ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அத₂ ஸப்தத₃ஶோ(அ)த்₄யாய​:

ஶ்ரத்₃தா₄த்ரயவிபா₄க₃யோக₃​:

பாகம் 17 –(முக்குணவழி நெறி)

அர்ஜுன உவாச .

யே ஶாஸ்த்ரவிதி₄முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஶ்ரத்₃த₄யான்விதா​: .
தேஷாம் நிஷ்டா₂ து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம​: (17-1)

விசயன் வினா

1 (சாத்திர விதிகளின்படியும், கால வழக்கப்படியும் பெரியோர்கள் நடத்திக் காட்டும் பாதையினையும், மற்றும், தேவ அசுர குணங்களால் மனிதர்கள் நடத்தை மாறுபாட்டையும் அறிந்து கொண்டேன்.)

சாத்திர விதிஎன் னென்ன சம்பிர தாயம் எனவென
சூத்திர மறிந்த பின்னும் சுயநல தாகத் ததனால்
நேத்திர மிலங்குவ தெல்லாம் நேயத்தே வைக்கும் அசுரர்
பாத்திர மறிந்தேன் அதர்மப் பாவத்தை அறிந்து கொண்டேன்

2 (17-1) சிரத்தையுடன் வேள்வி செய்தும், அறியாமையால் சாத்திர விதிகளைமீறுவோருக்கு என்ன கதி கிடைக்கும்?

விதித்த விதியின் வேதம் விதைத்த நெறியின் சாரம்
மதித்த மனிதர் அரிய மந்திரப் பொருளை உணரா
துதித்த போதும் நெஞ்சில் துாய்மை யோடும் வேள்வி
வதித்த யோகம் நலமா வருபயன் என்ன ஆகும்

3 (17-1) பொருள் தெரியாவிடினும், இதுவே சரியென்ற நம்பிக்கையால், அறியாமல் தவற்றுடன் வேள்வி செய்வதால், பலன் உண்டா?

அர்த்தம் அறியா விடினும் அருமறை புரியா விடினும்
விருத்தம் சாத்தி ரங்கள் விளக்கம் தெரியா விடினும்
சிரத்தை குறை யாமலே செய்கருமம் முடிப் பதனாலே
வரத்தைப் பெறுவ துண்டோ வருங்குண நலமும் உண்டோ

4 ( பெரும்பாலான மனிதர்கள், இறைவழிபாட்டின் பொருள் தெரியாவிடினும், அக்கறையுடன் செய்கிறார்கள். விசயனின் வினா, அத்தகைய மனிதரின் கதியைக் குறித்ததாகும்.)

பாண்டவன் கேட்ட கேள்வி பாரிலே ஏற்ற கேள்வி
மீண்டவன் அறியா மையினால் மீறிய சாத்தி ரத்தால்
ஈண்டது யாது என்று ஈங்கிதைக் கருணை யாலே
ஆண்டவன் விளக்க லாகும் அனுபவம் அறித லாகும்

ஶ்ரீப₄க₃வானுவாச .

த்ரிவிதா₄ ப₄வதி ஶ்ரத்₃தா₄ தே₃ஹினாம் ஸா ஸ்வபா₄வஜா .
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஶ்ருணு (17-2)

ஸத்த்வானுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்₃தா₄ ப₄வதி பா₄ரத .
ஶ்ரத்₃தா₄மயோ(அ)யம் புருஷோ யோ யச்ச்₂ரத்₃த₄​: ஸ ஏவ ஸ​: (17-3)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

5 (17-2-3) மனிதரின் உளப்பாடு முக்குணத்தால் மாறுவது உண்டு. அதன் விகிதத்திலேயே, அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்படுகிறது. நம்பிக்கை மட்டுமே உலகில் எதனையும் நடத்துகின்றது அல்லவா?

மெய்யுடை அணியும் ஆவி மேவிய குணங்கள் மூன்று
ஐயறி யறிவும் ஆகி அமைவுற மனதில் நம்பிக்
கையெனும் கயிற்றைப் பற்றிக் காலசா கரத்தைத் தாண்டச்
செய்திடும் கருவி யென்று சேதனம் அறியக் காண்க

6 (17-3) உலகத்தில் உள்ள அத்துணை உயிர்களும், செயல்களும் நம்பிக்கையாலே தான் நிலைக்கின்றன. நன்மை, தீமை, செயல், செயலற்ற தன்மை எல்லாம் நம்பிக்கை என்ற ஆதாரத்தாலேதான் நடக்கின்றன.

