ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ த்ரயோத₃ஶோ(அ)த்₄யாய​: . க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபா₄க₃யோக₃​:

பாகம் 13 – களம், களத்தறிவு நெறி

கரும யோகத்தை முதல் ஆறு பகுதிகளிலும், பக்தி, தியான யோகத்தை அடுத்த ஆறு பகுதிகளிலும் சொன்ன இறைவன், ஞான யோகத்தையும், மற்ற எல்லா யோகத்தையும் பாவிக்கும் நிலயையும் இறுதி ஆறு பகுதிகளில் சொல்லலானார்.

கருமமே வழியென் றாறு காண்டமும் உரைத்த பேற
மருமமே மனதால் தியான மந்திரம் என்றே ஆற
தருமமே வகுத்துப் பின்னர் தந்திரம் ஞானோ தயமாய்
அருளுமே தமையும் இறுதி ஆறினைக் கூறக் கேட்டான்

Arjuna Uvaacha:

Prakritim purusham chaiva kshetram kshetrajnameva cha;
Etadveditumicchaami jnaanam jneyam cha keshava. 1

விசயன் வினா

2 (1) கேஸவா, பிரகிருதி என்பது என்ன puருஷன், களம், களத்தறிவு, ஞானம், ஞேயம் இவை பற்றி எனக்கு அருளால் விளக்கம் தருக.

பிரகிருதி என்பது என்ன பேரமை இயற்கை என்ன
அறிந்திடும் புருஷன் என்ன அமைந்திடும் வகையும் என்ன
விரிந்திடும் களமாய் வையம் விரித்திடும் க்ஷேத்திரம் என்ன
புரிந்திடும் சேக்ஷத்திர க்ஞன் புலர்ந்திடும் ஞானம் என்ன

3 (இந்த உண்மைகளை எனக்குக் கூறி அருள் செய்க. )

திருநெறி செய்க எந்தன் தீவினை போகச் செய்க
அருநெறி வேதம் தந்தென் ஆவியை ஏகச் செய்க
தருநெறி கருமம் பக்தி தந்திடும் யோகச் சாலை
வருநெறி ஞானம் தருக வல்லவா கேஸவ என்றான்

Sri Bhagavaan Uvaacha:

Idam shareeram kaunteya kshetramityabhidheeyate;
Etadyo vetti tam praahuh kshetrajna iti tadvidah. 2

ஸ்ரீகிருஷ்ணர் உரை

4 (2) விசயா, உடலே களம் என முதலில் அறிக. அதனை ஆராய்ந்து அறிதலே களத்தறிவு. இதனை அறிபவனே ஞானி.

சாவிலும் பிறப்ப தாலும் சந்திக்கும் உடலாம் பேறு
காவிலும் அறிவ தான களமிது தரத்திற் கேற்ற
கோவிலும் உடலே உலகக் கோர்வையும் உடலே போரில்
மேவிடும் காட்சி உந்தன் மெய்தனில் நடக்கக் காண்க

5 (உடல் ஓர் நிலையற்ற உபகரணமே. உள்ளே அமையும் ஆத்மாவே சத்தியம்.)

க்ஷேத்திரம் என்பது களனே செல்வமும் உன்னுடை கலனே
பாத்திரம் போலிது ஆயினும் பட்டென ஓர்நாள் போயினும்
சாத்திரம் அறிந்திடு தனஞ்சயா சத்தியம் உன்னுளே உறைவது
நூற்திறம் தெரிந்திட உதவிடும் நுாதனச் சேதனம் பறைவது
Kshetrajnam chaapi maam viddhi sarvakshetreshu bhaarata;
Kshetrakshetrajnayor jnaanam yattat jnaanam matam mama. 3

6 (3) உலகில் உள்ள எல்லாக் களனும், களத்தறிவும் நானே.

வகையில் அமையும் களனில் வையம் விரிந்த உடலில்
தகையில் சமையும் உயிராம் தன்மை நானென் றறிக
புகையில் புலரும் சுடரும் புலனில் மறையும் உணர்வும்
விதையில் மலரும் நலமும் விதைத்த புலவன் நானே
Tat kshetram yaccha yaadrik cha yadvikaari yatashcha yat;
Sa cha yo yatprabhaavashcha tatsamaasena me shrinu. 4

7 (4) களம், களத்திறன் யாதெனச் சுருங்கச் சொல்கிறேன்.

