ஸ்வாமிசரணம்ஐயப்பசரணம் – ஸ்வாமியேசரணம்

41 விரதநாட்களிலும், விழைந்துவேண்டும் 41 நற்பயன்கள்

(தஸ்ப்ரணமாமி ஸதாஸிவலிங்கம் எனும் மெட்டு)

01) நம்பிக் கைகளில் நலமிட அபயம்
நலமருட் சபரிகி ரீஸா சரணம்
(02) எம்பிக் கால்கள் எழுமருள் அபயம்
எனையாள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(03) வாய்மை வாய்மொழி வழியாம் அபயம்
வரமருள் சபரிகி ரீஸா சரணம்
(04) தூய்மைக் குதவாய் துயரறு அபயம்
துணையாந் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(05) சந்ததி வளர்கரு வுந்துறு அபயம்
சத்குரு சபரிகி ரீஸா சரணம்
(06) முந்திய வெளிவுரு முதலே அபயம்
முனியுரு தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(07) பரவும் வளியருட் பயனே அபயம்
பரிவருள் சபரிகி ரீஸா சரணம்
(08) திறவும் ஒளியருட் திரளே அபயம்
திருவே தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(09) வளரும் நீரருள் வளனே அபயம்
வகையருள் சபரிகி ரீஸா சரணம்
(10) நிலனுட் கலமே நிதியே அபயம்
நிறைவே தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(11) துல்லிய செவிகள் துணைவர அபயம்
துய்த்தருள் சபரிகி ரீஸா சரணம்
(12) மெல்லிய தோலுணர் மேலுடல்அபயம்
மெய்யருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(13) நல்லிரு நயனம் நயமுன தபயம்
நடத்திடுஞ் சபரிகி ரீஸா சரணம்
(14) பல்லிறு நாவினிற் பற்சுவை அபயம்
பரிவருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(15) வாசனை நாசியில் வசியுறல் அபயம்
வரமருள் சபரிகி ரீஸா சரணம்
(16) வீசிடும் பிராணசு வாசமுன் அபயம்
விரிவருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(17) கீழிறங் க(அ)பானக் கிளையுன் அபயம்
கிரிதர சபரிகி ரீஸா சரணம்
(18) கூழறை ஸமானக் குணமுன் அபயம்
குருபர தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(19) குருதியுள் வியானக் குலவலுன் அபயம்
குளிரருள் சபரிகி ரீஸா சரணம்
(20) விகுதி யுதான விழுங்கலுன் அபயம்
விடையருள் தர்ம சாஸ்தாசரணம் (ஸ்வாமி)

(21) ஆடிடும் மனம்எனும் ஆடியுன் அபயம்
அருள்மிகு சபரிகி ரீஸா சரணம்
(22) நீடிடும் சித்த நினைவுகள் அபயம்
நிறைவருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(23) காணென புத்தியிற் கணிப்பதுன் அபயம்
கனிந்தருள் சபரிகி ரீஸா சரணம்
(24) நானென ஆணவம் நகைவதுன் அபயம்
நனிந்தருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(25) தினமொரு விழிப்பினைத் திறப்பது னபயம்
திருமிகு சபரிகி ரீஸா சரணம்
(26) மனமுரு கனவுகள் மறைப்பதுன் அபயம்
மருளறு தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(27) அடங்கிடும் ஆழ்துயில் அனுபவம் அபயம்
அரிஹர சபரிகி ரீஸா சரணம்
(28) முடங்கிடும் தாமஸம் முறிப்பதுன் அபயம்
முன்னவ தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(29) வீரிய ராஜஸ விலங்கறு அபயம்
விளங்கிட சபரிகி ரீஸா சரணம்
(30) தூரிய ஸத்துவத் துய்நிலை அபயம்
துணையருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(31) செய்திடு மெய்த்தொழிற் சீருன தபயம்
சேதனஞ் சபரிகி ரீஸா சரணம்
(32) பெய்திடு வாய்மொழிப் பேச்சுன தபயம்
பெருநிலை தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(33) அவ்விய மனச்செயல் அதுவுன தபயம்
அருள்மிகு சபரிகி ரீஸா சரணம்
(34) செவ்விய அறவழிச் சீர்மையுன் அபயம்
சிந்தையுட் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(35) வேண்டிய பொருளும் விளைவுமுன் அபயம்
விரிவே சபரிகி ரீஸாசரணம்
(36) தூண்டிய இன்பம் துலங்குதல் அபயம்
துணையருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(37) பகுத்தறி விவேகப் பயனுன தபயம்
பரிவுடை சபரிகி ரீஸா சரணம்
(38) வகுத்துத வாதன விடுத்தலுன் அபயம்
வழியருள் தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(39) அகப்படச் சமநிலை அடையவுன் அபயம்
அருள்தரு சபரிகி ரீஸா சரணம்
(40) புகப்பட விடுதலை புலர்வதுன் அபயம்
பூரண தர்ம சாஸ்தா சரணம் (ஸ்வாமி)

(41) ஹரிஹர சுதனகத் திரளே அபயம்
அய்யா சபரிகி ரீஸாசரணம்
விரிசடைசு கப்பொருள் வித்தே அபயம்
வீரா சனத்தம ரீஸா சரணம் (ஸ்வாமி)

