ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ சதுர்தோ₂(அ)த்₄யாய​: ஞானகர்மஸம்ன்யாஸயோக₃​:

பாகம் 4 – அறிவினால் செயல் துறவு

1 ( ஓதுதற்கரிய ஞான கர்ம ஸந்யாஸ யோகம் என்கிற பெரிய ரஹஸியத்தை இறைவன் விசயனுக்குச் சொல்லத் தொடங்கினார். )

மாதவ னானந்த சயனன் மதுசூதனன் முகுந்தன் அழகன்
வேதவ னாதன் விமலன் விஷணுருபன் கிருஷண வேணு
தவ முதான நந்தன் கேஸவன் கோபாலக் கண்ணன்
ஓதவ ரதான சித்தி உலகறிந் தேறச் சொன்னான்
ஶ்ரீப₄க₃வானுவாச .

இமம் விவஸ்வதே யோக₃ம் ப்ரோக்தவானஹமவ்யயம் .
விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே(அ)ப்₃ரவீத் (4-1)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

2 (1) பலகாலம் முன்பு இந்த யோக சாஸதிரத்தை நான் விவஸ்வானுக்குச் சொல்ல, அவன் மனுவுக்கும், மனு இட்சவாகுவுக்கும் சொல்லி வழி வழியாக வளர்ந்தது.

அழிவிலா யோக ஞானம் ஆங்கொரு காலம் தொட்டுப்
பழியிலா விவஸ் வானும் பயின்றிடச் செய்த பின்னும்
மொழியிலாத் தவத்து ஞானம் முயன்றனன் மனுவின் சீடன்
இழிவிலாப் பேறு பெற்ற இட்சவாகு கற்ற தய்யா
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது₃​: .
ஸ காலேனேஹ மஹதா யோகோ₃ நஷ்ட​: பரந்தப (4-2)
ஸ ஏவாயம் மயா தே(அ)த்₃ய யோக₃​: ப்ரோக்த​: புராதன​: .
ப₄க்தோ(அ)ஸி மே ஸகா₂ சேதி ரஹஸ்யம் ஹ்யேதது₃த்தமம் (4-3)

3 (2) பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வளர்ந்த இந்த யோகப் பாடம், சிறிது சிறிதாகக் காலப்போக்கில் குறைபாடாகியது.

வாய்வழி வளர்ந்து நல்லோர் வாழ்க்கையில் கலந்து ஞானப்
பாய்வழி காட்டும் வேதப் பயணத்தி லாழ்ந்த ஞாலம்
துாய்வழி பாடும் இன்றித் துப்பறி வாறும் இன்றி
நோய்வழிப் பட்டு யோக நுால்நெறி கெட்ட தாகும்

அர்ஜுன உவாச .

அபரம் ப₄வதோ ஜன்ம பரம் ஜன்ம விவஸ்வத​: .
கத₂மேதத்₃விஜானீயாம் த்வமாதௌ₃ ப்ரோக்தவானிதி (4-4)

4 (3) பல காலமாகப் பலராலும் கற்று, காக்கப் பட்ட இந்த ரஹஸியமே ஞான கர்ம ஸந்யாஸ யோகமாகும்.

அடிபணிந் தோனை வள்ளல் ஆதரித் தோதும் வேதம்
இடியணிந் தோடும் மேகம் ஈந்திடும் மின்னல் போலும்
வடிவழிந் தாடும் மாய வாழ்க்கையின் சாரம் கூறும்
கடிமணி யாகும் ஞான கர்மஸந் யாஸ யோகம்

விசயன் வினா

5 ( இப்போது நம்முடன் மனிதனாக வாழ்ந்து கொண்டு, முன்பு விவஸவானுக்குத் தானே சொன்னதாகக் கண்ணன் சொல்வது எப்படி நடைமுறையாகும்? என்ற ஐயத்தால் விசயன் மீண்டும் கேட்கலானான். )

சாரதி சொன்னான் தர்ம சாத்திர யோகம் யாவும்
பேரதி காரம் பெற்றுப் பெருமையாய் விவஸ வானுக்கு
நேரதி காரம் செய்து நிலைபெற்ற தாக என்னும்
தேரறி யாத ரன் தெளிவுற வினவு கின்றான்