வானம் வளியொடு ஊற்று வருபுனல் தீபுவி ஐபூதம்
சேனம் மனமகங் காரம் சேரும் பிரகிருதி யாது
காணும் களமிது என்ன கண்டவன் களத்திறன் என்ன
ஞானம் நேயமும் என்ன ஞாலம் தெளிவுறச் சொல்லுவேன்
Rishibhirbahudhaa geetam cchandobhirvividhaih prithak;
Brahmasootrapadaishchaiva hetumadbhirvinishchitaih. 5

8 (5) களம் என்பது ரிஷிகளால் பலவகைகளில், பலவேறு சந்தங்களால் பாடப் பட்டது. அதுவே முடிவான பரம்பொருளைச் சுட்டுவது.

தெள்ளத் தெளிந்த பலரால் தேவர் ஞானியர் ரிஷியால்
சொல்லத் தெரிந்த மொழியால் சோடனைச் சந்தங்க ளளவால்
உள்ளத் தறிவு துலங்க உறைத்த களத்திறன் வேதம்
வெல்லத் துணைவரு ஞானம் விளக்கத் தருநல்வி வாதம்
Mahaabhootaanyahankaaro buddhiravyaktameva cha;
Indriyaani dashaikam cha pancha chendriyagocharaah. 6

9 (6) சாங்கியர்கள் களத்தை ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், ஐம்புலனறிவு. ஐம்பொறிகள், மனம், புத்தி, அகங்காரம், மூலப்பொருளான சீவனின்பிரதி ஆகிய இருபத்து நான்கு
தத்துவமாகச் சொல்வர்.

ஓங்கிய பூதம் ஐந்து ஒளிர்புலன் பொருளும் ஐந்து
தாங்கிய கலனும் ஐந்து தந்திடும் அறிவும் ஐந்து
தேங்கிய சிந்தை அறிவும் தெரியுமகங் காரம் மூலம்
சாங்கியர் களத்தின் அளவு சாற்றிடும் இருபத்தி நான்கு

10 ( ஞானேந்திரியம், கர்மேந்திரியம், ஐயறிவு, ஐம்பூதங்கள் யாவை? )

பார்ப்பதும் கேட்பதும் நுகர்வதும் படர்வதும் ருசிப்பதும் அறிகருவியே
பார்த்ததும் கேட்டதும் நுகர்ந்ததும் படர்ந்ததும் ருசித்ததும் அறிபொருளே
கோர்த்தகை கால்களும் வாயுடன் குதம்இனக் குறியும் செய்கருவியே
போர்த்ததும் பொழிவதும் புவனமும் பொறிவதும் வளியதும் ஐபூதமே
Icchaa dweshah sukham duhkham sanghaatashchetanaa dhritih;
Etat kshetram samaasena savikaaramudaahritam. 7

11 (7) வேட்கை, பகைமை, இன்பம், உடல், புத்தி, உணர்வு, உறுதி இவையே உடலும் அதன் மாறுபாடும் எனக் காட்டினேன்.

களமிது உடலே இதிலே கலக்கத்தால் விளையும் மாற்றம்
அளவிட முடியா தான அச்சமா னந்தம் துக்கம்
களவறி தாசை வேட்கை கடும்பகை உறுதி என்று
பலவித மாறு பாடும் பயத்ததைக் காட்டி னேனே

12 (7) இப்போது ஞானத்தைப் பற்றியும், தர்மத்தைப் பற்றியும் சொல்கிறேன்.

இப்பொழு துனக்கு நானே இன்னுரை தருவேன் ஞானம்
எப்பொழு துவக்கும் என்றும் என்னது பிறப்பு என்றும்
தப்பொழு காது செய்யும் தருமத்தின் சிறப்பு என்றும்
நட்பொழு ததாலே நானும் நயந்துரை சொல்லக் கேட்க
Amaanitwam adambhitwam ahimsaa kshaantiraarjavam;
Aachaaryopaasanam shaucham sthairyamaatmavinigrahah. 8

13 (8) ஞானம் என்பது கற்பதால் வரும் புத்தக அறிவு அல்ல. அது நல்வழிப்படுத்தும் பலநற்பண்புகளைக் குறிப்பதாகும்.

