Sivapuranam by Manickavasagar (Introduction)

பணிவுரை

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருந்தகை, சைவம் தழைக்க அவதரித்த தவமுனி.  திருவாசகம் எனும் தேனினும் இனிய திருமுறைப் பாடல்களால், திருமறைகளைத் தந்த மாமுனி.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும் மூவருடன் சேர்ந்து, ‘நால்வர்’ எனப் போற்றப்பட்டு சைவம் தழைக்கும் நல்லுலகம் எல்லாம் வணங்கத் தக்கவராக விளங்குபவர்.  அன்னாரின் ‘சிவபுராணம்’ எனும் சிறிய, அரிய நூல் பலராலும் மனமாரப் பயிலப்பட்டு, பாடப்பட்டு,  கேட்கப்பட்டு அதனால், பயிலுவோர், பாடுவோர், கேட்போர் எல்லோருடைய மனதிலும்  ஆன்ம விளக்கினை ஏற்றி, அமைதியும், உண்மைச் சுகமும் தந்து உதவுகின்ற பெருநிதியம்.  ஆன்றோர்களும், அன்பர்களும் இந்நூலுக்குப் பொருளும் விளக்கங்களும் கொடுத்துள்ளார்கள்.

அறவழியில் வாழ்ந்து அதனால் பண்பான வாழ்க்கை வாழும் நல்லோர்கள், ‘விவேகம்’ எனும் பகுத்தறியும் பண்பினால், எது உண்மை, எது பொய், எது மெய்யின்பம், எது துயரம் என்றெல்லாம் தக்க வினாக்களினால் தாக்கப்பட்டு, விடை காண ஏக்கங் கொண்டு, பிறகு நல்வினைப் பயனால்,  திருவருளாலும், குருவருளாலும்  இறைச்சிந்தனையில் மட்டுமே  தமது வாழ்வைத் திருப்பி, மேலான உண்மையை ஆயும் பணியிலேயே வாழ்வைச் செலவிடுவர்.  இறையுணர்வை அடைவதற்கும், பிறவிப் பிணையை முற்றும் விடுப்பதற்கும், ‘பற்றின்மை’ என்ற பண்பும், ‘இறைச்சிந்தனை’ என்ற ஒரே நோக்கமும் எப்போதும் இருந்தாக வேண்டும் எனத் தெளிவர்.

எனினும், அறவழி நடந்தும், அறிவினை அடைந்தும், ‘வைராக்கியம்’ எனும் பற்றின்மை மட்டும்  முற்றிலும் கைகூடாததால், அதனை அடையும் வரை, ‘யான் எப்படிப் பற்றினை விடுவேன்,  கீழான வாழ்வினை விடுத்து, மேலான வாழ்விற்கு எப்படிப் போவேன், ஐயோ, நான் கீழானவன்’  என்றெல்லாம் இறைவனை எண்ணிப் புலம்பி, தன்னைப் பணிவினால் மிகவும் தாழ்மைப்படுத்திக் கதறுவர்.

மாணிக்கவாசகப் பெருந்தகையின் திருவாசகப்பாடல்களில், இத்தகைய வைராக்ய வேட்கையும்,  அதனால் தன்னை ‘நாயேன்’ எனத் தாழ்த்திக் கொள்ளும் அடக்கமும் விளங்கும்.  அருணகிரிநாதர், தாயுமானவர் போன்ற ஞானிகளும் இதே போல வைராக்ய வேட்கையினால் புலம்பியும், கதறியும் இசைத்த பாடல்கள்,  படிக்கையிலேயே, நமது ஊனை உருக்குவதாகவே இருக்கின்றன.

திருவருளால், இறுதியில் பற்றின்மையை முற்றிலும் பெற்ற அத்தகு ஞானிகள், ‘பரஞானிகளாக’, இறைவனது திருவடி ஒளியைத் தரிசித்தவர்களாக, அவ்வின்ப அனுபவத்தை, அனுபூதியைக் கொண்டாடுபவர்களாக, ஆனந்தத்தில் நல்லிசைப் பாக்களைப் பாடி அருளியிருக்கிறார்கள். அருணகிரிநாதரின் கந்தரனுபூதியும்,  தாயுமானவரின் ஆனந்தக்களிப்பும் அத்தகைய  அருள் அனுபவத்தினால் விளந்த பாடல்களே.

