ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

அதா₂ஷ்டாத₃ஶோ(அ)த்₄யாய​:

மோக்ஷஸம்ன்யாஸயோக₃​:

பாகம் 18 – மோட்ச ஸந்யாச யோகம் (முக்தி துறவு நெறி)

அர்ஜுன உவாச .

ஸம்ன்யாஸஸ்ய மஹாபா₃ஹோ தத்த்வமிச்சா₂மி வேதி₃தும் .
த்யாக₃ஸ்ய ச ஹ்ருஷீகேஶ ப்ருத₂க்கேஶினிஷூத₃ன (18-1)

விசயன் வினா

1 (18-1) இறைவா, துறவு, தியாகம் இவற்றின் உண்மையான தன்மையைக் கற்க விழைகிறேன். கருணை செய்க.

கேசிய மர்த்தனா ரிஷி கேசா ஏற்றுக் கொள்க
பேசிய யோகப் பாடப் பெருமை அறிந்தே னினிதே
காசினி தாகும் தியாகம் கைவல்ய ஞானத் துறவு
யாசித்து அறியக் கேட்பேன் அன்புடன் விளக்க வேண்டும்

ஶ்ரீப₄க₃வானுவாச .

காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ன்யாஸம் கவயோ விது₃​: .
ஸர்வகர்மப₂லத்யாக₃ம் ப்ராஹுஸ்த்யாக₃ம் விசக்ஷணா​: (18-2)

ஸ்ரீகிருஷ்ணர் உரை

2 (18-2) துறவு என்பது ஆசையினால் செய்யும் செயலைத் துறப்பது. தியாகம் என்பது செயலின் பலனைத் துறப்பது. (இவை வேறுபட்டுத் தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று ஆதாரமானது.)

ஆசையில் கவரப் பட்டு ஆற்றிடும் கருமம் எல்லாம்
ஓசையில் ஒழிய விட்டு ஒடுங்குதல் துறவு என்பர்
பூசையில் புனிதக் கருமம் புரிவதால் புலரும் பலனைத்
தூசெனத் தள்ளும் நியதித் தூய்மையே தியாகம் என்பர்
த்யாஜ்யம் தோ₃ஷவதி₃த்யேகே கர்ம ப்ராஹுர்மனீஷிண​: .
யஜ்ஞதா₃னதப​:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே (18-3)

3 (18-3) கடமையை முற்றும் விட வேண்டும் என்று சிலரும், யக்ஞம், தான தருமங்களை எக்காரணம் கொண்டும் விடக் கூடாது என்று சிலரும் நம்புவர்.

செய்கிற செயல்கள் எல்லாம் சேர்ப்பது பாவம் அதனால்
செய்வதை விட்டேன் என்று செப்புவர் உண்டு சிலரோ
செய்திடும் வேள்வி தானம் செய்கடன் தவமே நன்கு
செய்வதைச் செய்வேன் என்று செய்முறை பயில்வ துண்டு

4 (நல்லது, கெட்டது செயலில் இல்லை. ஒரே செயல் ஒரு நேரத்தில், ஒருவருக்கு நன்மையாயும், மற்றவருக்குக் கெடுதியாயும் அமையலாம் அல்லவா?)

நல்லது கெட்டது என்று நடப்பவை ஏதும் இல்லை
உள்ளதே ஒருவர்க் கினிதாம் உற்றொரு மனிதர்க் கிடராம்
வள்ளலாய் மழையே பயிரின் வாழ்வுக்கு உரமாய் ஆகும்
வெள்ளமாய்ப் பெய்து கூரை ட்டுக்கு எமனாய்ப் போகும்
நிஶ்சயம் ஶ்ருணு மே தத்ர த்யாகே₃ ப₄ரதஸத்தம .
த்யாகோ₃ ஹி புருஷவ்யாக்₄ர த்ரிவித₄​: ஸம்ப்ரகீர்தித​: (18-4)

5 (18-4) தியாகம், துறவு இரண்டும் ஒன்றே.

பாரத மணியே கேட்க பயத்திடும் மோட்ச யோகம்
காரணம் அறிக உலகக் களத்திலே துறவும் தியாகம்
பூரணம் ஆன தொன்றே புரிந்திடு இரண்டும் ஒன்றே
சூரணம் ஆன ஞானச் சுடரொளி கேட்க இன்றே

6 (18-4) துறவு, தியாகம் இரண்டும் ஒன்றிற்கொன்று ஆதாரமே. எனினும், இவையும் குணங்களின் காரணமாக மூன்று வகையாகச் சொல்லப்படும்.

துறவு தியாகம் இரண்டு துப்புற அறிந்த போது
உறவு ஒன்றில் ஒன்று உறையும் ஒன்றாய்ப் போகும்
பரவு குணங்கள் சேர்ந்து பற்றறு துறவைச் சார்ந்து
நிரவு வகையும் மூன்று நிறைப்ப தறிக ஆய்ந்து

7 (விதித்த கடமையை விட்டுவிடாமல் செய்தாலும், தக்க தருணத்தில் இலட்சியத்திற்காக அவற்றையும் துறக்கும் உறுதி கொள்ள வேண்டும்.)

உனக்கென எடுத்த கடனை உருப்படச் செய்ய வேண்டும்
மனக்கண் மாசில னாகி மந்திரம் உணர வேண்டும்
தனக்கெனக் கொள்ளாத் தன்மை தவமுடன் வேள்வி யாற்றும்
கணக்கிணை யாகக் கடமை காலத்தே ஆற்ற வேண்டும்

8 (தன்னைச் சுற்றி முயற்சி தளராமல் கூட்டினைக் கட்டிவிட்டு, காலத்தே தனது கூட்டை இடித்து வெளியேறும் கூட்டுப்புழுவை உதாரணமாகக் காணலாம்.)

கூட்டுப் புழுவைக் காண்க குறியாக தன்னைச் சுற்றி
வீட்டைக் கட்டும் கடமை விளக்கம் செய்யும் ஓர்நாள்
கூட்டை அழித்துக் காட்சி குவலயத் தலரும் வண்ணப்
பாட்டை உடைய பூச்சி பறப்பது உவமை ஆகும்
யஜ்ஞதா₃னதப​:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் .
யஜ்ஞோ தா₃னம் தபஶ்சைவ பாவனானி மனீஷிணாம் (18-5)

9 (18-5) வேள்வி, தானம், தவம் போன்ற கருமங்கள் துறக்கத் தக்கதன்று. இவை அறிவினைத் தூய்மைப் படுத்துவதால், அனைவரும் இவற்றை அவசியம் செய்ய வேண்டும்.

ஆற்றிடும் மனதில் கடனை ஆழ்ந்திடச் செய்ய வேண்டும்
போற்றிடப் பிறரும் புகழும் பொருளென நலனும் தேடி
நுாற்றிடும் நோன்பி லேதும் நுாதனம் இல்லை வேதம்
சாற்றிடும் பலனைக் கருமம் சமைப்பதில் காணக் கூடும்
ஏதான்யபி து கர்மாணி ஸங்க₃ம் த்யக்த்வா ப₂லானி ச .
கர்தவ்யானீதி மே பார்த₂ நிஶ்சிதம் மதமுத்தமம் (18-6)

10 (18-6) இக்கருமங்களைப் பற்றற்றுச் செய்ய வேண்டும். ( சுமந்த குழந்தையை தகுந்த நேரத்தில் உதரத்திலிருந்து பிரிக்கத் தாய் தயங்காதது போல, துறவும் தியாகமும் ஏற்க வேண்டும்.)

பற்றறு நிலையில் கருமம் பயத்திட வேண்டும் உதரம்
உற்றரு கருவை அன்னை உவகையில் சுமந்த போதும்
முற்றிய நேரம் பிணையை முடித்துல களித்தல் போலே
பற்றிய கடனைப் பற்றி பற்றாது வாழ வேண்டும்
நியதஸ்ய து ஸம்ன்யாஸ​: கர்மணோ நோபபத்₃யதே .
மோஹாத்தஸ்ய பரித்யாக₃ஸ்தாமஸ​: பரிகீர்தித​: (18-7)

11 (18-7) விதித்த கடமைகளை மடமையால் துறப்பது தாமஸத் துறவு ஆகும்.

தாமதித் தமையும் கடனைத் தனக்கென விதித்த கருமம்
ஏன்மதித் தியற்ற வேண்டும் என்பதாம் நோக்கில் நாளை
வீணடித் திடுதல் விதித்த வினையினை முடிக்காத் துறவு
தாமஸத் துறவு என்றே தனஞ்சயா அறிந்து கொள்க
து₃​:க₂மித்யேவ யத்கர்ம காயக்லேஶப₄யாத்த்யஜேத் .
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக₃ம் நைவ த்யாக₃ப₂லம் லபே₄த் (18-8)

12 (18-8) ராஜஸத் துறவு என்பது, தனது உடலுக்குத் தீங்கு வருமோ, கடினமாகுமோ என்ற அச்சத்தால், செய்வன விலக்குவதாகும்.

நித்தியக் கருமம் செய்த நிலையிலும் பொறுப்பி லேற்ற
முக்கியக் கடமை தன்னை முடிக்காமல் உடலின் காயம்
சிக்கிய மனதில் சோர்வு சிந்தனை அறிவின் உபாயம்
மக்கிய தாலே செயலை மறத்தலே ராஜஸத் துறவு

13 (குருட்சேத்திரத்தில் விசயன் தனது சத்திரிய தருமத்தை மறந்து, போரிட மறுத்த நிலை, ராஜஸத் துறவு ஆகும்.)

போரிடப் புகுந்த விசயன் புலன்களால் கவரப் பட்டு
மாறிடும் மனத்த னாகி மறந்திடும் கடமை இங்கே
கூறிடும் ராஜஸ மாகும் குணத்திலே நலனே அதனால்
சேரிடம் சேரக் கண்ணன் செய்யுரை அறிய லானான்
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே(அ)ர்ஜுன .
ஸங்க₃ம் த்யக்த்வா ப₂லம் சைவ ஸ த்யாக₃​: ஸாத்த்விகோ மத​: (18-9)

14 (18-9) செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து, விதிக்கப் பட்ட கடமைகளைப் பற்றற்றுச் செய்யும் துறவு, ஸாத்வீகத் துறவு ஆகும்.

விதித்த கடமை எல்லாம் வினயமாய் அறிந்து சித்தம்
வதித்த மனத்தி னாகி வருபலன் மறந்து ஏற்றும்
மதித்த புத்தி யாலே மந்திரம் கற்ற தாகும்
உதித்த தியாக சீலன் உன்னத ஸாத்வீக னாகும்

15 (18-9-1) ஸாத்வீகத் துறவி தனது கருமங்களை எக்காரணம் கொண்டும் விடாமல், அவற்றின் பலன்களில் பற்றுதல் ஏதுமின்றிச் செய்வான்.