ஆணவம் ஒழித்தல் ஞானம் ஆடம்பரம் அழித்தல் ஞானம்
பேணுதல் பெருமை ஞானம் பேரிடர் தவிர்த்தல் ஞானம்
பூணுதல் துாய்மை உறுதி புலனிலை அடக்கல் ஞானம்
காணுதல் குருவின் வாக்கு காத்திடல் ஏற்றல் ஞானம்
Indriyaartheshu vairaagyamanahankaara eva cha;
Janmamrityujaraavyaadhi duhkhadoshaanu darshanam. 9

14 (9) ஆசையின்மை, பிறப்பு இறப்பு இவற்றில் தெளிவு ஞானமாகும்.

புறத்துள பொருளில் நாட்டம் பொருந்தாத் திண்மை ஞானம்
சிறப்பிலும் உயர்வில் கர்வம் சிதையாத் தன்மை ஞானம்
இறப்பிலும் வலியில் வாட்டம் இல்லாத் தெளிவு ஞானம்
பிறப்பிலும் முதுமை நோயில் பிணைதுயர் அறிதல் ஞானம்
Asaktiranabhishwangah putradaaragrihaadishu;
Nityam cha samachittatwam ishtaanishtopapattishu. 10

15 (10) பற்றுதல் இல்லாமல் சமநிலை காண்பது ஞானமாகும்.

ஒட்டுதல் அறிந்தும் உள்ளம் ஒட்டா திருத்தல் ஞானம்
கிட்டிய பெண்டிர் பிள்ளை கிடைத்தரி தாகும் செல்வம்
கட்டிய டும் நட்பும் கற்றிடும் அறிவும் உயர்வும்
விட்டிட விலகிப் போகும் விஷயத்தை அறிதல் ஞானம்
Mayi chaananyayogena bhaktiravyabhichaarinee;
Viviktadesha sevitwam aratir janasamsadi. 11

16 (11) மனதில் ஏகாந்தம் (தனிமை) காணல், இனிமை கூறல், உயர்ந்த நோக்கம் ஆகியன ஞானம் ஆகும்.

தனிமையைக் காணல் ஞானம் தத்துவம் ஸாந்தம் ஞானம்
மனிதரைப் பேணும் போதும் மனதினில் ஏகாந்தம் ஞானம்
இனிமையே கூறல் ஞானம் என்நினை வேநல் ஞானம்
புனிதனைப் புருஷோத் தமனைப் புலனிலே நிறுத்தல் ஞானம்

17 (11) தனக்குள் நம்பிக்கை கொண்டு, ஆதமனைத் தன்னுள்ளே அயராது தேடும் (அனன்ய யோகம்) அறிவே ஞானம் ஆகும்.

பாலிலே மறையும் நெய்யாய்ப் பனியிடை உறையுங் குளிராய்ச்
சூலிலே விளையும் வித்தாய்ச் சுடரிலே மிளிரு மழகாய்த்
தோலிலே வைத்த மேனித் துருத்தியில் அடைத்து காலம்
நாலிலே சாட்சி யாகும் நாயகன் அறிதல் ஞானம்
Adhyaatma jnaana nityatwam tattwa jnaanaartha darshanam;
Etajjnaanamiti proktam ajnaanam yadato’nyathaa. 12

18 (12) இவ்வாறு ஆன்மாவைப் பற்றிய நிலைவில் நிலைத்து அறியும் ஞானமே உண்மையான ஞானம் ஆகும். (மற்றதெல்லாம் கற்றும் பயனிலாக் கல்வியே ஆகும்.)