நம்பிக் கையே ஆதாயம் நடத்தும் அகிலம் ஆதாரம்
நம்பிக் கையே வேதாந்தம் நயக்கும் நியதிச் சமுதாயம்
நம்பிக் கையினால் உருவாகும் நலமே உயிரின் வரலாறும்
நம்பிக் கையினால் கருவாகும் நாளை மறுநாள் வரலாகும்

7 (17-3-1) எண்ணம் நம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கையே செயலையும், செயலில் வரும் பலனையும் நிர்ணயிக்கிறது. நம்பிக்கையின் தரமோ குணங்களால் அமைகிறது.

தீர்த்த எண்ணத் தாலே தேர்ந்த நம்பிக் கையால்
வார்த்த தாகும் பிறவி வாய்த்த தாகும் வாழ்க்கை
போர்த்த உடலும் கலனும் பொலியும் நலனும் மனமும்
நேர்த்த குணத்தால் ஆகும் நிலையினச் சொல்வ தறிக
யஜந்தே ஸாத்த்விகா தே₃வான்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா​: .
ப்ரேதான்பூ₄தக₃ணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனா​: (17-4)

8 (17-4) நம்பிக்கையின் பொருட்டு வழிபாடு நடக்கிறது. குணங்களின் அடிப்படையில், வழிபாட்டு நம்பிக்கைகளைச் சொல்கிறேன். ஸாத்கன் இறையருளையும், ராஜஸன் தேவர்களையும், தாமஸன் பூதங்களையும் வழிபடுவான்.

வேதப்பலனை இறை யருளை வேண்டித் துதிப்பவன் ஸாத்வீகன்
தேவரசுரர் யட்சர் களைத் தேடித் துதிப்பவன் ராஜஸனே
பூதப்பிரேத மான தனைப் பூசித தடைபவன் தாமஸனே
ஓதற்கரிய உயர் வேதம் உரைத்திடும் ரஹஸிய மானதுவே

9 (17-4.1) (ஸாத்வீகருக்கான) இறையருள் தேடுவது இயற்கையில் இறைவன் இருப்பதை உணர்வது. தேவர் வணக்கம் உலகில் வளம் சேர்க்கும் முயற்சி. பூத வணக்கம் கேடு நினைத்தும், பிணமாய் சோம்பித் திரியும் பழக்கம்.

இயைறருள் தேடுதல் இன்பது இயற்கையில் தந்நிலை உணருதல்
நிறைபொருள் யட்சினி பயப்பது நிலத்தினில் பலத்தினை வளர்ப்பது
நடைபிணம் பூதங்கள் நயப்பது நடத்தையில் சோம்பித் திரிவது
உடையவர் மனிதரின் உளத்திலே உதிப்பது குணங்களா யறிவது
அஶாஸ்த்ரவிஹிதம் கோ₄ரம் தப்யந்தே யே தபோ ஜனா​: .
த₃ம்பா₄ஹங்காரஸம்யுக்தா​: காமராக₃ப₃லான்விதா​: (17-5)

10 (17-5) ஸாத்வீகர் அல்லாதோர், சாத்திரத்தில் சொல்லப் படாத கடுமையான தவம், விரதங்களால், உடலையும் மனதையும் வருத்திக் கொண்டு, ஆணவத்துடன், பற்றுதலுடன் வேள்வியைச் செய்கின்றனர்.

ஸாத்வீகர் அல்லா தவரே சாத்திரம் சொல்லாத் தவத்தை
நேர்த்துவர் பொல்லாக் கருமம் நெறியுரை கொள்ளாத் தன்மை
சாற்றுவர் ஆசா பாசச் சக்கரம் ஏறிக் கொண்டு
நுாற்றவர் நோகச் செய்யும் நோம்பினை அனுச ரிப்பர்
கர்ஷயந்த​: ஶரீரஸ்த₂ம் பூ₄தக்₃ராமமசேதஸ​: .
மாம் சைவாந்த​:ஶரீரஸ்த₂ம் தான்வித்₃த்₄யாஸுரனிஶ்சயான் (17-6)