ஸாத்வீகத் துறவு ஏற்பான் சாதனை விடுப்ப தில்லை
நேர்த்திய கருமப் பணியை நிகழ்த்தா திருப்ப தில்லை
ஆற்றிய செயலில் தானம் அறிந்திடும் யாகத் தினிலே
தேற்றிய பலனைப் புகழைத் தேடியே அலைவ தில்லை
ந த்₃வேஷ்ட்யகுஶலம் கர்ம குஶலே நானுஷஜ்ஜதே .
த்யாகீ₃ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா₄வீ சி₂ன்னஸம்ஶய​: (18-10)

16 (18-10) ஸாத்வீகன் எந்த வேலை என்றாலும், மகிழ்ச்சியுடன், சமநிலை நோக்குடன் செய்வான்.

எந்த வேலை என்றாலும் ஏற்றத் தாழ்வு கொள்ளாது
பந்தம் ஏதும் தோடாது பலனை எதிர் பாராது
சிந்தை ஒருமை எய்துபவன் செயலைச் செய்யும் கர்மாத்மன்
வந்த சீலன் ஸாத்வீகன் வகையில் அவனே வைதீகன்
ந ஹி தே₃ஹப்₄ருதா ஶக்யம் த்யக்தும் கர்மாண்யஶேஷத​: .
யஸ்து கர்மப₂லத்யாகீ₃ ஸ த்யாகீ₃த்யபி₄தீ₄யதே (18-11)

17 (18-11) பலனைத் தியாகம் செய்து செய்யும் பணியே உண்மைத் துறவுஆகும். இயற்கையும் இதனையே கற்பிக்கிறது.

உய்யும் பலனை நலனை உயர்வாய் எண்ணா தமையும்
செய்யும் செயலை விடவே செய்யா திருத்தல் நலமோ
ஐயம் கொள்ள வேண்டாம் ஆறும் கடலும் விண்ணில்
பெய்யும் மழையைப் போலே பேணல் கடமை வேண்டும்

18 (உலகில் எவரும் செயல் செய்யாதிருத்தல் இயலாது.)

செயல் துறத்தல் கடினம் செய்வதே உயிரின் கவனம்
இயல் பினிலே இயக்கம் இயற்று வதால் புவனம்
உயிர் பெறுதல் உணர்க உண்மை இந்தக் கல்வி
பயில் வதுவே பிறவி பயத்த தெனத் தெளிக

19 (இயற்கையில் அனைத்தும், எல்லா நேரங்களிலும், ஏதேனும் செயலாற்றிக் கொண்டு தானிருக்கும்.)

மரமும் செடி கொடியும் மண்வளமும் உயிர் இனமும்
வரவும் செலவு மென வாங்கி டும் மூச்சி னிலும்
நிரவும் செயல் அறிக நித்தமிது நடப்ப தனால்
துறவும் செயல் விடுத்த துறவு என்ப தறியாமை

20 (செயலைச் செய்யாது சாட்சியாய், மூல காரணமாய் இருக்கும் ஒரே பொருள் சிவமே)

சிவமொன்றே செய்யா தமையும் சிவனரு ளாலே சக்தி
புவனென்றே பொருளை மாயாப் புலனறி வுயிரைச் செய்யும்
தவமென்றே தாரணி வைக்கும் தர்மத்தைச் செய்யச் சொல்லும்
சவமென்றே ஆகும் வரையில் சத்தியம் பேணச் செய்யும்

21 ( செயல் துறவு என்பது செய்வதைச் செவ்வணே செய்து, அதில் வரும் பலனைத் தியாகம் செய்வது.)

செயல் துறவு என்பது செயலை விடுப்பது அல்ல
செயலின் பலனை விடுவது செயலை விடுவ தாலே
பயில்வ தாவ தேது பாவம் தீர்ப்ப தேது
உயிர்க ளான சீவன் உயிர்ப்ப தென்ப தேது

22 (உடற்புண்ணை எவ்வித பற்றும் இல்லாது ஆற்றுதல் போல, கடனைப் பற்றற்ற நிலையில் செய்ய வேண்டும். )

உடலிலே காயம் பட்டால் உற்றநல் மருந்தை இட்டுத்
தடவியே ஆற்றுந் தன்மை தமக்குளே அமையும் உண்மை
நடுவிலே மாட்டிய சட்டை நழுவிடக் கூடிய தட்டை
விடையென அறிந்த போதும் வினைகலன் வளர்த்தல் கடனே

23 (உண்மையை உணரும் பக்குவம் வந்தால், பற்றற்ற நிலையில் செயலைச் செய்ய முடியும். அதுவே உண்மைத் துறவு.)

முற்றிய கதிரைச் சுற்றி மூடிய உமியைப் போலே
பற்றிய தெதுவும் பற்றா பாத ரஸத்தைப் போலே
சுற்றிய பொருளை உறவு சூடிய உடலை ஒட்டா
ஒற்றிய தாகக் கடமை ஒழுகுதல் கருமத் துறவு
அனிஷ்டமிஷ்டம் மிஶ்ரம் ச த்ரிவித₄ம் கர்மண​: ப₂லம் .
ப₄வத்யத்யாகி₃னாம் ப்ரேத்ய ந து ஸம்ன்யாஸினாம் க்வசித் (18-12)

24 (18-12) இத்தகைய துறவு மனப்பான்மை இல்லாதவர்கள், நல்லது, கெட்டதுமான பலனைப் பிறவிகளின் மூலம் அடைவர். செயல் துறவிகளுக்கு இவ்விடரில்லை.

நலமும் கேடும் இவை நடத்தும் நாட கமும்
வளரும் பிறவி வர வகுக்கும் கருமப் பயன்
பலவும் எதிர் பார்த்துப் பணியைச் செய் வோர்க்கு
செலவும் வரவும் இல்லை செயலைத் துற வோர்க்கு

25 ( உறங்கும் போது நிர்மலமாயிருக்கும் மனிதன், விழித்த போது, தனது பழைய குணநிலைக்குச் செல்வது போலவே, இறந்தவன் மீண்டும் பிறக்கும் போதும், பூர்வ வாஸனையால், பழைய குணங்களையே பெற நேரும்.)

நல்லவனோ தீயவனோ மனிதன் நாள்தோறும் துயிலேகும் போது
கள்ளமிலா துயில்வதைக் காண்க கண்விழித்து உடலாடும் போது
உள்ளதென உள்ளத்தில் மீண்டும் உருப்பேறல் போலத்தான் சீவன்
செல்வதெனப் பற்றுதலி னாலே செகத்தில்மறு கருவாகத் தானே

26 (உயிர்கள் பூத உடல், மென்னுடல், காரண உடல் என மூன்று போர்வைக்குள் இயங்கும். உலக வழக்கில் மரணம் என்பது, பூத உடலை விட்டு, மென்னுடலும், காரண உடலும் நீங்குவதாகும். அப்போது, மயக்கத்தால் மனத்துக்கண் வைத்திருந்த தீராத ஆசைக்கேற்ப, மென்னுடல் மீண்டும் தக்கதோர் பூத உடலைப் பெறும். )

பற்றாலே மென்னுடல் கூடிப் பயணத்தைத் தொடரும் தேகம்
இற்றாலே மறுவுடல் தேடி இணையவே அடையும் மேனி
முற்றாக மாறினும் மாறா முன்வினை கொடுத்த ஆசை
உற்றாக உள்ளத னாலே உணர்ச்சியும் செயலும் தொடரும்
பஞ்சைதானி மஹாபா₃ஹோ காரணானி நிபோ₃த₄ மே .
ஸாங்க்₂யே க்ருதாந்தே ப்ரோக்தானி ஸித்₃த₄யே ஸர்வகர்மணாம் (18-13)

27 (18-13) சாங்கியத்தில் கூறப்பட்டதும், எல்லாக் கருமங்களுக்கும் காரணமான ஐந்து காரணங்களைச் சொல்கிறேன். கற்றுக் கொள்.

பலவனே விசயா கேட்க பயத்திடும் கருமங் களுக்குத்
தலைவனே யாரே என்றால் தந்திடும் பதிலைக் கேட்க
நிலையான வேதா சாரம் நிகழ்த்திய தாகும் ஐந்து
தலையான கார ணத்தைத் தருவதை அறியக் கேட்க

28 ( மாணவன் பள்ளியில் சென்று படித்துத் தேர்ச்சி அடைவது போன்றே, சீவனும், உலகில் பிறந்து தனக்கு விதிக்கப்பட்ட கருமம் எனப்படும் பாடத்தைப் பயின்று விடுதலை அடைய வேண்டும்.)

ஆள்பவன் அமைத்த பள்ளி அணைத்திடும் பாலன் கற்று
மீள்பவன் ஆவான் போலே மிகைத்திடும் பிரகிருதி வைத்த
சூழ்நிலை பிரபஞ்சத் தாலே சுகித்திடும் சீவன் தன்னுள்
ஆழ்நிலை அறியத் தேற அமைவதே கருமப் பாடம்
அதி₄ஷ்டா₂னம் ததா₂ கர்தா கரணம் ச ப்ருத₂க்₃வித₄ம் .
விவிதா₄ஶ்ச ப்ருத₂க்சேஷ்டா தை₃வம் சைவாத்ர பஞ்சமம் (18-14)

29 (18-14) உடல், ஞானேந்திரியங்கள் (கண், காது, நாக்கு, மூக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் (கை, கால், வாய், குதம், இனக்குறி), சீவனாகிய கர்த்தா, கடவுள் ஆகியவையே உலகில் உள்ள எல்லாக் கருமங்களுக்கும் ஆதாரமான ஐந்து காரணங்களாகும்.

நடத்தும் கருவியாய் உடல் நடப்பிக்கும் தானென்ற அகம்
இடத்துள அறிவுணர் புலன் இட்டதைச் செய்திடும் கலன்
குடத்துள விளக்கென மனக் கூட்டிலே உரைத்திடும் சிவன்
கடத்திடும் ஐம்பெரும் கடன் காரண மாமென உணர்
ஶரீரவாங்மனோபி₄ர்யத்கர்ம ப்ராரப₄தே நர​: .
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ​: (18-15)

30 (18-15) மனம், வாக்கு, உடல் இவற்றால் செய்யப்படும் காரியங்கள் அனைத்துக்கும் இவ்வைந்துமே காரணம் ஆகும்.