மேற்படித் தன்மை யாலே மெய்த்தவத் தகைமை யாலே
ஏற்படும் ஆண்மை யாலே எழுவதே மெஞ்ஞானம் ஆகும்
நுாற்படித் தறியும் கல்வி நுாதன விஞ்ஞானம் எல்லாம்
காற்படி யளவாய்ப் போகும் கல்லாமை என்றே ஆகும்
Jneyam yattat pravakshyaami yajjnaatwaa’mritamashnute;
Anaadimatparam brahma na sattannaasaduchyate. 13

19 (13) எதை அறிவதால், பிறவா நிலையை அடைவோமோ, அதைப் பற்றி இப்போது உனக்குக் கூறுகிறேன்.

எதை அறிவ தாலே எல்லாம் அறிந்த தாமோ
அதை அறிவ தான அனுபவம் தருவேன் ஆன்மா
சிதை யாவ தில்லை சீந்திட யாரும் இல்லை
விதை யான தெந்தன் விருத்தியை அடுத் துரைப்பேன்
Sarvatah paanipaadam tat sarvato’kshishiromukham;
Sarvatah shrutimalloke sarvamaavritya tishthati. 14

20 (14) எங்கும் பரந்துள்ள கைகால்களுடனும், கண்கள், தலைகள், வாய்கள், செவிகளுடனும், பரம்பொருள் நிரவியுள்ளது. (அதாவது, யாதும் பிரம்மமே).

சிறந்தநற் செவிக ளாயும் சீரிய கண்க ளாயும்
பரந்தகை கால்க ளாயும் பாவித்த வாயி னாலும்
நிரந்தர மாகப் புவனம் நிரவிய பெரிய சக்தி
உரந்தரத் தோது வாகும் உன்னுளக் காத லாகும்
Sarvendriyagunaabhaasam sarvendriyavivarjitam;
Asaktam sarvabhricchaiva nirgunam gunabhoktru cha. 15

21 (15) அதுவே, புலன்களின் வழியே விதித்த கடமையைச் செய்தும், அதே சமயத்தில் புலன்களால் கட்டுப்படாமல், குணங்களை அனுபவித்தும், அதே சமயத்தில் குணங்களற்றும் விளங்கும்.

நிரந்தரம் எல்லாப் பொருளும் நிலைத்திடத் தாங்கும் உதரம்
அறிந்திடும் புலனில் வளரும் அறிந்திடாப் புறமாய் வதியும்
பரந்திடும் சுகானு பவத்தைப் பற்றிடும் பற்றா தமையும்
விரிந்திடும் குணங்கள் விளங்கா வேற்றுமை இலா தமையும்
Bahirantashcha bhootaanaam acharam charameva cha;
Sookshmatwaat tadavijneyam doorastham chaantike cha tat. 16

22 (16) அந்தப் பரம் பொருள், ஆழந்த மனத்தினுாடே அமைந்து, அறிபவருக்கு மிக அருகிலும், அறியாதவற்றுக்கு மிகத் தொலைவிலும் உள்ளது.

ஆடும் கடலின் அடியில் அமைதியே காணல் போல
மூடும் ஆகாயப் பந்தல் முடிவிலாப் பரவல் போல
ஓடும் ஓடா தமையும் ஓங்காரம் துாரத் தெரியும்
நாடும் நம்பிக் கையினால் நம்முடை அருகில் தெளியும்
Avibhaktam cha bhooteshu vibhaktamiva cha sthitam;
Bhootabhartru cha tajjneyam grasishnu prabhavishnu cha. 17

23 (17) அந்தப் பரம்பொருளே, பிரிக்கப்படக் கூடாத சக்தி எனினும், பிரிவுபட்டது போல, பல்லுயிராய்ப் பலபொருளாய் உலகத்தோருக்குத் தோன்றுகின்றான்.

வகுத்திட முடியா ததுவே வகுத்தது உலகை எல்லாம்
தொகுத்திட முடியா பிரம்மம் தொகுத்தது உயிரைத் தாங்கும்
பகுத்திட முடியா துள்ளும் பரந்திடும் வெளியும் இல்லா
வெகுத்திட மான சக்தி வெளிப்படும் ஒளியே சீவன்
Jyotishaamapi tajjyotistamasah paramuchyate;
Jnaanam jneyam jnaanagamyam hridi sarvasya vishthitam. 18

24 (18) ஒளிக்கு ஒளி, அறிவின் அறிவு, அறிபொருள், நேயம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இந்தப் பரம் பொருளே.