11 (17-6) அவர்கள் பலவகையான நோம்புகளை ஏற்றுத் தன்னையும், தன்னுள்ளே விளங்கும் என்னையும் வருத்தப்படச் செய்வர். (உடலை வருத்திச் செய்யும் முறையற்ற தவத்தால், உள்ளம் அமைதி இழந்து, ஆன்ம பலமும் குறைகிறது. இது நன்மையானதல்ல. )

தீயினில் நடப்பதும் சித்து தினசரி நிலைப்பதும் முட்கள்
பாயினில் படுப்பதும் உணவு பட்டினி கிடப்பதும் சிறுமை
நோயினில் இளைப்பதும் உடலை நோகிக் களிப்பதும் உறையும்
நேயனைக் களைப்புறக் கடனை நேர்ப்பது மசுரத் தன்மை
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ₄ ப₄வதி ப்ரிய​: .
யஜ்ஞஸ்தபஸ்ததா₂ தா₃னம் தேஷாம் பே₄த₃மிமம் ஶ்ருணு (17-7)

12 (17-7) குணத்திற்கேற்ற வகையில் உணவுப் பழக்கம், வேள்வி, தவம், தானம் ஆகியனவும் மூன்று வகைப்படும். இந்நான்கும் குணத்திற்கேற்று அமைவதனை உனக்கு அடுத்துச் சொல்கிறேன்.

உண்ணும் உணவுத் தன்மை உழைக்கும் வேள்வித் தன்மை
பண்ணும் தருமத் தன்மை பயிலும் தவத்தின் தன்மை
எண்ணும் மும்மூன் றாகும் எடுப்பை எடுத்துச் சொல்வேன்
கண்ணும் கருத்தி லாகும் கல்வி அடுத்துச் சொல்வேன்
ஆயு​:ஸத்த்வப₃லாரோக்₃யஸுக₂ப்ரீதிவிவர்த₄னா​: .
ரஸ்யா​: ஸ்னிக்₃தா₄​: ஸ்தி₂ரா ஹ்ருத்₃யா ஆஹாரா​: ஸாத்த்விகப்ரியா​: (17-8)

13 (17-8) ஸாத்வீகரின் உணவு மிதமானதும், சுவையானதும், துாய்மையானதும், மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமானதும் ஆகும்.

ஆயுளை விருத்தி செய்யும் ஆனந்த நிலையைச் செய்யும்
நோயினை களையச் செய்யும் நோம்பிற் குதவச் செய்யும்
வாயினில் சுவையைச் செய்யும் வலிவினை வளரச் செய்யும்
தூயநல் லுணவே வேண்டித் துய்ப்பது ஸாத்வீஹ மாகும்
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா₃ஹின​: .
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து₃​:க₂ஶோகாமயப்ரதா₃​: (17-9)

14 (17-9) ராஜஸிகரின் உணவு உப்பு, காரம் மிகுந்தும், உலர்ந்தும், உஷ்ணமாயும், உடலுக்கும், மனதுக்கும் கிளர்ச்சியையும், தளர்ச்சியையும் உண்டாக்குவதாக இருக்கும்.

உப்பும் கசப்பும் புளி உரைப்பும் நோய் அலர்ந்தும்
மப்பும் மயக்கம் வலி மருளும் வாய் உலர்ந்தும்
தப்பும் தவறும் வழி தகையத் துயர் உதரம்
அப்பும் உணவு நெறி அமையும் ராஜ ஸமே
யாதயாமம் க₃தரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் .
உச்சி₂ஷ்டமபி சாமேத்₄யம் போ₄ஜனம் தாமஸப்ரியம் (17-10)

15 (17-10) தாமஸ குணமுடையோரின் உணவு பழையதாயும், எச்சில் பட்டும், அழுகியும், அசுத்தமாயும், கெட்டுப் போயும் இருக்கும்.