எந்தக் காரியம் ஆனாலும் எதனை எப்படிச் செய்தாலும்
அந்தக் காரியம் ஆக்குவது அதனை அடையத் துாண்டுவது
பந்த பாசம் இலகுவாகப் பற்றிடச் செய்யும் பலவாகச்
சொந்த மடைப்பது கருத்தாகச் சொல்லிய ஐந்து காரணமே
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மானம் கேவலம் து ய​: .
பஶ்யத்யக்ருதபு₃த்₃தி₄த்வான்ன ஸ பஶ்யதி து₃ர்மதி​: (18-16)

31 (18-16) இவ்வாறான காரணங்களை மறந்து உடலே செயலின் காரணம் என்றும், ஆத்மாவே செய்கின்ற கர்த்தா எனவும் நினைப்பது உண்மையை உணர்ந்தது ஆகாது.

இப்படி உண்மை என்கையிலே ஏதும் அறியா மமதையிலே
தப்பித மாகத் தன்னுடலே தானே எதையும் செய்வதெனக்
கப்பிய மாயப் பேரிருளில் கடவுளை மறப்பர் கடந்துள்ளே
ஒப்பிய தான சீவாத்மா ஒன்றிய பெருமை அறியாரே

32 (மேலே சொன்ன ஐந்து காரணங்களில், சீவாத்மாவை ஒன்றாகச் சொன்னது, உண்மையில் சீவாத்மாவின் பிரதிபலிப்பையே குறிக்கும்.)

காரிய காரணம் ஐந்து கண்டனை சீவனும் ஒன்றாய்க்
கூறிய மருமம் அறிக குறிப்பிட்ட சீவனோ பிரதி
சூரிய பிம்பம் சேற்றில் சுடர்விடல் போலே மாயத்
தூரிகை யாக்கிய நிழலே துாய்மை ஆன்மன் நிஜமே
யஸ்ய நாஹங்க்ருதோ பா₄வோ பு₃த்₃தி₄ர்யஸ்ய ந லிப்யதே .
ஹத்வா(அ)பி ஸ இமாம் ̐ல்லோகான்ன ஹந்தி ந நிப₃த்₄யதே (18-17)

33 (18-17) எனவே எவன் ஒருவன் கர்வத்தை விட்டு, நல்லவை கெட்டவை என்ற மயக்கம் விடுவானோ, அவன் தர்மத்திற்காகக் கொலையே செய்தாலும், அந்தச் செய்கையால் கட்டுப்படுவதில்லை.

ஆகையால் அழியா ஆன்ம அறிவினை அறிந்தால் மேலே
தோகையாய் மூடும் மமதைத் தோற்றமே புரிந்தால் தானே
நோகுதல் இல்லை உயிரை நோகிடக் கொலையே புரினும்
ஆகுதல் இல்லை பாவம் அவர்க்கது தர்மம் ஆகும்

34 (18-17.1) அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் இவை மூன்றும் செய்கையைத் தூண்டுவன. (மனம், புத்தி ஆகிய ) இந்திரியங்கள், செய்கை, செய்பவன் இம்மூன்றும் செய்கைக்கு அடிப்படையாவன.

செயலினைச் செய்ய ஊக்கம் செய்தவை முடிக்கும் ஆக்கம்
இயல்பிலே இருத்தி வைத்து இயல்வதைப் பார்த் திருக்கும்
தயவுடை சீவன் உன்னுள் தனிமையில் பூத்தி ருக்கும்
நயத்தினை அறியக் காணும் நானெனும் பொருள் விளக்கம்

35 ( எவ்வாறாயினும், செயலைத் துாண்டவும், செயலாற்றவும், சீவாத்மாவின் அருள் தேவை.)

செயலை ஊக்க அறிவு அறிபொருள் அறிபவன் தேவை
செயலை ஆக்க கருவி செய்பொருள் செய்பவன் தேவை
செயல் ஊக்கம் தந்தும் செயல் ஆற்றச் செய்ய
செயல் ஆற்றல் அற்ற சீவ ஆத்ம சேவை

36 (செய்கைக்குக் காரணமான கருவிகளை (ஞானேந்திரியம், கர்மேந்திரியம்) புறக்கருவியாகவும், (சித்தம், மனம், புத்தி, அகங்காரம்) அகக்கருவியாகவும் இரு வகைப் படுத்தலாம்.)

உடல் நாக்கு விழி மூக்கு உற்றசெவி ஐந்தும்
குதம் கால்கள் கைகள் குறியும் வாய் ஐந்தும்
புறம் வைத்த செய்கருவி புத்தி மனம் சித்தம்
அகம் காரம் நாலும் அகச் செயலின் கருவி
ஜ்ஞானம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா₄ கர்மசோத₃னா .
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித₄​: கர்மஸங்க்₃ரஹ​: (18-18)
ஜ்ஞானம் கர்ம ச கர்தா ச த்ரிதை₄வ கு₃ணபே₄த₃த​: .
ப்ரோச்யதே கு₃ணஸங்க்₂யானே யதா₂வச்ச்ரு₂ணு தான்யபி (18-19)

37 (18-19) இக்கருவிகளைப் பயன்படுத்தும் ஞானம், கருமம், கர்த்தா (அறிவு, செயல், செய்பவன்) ஆகியவற்றையும் குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

ஆராய்ந்து அறியப் பார்க்க அத்துணை செயலும் விளையத்
தோராய மாகத் துய்யும் தோற்றமாம் குணத்தில் நிலைய
நேராகத் தெரியும் அறிவு நிகழ்த்திடுங் கருமம் கர்த்தா
சாராத குணத்தால் மாறும் சாங்கியர் வேத சாரம்

38 (18-19) அந்த மூன்று வகைகயான கருவிகளை இப்போது சொல்கிறேன்.

ஞாலத்தை அறியக் காணும் நம்பிக்கை தெரியப் பேணும்
கோலத்தைச் சிந்தை புத்தி கொண்டகங் காரம் தந்த
ஞானத்தைக் குணமாம் மூன்று நயப்பதால் விளையும் சான்று
ஜாலத்தைச் சொல்வேன் இன்று சத்தியம் அறிதல் நன்று
ஸர்வபூ₄தேஷு யேனைகம் பா₄வமவ்யயமீக்ஷதே .
அவிப₄க்தம் விப₄க்தேஷு தஜ்ஜ்ஞானம் வித்₃தி₄ ஸாத்த்விகம் (18-20)

39 (18-20) எதைக் கொண்டு, ஒருவன் எல்லா சீவராசிகளிடத்திலும் அழிவற்ற உண்மைப் பொருளைக் காண்கிறானோ அந்த அறிவே ஸாத்க அறிவு ஆகும்.

ஊர்வது பறப்பது மிதப்பது உறைவது உயர்வது செயற்பது
வேர்விட முளைப்பது விதைப்பது வெறுமனே இருப்பது சடப்பொருள்
ஈர்ப்பது இருப்பது இறப்பது எதிலுமே இறைவனே நிலைப்பது
கூர்மதி சிறப்புறப் பெறுவது குணமது ஸாத்வீக மாவது

40 (18-20-1) பகுக்கப்படாத பொருளைப் பகுக்கப்பட்ட பலவற்றின் இடையே காண்கின்ற அறிவு, ஸாத்கவீ அறிவாகும். எங்கும் நிறைந்த பரம்பொருளே எல்லா வடிவமும், செயலுமாய் விளங்குவதாய் ஆராய்ந்து, உறுதியாக நம்பும் அறிவே ஸாத்வீக அறிவாகும்.

வகுக்க முடியாத முத்தை வளர்வ தடங்காத வித்தைப்
பகுக்க முடியாத கொத்தைப் பழுது மில்லாத சித்தைத்
தொகுக்க முடியாத அருளைத் தொடர முடியாத ஒளியை
நகுக்க முடியாத அறிவை நயத்தல் ஸாத்வீக அறிவு
ப்ருத₂க்த்வேன து யஜ்ஜ்ஞானம் நானாபா₄வான்ப்ருத₂க்₃விதா₄ன் .
வேத்தி ஸர்வேஷு பூ₄தேஷு தஜ்ஜ்ஞானம் வித்₃தி₄ ராஜஸம் (18-21)

41 (18-21) எல்லா உயிர்களையும் வெவ்வேறு இயல்புடையனவாய் வெவ்வேறு விதங்களாய், வேறுபடுத்திப் பார்த்து, உலகில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் இருப்பது மட்டுமே உறுதி என்று நம்பும் அறிவு ராஜஸ அறிவு ஆகும்.

பலவாக உலகில் எல்லாப் பயன்களை வெவ்வே றான
கலனாகக் காட்டும் எண்ணம் கருத்திலே வேறு பாடு
புலனாவ தாலே புவனம் பூத்தவை மாறு பாடு
விளைவான தாகும் குணமே விளைப்பது ராஜஸ அறிவே
யத்து க்ருத்ஸ்னவதே₃கஸ்மின்கார்யே ஸக்தமஹைதுகம் .
அதத்த்வார்த₂வத₃ல்பம் ச தத்தாமஸமுதா₃ஹ்ருதம் (18-22)

42 (18-22) தாமஸ அறிவு என்பது அற்பமான ஒன்றைப் பற்றிக் கொண்டு, அதையே முழுப் பொருளாய் நினைத்து, ஆதாரமற்று, குறுகிய நோக்கில் காணும் அறிவு ஆகும்.

அற்ப நோக்கத் தாலே அறிவினில் சிறுமை யாலே
பற்பல தான தோற்றம் பார்ப்பவை உண்மை என்று
கற்பனை கொண்டு மூடக் கதைகளை நம்பிக் கொண்டு
நிற்பது உடலே என்றும் நிசமெனும் தாமஸ அறிவு

43 ( வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஸாத்வீக அறிவு. ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ராஜஸ அறிவு. ஒவ்வொன்றையும் தனியாய், முழுமையாய், நினைப்பது தாமஸ அறிவு.)

காணும் பொருளில் ஒருமையினைக் காணத் தெளிவது ஸாத்வீகம்
காணும் பொருளில் மறுமயினைக் கண்டே களிப்பது ராஜஸீகம்
காணும் பொருளை நிலையாகக் கதியாய் விதியாய்த் தனியாகப்
பேணும் குறுகிய மனநோக்கு பிறப்பது தாமஸ அறிவாகும்
நியதம் ஸங்க₃ரஹிதமராக₃த்₃வேஷத​: க்ருதம் .
அப₂லப்ரேப்ஸுனா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே (18-23)

44 (18-23) (இப்போது கருமங்களின் மூன்று குணவேறுபாட்டைச் சொல்கிறேன். ) ஸாத்வீகக் கருமம் என்பது, விதிப்படி, பற்றற்றுச் செய்யும் கருமம்.

