தோடகாஷ்டகம்
குரு வணக்கம்
केशवं बादरायणम् ।
सूत्रभाष्यकृतौ वन्दे
भगवन्तौ पुनः पुनः ॥
கேஶவம் பா₃த₃ராயணம் |
ஸூத்ரபா₄ஷ்யக்ருதௌ
வந்தே₃ ப₄க₃வந்தௌ புன: புன: ||
காரணரே தொடர்ந்துமது காலடியிற் பணிவேனே!
பூரணரே ஈசர் பொருளாயச் சங்கரனார்!
வாரணரே தொடர்ந்துமது வாலடியிற் பணிவேனே!
பணிவுரை
“தோடக” எனும் சம்ஸ்கிருத அளபடையில், பகவான் ஆதிசங்கரரைத் தொழுகின்ற, எட்டு குரு வணக்கப் பாடல்களே “தோடகாஷ்டகம்” ஆகும்.
ஆனந்தகிரி என்பவர், ஆச்சார்யார் சங்கரருக்குப் பணிவிடை செய்துவந்த அடியார். எளிமையும், குருவிற்குப் பணிவிடை செய்வதில் மட்டுமே உறுதியும் கொண்டிருந்த ஆனந்தகிரியாருக்கு, ஆச்சார்யாரின் மற்ற சீடர்களைப்போல, ஆழ்ந்த அறிவிலோ, வேதாந்த ஆராய்ச்சியிலோ ஈடுபாடு இல்லை. அதனாலேயோ என்னவோ, அன்னார் அறிவிற் குறையுடையவர் என மற்ற சீடர்கள் நினைத்திருந்தார்கள். அதனால், பகவான் சங்கரர் தனது வேதாந்தப் பாடங்களைத் தொடங்காமல், ஆனந்தகிரியின் வருகைக்காக ஓர்நாள் காத்திருந்த செயல், மற்ற அறிவிற் சிறந்த சீடர்களுக்கு வியப்பாயிருந்தது. ஆனால் சத்குருவிற்குப் பணிசெய்கின்ற தவம் ஒன்றினாலேயே, ஒருவரால் எல்லா அறிவையும், எல்லாப் பயனையும் அடைய முடியும் எனக் காட்டுவதாக, ஆனந்தகிரி அன்று வந்தவுடன், ஆச்சார்யாரைத் தொழுது, எட்டு அரிய பாடல்களைப் பாடினார். அவை `தோடக` எனும் அரிய இலக்கணப்படி, நுண்ணிய ஒலி அளபடைகளால் விளைந்த சம்ஸ்கிருதப் பாடல்கள்.
செம்மொழியாகிய ஸம்ஸ்கிருத மொழியிலே கவிதையின் அடிகள், சொற்கள் இவற்றின் நீளம், ஒலி அளவு எனப் பல நுண்ணிய இலக்கண ஒழுக்கங்கள் இருக்கின்றன. அவற்றுள், “தோடக” என்பது ஒருவகை செய்யுள் அளபடை. இதில் சொற்கள் சீராக,“குறில், குறில், நெடில்” எனும் ஒலி எழுத்துக்களால் அமையும். அப்படிச் சீராக அமைந்த கவிதை இசைக்கப்படும்போது, அது கேட்போருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும். அரிய இவ்வளபடையில் அன்னார் பாடிய பாடல்களை அனைவரும் “தோடகாஷ்டகம்” எனப் புகழ்ந்து, ஆனந்தகிரியாரை “தோடாகாச்சார்யர்” எனப் பெயரிட்டுப் பணிந்து போற்றினர். பகவான் சங்கரர் தாம் அமைத்த ஜ்யோதிர் மடத்தின் முதற் தலைவராக, தோடகாச்சார்யரை நியமித்து, அன்னாரின் புகழை மேலும் உயர்த்தினார். எனவே குருவைச் சரணடைந்தாலே ஒருவருக்கு எல்லாத் திறனும், எல்லாப் பயனும் நன்றாய் விளையும் என்பதையே இவ்வரிய பாடல்கள் உறுதி செய்கின்றன. நன்முனைப்பால், சொல்லும், பொருளும் பிறழாமல், தோடாகாஷ்டகத்தினை தமிழில் வார்க்கச் செய்ததும், ஜகத்குரு சங்கராச்சார்யாரின் திருவருளே ஆகும் எனப் பணிவோம்.
மீ. ராஜகோபாலன்
15-09-2016