அக்கறை இல்லா உணவு அழுகினும் எச்சில் ஆகிச்
சிக்கெனக் கெட்டுப் போயும் சிதறினும் பழைய தாயும்
சக்கையாய் ஆகிச் சாரம் சற்றுமே இல்லா தாயும்
தக்கையை உணவாய்ச் சேரும் தன்மையே தாமஸ மாகும்
அப₂லாங்க்ஷிபி₄ர்யஜ்ஞோ விதி₄த்₃ருஷ்டோ ய இஜ்யதே .
யஷ்டவ்யமேவேதி மன​: ஸமாதா₄ய ஸ ஸாத்த்விக​: (17-11)

16 (17-11) ( இப்போது வேள்வியாகிய வழிபடுந்தன்மையைின் வகைகளைச் சொல்கிறேன். ) விதிமுறை தவறாது, கடமை என்ற உறுதியுடன், மிகுந்த நம்பிக்கையுடன், பலனை எதிர்பாராத செய்யும் வேள்வி ஸாத்வீகமானது.

விதிமுறை தவறாத் தன்மை விளைவதை விரும்பாத் திண்மை
மதியுரை வழுவா துண்மை மனதினில் நழுவாத் தண்மை
கதியெனக் கடவுள் அறிவு கருத்தினில் இருத்தும் பரிவு
பதிவுறச் செய்யும் செறிவு படைப்பது ஸாத்வீஹ மாமே
அபி₄ஸந்தா₄ய து ப₂லம் த₃ம்பா₄ர்த₂மபி சைவ யத் .
இஜ்யதே ப₄ரதஶ்ரேஷ்ட₂ தம் யஜ்ஞம் வித்₃தி₄ ராஜஸம் (17-12)

17 (17-12) சாத்திரமுறைப்படி செய்தாலும், படாடோபமாகவும், புகழுக்காகவும், பலனை வேண்டியும் செய்யப்படும் வேள்வி ராஜஸிக வேள்வி எனப்படும்.

சட்டப்படி செய்தா லென்ன சாத்திர மறிந்தும் என்ன
இட்டப்படி பலனை வேண்டி ஈவதோர் புகழை வேண்டித்
திட்டப்படி கர்வத் தாலே திகழ்த்திடும் கர்மம் வேண்டி
நட்டப்படி ஆகும் அதையே நடத்ததுதல் ராஜ ஸீகம்
விதி₄ஹீனமஸ்ருஷ்டான்னம் மந்த்ரஹீனமத₃க்ஷிணம் .
ஶ்ரத்₃தா₄விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே (17-13)

18 (17-13) விதிமுறையற்று, படைக்கும் உணவையும் கிடைக்கும் பலனையும் பங்கிடாமல், தக்க மந்திரங்கள் அற்றும், நம்பிக்கையில்லாமலும் செய்யும் வேள்வி தாமஸமாகும். அது தீமையைத்தான் விளைக்கும்.

கட்டுப் பாடற்றுத் தரும காரிய மற்றுப் பலனை
விட்டுத் தாராமல் கரும விவரம் புரியாமல் உறுதி
சட்டுப் படாமல் சிரத்தை சற்றும் இலாமல் மறதி
மட்டுப் படாத செயலே மத்தியத் தாமஸ மாகும்
தே₃வத்₃விஜகு₃ருப்ராஜ்ஞபூஜனம் ஶௌசமார்ஜவம் .
ப்₃ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஶாரீரம் தப உச்யதே (17-14)

19 (17-14) தவம் என்பது தன்னைத் தானே உருக்கி உயர்வடைதல் ஆகும். வேதங்கள் தவத்தினை தேகம், வாக்கு, மனம் ஆகிய மூன்று உபகரணங்களாலும் செய்யப்படும் வேள்வியாக விளக்குகிறது.

தவமே எனச் சொன்னால் தன்னைத் தானே உருக்கி
சிவமாய் குறை இலதாய்ச் சீரமைத்தல் எனச் சொல்வர்
தவமோ மூன்று வகைத் தன்மையது உண்மை யிதை
பவமே லுரைத்த மொழிப் பண்பினை அறிந் திடுக

20 (17-14) தேகத்தில் தவம் என்பது இறைவன், ஆசான், பெற்றோர், அந்தணர் முதலியோரை வணங்கல், துாய்மை, கொல்லாமை ஆகிய பண்புடனிருப்பது. (உயர்ந்தோர்க்குப் பணிதல்)

தேகத்தில் தவம்எது என்றால் தெய்வத்தைத் துதித்தல் அறவோர்
யோகத்தில் பெரியோர் குருக்கள் உண்மைக்குப் பணிந்து போதல்
மோகத்தில் மிதவாத் தன்மை மோதாமை கொல்லா நோன்பு
ஆகத்தன் வடிவால் நேர்மை ஆக்கிடும் தூய்மை அதுவாம்
அனுத்₃வேக₃கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் .
ஸ்வாத்₄யாயாப்₄யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே (17-15)

