீயே
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் (13)

பிந்துவோடு கூடிய “க” முதல் “க்ஷ” வரையிலான (சம்ஸ்கிருத) எழுத்துக்களான உடலும், நல்லோரால் போற்றப்படும் வரலாற்றினை உடையவளும், மகிழ்ச்சியைக் கொடுத்து, மிகச் சிறந்த முக்கூடமாகிய ஸ்ரீமத் பஞ்சதசி மந்திர உருவாய், ஸ்ரீசக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (13)

‘ல’க்ஷ்மீ சானவிதீந்த்ர சந்த்ர மகுடாத்
அஷ்டாங்க பீடாச்ரிதாம்
ஸூர்யேந்த வக்நி மயைக பீடநிலையாம்
த்ரிஸ்தாம் திரிகோணச்வரீம் |
கோப்த்ரீம் கர்விநிகர்விதாம் ககநகாம்
கங்கா கணேசப்பிரியாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||14||
‘ல’க்ஷ்மிநின் மகுடம்மதி எண்திசையும் நின்வீடு
அக்னிரவி சோம பீடம்
நிக்குற சிதாகாச நிர்மலமுக் கோணமுன்
நிலயான அழகு மாடம்
விக்னவி நாயகனும் வேகவதி கங்கையும்
வினயமுன் பிரிய ராகும்
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (14)

சந்திரனை மகுடமாய்க் கொண்டு, எட்டு பீடங்களிலே வீற்றிருந்து,
அக்கினி, சூரிய, சோம பீடங்களை அலங்கரிப்பவளும், சிதாகாசத்தில் (சுத்த மதிவெளியில்) நிலைபெற்று, கங்கை, கணேசரிடத்தில் அன்புள்ளவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (14)

‘ஹ்ரீம்’ கூடத்ரய ரூபிணீம் ஸமயநீம்
ஸம்ஸாரிணீம் ஹம்ஸினீம்
வாமாசார பராயணீம் ஸுகுலஜாம்
பீஜாவதீம் முத்ரிணீம் |
காமாக்ஷிம் கருணார்த்த சித்த ஸஹிதாம்ஸ்ரீம்
ஸ்ரீம்த்ரிமூர்த் யாத்மிகாம்
ஸ்ரீசக்ரப்ரிய பிந்துதர்ப்பண பராம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம் ||15||
‘ஹ்ரீம்’சூடும் முக்கூட பஞ்சதசி ரூபிணி
சமயமனப் பூஜைப் பிரியே
லோகஸம் ஸாரிணி ஹம்ஸமந்த் ராதிநீ
வாமகெªல தந்திர குறியே
கருணைமழை நனையுங்கா மாக்ஷிஹ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம்
காணும் மும்மூர்த்தி நீயே
சீரான சிந்துமகிழ் ஸ்ரீசக்ர பிந்துமுகிழ்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (15)

ஹ்ரீம் எழுத்தை முடிவில் கொண்ட மூன்று கூடங்களையுடைய பஞ்சதசீ மந்திர வடிவினளாயும், ஸமயம் எனும் மானசீக பூஜையில் அன்புடையவளும், உலகையே பிறவியாய்க் கொண்டு ஹம்ஸ எனும் சுவாச மந்திரத்தால் சொல்லப்படுபவளும், வாமம், கௌலம் எனப்படும் தாந்திரீக வழிகளாலும் துதிக்கப்படுபவளும், கருணையால் நனைந்த உள்ளத்தைக் கொண்ட காமக்ஷியாயும், ஹ்ரீம் எனும் எழுத்தால் ஷோடசீயாகவும் விளங்கி, மும்மூர்த்திகளாக ஆனவளும், ஸ்ரீ சக்ர பூஜையினால் திருப்தியடைந்து விளங்குகின்றவளுமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்குகிறேன். (15)

பல ச்ருதி
யா வித்யா சிவ கேசவாதி ஜநநீ
யா வை ஜகந் மோஹிநீ
யா பிரஷ்மாதிபி பீலிகாந்த
ஜகதாநந்தைக ஸந்தாயிநீ
யா பஞ்சப் பிரணவாதி ரேபநளினி
யா சித்கலா மாலினி
ஸா பாயாத் பரதேவதா பகவதீ
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ ||
பயிலும் பலன்
ஸ்ரீவித்யா சிவனுக்கும் ஹரிக்கும் அன்னை
சித்தியினால் உலகினையே மயக்கும் தெய்வம்
ஈறெறும்பு பிரமன்வரை உயிர்த்து எல்லாம்
இன்பநிலை கொடுத்தைந்து பிரணவமாகி
பேறுபெற்ற ஞானகலை மாலை பூண்ட
பேரருளே பகவதியே காக்க வேண்டும்
ஸ்ரீசக்ர ராஜபர மாத்ம தேவி
சேவித்தோம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

எந்த ஸ்ரீ வித்யையானவள் சிவன், விஷ்ணு முதலான எல்லோருய்க்கும் தாயோ, எவள் உலக மாயையால் மோகிக்கச் செய்கிறாளோ, பிரம்மா முதல் சிற்றெறும்பு வரை எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து, ஐந்து பிரணவங்களாகி நிலைபெற்று, ஞானமாகிய கலையை மாலையாய் அணிகின்றாளோ அந்த பகவதியும், பரதேவதையுமான ஸ்ரீ ராஜராஜஸ்வரி நம்மைக் காப்பாற்றட்டும்.

Share this Post