பொருள்

உடல் நலமே நம் முதற்தேவை. சாஸ்திரங்கள் நமது வல்லுடலை ஐந்து கர்மேந்திரியங்களாகக் காட்டும். செய்கின்ற கைகள் (1), நடக்கின்ற கால்கள் (2), பேசுகின்ற வாய் (3), கழிவகற்றும் குதம் (4), இனப்பெருக்க உறுப்பு (5) ஆகிய அவை யாவும் பழுதின்றி நலம் பெற வேண்டும். எல்லா உடல்களுக்கும் மூலம், பஞ்சபூதங்களாகிய வெளி (6), வளி (7), தீ (8), நீர் (9), நிலம் (10) என்பதால், இவ்வைந்தின் நற்கலப்பும் நமக்கு அய்யன் அருளால் கிடைக்க வேண்டும்.
பஞ்சபூதங்களின் துல்லிய சக்தியே நம்முடலுக்குள் ஐந்து ஞானேந்திரியங்களாக, கேட்கின்ற சக்தியான செவிகள் (11), தொட்டுணரும் சக்தியான தோல் (12), காண்கின்ற சக்தியான விழிகள் (13), சுவைக்கின்ற சக்தியான நாக்கு (14), நுகர்கின்ற சக்தியான நாசி (15) என விளங்குகின்றன. அத்துடன், வெளிவிடும் மூச்சாகிய பிராணன் (16), கீழிறங்கும் மூச்சாகிய அபானன் (17), உணவைக் கரைத்து ஜீரணிக்கும் ஸமானன் (18), உதிரத்தை உடலெங்கும் எடுத்துச் செல்லும் வியானன் (19), விழுங்கவும், உயிரைப் பிரிக்கவும் இயங்கும் உதானன் (20) ஆகிய பஞ்சப் பிராணன் என்பனவும் அய்யன் அருளால் நலம் பெற வேண்டும். இத்துல்லிய சக்திகளுடன் கலந்து, எப்போதும் அலைந்து கொண்டே இருப்பதும், ஆனால் ஆத்மாவின் முகம் காட்டும் கண்ணாடியாக இருப்பதுமான மனம் (21), அம்மனத்தில் பதிந்த நினைவுகளான சித்தம் (22), தீர்மானிக்கின்ற புத்தி (23), இவற்றை எல்லாம் ‘நான்’ எனத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கின்ற அகந்தை (24) – என்ற நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்ததே, நமது மெல்லுடல் ஆகும். எனவே வல்லுடலும், மெல்லுடலும் கலந்த நம்முடைய மேனி, எப்போதும் நலமாக இருக்க பஞ்சபூதங்களின் தலைவனாகிய அய்யன் அருள வேண்டும்.
அவ்வருளினால், நலமான வல்லுடலும், மெல்லுடலும் பெறுவதால், அனுபவிக்கின்ற விழிப்பு-நிலை (25), கனவு (26), ஆழ்துயில் (27) எனும் மூன்று அவஸ்தைகளும் நம்மைத் துயரப்படுத்தாமல் இருக்கட்டும். துயரங்களுக்குக் காரணம், நம்முடைய இயற்கைக் குணங்களான தாமஸம் (28) எனும் சோர்வு, ராஜஸம் (29) எனும் உணர்ச்சி, மற்றும் ஸாத்வீகம் (30) எனும் சமநிலை இவற்றின் தவறான கலப்பே எனச் சாத்திரங்கள் சொல்கின்றன. எனவே இம்முக்குணங்களும், நற்கலப்பினால், நமக்கு எப்போதும் அய்யன் அருளால் நன்மையைத் தரட்டும். அப்படி நற்குணங்கள் வந்துவிட்டால், நாம் உடற்செயல் எனும் காயிக கர்மம் (31), வாய்ச்செயல் எனும் வாசிக கர்மம் (32), மனச்செயல் எனும் மானச கர்மம் (33) என எல்லாச் செயல்களும் நலம் தருவதாகவே அமையும். அதனால், நம் வாழ்க்கை எப்போதும் அறம் எனும் தர்ம வழியிலேயே (34) நடக்கும். அர்த்தமாக, நற்பொருட்களே (35) கைகூடும். காமம் எனத் துய்க்கின்ற இன்பம் (36) நலம் தருவதாகவே இருக்கும். அவ்வாறு தூயவராக பிறவிகள் தோறும் வாழ்ந்தாலும், அனுபவங்களை ஆராய்கின்ற பகுத்தறிவு அல்லது விவேகம் (37) நமக்குள் வளர வேண்டும். அதனால் பற்றின்மை எனும் வைராக்கியத்தையும் (38) நாம் அடைய வேண்டும். அதன் எழுச்சியால், அழியாச்சுகம் எது என்பதை அடைவதற்கான தகுதியாக, மெய்யடக்கம், புலனடக்கம் ஆகிய தமா, ஸமா முதலான ஒழுக்கங்கள் (39) நமக்கு அய்யன் அருளால் கிடைக்க வேண்டும். அவற்றை எல்லாம் அடைந்ததன் பலனாக, “முக்தி” எனும் விடுதலை, முழுமையான நிறைவு (40) நமக்குக் கிடைக்கும். அவ்வுயர் அனுபவத்தைப் பெற்றுவிட்டால், ஐயப்பன் வடிவாக நாம்வணங்கிய பரம்பொருளே (41), நாம் பிறவிகள் தோறும் தேடி அலைந்து கொண்டிருந்த உண்மை என்பதும், அப்பரம்பொருள் நம்முள்ளேயே எப்போதும் மாற்றமிலா உணர்வாக, ஆனந்தமாக இருக்கிறது எனும் அத்வைத உண்மையும் நமக்கு விளங்கும்.

Related Posts

Share this Post