6 (4) எனக்கு இது புரியவில்லை. எப்படி இது சாத்தியம்? (மனிதருக்கான குறுகிய அறிவால், காலம், அண்டம் என்கிற நான்காம், ஐந்தாம் பரிமாணங்களைக் கடந்து பார்க்கின்ற திறமை இல்லாததால், விசயன் இறைவனின் உண்மைக்கு விளக்கம் கேட்கிறான். )

என்னுடன் இருந்து கொண்டு ஏதொரு காலம் வாழ்ந்து
மண்ணுல கேற்றும் ஞானி மாமுனி விவஸவா னுக்குச்
சொன்னதாய் ஞான யோகம் சோதிக்கும் கண்ணா உந்தன்
புன்னகை மர்மம் என்ன புதிரென விசயன் கேட்டான்

ஶ்ரீப₄க₃வானுவாச .

ப₃ஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவ சார்ஜுன .
தான்யஹம் வேத₃ ஸர்வாணி ந த்வம் வேத்த₂ பரந்தப (4-5)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

7 (5) உன்னைப் போலவே நானும் பல பிறவிகள் எடுத்துள்ளேன். ஆனால் நான் அவற்றை முற்றும் அறிவேன்.

வல்லிய வினையிற் சிக்கி வாழ்வெனும் பிறவிப் பேறு
நல்குவ தாகும் மாயை நம்மிடை என்றும் உண்டு
மெல்லிய றறியா ரிந்த மெய்ப்பொரு ளாகும் வேதம்
சொல்லிய வேணு கானச் சோதரன் கூறு கின்றான்
அஜோ(அ)பி ஸன்னவ்யயாத்மா பூ₄தானாமீஶ்வரோ(அ)பி ஸன் .
ப்ரக்ருதிம் ஸ்வாமதி₄ஷ்டா₂ய ஸம்ப₄வாம்யாத்மமாயயா (4-6)

8 (6) எனக்குப் பிறவிகள் இல்லையென்றாலும் கர்ம உதாரணனாக நானும் பிறவி எடுத்துக் கொள்வேன்.

பிறவே னெனினும் ஞாலப் பிறவியை ஏற்றுக் கொள்வேன்
இறவே னெனினும் கால ஈர்ப்பினைக் காட்டிச் செல்வேன்
சிரமேற் செய்த கர்மச் சீரினை எடுத்துக் காட்ட
நரனே யாவேன் என்று நாரணன் கூறக் கேட்டான்
யதா₃ யதா₃ ஹி த₄ர்மஸ்ய க்₃லானிர்ப₄வதி பா₄ரத .
அப்₄யுத்தா₂னமத₄ர்மஸ்ய ததா₃த்மானம் ஸ்ருஜாம்யஹம் (4-7)

9 (7) எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குமோ அப்பொழுதெல்லாம் நான் பிறக்கிறேன்.

எப்பொழு தெப்பொழு தெல்லாம் ஏதினி யாளும் தருமம்
தப்பொரு மித்து விட்டால் தாரணி பாவம் மிக்கால்
அப்பொழு தப்பொழு தெல்லாம் ஆதிசே டணையன் மாயன்
ஒப்புமை யில்லா தானாய் ஒருவனாய்ப் பிறப்பேன் நானே
பரித்ராணாய ஸாதூ₄னாம் வினாஶாய ச து₃ஷ்க்ருதாம் .
த₄ர்மஸம்ஸ்தா₂பனார்தா₂ய ஸம்ப₄வாமி யுகே₃ யுகே₃ (4-8)

10 (8) நல்லோரைக் காக்கவும் தீயோரைத் தண்டிக்கவும் தருமநெறி நிலை நிறுத்தவும் நான் யுகம் தோறும் பிறக்கிறேன்.

நற்றவ வாழ்வு எங்கும் நலம்படப் பாது காக்க
அற்றிடத் துன்பம் பாவம் அகழ்ந்திட மாயை நீக்க
வெற்புடை ஞான தீபம் விளக்கிட யுகங்கள் தோறும்
பொற்புடைப் பிறவி ஏற்றுப் புகட்டுவேன் நீதி என்றான்
ஜன்ம கர்ம ச மே தி₃வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத​: .
த்யக்த்வா தே₃ஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோ(அ)ர்ஜுன (4-9)

11 (9) இவ்வுண்மையை அறிந்தவன், மாறாத நம்பிக்கையினால் என்னையே அடைகிறான்.