அது போன்றே,  திருப்பெருந்துறையில், பரசிவனை, குறுந்த மரத்தினடியில் இருந்து அருள் தந்த குருமணியாகவும், தமது வாழ்க்கையில் பலவிதமான திருவிளையாடல்களை நடத்தி அருள்வித்த நாயகனாகவும், தில்லையில் திருவடிகளைக் காட்டி அருள் பாலித்த பரம்பொருளாகவும் தரிசித்து, பேரானந்த அனுபூதியினைப்  பெற்ற மாணிக்கவாசகர், அந்த உயர்வான அனுபவநிலையில் இருந்தபடியே, நாமெல்லாம் உய்வதற்காக அளித்த நந்நூலே, சிவபுராணம் என்னும் இச்செந்நூல்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் கனிமொழியாம் தமிழ்ச் சொற்களுடன், முனிமொழியாம் சம்ஸ்கிருதத்தின் சொற்களும் இயைந்து விளங்குகின்றன.

வேதங்கள் எல்லாம்,  சம்ஸ்கிருத மொழியில் அமைந்திருப்பதால், வேத அறிவினை விளம்புகின்ற தமிழ் நூல்களில், சம்ஸ்கிருதச் சொற்களின் பயன்பாடும், அவற்றைச் சார்ந்து அமைந்த தமிழ்ச் சொற்களின் முக்கியத்துவமும், கலந்தே இருப்பது தெளிவு.   எனவே,  மாணிக்கவாசகரின் திருவாசகம் முதலான நூல்களில் கோர்த்து விளங்கும் அழகான சொற்களையும், அதன் ஆழமான கருத்துக்களையும் நாம் உணருவதற்கு, இவ்விரு மொழியறிவும் உதவும்.

இறைமந்திரங்கள் மட்டுமின்றி, எண்ணற்ற நெறிகளையும், உண்மைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டிருப்பதால், அவற்றைச் சார்ந்தும், அவற்றினை விளக்கியும் விளங்கும் பல தமிழ்ப் பெருநூல்களை நாம் நன்கு உணர்ந்து கொள்ளவும், இவ்விரு உயரிய மொழிகளையும் பேணி வளர்ப்பதே நமக்குப் பெருமை.

சம்ஸ்கிருதம் ஒரு இனத்தாருக்கோ, நிலத்தாருக்கோ மட்டும் உடமை அல்ல.  கனிமொழியாம் தமிழும்,  முனிமொழியாம் சம்ஸ்கிருதமும், மொழியுலகின் மூத்த சகோதரிகள்.  செம்மையும், சீரும் கொண்ட இம்மொழிகளைப் பெற்ற நாம், இவற்றைக் கண்களாய்க் காத்து, அவற்றின் ஒளியினால், அறிவுப் பார்வை பெறுதல் அவசியம்.  மொழிப்பூக்கள் பரந்த பெருந் தோட்டம் அல்லவா நம்நாடு!

எனவே  வாழை என அமுதத் தமிழ் வளர்க்கும் நம் அறிவுத் தோட்டத்தில்,  மாடத்து துளசியாகவாவது முனி-மொழி இருக்கட்டும்.

‘புராணம்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு, ‘புர நவ அபி:’ எனும் முனிமொழி இலக்கணம் இருக்கிறது.  அதாவது, பழமையானதாயும், எனினும் எப்போதும் புதுமையானதாயும் இருக்கும் உண்மைகளைத் தருபவையே புராணம் என்றாகும். எனவே ‘சிவபுராணம்’ என்பது, என்றுமிருப்பதால் முதுமையானதாயும், எப்போதும் தொடர்வதால் புதுமையானதுமாயும் இருக்கின்ற ‘சிவம்’ என்னும் பேருண்மையைப் பற்றிக் கூறும் நூல் என்றாகிறது.