விதித்த கடனைத் தத்தம் விதிமுறைப் படியே செய்து
உதித்த பலனைத் தருமம் உயர்ந்திடத் தானம் செய்து
கதித்த மனத் தினாகி கருமமே பணியென் றேற்கும்
மதித்த குணத்தி னாலே மகிழ்வது ஸாத்கவீக் கருமம்
யத்து காமேப்ஸுனா கர்ம ஸாஹங்காரேண வா புன​: .
க்ரியதே ப₃ஹுலாயாஸம் தத்₃ராஜஸமுதா₃ஹ்ருதம் (18-24)

45 (18-24) ராஜஸக் கருமம் ஆசையினால் துாண்டப்பட்டு, ஆணவத்துடன், மிகுந்த பிரயாசையுடன் செய்யப்படும் கருமம்.

ஆசையின் ஊக்கத் தாலே ஆற்றுதல் கடனைப் புகழின்
ஓசையின் நோக்கத் தாலே ஒழுகுதல் உடனைப் பெருமை
பேசுதல் லாபம் நட்டம் பேணுதல் நானே என்ற
மாசுடன் செயலைச் செய்தல் மத்திம ராஜஸ கருமம்
அனுப₃ந்த₄ம் க்ஷயம் ஹிம்ஸாமனபேக்ஷ்ய ச பௌருஷம் .
மோஹாதா₃ரப்₄யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே (18-25)

46 (18-25) தாமஸ கருமம் என்பது, மயக்கத்துடன், விளைவைப் பற்றி யோசிக்காமல், தீமை, நஷ்டம், சக்தி இவற்றைக் கருதாது செய்யும் கருமம்.

மயக்கம் மறந்த நோக்கு மனதிலே எழுந்த போக்கு
இயக்கும் செயலில் விளையும் இழிவைத் துயரைத் துளியும்
தயக்கம் இல்லா துலகம் தருமம் எண்ணா தெவரும்
வியக்க முடிக்கும் மருமம் விந்தை தாமஸக் கருமம்
முக்தஸங்கோ₃(அ)நஹம்வாதீ₃ த்₄ருத்யுத்ஸாஹஸமன்வித​: .
ஸித்₃த்₄யஸித்₃த்₄யோர்னிர்விகார​: கர்தா ஸாத்த்விக உச்யதே (18-26)

47 (18-26) (இப்போது கர்த்தாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்கிறேன். ) ஸாத்வீகக் கர்த்தா என்பவன் பற்றுதல் இல்லாமல், ஆணவமில்லாமல், வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படாதவனாய் தனது கருமங்களைச் செய்பவன்.

பற்றுதல் ஏதும் இன்றிப் பகட்டும் கர்வம் இன்றி
இற்றுதல் இல்லா உறுதி எடுத்தது முடிக்கக் கருதி
உற்றதை நிதமே செய்தும் உருபலன் எதுவாய் எய்தும்
நற்றவன் ஞானச் சீலன் நலம்படு ஸாத்வீகக் கர்த்தா
ராகீ₃ கர்மப₂லப்ரேப்ஸுர்லுப்₃தோ₄ ஹிம்ஸாத்மகோ(அ)ஶுசி​: .
ஹர்ஷஶோகான்வித​: கர்தா ராஜஸ​: பரிகீர்தித​: (18-27)

48 (18-27) ராஜஸ கர்த்தா ஆசையால், செய்கையின் பலாபலனை மிகவும் ஆராதித்து, பேராசையும், மகிழ்ச்சியும் துன்பமும் மிகுந்தவனாய், செயல்களைச் செய்பவன்.

காமம் பொறாமை அச்சம் கண்டதும் காதல் எச்சம்
கோபம் குரோதம் துச்சம் கொள்ளுதல் பிறரை மிச்சம்
ஏவுதல் எதிலும் குற்றம் எண்ணுதல் செய்கை மாற்றித்
தாவுதல் தரத்தில் மாற்றம் தன்மையன் ராஜஸ கர்த்தா

அயுக்த​: ப்ராக்ருத​: ஸ்தப்₃த₄​: ஶடோ₂ நைஷ்க்ருதிகோ(அ)லஸ​: .
விஷாதீ₃ தீ₃ர்க₄ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே (18-28)

49 (18-28) தாமஸ கர்த்தா என்பவன், நிலையற்றவனாய், ஆபாசமானவனாய், வளைந்து கொடுக்காமல், ஏமாற்றி வஞ்சிப்பவனாய், சோம்பலும், கலக்கமும் உள்ளவனாய்க் கருமங்களைச் செய்பவன்.

நிலையற்று ஆபாச நோக்கும் நீசப் பிடிவாதப் போக்கும்
களையுற்ற கபடம் வஞ்சம் கலக்கம் சோம்பல் வாக்கும்
பிழையுற்ற தாகும் எதிலும் பிணக்கம் தாமஸ மாக்கும்
தளையுற்ற தாலே துச்சத் தன்மையன் தாமஸ கர்த்தா
பு₃த்₃தே₄ர்பே₄த₃ம் த்₄ருதேஶ்சைவ கு₃ணதஸ்த்ரிவித₄ம் ஶ்ருணு .
ப்ரோச்யமானமஶேஷேண ப்ருத₂க்த்வேன த₄னஞ்ஜய (18-29)

50 (18-29) (செயலுக்குத் துாண்டுதலும், ஆக்குதலுமான காரணங்களையும், கருவிகளையும் சொன்னேன்) இவ்வாறே மூன்று குணங்களின் வேறுபாட்டால் ஏற்படும் புத்தியின் வேறுபாடுகளையும், உறுதியின் வேறுபாடுகளையும் இப்போது விளக்குகிறேன்.

கருவியும் கருமமும் செய்யும் கர்த்தனும் மூன்று வகையாய்
நிறுவிய தருமம் கேட்டு நிமிர்ந்தனை தனஞ் சயாகேள்
மறுவிய தாகும் புத்தி மற்றொரு திறமே த்ருதி
பெருகிய வகையே இனிமேல் பேசுவ தறிந்து கொள்க

51 ( நல்லது எது, கெட்டது எது என ஆராயச் செய்து முடிவெடுக்க உதவும் கருவியே புத்தி என்கிற அறிவு ஆகும். புத்தியால் நியாயப்படுத்திய உண்மையில் திடமாய் நிலைக்கும் சித்தமே த்ருதி எனப்படும் உறுதி ஆகும். )

நல்லது கெட்டது எதுவென நியாயப் படுத்தும் சாதனம்
உள்ளது உரவிது எதுவென உரைக்கும் புத்தி சேதனம்
வல்லது உள்ளம் வகுத்தது வலியது நிலையில் இருப்பது
சொல்லிய த்ருதியும் இறுதியில் சொன்னது செயலிலே உறுதியே
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப₄யாப₄யே .
ப₃ந்த₄ம் மோக்ஷம் ச யா வேத்தி பு₃த்₃தி₄​: ஸா பார்த₂ ஸாத்த்விகீ (18-30)

52 (18-30) (இப்போது, புத்தி விளக்கம்.) ஸாத்வீக புத்தி என்பது வழியெது என்பதையும், செயலெது என்பதையும் உணர்த்தி, அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை முதலியவற்றைத் தெளிய வைக்கும்.

ஈடுபடச் செய்வ தெது எட்டாது வைப்ப தெது
பாடுபடத் தக்க செயல் பருவத்தே செய்வ தெது
கேடுசெய அச்ச மொடு கேட்டறியா வீர மொடு
நாடுவதை நாட றிய நயப்பது ஸாத்வீக புத்தி

53 (18-31) ராஜஸ புத்தி என்பது தர்ம அதர்ம வழிகளை அறியாது, இயற்கைக்கு விரோதமான வகையில் செல்வதாகும்.

இயற்கை ஒப்பிய தர்மம் இதுவா அதுவென அறியா
செயற்களைச் செய்திடும் அதர்மம் செயலா பலனா எனவே
முயற்சியை முனைப்படு வோரின் முக்கிய நோக்கம் ஆசை
அயற்சியை அளிப்பது உத்தி ஆவது ராஜஸ புத்தி
யயா த₄ர்மமத₄ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச .
அயதா₂வத்ப்ரஜானாதி பு₃த்₃தி₄​: ஸா பார்த₂ ராஜஸீ (18-31)
அத₄ர்மம் த₄ர்மமிதி யா மன்யதே தமஸாவ்ருதா .
ஸர்வார்தா₂ன்விபரீதாம்ஶ்ச பு₃த்₃தி₄​: ஸா பார்த₂ தாமஸீ (18-32)

54 (18-32) தாமஸ புத்தி என்பது, அறியாமையினால் சூழப்பட்டு அதர்மத்தைத் தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் காட்டி, விபரீதம் வளர்க்கும்.

பார்த்தா பாவம் தொட்டுப் பகுத்தறி வாண்மை கெட்டுக்
கூர்த்த நெறிகள் விட்டுக் குற்றத் தமையப் பட்டு
நேர்த்த செயலை எல்லாம் நேர்மை இல்லா தாகச்
சேர்த்த சிறுமை யாகச் செய்யும் தாமஸ புத்தி
த்₄ருத்யா யயா தா₄ரயதே மன​:ப்ராணேந்த்₃ரியக்ரியா​: .
யோகே₃னாவ்யபி₄சாரிண்யா த்₄ருதி​: ஸா பார்த₂ ஸாத்த்விகீ (18-33)

55 (18-33) எந்த ஒரு உறுதியினால், யோகத்தின் மூலமாக, மனத்தின் மாறுதல்களும், புலன்களும் கட்டுப்படுகின்றனவோ, அந்த உறுதி ஸாத்வீக உறுதி ஆகும்.

தியாகத்தைப் பலனைத் தருமம் தானத்தைச் செய்யும் கரும
போகத்தைப் புலனைக் கட்டும் போய்வரும் மூச்சைக் கட்டும்
யோகத்தை நடத்தி நெஞ்சம் யோசனை அழித்து மிஞ்சும்
வேகத்தை அடக்கி இறுதி விளம்பிடும் ஸாத்வீக உறுதி
யயா து த₄ர்மகாமார்தா₂ந்த்₄ருத்யா தா₄ரயதே(அ)ர்ஜுன .
ப்ரஸங்கே₃ன ப₂லாகாங்க்ஷீ த்₄ருதி​: ஸா பார்த₂ ராஜஸீ (18-34)

56 (18-34) எந்த ஒரு உறுதி, அறம், பொருள், இன்பம் இவற்றை மட்டும் பலமாகப் பிடித்துக் கொண்டு, (அதாவது, வீடு ஆகிய விடுதலைப் பேற்றை மதியாது) செய்கையின் பலனை மட்டும் விரும்பி நிற்கிறதோ, அது ராஜஸ உறுதி ஆகும்.