இறையருள் காட்டு கின்ற இம்மையும் மறுமை என்ற
முறையறி வார்க ளெல்லாம் முன்வினைப் பூதம் நீத்துப்
பிறைகதி ரொளியைப் பெற்ற பேரதி காரம் போலே
மறையருள் காட்டி எந்தன் மலரடி சேர்வர் என்றான்
வீதராக₃ப₄யக்ரோதா₄ மன்மயா மாமுபாஶ்ரிதா​: .
ப₃ஹவோ ஜ்ஞானதபஸா பூதா மத்₃பா₄வமாக₃தா​: (4-10)

12 (10) பற்று, பயம், கோபம் நீங்கி, என்னைச் சரணடைந்து, ஞானத் தீயில் பரிசுத்தமானவன் இறுதியில் என்னையே அடைகிறான்.

ஆசைத் தளை அறுத்து அச்சந் தனை விடுத்து
பேசப் பழி வளர்க்கும் பெரிய சினம் அழித்து
நேசன் இறையி னருள் நியமம் லயப் படுத்தி
வாசம் புரிவர் ஞான வழியில் எனை அடைவர்
யே யதா₂ மாம் ப்ரபத்₃யந்தே தாம்ஸ்ததை₂வ ப₄ஜாம்யஹம் .
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா​: பார்த₂ ஸர்வஶ​: (4-11)

13 (11) யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் விரும்பிய முறையிலேயே நான் அருள் தருகிறேன். (வேறுபட்டுத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் மதநெறிகளும், பலவகையான வழிபாடுகளும், ஒன்றாகிய சக்தியையே குறிக்கின்றன.)

எப்படி எப்படி என்னை ஏற்றுதல் மானிடர் தன்மை
அப்படி அப்படி யானும் அருள்தந் தாளுதல் உண்மை
சொற்படி சுவடிகள் கூறும் சூத்திரம் ஆயிர மெனினும்
நற்கதி பெறுவது ஒன்றே நாரணன் தாள்வழி நன்றே
காங்க்ஷந்த​: கர்மணாம் ஸித்₃தி₄ம் யஜந்த இஹ தே₃வதா​: .
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்₃தி₄ர்ப₄வதி கர்மஜா (4-12)

14 (12) பலனை விரும்பிப் பலரும் வேள்விகள் செய்து பலனைப் பெறுவதும் இதன்படியேதான். ஆனால், பலனை மட்டுமே கருதிச் செய்யும் வேள்விகளால் உண்மையான நிலையை, உயரிய பதவியை அடைய முடியாது.

பிறப்பால் கல்வி தரும் பேரறிவால் செய் கருமச்
சிறப்பால் நல்கி வரும் செல்வப் பயன் விழுப்பப்
பொறுப்பா லுறவு எனும் போகத்தால் புலன் மயங்கி
நெருப்பால் தழுவி நின்ற நீர்த் திவலை ஆவாரே
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு₃ணகர்மவிபா₄க₃ஶ​: .
தஸ்ய கர்தாரமபி மாம் வித்₃த்₄யகர்தாரமவ்யயம் (4-13)

15 (13) மேலும், இயற்கை குணத்திற்கேற்ற வகையில் சமுதாய வர்ண பேதங்களை நிர்ணயித்து செயல் புரிந்தவன் நானே. ஆனாலும் இச்செய்கை என்னைப் பற்றுவதில்லை

அந்தணன் ஆள்வோன் பொரு ளாக்குவன் உழைக்கும் வர்க்கம்
தந்தவன் நானே தர்மம் தழைத்திடச் செய்வ தற்கும்
வந்தவன் நானே எனினும் வைத்தவை எதுவும் என்னைப்
பந்தமாய்க் கொள்வ தில்லை பற்றறு செயலைக் காண்க
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப₂லே ஸ்ப்ருஹா .
இதி மாம் யோ(அ)பி₄ஜானாதி கர்மபி₄ர்ன ஸ ப₃த்₄யதே (4-14)

16 (14) பரம்பொருளாகிப் பரந்திருக்கும் என்னை, நான் இயற்கையின் வழியாகச் செய்யும் கருமங்கள் பற்றுவதில்லை. இதை அறியும் போது, நீயும் விடுதலையடைகிறாய்.

