Tamil New Year 2016

துன்முகி – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016

Ganesha
துன்முகியாய் புன்னகைப்பூ முன்னுதிர வருடும்
துள்ளிவருங் காலமகற் கள்ளிவரும் வருடம்!
எண்முடியாக் காலமதை எண்ணிடவா முடியும்!
எதுபடியும்? அறுபதரும் பொருளதுவாய் விடியும்!

ஓடுவதால் காலமகள் ஓர்நதியோ என்றால்
உருவாகும் மலைமுடியும் கடலுந்தான் எங்கே!
ஓர்திக்கால் போகுமொரு கூரம்போ என்றால்
உருவியதை ஏவிடுவான் ஒருவனுந்தான் எங்கே!

காலமொரு கண்ணாடி போலதுவே என்றால்
கனிமுகமும் பிள்ளையிள முதுமையென மாற்றி
கோலமெனச் சூழுலகச் சீலமதைக் காட்டும்
கோடறிவான் வேடந்தரு நாடகத்தான் எங்கே!

கோர்த்திழுக்கும் ஊழ்க்கயிறு போலதுவே என்றால்
கொடுமுடிச்சை இழுத்தமிழக் கொடுத்தவரும் யாரே!
ஈர்த்திழுக்கும் போதெல்லாம் இங்கிருக்குங் காலம்
இலாமலெதிர் பார்த்திளைக்க இருத்தியரும் யாரே!

இக்கணத்தி லிப்பொழுதி லிருப்பேன் யானென்றால்
இனியேது கடந்தவருங் காலமெனும் பாகம்!
அக்கணத்தி லப்போதில் அகன்றுவிடும் காலம்!
ஆதலினால் காலவலை அகப்படவும் வேண்டாம்!

எண்ணமெனும் மின்னல்மனம் பின்னுவதால் தானே
எழுவதொரு காலமெனும் முழுகவரும் வெள்ளம்!
எண்ணமதோ ஓடாதின் எங்குவரும் காலம்?
எழுமனமே காலத்தை எழுப்பவரும் வெள்ளம்!

மனமிதுவோ விவகார மடையுலகுப் போர்வை
மடித்ததனை சுருட்டிவிட முடித்தநொடிக் கோர்வை!
மனமதுவோ நானென்ற மமதையதன் தேவை!
மழித்ததனை அகற்றிவிட உதித்தமுதப் பார்வை!

இருளானது அபிமானமாய் இருந்தாழ்படு மமதை!
இதமானது அவியாததாய் இருந்தாள்கிற உணர்வு!
அருளானது அறியான்மனாய் அஹம்நானெனுங் கவிதை
அதனாலினிச் சுகமாய்ச்சுருள் அலைகாலமும் நமதே!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*