21 (17-15) வாக்கிலே தவம் செய்வது என்பது சினம் விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், வேதபாடம் செய்வதும் ஆகிய மொழிகளையே உரைப்பது ஆகும். (யாதொன்றும் தீமையிலாச் சொற்களைச் சொல்லல்)

வாக்கிலே தவம்எது என்றால் வாய்மொழி வாய்மை ஆகும்
நாக்கிலே வருசொல் நயமும் நன்மையே விளைக்குந் திறனும்
போக்கிலே கோபம் விட்டுப் பொறைநெறி வேதா சாரம்
தேக்கிடத் தெளியும் நாதம் தெரிவிக்கும் பேச்சில் ஆகும்
மன​: ப்ரஸாத₃​: ஸௌம்யத்வம் மௌனமாத்மவினிக்₃ரஹ​: .
பா₄வஸம்ஶுத்₃தி₄ரித்யேதத்தபோ மானஸமுச்யதே (17-16)

22 (17-16) மனத்திலே தவம் செய்வது என்பது அமைதி, துாய்மை, மெளனம் ஆகிய பண்புகளால் மனதில் துாய்மையும், அமைதியும் கொண்டிருத்தல். (மனத்துக்கண் மாசிலன் ஆதல்)

மனத்திலே தவம்எது என்றால் மனத்துக்கண் மாசிலன் ஆதல்
குணத்திலே பணிதல் துாய்மை கொள்ளுதல் எண்ணம் நெஞ்சம்
கணத்திலே மாறாத் தன்மை கண்ணியம் கட்டுப் பாடு
எனத்துணை யாகும் மெளனம் என்பதை அறிதல் நன்று
ஶ்ரத்₃த₄யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித₄ம் நரை​: .
அப₂லாகாங்க்ஷிபி₄ர்யுக்தை​: ஸாத்த்விகம் பரிசக்ஷதே (17-17)

23 (17-17) ஸாத்வீகத் தவம் என்பது (மேலே கூறியபடி) தேகம், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் நற்றவம் ஆகும்.

வடிவாலும் வாக்கி னாலும் வைத்தமன நோக்கி னாலும்
முடிவான தவத்தை ஏற்று முயற்சியால் நம்பிக் கையால்
கடிதான யோகம் ஆற்றும் கைப்பலனைத் தாரை வார்க்கும்
படிவான பாதை அறிவாய் பண்புடை ஸாத்வீகத் தவமாய்
ஸத்காரமானபூஜார்த₂ம் தபோ த₃ம்பே₄ன சைவ யத் .
க்ரியதே ததி₃ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்₄ருவம் (17-18)

24 (17-18) ராஜஸத் தவம் என்பது மதிப்பு, கெளரவம், ஆடம்பரத்திற்காகச் செய்யப்படுவது. அது நிலையற்றது. அற்பமானது.

தனக்கு மதிப்பு வேண்டும் தன்னைப் புகழ வேண்டும்
கணக்குப் பார்த்து எல்லாக் கருமம் நடத்த வேண்டும்
எனக்கு எனக்கு என்றே எண்ணும் அற்ப யோகம்
பிணக்கு ராஜ ஸத்தால் பிறக்குந் தவமாய் ஆகும்
மூட₄க்₃ராஹேணாத்மனோ யத்பீட₃யா க்ரியதே தப​: .
பரஸ்யோத்ஸாத₃னார்த₂ம் வா தத்தாமஸமுதா₃ஹ்ருதம் (17-19)

25 (17-19) தாமஸத் தவம் அறியாமையால், தன்னைத் தானே வருத்தியும், பிறரைத் துன்புறுத்தியும் செய்வதாகும்.