ஒட்டாது கர்மம் என்னை உருவாகும் பயனால் என்னை
கட்டாது காலம் தேசம் கடந்தாலும் காணா தென்னை
எட்டாது ஏதும் இல்லை என்னிலை அறிந்தா லுன்னை
கட்டாது செய்யும் கர்மம் கடமையால் வைத்த பாவம்
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி₄​: .
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை​: பூர்வதரம் க்ருதம் (4-15)

17 (15) கடமையைச் செய்கின்ற சூரிய சந்திரர்களைப் போல, முனிவர்கள் சித்தியடைந்தும் கூடத் தனது கருமங்களைக் கைவிடவில்லை. நீயும் உனது மூதாதையரின் வழக்கப்படி, உன் கடனைச் செய்.

கதிரவன் ஒளிர்வது போலே காய்ந்திடும் நிலவைப் போலே
முதியவர் முக்தியின் பக்தர் முன்வினை வற்றிய சித்தர்
விதியென விதித்த கடமை விளைப்பதை அறிவாய் விசயா
நதியது கடலைத் தேடி நடத்திடும் படியால் அறிவாய்.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா​: .
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா₄த் (4-16)

18 (16) அப்படிக் கடமையைச் செய்வதில், செய்கை எது, செய்யாமை எது என்பதை இப்போது விளக்குவேன். கேட்டுப் பயன் பெறு.

செய்வது என்ன தொழிலைச் செய்யாமை என்ன என்று
கையது கரந்த கனியாய்க் கவினுரை செய்யக் கேட்க
உய்வது அறிக பிறவி உழலுவ தொழிகத் தேர்க
பெய்வது ஞானப் பேறு பெருமழை நனையக் காண்க
கர்மணோ ஹ்யபி போ₃த்₃த₄வ்யம் போ₃த்₃த₄வ்யம் ச விகர்மண​: .
அகர்மணஶ்ச போ₃த்₃த₄வ்யம் க₃ஹனா கர்மணோ க₃தி​: (4-17)

19 (17) செய்யத் தக்கன செய்யும் போது, அவற்றின் பலனை விரும்பாது செய்தலே செய்கைத் துறவு ஆகும். அதுவே உண்மையில் பயன் அளிப்பதாகும்.

பெய்வது நின்று வானம் பேரலைத் திரையில் மேகம்
உய்வது என்று தேகம் உருப்பிற வாகிப் போகும்
செய்வது நன்று செய்யின் செய்யாமை மிகவும் நன்று
மெய்யிது அறிந்து கொள்க மேநிலை அடைக என்றான்
கர்மண்யகர்ம ய​: பஶ்யேத₃கர்மணி ச கர்ம ய​: .
ஸ பு₃த்₃தி₄மான்மனுஷ்யேஷு ஸ யுக்த​: க்ருத்ஸ்னகர்மக்ருத் (4-18)

20 (18) செயலில் செயலாற்றாத் தன்மையையும், செயலாற்றாத் தன்மையில் செயலையும் காண்பதுவே ஞானம்.
(அசையாதது வைத்தே அசைவதைக் காண்பது போல, செய்யாததை வைத்தே செய்வதைக் காண முடியும். )

செயலாற்றி வரும் போது சிந்தனையில் நாம் இந்தச்
செயலாற்ற வில்லை எனும் செய்திதனை வைத் திருக்கச்
செயலாற்றும் பலன் உண்டு செய்கருமப் பலா பலன்கள்
செயலாற்ற ஞான மலர்ச் செல்வத்தைத் தருவ தென்றான்
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா₄​: காமஸங்கல்பவர்ஜிதா​: .
ஜ்ஞானாக்₃னித₃க்₃த₄கர்மாணம் தமாஹு​: பண்டி₃தம் பு₃தா₄​: (4-19)
த்யக்த்வா கர்மப₂லாஸங்க₃ம் நித்யத்ருப்தோ நிராஶ்ரய​: .
கர்மண்யபி₄ப்ரவ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித்கரோதி ஸ​: (4-20)

21 (19-20) ஆசையால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும், போகப் போக, அந்தக் காரியத்தை முடிப்பதே குறியாகவும், ஆசை ஒரு பொருட்டாகாமலும் ஆக வேண்டும். மனதில், செயலைச் செய்யும் போதே, ஒருபக்கம் செயலற்றுச் செய்வதை சாட்சியாகப் பார்த்தும், மறுபக்கம் செயலாறறவும் பக்குவம் பெற வேண்டும்.