மேலும் ‘சீவன்’ என்பது ‘ஜீவ:’ எனும் உயிர்த் தத்துவத்தினைக் குறிக்கும் தமிழ்ச்சொல். ‘நான்’ எனும் உணர்வுடன் உலகத்தை அனுபவிக்கின்ற ஒவ்வொரு உயிரினமும்  சீவனே.  ‘புல்லாகிப் பூடாகி’ பல பிறவிகள் எடுத்து அவ்வனுபவங்களால் இளைத்துக் களைக்கின்ற சீவனின் வரலாறும் இந்நூலில் காட்டப்படிருப்பதால், இந்நூல் ‘சீவ புராணம்’ என்றும் ஆகிறது.

இறுதியாக, அனுபவிக்கும் உலகங்கள் நிலையற்றன எனவும், அனுபவ உடல்களும், கரணங்களும் ‘சடமானவை’ எனவும், அவற்றுக்கு ஒளியைக் கொடுப்பது, சீவனுள் இருக்கும் ஆத்மா எனவும் உணர்ந்த பரஞானிக்கு,  ‘சிவனே சீவன்’ என்றும்,  ஒன்றேயான அப்பேருண்மையே உண்மை என்றும் தெளிகிறது.  இந்த ஒப்பரிய மறை பொருளையே, மாணிக்கவாசகர் இந்நூலில் உணர்த்துகின்றார்.

மேலும் மாணிக்கவாசகர், இப்பாடல்களைப் படிப்போர்,   ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்’ என ஆணையிட்டுள்ளதால்,  அன்னாரின் நூற்பொருளை ஆய்வதற்கு நமக்கு  அனுமதியும்,  உரிமையும்  இருக்கின்றன.  ‘பொருள் அறிந்து’ என்று மாணிக்கவாசகர் கூறியிருந்தால், சொற்பொருளை அறிவால் மட்டுமே அளந்து,  அதன்படி ஒரே கருத்தை நாமெல்லாம் ஒப்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.    ஆனால்  ‘பொருள் உணர்ந்து’ என ஆசான் கூறியிருப்பதால்,  அன்னாரின் ‘நூல் நோக்கத்திலிருந்து’ வழுவாத வகையிலும், அதே சமயம், நமது அனுபவத்துக்கும், அறிவின் முதிர்ச்சிக்கும் ஏற்புடைய விளக்கம்  எனும் வகையிலும், உட்பொருளை ஆய்தல் நமது  கடமையாகிறது.

எம்மொழியிலும், சான்றோரின் உண்மை வார்த்தைகளுக்கு உள்ளே, ‘அர்த்த தேவதைகள்’ எனும் பொருட்தெய்வங்கள்,  ஒளிந்து கொண்டு இருப்பார்களாம். பிறிதொரு காலத்தில், அவற்றை நல்லார்வத்துடன் படிப்பவர்களின் முன்னே, அவரது அறிவு முதிர்ச்சிக்கும், நல்முயற்சிக்கும், உண்மைத் தவிப்புக்கும் தக்கபடி, அந்த அர்த்த தேவதைகள், சிந்தையுள் வெளிப்பட்டு, பலவிதமாக நடனமிட்டு, புதுப்புதுப் பொருள்களைக் காட்டி மகிழ்த்துவார்களாம்.  அதனாலேயே, பழமையானாலும், நற்காவியங்கள் எல்லாம், எப்போதும் புதுமையுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. திருக்குறள், பகவத்கீதை, தேவாரம், திருவாசகம் என எல்லா நந்நூல்களுக்கும், பலரும் பலவிதமான, பயனுள்ள பொருட்களைக் காலம் காலமாகக் காட்ட முடிகிறது.

அவ்வகையில், சிவபுராணம் படிக்கையில், அடியேனின் மனதில் தோன்றிய கருத்துக்களை,  மறை பொருள் விளக்கங்களாக,  இவண் யான் பகிர்ந்து கொள்கிறேன். இம்முயற்சியில்  தவறுகளோ, குறைகளோ இருப்பின், அவை யாவும் இவனின் இழுக்கு.   அவற்றைப் பொறுத்து, திருத்தி வைப்பது, படிக்கின்ற பெரியோர்களின் பொறுப்பு.

எல்லாம் வல்ல இறைவனுக்கும், இறைவனாய் ஆன மாணிக்க வாசகருக்கும், பணிவால் அளித்த பைந்தமிழ் மலரே இப்படைப்பு.

மீ.  ராஜகோபாலன்

February 2015

துதி

01 நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

Share this Post