அறிவில்லை அதனால் தத்தம் அங்கத்தை வருத்திக் கொண்டும்
பரிவில்லை அதனால் எவர்க்கும் பங்கத்தை விருத்தி செய்தும்
செறிவில்லை செயலில் உள்ளம் சேருதல் ஆகா தான்மா
குறியில்லை குணத்தால் தொல்லை கொள்வது தாமஸத் தவமே
தா₃தவ்யமிதி யத்₃தா₃னம் தீ₃யதே(அ)நுபகாரிணே .
தே₃ஶே காலே ச பாத்ரே ச தத்₃தா₃னம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் (17-20)

26 (17-20) (தானமும் மேற்கூறிய குணங்களினால், மூன்று வகையாகச் சொல்லப்படும்.) ஸாத்வீகத் தானம் என்பது கைம்மாறு கருதாமல் தக்கோருக்குத் தக்கதைத் தக்க நேரத்தில், தகுந்த அளவு கொடுப்பது ஆகும்.

தகுதி யான வர்க்குத் தகுதி யான பொருளைத்
தகுதி யான சமயம் தகுதி யான இடத்தேப்
பகுதி ஏதும் இன்றிப் பயனும் தேடல் இன்றி
மிகுதி யாகத் தானம் மிக்க ஸாத் வீஹம்

27 (17-20) அறம் செய்ய விருப்பமும், செய்யும் போது சினவடக்கமும், செய்வதைச் சொல்லாப் பணிவும், செய்வோருக்குத் துணையாகும் பண்பும் வேண்டும்.

அறம்செய்ய விருப்பம் வேண்டும் ஆறுகின்ற சினமும் வேண்டும்
அறம்செய்த செயலைப் பேச்சில் ஆற்றாத மனமும் வேண்டும்
அறம்செயத் துணிவார் துணையில் அடங்குதல் வேண்டும் பலனை
அறம்செயப் பெறுத லாகும் ஆசையை அறுத்தல் வேண்டும்
யத்து ப்ரத்யுபகாரார்த₂ம் ப₂லமுத்₃தி₃ஶ்ய வா புன​: .
தீ₃யதே ச பரிக்லிஷ்டம் தத்₃தா₃னம் ராஜஸம் ஸ்ம்ருதம் (17-21)

28 (17-21) ராஜஸத் தானம் என்பது மனதில் கிலேசத்துடன், ஏதேனும் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும்.

குறையாத மனமும் பயனும் கூடுமோ எனும் பயமும்
திரையாய் ழும் நினைவும் திருப்தி வாரா நிலையும்
நிறையாத தாகும் நெஞ்சும் நிறைஎதிர் பார்ப்ப தஞ்சும்
மறையாத தானம் அறிவாய் மத்திமம் ராஜஸ மாகும்
அதே₃ஶகாலே யத்₃தா₃னமபாத்ரேப்₄யஶ்ச தீ₃யதே .
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதா₃ஹ்ருதம் (17-22)

29 (17-22) தாமஸத் தானம் என்பது தவறான இடத்தில், தவறானபேர்க்குத் தவறானவற்றை, மரியாதை இன்றி, இகழ்ச்சியுடன் செய்வதாகும்.

தகாத பொருளைக் கொள்ளத் தகாத பேர்க்கு நன்மை
உகாத காலா தேசம் உலவிய நோக்கும் உள்ளம்
புகாத பண்பும் கர்வப் பூரிப்பும் அவமானம் செய்தும்
தகாத தாகும் தர்மம் தாமஸத் தானம் ஆகும்
ஓந்தத்ஸதி₃தி நிர்தே₃ஶோ ப்₃ரஹ்மணஸ்த்ரிவித₄​: ஸ்ம்ருத​: .
ப்₃ராஹ்மணாஸ்தேன வேதா₃ஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா​: புரா (17-23)

30 (17-23) உணவு, தானம், தவம், வேள்வி ஆகிய பழக்கங்கள் குணத்தால் நிர்ணயிக்கப்படுவன எனும் உண்மையைப். புத்தியால் யோசித்து, முறைப்படி தன் கடமையைச் செய்தாலும், இயற்கை நியதியால், ஏதேனும் பங்கம் ஏற்படுவது உறுதி. (அதாவது, மனிதரின் செயல்களில் அறிந்தும் அறியாமலும் தவறுகள் வருவதியற்கை.)

தானம் தவம் வேள்வி தருவது நலமே எனினும்
பூணும் மனிதர் உள்ளம் புலன்கள் செயலில் கள்ளம்
காணும் அறியா மையினால் கலங்கத்தை குறையைச் சேரும்
பேணும் பூஜா பலனால் பெருமைக்குப் பங்கம் நேரும்

31 (17-23) இத்தவற்றினை மாற்றி, நற்பயன் தர வேதங்கள் ஓம் தத் ஸத் என்ற பிரம்ம மந்திரத்தைத் தரும். இம்மந்திரமே உலகில் பிராமணங்கள், வேதங்கள், வேள்விகள் ஆகியன ஆக்கிய பரம்பொருளின் அடையாளம்.