தொடங்கு முன்னேகு மாசைத் துாரிகை தீட்டும் வண்ணச்
சடங்குகள் போகப் போகச் சாய்த்திட வேண்டும் செய்கை
நடந்திடும் போது நெஞ்சம் நடவாமை எய்த லாபம்
கடந்திடும் ஞானம் வேண்டும் காண்டீபன் கேட்டு நின்றான்
நிராஶீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்₃ரஹ​: .
ஶாரீரம் கேவலம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பி₃ஷம் (4-21)
யத்₃ருச்சா₂லாப₄ஸந்துஷ்டோ த்₃வந்த்₃வாதீதோ விமத்ஸர​: .
ஸம​: ஸித்₃தா₄வஸித்₃தௌ₄ ச க்ருத்வாபி ந நிப₃த்₄யதே (4-22)
க₃தஸங்க₃ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞானாவஸ்தி₂தசேதஸ​: .
யஜ்ஞாயாசரத​: கர்ம ஸமக்₃ரம் ப்ரவிலீயதே (4-23)

22 (21-23) சேற்றில் முளைத்தாலும், தலை நிமிர்த்தித் துாய்மையாக மலரும் தாமரையைப் போல, செயலைச் செய்தாலும், பற்றுதல் இல்லாததால் துாயவராக இருப்பரே கர்மயோகி. மற்றவர் செயல்கள் ணே.

நிம்மதி வளர்த்து நிற்க நீரிடை கிடந்தும் மாறாச்
செம்மலர் இதழைப் போலே சேர்பவை சேரா நிற்க
இம்மியும் பலனைத் தேடி ஈங்கிவர் செய்யும் வேள்வி
விம்மிடும் தோளா கானல் வீழ்ந்திடும் நீரே என்றான்
ப்₃ரஹ்மார்பணம் ப்₃ரஹ்ம ஹவிர்ப்₃ரஹ்மாக்₃னௌ ப்₃ரஹ்மணா ஹுதம் .
ப்₃ரஹ்மைவ தேன க₃ந்தவ்யம் ப்₃ரஹ்மகர்மஸமாதி₄னா (4-24)
தை₃வமேவாபரே யஜ்ஞம் யோகி₃ன​: பர்யுபாஸதே .
ப்₃ரஹ்மாக்₃னாவபரே யஜ்ஞம் யஜ்ஞேனைவோபஜுஹ்வதி (4-25)

23 (24-25) பிரம்மஞானம் வேண்டி யாகம், ஹோமம் செய்து, பிரம்மத்தையே அடையத் துடிப்பவர்கள் உண்டு.

மெய்யிடை தரித்த சோதி மேவிடப் பிறந்த யோகி
நெய்யிடை வளர்த்த ஆவி நெறிப்பட நிகழ்த்தும் வேள்வி
செய்திடச் செல்வம் கல்வி சேதனம் அவிப்பர் ஞானி
எய்திடப் பிரம்ம சீலம் ஏகிடத் தவிப்பர் காண்க
ஶ்ரோத்ராதீ₃னீந்த்₃ரியாண்யன்யே ஸம்யமாக்₃னிஷு ஜுஹ்வதி .
ஶப்₃தா₃தீ₃ன்விஷயானன்ய இந்த்₃ரியாக்₃னிஷு ஜுஹ்வதி (4-26)
ஸர்வாணீந்த்₃ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே .
ஆத்மஸம்யமயோகா₃க்₃னௌ ஜுஹ்வதி ஜ்ஞானதீ₃பிதே (4-27)

24 (26-27) மனவடக்கம் என்ற தீயில், புலன்களின் வேகத்தைப் பொசுக்கி, நானெனும் மமதையை அர்ப்பணித்து ஞானம் பயப்பவரும் உண்டு.