அறம் பொருள் இன்பம் ஆகிய தருமப் பாதை
நிரந் தரம் என்றும் நிஜப் பலன் என்றும்
கரந் துளம் கொள்ளும் கடைப் படும் வீடு
வரம் பெறும் விருப்பம் வடிக்காது ராஜஸ உறுதி
யயா ஸ்வப்னம் ப₄யம் ஶோகம் விஷாத₃ம் மத₃மேவ ச .
ந விமுஞ்சதி து₃ர்மேதா₄ த்₄ருதி​: ஸா பார்த₂ தாமஸீ (18-35)

57 (18-35) தாமஸ உறுதி உறக்கம், அச்சம், துக்கம், சோர்வு, கர்வம் முதலியவற்றை எப்போதும் பற்றியியதாகும்.

குருட்டு மனத்தால் கவலை கொண்ட பயத்தால் துன்பம்
திருட்டு குணத்தால் கேடு தீர்க்க முடியாத் துாக்கம்
இருட்டும் அறிவால் கடமை இன்ன தறியா மடமை
முரட்டு நிலையே பார்த்தா முனையும் தாமஸ உறுதி
ஸுக₂ம் த்விதா₃னீம் த்ரிவித₄ம் ஶ்ருணு மே ப₄ரதர்ஷப₄ .
அப்₄யாஸாத்₃ரமதே யத்ர து₃​:கா₂ந்தம் ச நிக₃ச்ச₂தி (18-36)

58 (18-36) உலகில் எல்லா உயிர்களும் எந்த இன்பத்தில் நிலைக்க விரும்புகிறார்களோ, அந்த இன்பமும், குணங்களின் ஈடுபாடால், மூன்று வகையாகும்.

பரத திலகம் கேட்க பாரிலே பிறப்ப தெல்லாம்
விரத மேற்கும் நோக்கு வினைகள் முடித்த தோடு
கரத லாகும் உள்ளம் களிப்ப தாகும் திட்டம்
அறித லாகும் மூன்று ஆனந்தம் அறியக் கேட்க
யத்தத₃க்₃ரே விஷமிவ பரிணாமே(அ)ம்ருதோபமம் .
தத்ஸுக₂ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு₃த்₃தி₄ப்ரஸாத₃ஜம் (18-37)

59 (18-37) ஸாத்வீகச் சுகம் என்பது ஆரம்பத்தில் நஞ்சாய்க் கசந்தாலும், இறுதியில் தூய்மையும், நிலையானதுமான இன்பத்தைத் தரவல்லது. (உலகில் உயர்வான குறிக்கோளை அடைய கடின முயற்சியும், ஆரம்பத்தில் துயரங்களைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுவது இயற்கை. )

தொடக்கத்தில் நஞ்சைப் போலே துயரத்தைத் தந்தா லென்ன
நடப்பிக்கும் பயிற்சி கடினம் நடைமுறை வந்தா லென்ன
திடப்பிக்கும் ஓர்நாள் நெஞ்சம் திறப்பிக்கும் சுகமும் சாந்தம்
கடப்பிக்கும் கதியே அகமே கற்பிக்கும் ஸாத்வீகச் சுகமே
விஷயேந்த்₃ரியஸம்யோகா₃த்₃யத்தத₃க்₃ரே(அ)ம்ருதோபமம் .
பரிணாமே விஷமிவ தத்ஸுக₂ம் ராஜஸம் ஸ்ம்ருதம் (18-38)

60 (18-38) ராஜஸச் சுகம் என்பது புறப்பொருள், இந்திரியங்களின் சேர்க்கையால், தொடக்கத்தில் சுகத்தையும் பிறகு போகப் போகக் கொடிய தீங்கையும் செய்ய வல்லது.

தொட்டவுடன் இன்பம் புலன் பட்டவுடன் இன்பம் முதல்
கட்டமுதல் அமுதம் எனக் களிப்புறவே செய் தாலும்
நட்டமென இறுதி யிலே நஞ்செனவே அநுப வத்தை
மட்டமெனத் தருவ தறி மாயசுகம் ராஜ ஸமே
யத₃க்₃ரே சானுப₃ந்தே₄ ச ஸுக₂ம் மோஹனமாத்மன​: .
நித்₃ராலஸ்யப்ரமாதோ₃த்த₂ம் தத்தாமஸமுதா₃ஹ்ருதம் (18-39)
யத₃க்₃ரே சானுப₃ந்தே₄ ச ஸுக₂ம் மோஹனமாத்மன​: .
நித்₃ராலஸ்யப்ரமாதோ₃த்த₂ம் தத்தாமஸமுதா₃ஹ்ருதம் (18-39)

61 (18-39) தாமஸச் சுகம் என்பது உறக்கம், சோம்பல், அஜாக்கிரதை இவற்றிலிருந்து உண்டாவதும், ஆரம்பம், இறுதி என இரண்டு காலத்திலும் மயக்கத்தைத் தருவதுமாகும்.

உறக்கம் சோம்பல் மறதி உண்மை அறியா நிலைமை
கலக்கம் கலைந்த மனது கடையும் முதலும் இகழ்ந்து
மயக்கம் மறைப்ப ததனால் மயங்கிக் களிப்ப ததனால்
தயக்கம் இயக்கும் சுகமே தரத்தில் தாமஸச் சுகமே

62 ( புராணங்களில் சொல்லப்பட்ட தேவரும், அசுரரும் பாற்கடல் கடைந்து, தனது தவத்திற்கேற்ப பலனை அடையும் முயற்சியை இச்சுக வேறுபாட்டிற்கு உதாரணமாகக் காணலாம்.)

பாற்கடல் கடைந்த கதையைப் பகுத்தறிந் துணரும் போது
மேற்படும் விளையும் செல்வம் விளைந்தவர் அசுரர் இறுதி
ஏற்பது அரவின் நச்சு எண்ணத்தில் தூயர் தேவர்
சேர்ப்பது அமிர்தம் இதனைச் சேரந்திட உழைப்பர் அரிது
ந தத₃ஸ்தி ப்ருதி₂வ்யாம் வா தி₃வி தே₃வேஷு வா புன​: .
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே₃பி₄​: ஸ்யாத்த்ரிபி₄ர்கு₃ணை​: (18-40)

63 (18-40) இவ்வாறு இயற்கையில் பிறந்து, எல்லாவற்றிலும் கலந்ததாகிய இந்த மூன்று குணங்களைக் கடந்த உயிர்கள் மண்ணிலும், விண்ணிலும் இல்லை. (அதாவது, பிரம்மம் ஒன்றே குண வேறுபாடு ஏதுமற்றது. மற்ற உயிர்களெல்லாம், குணத்தால் மாறுபட்டவையே ஆகும்.)

கொடுத்த விளக்கம் கேட்க கொண்டவர் குணங்கள் மூன்றை
விடுத்த உயிர்கள் மண்ணில் விண்ணில் ஏதும் இல்லை
நடத்தும் பிரகிருதி ஒன்றே நயக்கும் குணமென நின்றே
கடத்தும் பிரம்மம் ஒன்றே கடவுள் கடந்த உள்ளே

64 ( அத்தகைய குணங்களின் தன்மையால், நினைவுகள் ஆழமாகப் பதிந்து, அதுவே சுபாவம் என்று உயிர்களுக்குப் பிறவிகள் தோறும் விளங்கும். இதனை ஒட்டியே, சாதி என்கிற சமுதாயச் சடங்குகள் வைக்கப் பட்டன. )

வேறுபடும் குணத்தா லுயிர்கள் வேறுபல கருமம் செய்யும்
மாறுபடும் கருமத் தாலே மனதிலே சமஸ்காரம் என்னும்
ஊறிவரும் எண்ணப் பிரதி உருவாகும் சுபாவம் என்னும்
துாரிகையே வர்ணம் ஜாதி தொழிலிலே அமையக் காணும்

ப்₃ராஹ்மணக்ஷத்ரியவிஶாம் ஶூத்₃ராணாம் ச பரந்தப .
கர்மாணி ப்ரவிப₄க்தானி ஸ்வபா₄வப்ரப₄வைர்கு₃ணை​: (18-41)

65 ( அறவாழ்வால் அந்தணர் (பிராமணர்) எனவும், தியாகத்தால், பொதுநலப் பண்பால் ஆளுநர் (சத்திரியர்) எனவும், பொருள்நலம் வளர்ப்பதால் வணிகர் (வைசியர்) எனவும், பணிவாய் உழைக்கும் பண்பால் தொழிலர் (சூத்திரர்) எனவும் சாதிகள் அமைந்தது. )

அந்தணர் என்போர் அறவோர் அரசர் ஆட்சி தருவோர்
வந்தவர் போனவர் என்று வணிகர் தொழிலைப் புரிவோர்
சிந்துவர் உடலின் வியர்வை சேர்க்கவே உழைக்கும் பெரியோர்
முந்துவர் எவர்க்கும் குணத்தில் முனையச் சுபாவமே கணக்கு

66 (பிறப்பாலின்றி இயற்கையை ஒட்டிய சுபாவத்தாலும், ஏற்று நடக்கும் வழியினாலுமே சாதிகள் அமைகின்றன.)

பிறப்பால் வருவதல்ல பேதம் பெருமைக்கு வந்ததல்ல பிறவி
வரப்பால் நீருயரச் செய்யும் வயலாய்த் தன்னிலமை கருதிச்
சிறப்பால் செயலுயரச் செய்யும் சீலருடை சுபாவங்கள் மாறும்
திறத்தால் அடைவதுவே ஜாதி தீர்ப்பிதுவே இறையவனின் நீதி
ஶமோ த₃மஸ்தப​: ஶௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச .
ஜ்ஞானம் விஜ்ஞானமாஸ்திக்யம் ப்₃ரஹ்மகர்ம ஸ்வபா₄வஜம் (18-42)

67 (18-42) மனவடக்கம், புலனடக்கம், தவம், தூய்மை, பொறை, கருணை, நேர்மை, அறிவு, கடவுள் நம்பிக்கை ஆகியன அந்தணரின் அடையாளங்கள்.