மாம்ஸத் தாலான உடலில் மாறியே ஆடும் மனதில்
தாமஸத் தாலான செயலில் தன்னறி யாமை யாலே
நாம்செய் ததான பாவம் நலம்பட மாற்றச் செய்யும்
ஓம்தத் ஸத்என்ப தான ஒப்பற்ற வார்த்தை போதும்

32 (17-23) ஓம் தத் ஸத் பிரம்மத்தை மூன்று வகையில் காட்டும். இதில் ஓம் உலகங்களை ஆக்கிய நாதமூலம்.

திடப்பொருள் திரவம் வாயு திரட்டிய தாகும் எல்லாம்
சடப்பொருள் உயிர்கள் பயிர்கள் சகலணு வான துகள்கள்
சுடப்பெறும் தீயில் ஊற்றில் சுற்றிடும் புவியில் காற்றில்
நடப்பவை எல்லாம் ஓம்எனும் நாதத்தில் விளைவ தாகும்

33 (17-23) ஓம், ஓம் என்ற நாதவடிவமே, யாதும் ஆக்கிய தாய். (அணுவிஞ்ஞான ஆய்வினால், உலகில் உள்ள பொருட்களும், உயிர்களும், செயல்களும் ஒலியாகிய மெல்லிய வடிவாலானது அறிவோம். எல்லாவித ஒலி வடிவமும் ஒன்றாய் இணைய, ஓம் என்ற பிரம்மத்வனி கிடைப்பதும் அறிவியல் விளக்கம். )

பிறப்போம் அகிலம் படைப்போம் பிறிதுயிரை வளர்ப் போம்
சிறப்போம் செயல் பயிற்போம் சேர்த்தருள் திறனும் ஓம்
இறப்போம் இயற்கை இயற்போம் ஈர்த்தகிலம் கலைப் போம்
துறப்போம் பிரணவத் துதிப்போம் துாயப்பிரம் மமும் ஓம்

34 (ஓம் எனும் பிரணவமே அனைத்துக்கும் ஆதாரம். )

எல்லாமே ஓம்எனும் நாதம் எழுப்பிய தாம்எனும் தம்
கல்லாயோ கற்பது வேதம் காட்டிய வேதியர் ஓதும்
நல்லாக மாமது யக்ஞம் நடத்துமன நாதப் பிரம்மம்
சொல்லாத சொல்லிது வைரம் சொல்லுவது ஓம்எனும் பிரணவம்
தஸ்மாதோ₃மித்யுதா₃ஹ்ருத்ய யஜ்ஞதா₃னதப​:க்ரியா​: .
ப்ரவர்தந்தே விதா₄னோக்தா​: ஸததம் ப்₃ரஹ்மவாதி₃னாம் (17-24)

35 (17-24) ஆகவே பிரம்மவாதிகளால் விதிப்படி செய்யப்படும் செயல்கள் எப்போதும் ஓம் என்ற சொல்லுடனே தொடங்கும். அதுவே நல்ல பலன் தரும்.

ஓம்எனத் தொடங்கிச் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்ல
தாம்எனத் தெளியக் காண்க தவறுகள் வரினும் கற்றுக்
காம்பெனக் கிள்ளித் துார்த்தக் களிப்பயன் எடுத்துத் தெய்வம்
நோம்பினை ஏற்றுக் கொள்ளும் நோய்தனை தீர்க்கச் செய்யும்
ததி₃த்யனபி₄ஸந்தா₄ய ப₂லம் யஜ்ஞதப​:க்ரியா​: .
தா₃னக்ரியாஶ்ச விவிதா₄​: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி₄​: (17-25)

36 (17-25) தத் என்ற பதம், ஓம் என்ற பதத்தால் வணங்கப்பட்ட பிரம்மத்தை தனக்கு வெளியே இருப்பதாக சுட்டிக் காட்டும்.