ஒளிக்கு ஒளியைத் தந்து ஓதியே அறியும் அறிவு
மொழிக்கு மொழியைத் தந்து மொழிவ தெல்லாம் தேறும்
வழிக்கு வழியைத் தந்து வாக்கிலே மனதில் நேயம்
செழிக்கு மழகைத் தந்து சேதனத் துறையும் சக்தி
Iti kshetram tathaa jnaanam jneyam choktam samaasatah;
Madbhakta etadvijnaaya madbhaavaayopapadyate. 19

25 (19) இவ்வாறு, க்ஷேத்திரம் (களம்), ஞானம் (அறிவு), ஞேயம் (அறியப்படுவது) பற்றிச் சொன்னேன். இந்த உண்மையைத் தன்னுளே காணும் சக்தியைப் பெறுவதே களத்தறிவு என்பதையும் அறிந்து கொள்.

புரிந்ததா க்ஷேத்திரம் என்று பூவுல கமையும் களனை
அறிந்ததா லறியும் ஞானம் ஆக்கிடப் பரவும் நலனைப்
பரிந்ததா கத்தைப் போக்கிப் பக்குவ மாக்கும் சக்தி
தெரிந்ததா தேகத் துள்ளே தெரிந்திடக் கொலு விருக்கும்
Prakritim purusham chaiva viddhyaanaadee ubhaavapi;
Vikaaraamshcha gunaamshchaiva viddhi prakritisambhavaan. 20

26 (20) புருஷன், பிரகிருதி இரண்டும் அநாதி. காரியங்களும், அதற்கான காரணங்களும், பிரகிருதியால் பிறக்கின்றன. புருஷன் சாட்சியில் எதற்கும் அதிகாரி. (இச்சாங்கிய நியதியை ஆழ்ந்தறிந்தால் ஒன்றில் ஒன்றான அத்வைத ஸாரம் விளங்கும்.)

பூரண மான சக்தி புருஷன் என்றே துாய
காரண மான தாகும் காட்சியைக் காட்ட மாயத்
தோரண மான தாகும் தொகுத்துல கங்கள் வேயப்
பேரண மாகும் தோற்றம் பிரகிருதி என்ப தாகும்
Kaaryakaaranakartrutwe hetuh prakritiruchyate;
Purushah sukhaduhkhaanaam bhoktritwe heturuchyate. 21

27 (21) காரிய காரணங்களின் உற்பத்திக்குப் பிரகிருதியே காரணம் என்றும், சுக துக்க அநுபவத்திற்குப் புருஷனே காரணம் என்றும் சொல்வார்கள். (அதாவது சக்தியே செயல் படுவது. புத்தியே அதன் பலாபலன்களைப் பயன்படுத்துவது).

கூறிய புருஷன் ஒன்றே குறித்திடப் பிரகிருதி யாக
மாறிய புருஷன் ஒன்றே மதியுணர் உண்மை யான
காரிய சக்தி ஒன்றே கடைமுதல் ஆவ தென்றே
வீரிய சக்தி என்றே விளக்கிடும் பரம ஆத்மன்
Purushah prakritistho hi bhungkte prakritijaan gunaan;
Kaaranam gunasango’sya sadasadyoni janmasu. 22

28 (22) புருஷன், பிரகிருதியின் செயல்களைத் தான் செய்வதாக மயங்கி (உற்பத்திக்காக) எண்ணும் போது, ஆன்மா குணக்கேடு அடைகிறது. அதனால் உலகில் சீவராசிகளாய்ப் பிறந்து பலனை அநுபவிக்கிறது.

பிரகிருதி மாற்றம் எல்லாம் பிழையிலே தமதாய் ஏற்றுச்
சிறைப்படு சீவ ஆத்மா சிக்கிடும் முக்குண மாற்றம்
நிறைப்பிர காஸத் தன்மை நிலைப்பதை தடுத்த மாயம்
மறைத்திட மாளும் மீண்டும் மண்ணிலே பிறக்கக் கூடும்
Upadrashtaanumantaa cha bhartaa bhoktaa maheshwarah;
Paramaatmeti chaapyukto dehe’smin purushah parah. 23

29 (23) ஆகையால், உலகில் உள்ள சீவராசிகளுக்குள்ளே, வதிந்து இருப்பவன் புருஷன் என்று உணர்க. (அதாவது, உடலே களம். உள்ளே மறையும் உயிரே களத்தலைவன்.)