தானம் தவம் பொறை தன்னடக்கம் புலன் அறிவு
மோனம் முறை இறைவன் முயற்சியி லாண் டறிவு
காணும் உயிர்க் கருணை கல்வியிலே வழி காட்டிப்
பேணும் பெரிய மனம் பெற்றவரே அந்த ணர்கள்
ஶௌர்யம் தேஜோ த்₄ருதிர்தா₃க்ஷ்யம் யுத்₃தே₄ சாப்யபலாயனம் .
தா₃னமீஶ்வரபா₄வஶ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா₄வஜம் (18-43)

68 (18-43) வீரம், திறமை, உறுதி, கூர்மை, புறங்காட்டாமை, ஆளுந்தன்மை, பெரியோர் வழியேற்றல் க்ஷத்திரியரின் அடையாளங்கள்.

வலிமை மன உறுதி வல்லாண்மை புறங் காட்டாத்
திறமை திரும் பாமை திண்மை சமு தாயத்
தலைமை தனை ஏற்றல் தருமப் பெரி யோரின்
புலமை வழி காத்தல் புரிபவரே அர சாள்வர்
க்ருஷிகௌ₃ரக்ஷ்யவாணிஜ்யம் வைஶ்யகர்ம ஸ்வபா₄வஜம் .
பரிசர்யாத்மகம் கர்ம ஶூத்₃ரஸ்யாபி ஸ்வபா₄வஜம் (18-44)

69 (18-44) வேளாண்மை, வியாபாரம், பொருளாக்கல் வணிகருக்கும், உழைப்பு, பிறருக்குத் தொண்டு செய்வது தொழிலாளிக்கும் பொருந்திய அடையாளங்கள்.

உழவு விவ சாயம் உருவான பரி மாற்றம்
பழுகு பண மாக்கும் பண் பாளர் வியாபாரி
நிலவு கடன் ஆற்றும் நிலைத்துச் சமு தாயம்
மலர உழைப் பாற்றும் மாண்பில் தொழி லாளி

70 ( இதன்படி அந்தணர், தனது தருமத்தை நிறைவுறச் செய்த பிறகு, சத்திரிய, வியாபார, தொழிலாள தருமங்களை ஏற்கலாம். சத்திரியர், தம் கடன் முடித்துப் பிறகு, வியாபார, தொழிலாள தருமங்களை ஏற்கலாம். வணிகர் தன் கடன் முடித்துப் பிறகு, தொழிலாள தர்மம் ஏற்கலாம். தொழிலாளிகள் தம் கடனை மட்டுமே செய்ய வேண்டும்.)

அந்தணன் ஓதல் ஆளல் ஆற்றல் உழைத்தல் கூடும்
வந்தவன் தலைவன் ஆளல் வணிகமும் பணிவும் கூடும்
சொந்தமாய் வணிகன் செயலில் சூத்திரன் ஆகக் கூடும்
சிந்தையில் அடங்கிக் கருமம் செய்வதை கடையற் காகும்

71 ( ஏனென்றால், சமுதாயம் முன்னேற, சமுதாயத்தில் உள்ள மக்கள் அனைவரும் தத்தம் கடமையைச் செய்யும் தொழிலாளியாக வேண்டும். இதுவே முதல் நிலை. )

பணிவும் பெரிய வர்கள் பயத்த செயல் நடத்திக்
குனியும் தலை நிறுத்திக் குணத்தில் மரி யாதை
கனியும் மொழி இருத்திக் கடமை தனை மதித்துத்
துணியும் சூத்தி ரனாய்த் துய்த்தநிலை முதல் நிலையே

72 ( பணிவும், உழைப்பும் பண்பான பிறகு, தனக்கும், பிறருக்கும் உதவப் பொருள் ஈட்டல் அடுத்த நிலை. )

சூத்திரனாய் அடக் கத்தில் சுடர்பவனாய் ஆன பின்னே
வாத்திறமும் வளமும் சுகம் வாங்குதற்கு ஆன பொருள்
சேர்ப்பவனும் பிறர் வாழச் செய்பவனாய் கற்ற நெறி
நேர்த்தியவன் நெறி யவனாய் நிற்பதுவே அடுத்த நிலை

73 ( தொழிலாளியைப் போன்ற பணிவும், உழைப்பும் கற்று, பிறகு வியாபாரியைப் போன்று பொருள் ஈட்டியும், ஈந்தும் வாழும் பக்குவம் பெற்ற பின்னரே, உலகோரை ஆண்டு காக்கும் தலைவனாக முயலலாம். இதுவே மூன்றாம் நிலை.)

அடக்கத்தால் சூத்திர னாயும் ஆக்குவதில் வைசிய னாயும்
தொடக்கத்தில் பயிற்சி பெற்ற தூய்மையே உயிரைக் காக்கும்
நடத்தையை ஏற்றுத் தமது நாட்டினருக் குடலைச் சீவன்
விடத்துணியும் வீரம் உறுதி விளங்குதலே மூன்றாம் நிலை

74 ( மேலே சொன்ன நிலைகளைக் கடந்த பிறகே, ஞானப் பயிற்சி பெற்று, தந்நிலை உணர்ந்து உலகோருக்கு உபதேசிக்கும் அந்தணராக உயரலாம். இதுவே இறுதி நிலை. )

முன்னே சொன்ன மூன்றுநிலை முற்றும் தெரியக் கற்றிட்ட
பின்னே ஞானம் பேராண்மை பிழையற வேதம் பெற்றிட்ட
தன்னே தானாய் தியாகத்தால் தந்தே மற்றோர் நல்லவழி
என்னே ரமும் ஏற்றிடவே எடுக்கும் முதிர்ச்சி பிராமணமே
ஸ்வே ஸ்வே கர்மண்யபி₄ரத​: ஸம்ஸித்₃தி₄ம் லப₄தே நர​: .
ஸ்வகர்மனிரத​: ஸித்₃தி₄ம் யதா₂ விந்த₃தி தச்ச்ரு₂ணு (18-45)

75 (18-45) ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளில் ஈடுபட்டுத் தங்கள் இலக்கை அடைவதை விளக்குகிறேன். கேள்.

ஒவ்வொரு உயிரும் தத்தம் உறுதியில் வைத்த கருமம்
செவ்வணே செய்வ தாலே சேருவர் குறித்த இலக்கு
எவ்விதம் செய்வ தாகும் எம்முறை சிறப்பு ஆகும்
அவ்விதம் சொல்லக் கேட்டு அடைவது உலகில் யோகம்
யத​: ப்ரவ்ருத்திர்பூ₄தானாம் யேன ஸர்வமித₃ம் ததம் .
ஸ்வகர்மணா தமப்₄யர்ச்ய ஸித்₃தி₄ம் விந்த₃தி மானவ​: (18-46)

76 (18-46) பரம்பொருளைத் தனது கருமத்தினால் தொழுபவன் நல்லகதி அடைவது நிச்சயம்.

தனக்கு விதித்த கடமையைத் தருமம் வழுவாத் தகைமையில்
இணக்க மோடு செய்வதே இறைவன் அருளை எய்வதாம்
கணக்கி லாறியா உயிர்களைக் கரந்த பரமன் தரிசனம்
சுணக்க மில்லா தன்கடன் சூடுவர் அறிவது நிச்சயம்
ஶ்ரேயான்ஸ்வத₄ர்மோ விகு₃ண​: பரத₄ர்மாத்ஸ்வனுஷ்டி₂தாத் .
ஸ்வபா₄வனியதம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பி₃ஷம் (18-47)

77 (18-47) (மேலே சொன்னபடி, தனக்கு விதிக்கப்படாத தர்மங்களில் சில விதிகளின்படி ஈடுபட முடியும் என்றாலும் ) பிறருக்குரிய தருமத்தை நன்றாகச் செய்வதை விடத் தனக்குரிய தருமத்தை முடிந்த அளவு செய்வது சாலச் சிறந்தது. செய்வன திருந்தச் செய்வதே சிறப்பு.

உனக்கு விதித்த கடனை உன்னால் இயன்ற வரையில்
இணக்க மோடு செய்தல் இனிது அதனை விட்டுப்
பிணக்க மின்றிப் பெரிதாய்ப் பிறரின் கடனைச் செய்யும்
கணக்கு என்றும் தவறு கதியும் பெறுதல் அரிது

78 (முன்னே சொன்ன இயற்கைச் சுபாவத்தால், தனக்கு அமைந்த தொழில் பாவமானது எனினும் (உதாரணமாக, இறைச்சி அறுத்தல், போரிலே கொலை செய்தல் ) அதனை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வது நல்லது. )

குணத்தால் விதித்த கடமை குற்றம் எனினும் கரும
இனத்தால் மதித்து அதனை இயற்றல் பாவம் இல்லை
மனத்தால் நினைத்த மாட்சி மதியுள் தெளியும் சாட்சி
எனத்தான் முடிக்கும் கருமம் இறைவன் வடிக்கும் தருமம்

79 (சிலர் முக்தி தேடுகிறேன், ஞானம் தேடுகிறேன் என்று கூறி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாது விடுகிறார்கள். இது தவறு. உண்மையான உறுதி இருந்தால், செய்யும் தொழிலிலேயே தெய்வத்தைக் காணலாம்.)

முக்தி வேண்டும் என்ற முனைப்பு தீண்டும் போது
பக்தி ஞான யோகப் பயிற்சி ஈண்ட போது
நித்ய கர்மம் எல்லாம் நிறைத்தல் எதற்கு என்ற
யுக்தி தவறு கரும யோகம் விடுத்தல் கொடிது
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ₃ஷமபி ந த்யஜேத் .
ஸர்வாரம்பா₄ ஹி தோ₃ஷேண தூ₄மேனாக்₃னிரிவாவ்ருதா​: (18-48)

80 (18-48) எனவே விதித்த கருமத்தை புறக்கணிக்கக் கூடாது.

கெளந் தேயா கேட்க கடமையே கதி யென் றறிக
மந்த மான தெனினும் மாசு பட்ட தெனினும்
எந்தக் கடனைச் செய்ய எப்படிப் பிறந்த போதும்
அந்தக் கடனைச் செய்தல் அவரவர் பொறுப்பு அறிக

81 ( ஏனெனில், முன்னே சொன்னபடி, முற்றிலும் குற்றமற்ற செயல் உலகில் ஏதும் இல்லை.)

முற்றிலும் குற்றம் இல்லா முயற்சிகள் ஏதும் இல்லை
கற்றினும் கலங்கம் இல்லாக் கரத்திலே இயன்ற போதும்
பற்றிடும் செயலில் அறியாப் பாவமும் பிழையும் அமையும்
எற்றினும் கவலை யற்று எடுத்ததை முடித்தல் வேண்டும்
அஸக்தபு₃த்₃தி₄​: ஸர்வத்ர ஜிதாத்மா விக₃தஸ்ப்ருஹ​: .
நைஷ்கர்ம்யஸித்₃தி₄ம் பரமாம் ஸம்ன்யாஸேனாதி₄க₃ச்ச₂தி (18-49)

82 (18-49) இந்த உண்மையை உணர்ந்து செய்பவன், எதிலும் பற்றில்லாதவனாய், தன்னை வென்றவனாய், ஆசையை விலக்கியவனாய் இருப்பான். அதுவே உண்மையில் துறவு நெறி. அதனாலேயே அவன் உன்னத நிலையை அடைகிறான்.