தானெனத் தக்கார் கொள்ளாத் தலைக்கனம் கொள்வர் வாழ்வு
வீணெனத் துலக்கும் வேதம் விளைத்தநற் றீயில் வேட்கை
மானெனத் துள்ளும் மாயம் மனதினில் எரித்து ஞானம்
காணெனக் காண்பர் சீவன் கலந்திடக் கண்ணன் கூற்று
த்₃ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக₃யஜ்ஞாஸ்ததா₂பரே .
ஸ்வாத்₄யாயஜ்ஞானயஜ்ஞாஶ்ச யதய​: ஸம்ஶிதவ்ரதா​: (4-28)

25 (27-28) மூச்சை அடக்கி, மனதினை நிறுத்தி யோகப் பயிற்சியால் என்னை அடைய முயல்பரும் உண்டு.

ஒன்பது வாயில் சுற்றி ஓடிடும் காற்றைக் கட்டி
தின்பது வினையே என்னும் தீஞ்சுவை ஞானம் கிட்டி
இன்பமு மில்லை என்றும் ஈங்கொரு துயரும் இல்லை
என்பது அறிந்து கொள்வர் ஏனையே அடைவ ரய்யா

26 (28) சிலர் தானத்தாலும், சிலர் தவத்தாலும், சிலர் புலனடக்கி மதி வளர்க்கும் கல்வியாலும் என்னை அடைய முனைவர்.

வணக்கமும் பணிவும் அன்பும் வாய்மையும் வாய்த்த வாழ்வும்
இணக்கமும் நல்லோ ராட்சி ஈதலும் புலனின் மாயம்
பிணக்கமும் கொள்வ ராயின் பேரிடர் பிறவிக் காயம்
சுணக்கமும் இன்றி ஞானச் சூத்திரம் அறிவர் அறிக
அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே(அ)பானம் ததா₂பரே .
ப்ராணாபானக₃தீ ருத்₃த்₄வா ப்ராணாயாமபராயணா​: (4-29)

27 (29) சிலர் பிராண, அபான வாயுக்களைக் கட்டுப்படுத்தியும், சிலர் யாகம் செய்தும், சிலர் விவேகத்தாலும் யோகம் செய்து உண்மை உணர்வர்.

காற்றினைக் கட்டும் யோகியும் கடுந்தீ வளர்க்கும் ஞானியும்
சேற்றினைக் குழைத்த பொறியினிற் செலுத்திய சுடரறி வாளனும்
நேற்றைய கருமச் சோதனை நேரறி வாளனும் தாரணி
கூற்றுவ னறியாச் சூட்சுமம் கூறிடக் கேளுவர் சத்தியம்
அபரே நியதாஹாரா​: ப்ராணான்ப்ராணேஷு ஜுஹ்வதி .
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவிதோ₃ யஜ்ஞக்ஷபிதகல்மஷா​: (4-30)

28 (30) உணவில் கட்டுப்பாடு, ஒழுக்கம், பொதுநல விழுப்பம் எனப் பலவிதமான வேள்விகளின் மூலம் யோக சித்தி அடைபவரும் உண்டு.

புலனில் செயல் துலக்கும் பொருளில் பயன் விளக்கும்
நலனில் பிறர் ஒழுக்கும் நாடிகள் தமை யடக்கும்
கலனில் பசி விலக்கும் காற்றில் மூச் சமர்த்தும்
பலனில் வேள்வி என்னும் பாடம் அறிந்து கொள்க
யஜ்ஞஶிஷ்டாம்ருதபு₄ஜோ யாந்தி ப்₃ரஹ்ம ஸனாதனம் .
நாயம் லோகோ(அ)ஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ(அ)ந்ய​: குருஸத்தம (4-31)

29 (31) (எந்த வழியில் வேள்வியும், தவமும் செய்தாலும் ) தனது செயலால் பெற்ற பலனைத் தக்கதாக இருப்பின் அதனைத் தக்கோருடன் பகிர்ந்துண்பவனே உண்மையான யோகி. மற்றவன் சமுதாயத்தில் வளரும் கயவன்.