மாறினால் என்ன மாயம் மறைப்பதால் என்ன சீவன்
ஊறினால் என்ன பிறவி ஊற்றிலே விழுந்தா லென்ன
தேறினால் உள்ளத் துள்ளே தேஜோமய மான சக்தி
வேரினால் விளையும் ஞானம் வினைக்கடல் கடக்கும் ஓடம்
Ya evam vetti purusham prakritim cha gunaih saha;
Sarvathaa vartamaano’pi na sa bhooyo’bhijaayate. 24

30 (24) எவன் ஒருவன் புருஷனையும், பிரகிருதியையும் இவ்வாறு அறிந்து கொண்டு, ஆன்ம அறிவைத் தேடுகிறானோ, அவன் முக்தி அடைகிறான்.

கண்டதைப் பிரதி பலிக்கும் கண்ணாடி மாறா ததுபோல
விண்டதை விவேகத் தாலே வினயமாய் அறிந்து கொண்டு
அண்டையில் விளங்கும் ஆன்ம அறிவினைச் சாட்சி யாகப்
கொண்டதைக் கொண்டு யோகி கொள்வது இல்லை பிறவி
Dhyaanenaatmani pashyanti kechidaatmaanamaatmanaa;
Anye saankhyena yogena karmayogena chaapare. 25

31 (25) பலரும் தியானம், கர்மம் மற்றும் ஞான யோகத்தின் வழியாக அத்தகைய ஆன்மவித்தையைப் பயிலுவர்.

தியான யோகத் தாலே தியானித் தறிவர் உண்டு
ஞான யோகத் தாலே நயப்பவர் அறிஞர் உண்டு
ஆன தானால் என்ன அமைந்த கடமை என்ப
தான கரும யோகத் தரத்திலே திளைப்பர் உண்டு

32 (தியான யோகம் என்பது புலன்களைக் கட்டுப் படுத்தி, மனத்தை புத்தியில் நிறுத்தி, உயர்ந்த தனிப்பொருளைக் காண்பது. ஞானயோகம் என்பது தர்க்க ரீதியாக, மனம், புத்தி இவற்றின் தன்மையையும், உண்மையின் தன்மையையும் உணர்வது. கர்மயோகம் என்பது பற்றுதல் இல்லாமல், பலனை விரும்பாமல், விதித்த கடமைகளை வழுவாமல் செய்து உண்மை உணர்வது.)

நிற்க சாது வாக நிலைமனம் தியான யோகம்
தற்க டனைச் செய்யும் தருமமே கரும யோகம்
தர்க்க ரீதி யாகத் தன்னறி வாண்மை தேடிக்
கற்க ஏது வாகிக் காண்பது ஞான யோகம்
Anye twevamajaanantah shrutwaanyebhya upaasate;
Te’pi chaatitarantyeva mrityum shrutiparaayanaah. 26

33 (26) மேற்சொன்ன வழிகளைத் தெரியாதவர்களும், நல்லோரிடம் அறிவுரை கேட்டுத் தெரிந்து கொண்டு, பக்தி யோகம் என்கிற அன்பு நெறியால் என்னைப் பிரார்த்தித்து அடைவதும் உண்டு.

கருமவழி ஞானம் தியானம் காட்டுவழி அறியா தவர்கள்
தருமநெறி மேலோர் சொன்ன தத்துவம் பக்தி யோக%A
Incomplete?

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபா₄க₃யோகோ₃ நாம த்ரயோத₃ஶோ(அ)த்₄யாய​: (13

இவ்வாறு களம், களத்தறிவு நெறி எனும் பதிமூன்றாம் பாகம் நிறைவுபெறுகிறது

 12 – பக்தியோகம்

 14 – குணத்ரயவிபா₄க₃யோக₃​:

Related Posts

Share this Post