தன்னை வெல்பவ னாய் தன்னாசை கொல்ப வனாய்
முன்னை வினைக் கேற்ற முயற்சி யுடையவ னாய்க்
கண்ணை உள் நோக்கிக் காணும் தவத்தி னனாய்
என்னை அறிந் துலகில் இயங்கு வதே ஸந்யாசம்

83 ( ஆர்ப்பரிக்கும் ஆற்றின் மேல் உள்ள பாலம் சலனமற்று உள்ளதைப்போல, மனஎழுச்சிகளை சாட்சியாய்ப் பார்த்து, தெளிவான புத்தியால் செயலாற்றுபவனே உண்மையான செயல் துறவியாவான்.)

சேற்றும் சகதி யுமாய்ச் செழிக்கும் உயிரி னமாய்
ஊற்றும் நுரை வளமாய் ஓடும் புனல் பறந்த
ஆற்றின் மேல் அணையா அமையும் பாலம் என
மாற்றும் மனப் பெருக்கால் மாறாதான் கர்ம ரிஷி
ஸித்₃தி₄ம் ப்ராப்தோ யதா₂ ப்₃ரஹ்ம ததா₂ப்னோதி நிபோ₃த₄ மே .
ஸமாஸேனைவ கௌந்தேய நிஷ்டா₂ ஜ்ஞானஸ்ய யா பரா (18-50)

84 (18-50) அத்தகைய சித்தியைப் பெற்றவன் ஞானத்தினுடைய உயர்ந்த நிலையாகிய பிரம்மத்தை எங்ஙனம் அடைகிறான் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

கற்றிடு கெளந் தேயா கர்மத்தைச் செய்வ தாலே
பெற்றிடு சித்தி அதுவே பேரருள் அளித்த சக்தி
உற்றிடு உயிரின் உயிராய் உரைத்திடும் பிரம்ம ஞானம்
முற்றிடு நிலையைத் தேறி முடிவிலா ஆனந்தம் சேர்க

85 (விடா முயற்சியால், தவத்தால், மனிதர்கள் தன்னை முன்னேற்றிக் கொள்ள முடியும். கரி, பலகாலம் மண்ணுள் மறைந்து, பிறகு மின்னும் வைரம் ஆவதில்லையா? )

தன்னைத் தானே தழுவி தன்னுடை குற்றம் கழுவி
முன்னைப் போதும் தமது முயற்சி உயர்வு கருதி
மண்ணைத் தேடி மறையும் மரத்தின் கரியே வைரம்
மின்னத் தெளித லாகும் மிகையே பிறந்த நோக்கு

86 (கரியானது, வைரமாக மாறினாலும், தீயினால் மீண்டும் கரியாகப் போகக் கூடும். ஆனால், புனிதமான மனித ஜன்மம் எடுத்தவர்கள், யோக சித்தி பெற்றால், மீண்டும், கடைநிலை எய்துவதில்லை. இதுவே மனிதப்பிறவியின் சிறப்பு.)

துணியும் கரியும் வயிரமாய்த் துலங்கினும் மீண்டும் கரியெனப்
பணியும் உலகிலே மனிதரின் பக்குவம் மட்டுமே பலப்படும்
புனிதன் ஆகிடும் புண்ணியம் பூவுல கோர்க்கே சத்தியம்
கனிதல் கடமை யாற்றியே கடவுளைச் சேருதல் சாத்தியம்
பு₃த்₃த்₄யா விஶுத்₃த₄யா யுக்தோ த்₄ருத்யாத்மானம் நியம்ய ச .
ஶப்₃தா₃தீ₃ன்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக₃த்₃வேஷௌ வ்யுத₃ஸ்ய ச (18-51)

87 (18-51) துாய்மையான புத்தியுடன், உறுதியுடன் தன்னை நிறுத்தி, புறப் பொருள் சேர்க்கையை விடுத்து….

சேதனம் ஒன்றே சீவன் சீரினைக் காட்டும் கருவி
ஆதலால் அறிவைத் தெளிவு ஆக்குதல் முதலில் கருதி
காதலால் துாய்மை அன்பு கனிதலால் புலனின் அம்பு
நோதலால் தனிமை ஏற்று நோகுதல் ஆசையால் வம்பு
விவிக்தஸேவீ லக்₄வாஶீ யதவாக்காயமானஸ​: .
த்₄யானயோக₃பரோ நித்யம் வைராக்₃யம் ஸமுபாஶ்ரித​: (18-52)

88 (18-52) பிறவற்றில் நாட்டம் விட்டு, (மனதால்) தனித்திருந்து, மனம், வாக்கு, காயத்தால் தவமிருந்து ….

சேர்வதை விட்டுத் தனிமை சென்றிடும் பயிற்சி பெற்று
நேர்வகை யான சோறு நேரத்தே கடைப் பிடித்து
பார்வையை நிலை நிறுத்திப் பக்குவம் வாக்கில் உண்மை
கூர்மையை மதி இருத்திக் குறிப்பினை நழுவாத் தன்மை
அஹங்காரம் ப₃லம் த₃ர்பம் காமம் க்ரோத₄ம் பரிக்₃ரஹம் .
விமுச்ய நிர்மம​: ஶாந்தோ ப்₃ரஹ்மபூ₄யாய கல்பதே (18-53)

89 (18-53) தான், தன்னுடையது என்ற மாயம் விட்டு, தூய உள்ளத்தால், அமைதியில் நிலைப்பவன் பிரம்மத்தை அடைகிறான்.

கொள்பவன் கர்வம் விட்டுக் கொடுப்பவன் ஆசை கோபம்
தள்பவன் தான்தா னென்ற தன்மையை விட்டுத் துயரம்
வெல்பவன் உள்ளும் புறமும் வெளுத்தவன் அமைதி ஞானம்
கொள்பவன் பிரம்ம லோகக் கொடுப்பினை அடைதல் உறுதி
ப்₃ரஹ்மபூ₄த​: ப்ரஸன்னாத்மா ந ஶோசதி ந காங்க்ஷதி .
ஸம​: ஸர்வேஷு பூ₄தேஷு மத்₃ப₄க்திம் லப₄தே பராம் (18-54)

90 (18-54) அத்தகையோன், அகமும், முகமும் மலர, இன்ப துன்பங்களைச் சமநிலையில் ஏற்று, நல்ல புத்தியாலும், பக்தியாலும், எங்கும் பிரம்மத்தைக் காண்பான்.

முக மலரும் அன்பும் முடிவிலா அருளும் தன்
அக மலரும் இன்பம் ஆத் மார்த்த சாந்தம்
சக உயிரின் கருணை சட மெனவே தனிமை
புக உயரும் புத்தி புலன் மலரும் பக்தி

91 (அதாவது, நல்ல புத்தியும், நல்ல பக்தியும் (அறிவும், அன்பும்) ஒன்றே. பக்தியோகமும், ஞானயோகமும் சங்கமிக்கும் சத்தியம் இங்கே பேசப்படுகிறது.)

பக்தியும் அறிவும் ஒன்றே படைப்பது ஒன்றை ஒன்று
சத்தியம் இதுவே இந்தச் சாத்திரம் அறிவ தாலே
நித்திய கர்மா செய்தும் நிறையறி வாற்றல் செய்தும்
முத்திய அன்பு செய்தும் முனைவது சமமென் றாகும்

92 ( மகனைப் பிரிந்த தந்தை, மீண்டும் அவனைக் காணும் போது, முதலில் அறிவால் இவனே மகன் என உணரந்து அன்பு பிறக்க, அந்த அன்பால், மகனைப் பற்றி மேலும் அறியும் ஆர்வம் விளைகிறது. பக்தியால் ஞானமும், ஞானத்தால் பக்தியும் விளைவதென்பது உட்பொருள்.)

தொலைத்த மகன் பலகாலம் துாரத்தே மறைந் திருக்க
இளைத்த பிதா மனம்வாட இறை யருளால் ஓர்நாளே
களைத்த மகன் கண்ணறியக் காணுவதா லறிந் தறிவு
விளைத்த பலன் அன்பன்றோ விந்தையிது உவ மானம்
ப₄க்த்யா மாமபி₄ஜானாதி யாவான்யஶ்சாஸ்மி தத்த்வத​: .
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஶதே தத₃னந்தரம் (18-55)

93 (18-55) பக்தியினால் என்னை உள்ளது உள்ளபடி உணரவும், உண்மையை ஆராய்ந்து அறியவும், யோகி தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். அந்த யோகப் பயிற்சிக்கு அன்பு, அறிவு இரண்டும் தேவை.

அறிவின் முதிர்ச்சி அன்பு அன்பின் முதிர்ச்சி அறிவு
தெரிவன் பயிற்சி செய்து தெளியும் தெய்வம் என்று
செரிவை ஸாதகப் பறவை சேரும் இரண்டு சிறகை
அறிவு அன்பு என்று அறிதல் உண்டு உலகு
ஸர்வகர்மாண்யபி ஸதா₃ குர்வாணோ மத்₃வ்யபாஶ்ரய​: .
மத்ப்ரஸாதா₃த₃வாப்னோதி ஶாஶ்வதம் பத₃மவ்யயம் (18-56)

94 (18-56) அதே போல, செயலில் அறிவும் (அநுபவ அறிவு), அறிவில் செயலும் (பயிற்சியால் முயற்சி) நிலைக்கும். (அதாவது கர்ம யோகமும், ஞான யோகமும் ஒன்றை ஒன்று வளர்க்கும்). இதனை அறிந்து என்னைச் சரணடைந்தால், நல்ல கதி கிடைக்கும்.

கருமம் விளைப்ப தறிவு கருத்தில் முளைத்த கருமம்
மருமம் அறிந்த தனால் மயக்கம் விடுப்ப துலகம்
பருவம் வகுத்த பாதை பயிற்சி எடுத்த போது
உருவம் அறிய லாகும் உண்மை விளங்க லாகும்
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ன்யஸ்ய மத்பர​: .
பு₃த்₃தி₄யோக₃முபாஶ்ரித்ய மச்சித்த​: ஸததம் ப₄வ (18-57)

95 (18-57) மனதால் என்னைச் சேர்ந்து (பக்தி யோகம்), என்னையே குறிக்கோளாய்க் கொண்டு (ராஜ யோகம்), கர்மங்களைச் செய்து (கர்ம யோகம்), எதையும் ஆராய்ந்து உறுதியுடன் உண்மையைக் கடைப்பிடிக்கும் (புத்தி யோகம்) தன்மையுடையவனாய் நீ இருப்பாயாக.