தத்என்ற அடுத்த வார்த்தை தள்ளியே நிறுத்திக் காட்டும்
வித்தினைக் குறித்த தாகும் வெளியிலே இருத்தி மீட்டும்
மத்தினைக் கடையத் தெரியும் மறைபொருள் மனதில் முழ்கும்
முத்தினை அடையத் தெளியும் மூலப் பொருளு மாகும்

37 (17-25) என்றாலும், உண்மையான ஆராய்ச்சியால், உலகில் உள்ளவை எல்லாம் ஒரே பொருளாலானது தெரியும்.

அதுஅது எனவே உலகில் அமைவன பிரித்துப் பார்க்க
இதுஇது எனவே உன்னை இருத்திட வேண்டும் சேர்க்கப்
பொதுவித மான தெல்லாம் பூர்க மான தென்னும்
புதுவித மான உண்மை புலப்படத் தெளியக் கூடும்

38 (17-25) தத் என்ற பதத்தினால், தத்துவம் அறியக் கருதிச் செய்யும் செயல்கள் நல்ல பலனையே தரும்.

முக்தியைத் தேடிச் செல்ல முனைவரும் ஞானச் சீலர்
சக்தியை அறிவர் எனவே சாற்றிடும் தத் பரத்தில்
யுக்தியை அறிவர் அதையே உச்சரிப் பதனால் நன்மை
நித்தியம் பெறவ தான நிச்சயம் அறிவ ராவர்.
ஸத்₃பா₄வே ஸாது₄பா₄வே ச ஸதி₃த்யேதத்ப்ரயுஜ்யதே .
ப்ரஶஸ்தே கர்மணி ததா₂ ஸச்ச₂ப்₃த₃​: பார்த₂ யுஜ்யதே (17-26)
யஜ்ஞே தபஸி தா₃னே ச ஸ்தி₂தி​: ஸதி₃தி சோச்யதே .
கர்ம சைவ தத₃ர்தீ₂யம் ஸதி₃த்யேவாபி₄தீ₄யதே (17-27)

39 (17-26-27) ஸத் என்ற இறுதிச் சொல் நன்மை என்ற பொருளில் வழங்கி, செய்கின்ற கர்மத்தை உண்மையுடையதாக மாற்றுகிறது. (தன்னுள்ளே உறையும் சீவாத்மா, பரந்துள்ள பரமாத்மாவுடன் இணைவது ஸத்தியம் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.)

ஸத்தென்ற இறுதிச் சொல்லே சத்தியம் ஆவ தாகும்
ஸத்தெனும் உறுதி ஆக்கம் சாற்றுதல் ஆகும் நன்மை
வித்திடும் வினையைச் செயலை விளம்பிடும் பரம ஞான
தத்துவம் அதுவே இதுவாய்த் தாரகப் பொருள் குறிக்கும்
அஶ்ரத்₃த₄யா ஹுதம் த₃த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் .
அஸதி₃த்யுச்யதே பார்த₂ ந ச தத்ப்ரேத்ய நோ இஹ (17-28)

40 (17-28) நம்பிக்கை இல்லாமலும், அக்கறை இல்லாமலும் செய்யப்படும் வேள்வி, தானம், தவம் எல்லாம் அஸத் என்கிற பொய்மையாகி விடும். எனவே ஒன்றிய மனத்துடன், யோகத்தை நீ செய்வாயாக.

அக்கறை இல்லா ததனால் ஆக்கிடும் செயல்கள் எல்லாம்
மிக்குற வுறுதல் இல்லை மெய்த்திட முடிவ தில்லை
இக்குண மான யோகம் இன்னாது அஸத்தே என்ற
பக்குவம் அறிவாய் பார்த்தா பணியினில் துணிவு காண்பாய்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
ஶ்ரத்₃தா₄த்ரயவிபா₄க₃யோகோ₃ நாம ஸப்தத₃ஶோ(அ)த்₄யாய​: (17)

இவ்வாறு உபநிஷத்தும் பிரம்ம வித்தையும் யோகநூலும் ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன ஸம்பாஷணையுமான ஸ்ரீமத் பகவத்கீதையில்
முக்குணவழி நெறி எனும் பதினேழாம் நிறைவுபெறுகிறது

 16 – தை₃வாஸுரஸம்பத்₃விபா₄க₃யோகம்

 18 – மோக்ஷஸம்ன்யாஸயோகம்

Related Posts

Share this Post