வேள்வியைச் செய்து கிட்டும் வெகுமதி யாகும் பண்டம்
வாழ்வினுக் கேற்ற தாகின் வையத்தில் பங்கு செய்து
ஆள்வதே நலமே தானம் ஆக்காமை கயமை அதனால்
சூழ்வினைப் படுவ தாகும் சுகமென்ப தழிந்து போகும்
ஏவம் ப₃ஹுவிதா₄ யஜ்ஞா விததா ப்₃ரஹ்மணோ முகே₂ .
கர்மஜான்வித்₃தி₄ தான்ஸர்வானேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே (4-32)

30 (32) எல்லா வேள்விகளும் இயற்கையில் அமைந்தவை. அதன்படியே நடைபெறுவதே உலக வாழ்க்கை. அப்படியிருக்கும் போது, உயிர் உடலை விட்டால்தான் என்ன? (அதுவும் இயற்கை நியதி என்பதால். )

கேள்வியே ஞானத் தீயில் கெட்டிடும் மாயப் போர்வை
வேள்வியே நோக்கம் என்பர் வேள்வியே யாக்கை என்பர்
வாழ்வினைத் தருமம் ஒன்றே வாழ்விக்கும் என்ப தாலே
ஊழ்வினை வசத்தா லுற்ற உடம்பினைச் சுட்டா லென்ன
ஶ்ரேயாந்த்₃ரவ்யமயாத்₃யஜ்ஞாஜ்ஜ்ஞானயஜ்ஞ​: பரந்தப .
ஸர்வம் கர்மாகி₂லம் பார்த₂ ஜ்ஞானே பரிஸமாப்யதே (4-33)

29 (33) பொருளால், பொருளுக்காகச் செய்யும் செயலை விட, அறிவால் செய்யும் வேள்வி சிறந்தது. அது ஆசையற்றது.

செயலினில் வேள்வி தோன்றும் செயலுக்கோ ஆசை வித்து
வயலினில் மனதில் ஆசை வைத்ததால் வளரும் நச்சுப்
பயிரினைக் களையாய் நீக்கிப் பார்த்திட வேண்டும் ஞானம்
உயிரினைக் காக்கும் விசயா உண்மையை அறிந்து கொள்க
தத்₃வித்₃தி₄ ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன ஸேவயா .
உபதே₃க்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானினஸ்தத்த்வத₃ர்ஶின​: (4-34)
யஜ்ஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட₃வ .
யேன பூ₄தான்யஶேஷேண த்₃ரக்ஷ்யஸ்யாத்மன்யதோ₂ மயி (4-35)

31 (34-35) பணிவுடன் இந்தப் பாடங்களை நல்ல பெரியோரிடம் கேட்டு நடந்து கொண்டால், விசயா, நீ உன்னுளே எதனையும் காணும் பேருண்மையை அறிவாய்.

வணக்கமும் பணிவும் நேசம் வாய்மையும் பேணக் கேள்வி
இணக்கமும் கொண்டு ஆசான் ஈன்றிடும் ஞானக் கல்வி
உனக்கென ஏற்பாய் என்றால் உண்மையே அறிவாய் என்றால்
பிணக்கென்ன பேதம் என்ன பேரறி வாண்மை காண்பாய்
அபி சேத₃ஸி பாபேப்₄ய​: ஸர்வேப்₄ய​: பாபக்ருத்தம​: .
ஸர்வம் ஜ்ஞானப்லவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி (4-36)
யதை₂தா₄ம்ஸி ஸமித்₃தோ₄(அ)க்₃னிர்ப₄ஸ்மஸாத்குருதே(அ)ர்ஜுன .
ஜ்ஞானாக்₃னி​: ஸர்வகர்மாணி ப₄ஸ்மஸாத்குருதே ததா₂ (4-37)

32 (36-37) பாவியிலும் பாவியாய் நீ இருந்தாலும், உன்னாலும் ஞானமாகிய படகால் இந்த மாயமாகிய பிறவிக் கடலைக் கடக்க முடியும். உண்மை ஞானமெனும் தீ உனது ஐயங்களையும், பாவங்களையும் முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கி விடும்.

பாவியில் பாவி யாய்நீ பரிதவித் திட்டால் என்ன
தாவியே ஞானக் கப்பல் தவநெறித் திக்கால் செல்ல
மேவியே வினைகள் தீயில் மெலிந்திட்ட விறகாய்ப் போகும்
கூவியே நின்றேன் யானே குருபதம் சேர்வாய் விசயா

ந ஹி ஜ்ஞானேன ஸத்₃ருஶம் பவித்ரமிஹ வித்₃யதே .
தத்ஸ்வயம் யோக₃ஸம்ஸித்₃த₄​: காலேனாத்மனி விந்த₃தி (4-38)
ஶ்ரத்₃தா₄வாம் ̐ல்லப₄தே ஜ்ஞானம் தத்பர​: ஸம்யதேந்த்₃ரிய​: .
ஜ்ஞானம் லப்₃த்₄வா பராம் ஶாந்திமசிரேணாதி₄க₃ச்ச₂தி (4-39)

34 (38-39) ஞானமே பெரிது. அதற்கு யோகமே வழி. அதற்கு நல்ல ஆசிரியரே அடைக்கலன். இவற்றைப் பெற்றவன், முயற்சியினால், பிரம்மமாகவே ஆக முடியும்.

ஞானம் அருள் விளக்கு நலமுறக் கடைப் பிடிக்கும்
ஞானம் வருவ தற்கு யோகம் பெரு வழக்கம்
ஞானம் புலன் அடக்கம் பாடம் குரு வணக்கம்
ஞானம் வந்து விட்டால் பிரம்மம் குடி இருக்கும்
அஜ்ஞஶ்சாஶ்ரத்₃த₃தா₄னஶ்ச ஸம்ஶயாத்மா வினஶ்யதி .
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுக₂ம் ஸம்ஶயாத்மன​: (4-40)
யோக₃ஸம்ன்யஸ்தகர்மாணம் ஜ்ஞானஸஞ்சி₂ன்னஸம்ஶயம் .
ஆத்மவந்தம் ந கர்மாணி நிப₃த்₄னந்தி த₄னஞ்ஜய (4-41)
Yogasannyasta karmaanam jnaanasamcchinnasamshayam;
Aatmavantam na karmaani nibadhnanti dhananjaya. 41.

35 (40-41) இவற்றை நம்பாத அறிவிலிகள் அழிவார்கள். இவற்றில் சந்தேகம் வந்தாலும், நல்ல நோக்குடன், தக்க ஆசிரியரிடம் கற்று அறிபவன் திருவருளைப் பெறுவான்.

அறிவிலியும் மறை மொழியில் ஐயமுடைப் பொய் யறிவும்
சிறுமதியும் இடை யிருந்து செத்துவளர்ப் பித்த துதான்
அரிதெனவே அறிவி னிடை ஐயம்பல வந்தா லும்
குருவடியே திருவருளாய்க் கூற்றுணர வேண் டாமோ
தஸ்மாத₃ஜ்ஞானஸம்பூ₄தம் ஹ்ருத்ஸ்த₂ம் ஜ்ஞானாஸினாத்மன​: .
சி₂த்த்வைனம் ஸம்ஶயம் யோக₃மாதிஷ்டோ₂த்திஷ்ட₂ பா₄ரத (4-42)

36 (42) எனவே ஞானமாகிய வாளால் உன்னுடைய அறியாமையினால் பிறந்து உன்னிடத்தே உண்டாகியுள்ள சந்தேகத்தை வெட்டியெறிந்து விட்டு யோகத்திலே நிலைத்திரு. உன் கடமையைச் செய்.

செயலினைத் துறக்க யோகம் செழுமதி விளையும் ஐயப்
புயலினைத் துடைக்க ஞானம் போர்த்தி நிற்கும் மாயக்
கயமையை அறுக்க வாளாய்க் கைவல்ய ஞானம் ஏற்றுக்
கடமையைச் செய்வாய் விசயா காண்டீபம் ஏற்றுக் கொள்வாய்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
ஜ்ஞானகர்மஸம்ன்யாஸயோகோ₃ நாம சதுர்தோ₂(அ)த்₄யாய​: (4)

இவ்வாறு கர்மயோகத்தின் மூன்றாம் பாகம் நிறைவுபெறுகிறது

2 – கர்ம யோகம்

5 – ஸந்யாஸ யோகம்

Related Posts

Share this Post