அன்பினால் என்னைச் சேர்க ஆராயும் அறிவைச் சார்க
பண்பினால் வகுத்த தர்மம் பாவிக்கும் கடமை சேர்க
நம்பினார் கெட்டார் இல்லை நான்மறை நவிலக் கேட்க
தெம்பினால் தெளிக ஞானத் தேர்ச்சி அடைவ னாக
மச்சித்த​: ஸர்வது₃ர்கா₃ணி மத்ப்ரஸாதா₃த்தரிஷ்யஸி .

அத₂ சேத்த்வமஹங்காரான்ன ஶ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி (18-58)

96 (18-58) என்னிடம் நிலைத்த சித்தத்தை உடையவனாகில், இடர் கடப்பாய். அல்லாமல், ஆணவத்தால் அறிவுரையைப் புறக்கணித்தால் நீ அழிந்து விடுவாய்.

கதியாய் என்னைச் சேர்க கடமையைச் செய்க கீதை
மதியாய் ஏற்க உலகம் மதிக்கப் பெற்று வாழ்க
சதியாய் நினைத்து ஓதும் சத்தியம் மறுப்ப தானால்
வதியாய் வகை யிழந்து வையத்தில் அழிந்து போக
யத₃ஹங்காரமாஶ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மன்யஸே .
மித்₂யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி (18-59)

97 (18-59) மயக்கத்தாலும், ஆணவத்தாலும், போர் புரியக் கூடாது என நினைப்பாயானால், உன்னுடைய இயற்கை விதியே உன்னுள் மாறுதலைச் செய்து, உனது கடமையைச் செய்ய வைக்கும்.

ஆணவ மலத்தால் மதியின் அகந்தை ஐயப் பாட்டால்
பேணுவ தாகும் க்ஷத்ரிய பெருமையை விட்டாய் மேலோர்
நாணுவ தாகும் விசயா நலிந்திடும் உனது கர்வம்
காணுவ தான இயல்பில் கடமையே முடிக்கும் தர்மம்
ஸ்வபா₄வஜேன கௌந்தேய நிப₃த்₃த₄​: ஸ்வேன கர்மணா .
கர்தும் நேச்ச₂ஸி யன்மோஹாத்கரிஷ்யஸ்யவஶோ(அ)பி தத் (18-60)

98 (18-60) இயற்கையில் பிறந்த, கருமங்களால் கட்டுண்டு, எதை மயக்கத்தால் செய்ய வேண்டாம் என நினைக்கிறாயோ, அதை நீயே வேறு வழியின்றிச் செய்வாய். இதுவே விதி.

பொறுத்துப்பார் நீயே எழுவாய் போரிடத் துணிவாய் தருமக்
கருத்துப்பார் வையினால் கையில் காண்டீபம் எடுப்பாய் கருமம்
மறுத்துப்பார் மறையும் மமதை மாறாகத் துணியும் இயல்பு
திருத்திப்பார் முடிக்கும் வெற்றி தீதறக்கெளந் தேயா கேட்க
ஈஶ்வர​: ஸர்வபூ₄தானாம் ஹ்ருத்₃தே₃ஶே(அ)ர்ஜுன திஷ்ட₂தி .
ப்₄ராமயன்ஸர்வபூ₄தானி யந்த்ராரூடா₄னி மாயயா (18-61)

99 (18-61) ஈஸ்வரன் எல்லோர் இதயத்திலும் இருந்து நம்மை ஆட்டுவிக்கிறான்.

அர்ச்சுனா அனைவர் இதயம் ஆண்டவன் கோயில் ஈசன்
தர்ப்பரன் தருமன் மதியன் தாரகன் சுயம்ப்ர காசன்
கற்பகத் தருவாய்க் கருணை கரப்பவன் களத்தில் மாயை
விற்பனன் வினைகள் யாவும் விதிப்பவன் அவனே கர்த்தா
தமேவ ஶரணம் க₃ச்ச₂ ஸர்வபா₄வேன பா₄ரத .
தத்ப்ரஸாதா₃த்பராம் ஶாந்திம் ஸ்தா₂னம் ப்ராப்ஸ்யஸி ஶாஶ்வதம் (18-62)

100 (18-62) நீ அவனையே அடைக்கலமாக அடைந்து விடு. அவனே உனக்கு மனச் சாந்தி தருவான். அவனால் நீ உனது தருமத்தைச் செய்.

பாண்டவனே பார்த்தா உன்னுள் பரந்துள்ள இதயக் கோயில்
ஆண்டவனை அருளை அன்பை அண்டிடுக அவனே தஞ்சம்
வேண்டுவன தருவான் உள்ளே வெளிவரவே வருவான் நெஞ்சம்
ஈண்டவனைச் சரணம் என்றே இயக்கிடுவாய் கருமம் தருமம்
இதி தே ஜ்ஞானமாக்₂யாதம் கு₃ஹ்யாத்₃கு₃ஹ்யதரம் மயா .
விம்ருஶ்யைதத₃ஶேஷேண யதே₂ச்ச₂ஸி ததா₂ குரு (18-63)

101 (18-63) இப்பரம ரகசியம் என்னால் உனக்கு விளக்கப்பட்டது.

மிகமிக ரகசியம் இது மீறாத அதிசயம் அகம்
தகதகத் தொளிரும் கதிர் தரிசன மளிக்கும் புதிர்
அகமுக மலர்த்தும் சிவம் ஆன்ம தரிசன வரம்
புகழுட லிருத்தும் கடன் புரிவதை உணர்த்தும் உரை

102 (18-63) இங்கே சொன்ன சொற்களை நன்றாகச் சோதித்து ஆராய்ந்து, அதனால் செய்வன எதுவென அறிந்து கொள்.

சொன்ன சொற்கள் எல்லாம் சோதித்து ஆராய்ந்து பார்த்து
அன்ன பட்சியைப் போல் ஆவன எடுத்துச் சேர்த்துப்
பின்ன மான திந்தப் பிறவிக்கு வைத்த கர்மம்
தன்னை ஆற்று கின்ற தன்மை அடைய வேண்டும்

103 ( யார் எதைச் சொன்னாலும், அதனை முழுமையாக ஆராய்ந்து, தக்க உண்மையைத் தக்க காலத்தில் நம்புவதே கல்வி அல்லவா? இறைவனாகிய ஸ்ரீகிருஷ்ணர், விசயனிடம் தான் கூறிய சொற்களையும் ஆராய்ந்து ஏற்கச் சொல்வது, உபதேசிக்கும் ஆசிரியப்பண்பிற்கு உன்னத எடுத்துக்காட்டு.)

எப்பொருள் யாரே கூறினும் என்னென ஆய்ந்தது அறிவிலே
துப்புற வானது நல்லது துய்ப்பது அறிவுடை லட்சியம்
செப்பினேன் அர்ச்சுனா செயித்திடு செகத்திலே பிறப்பது புத்தியால்
கப்பிய கடமைகள் செய்திடுங் காரணத் தாலது கற்றிடு
ஸர்வகு₃ஹ்யதமம் பூ₄ய​: ஶ்ருணு மே பரமம் வச​: .
இஷ்டோ(அ)ஸி மே த்₃ருட₄மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் (18-64)

104 (18-64) என்னுடைய பேச்சைக் கேள். எனக்குப் பிரியமானவன் நீ என்பதால், இந்த ரகசியத்தைச் சொன்னேன். (இதன்படி நீ நடந்து, உலகை அதர்மத்திலிருந்து காத்து, வாழ வை.)

காதலால் உனக்கு மீண்டும் கணக்காய் அரிய வார்த்தை
ஓதுவேன் உணரக் கேட்டு உன்மனம் ஆய்ந்து பார்த்து
நீதியைச் செய்க உலகம் நிமிர்ந்திடச் செய்க தருமம்
பாதியை விட்டா னென்ற பாவத்தை மறையச் செய்க
மன்மனா ப₄வ மத்₃ப₄க்தோ மத்₃யாஜீ மாம் நமஸ்குரு .
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே (18-65)

105 (18-65) உன் மனத்தை என்னிடம் நிறுத்தி, பக்தியால் வேள்வி செய்து, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுக. இது நான் உனக்குத் தரும் சத்தியம்.

சத்தியம் சத்தியம் இங்கே சாற்றிய தெல்லா முண்மை
நித்தியம் பத்தியால் என்னையே நினைப்பதா லுனக்கு நன்மை
வித்திடும் முத்தினை வைத்தேன் விசயாஉன் விவேகத் தீயில்
பத்திடும் பஞ்சினைப் போலே பழியினை அழித்து மீள்க
ஸர்வத₄ர்மான்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ .
அஹம் த்வா ஸர்வபாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச​: (18-66)

106 (18-66) செயல் துறவால் என்னையே சரணடைந்து பற்றற்று உனது கடமையைச் செய். நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் காப்பேன். கவலையை விடு.

அடைக்கலம் நானே உந்தன் ஆறுதல் நானே உலகம்
படைத்தவன் நானே என்னைப் பாவித் தடைவ தாலே
துடைத்தது துயரம் எண்ணம் தூயது அதனால் உண்மை
கிடைத்தது சாந்தி என்னும் கீதோப தேசம் கேட்டாய்
இத₃ம் தே நாதபஸ்காய நாப₄க்தாய கதா₃சன .
ந சாஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ(அ)ப்₄யஸூயதி (18-67)

107 (18-67) இந்த ரகசியத்தை ஒருகாலும் தவமில்லாதவனுக்கோ, பக்தியில்லாதவனுக்கோ, பணியாற்றானுக்கோ, கேட்க விரும்பாதவனுக்கோ, என்னை வெறுப்பவனுக்கோ கூறாதே.

தானம் தவமில் லாதவனும் தன்கடன் செய்யா தவனும்
மோனப் பொருளில் பக்தி முனையத் துணியா தவனும்
காணத் தெரியா தவனும் கடவுள் நம்பா தவனும்
ஆன தரிதாம் கீதை அறியக் கூடாமல் காக்க
ய இத₃ம் பரமம் கு₃ஹ்யம் மத்₃ப₄க்தேஷ்வபி₄தா₄ஸ்யதி .
ப₄க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஶய​: (18-68)

108 (18-68) கீதையாகிய இந்த ரகசியத்தை, என்னுடைய பக்தர்களுக்கு விளக்குபவன் என்னை வந்தடைவான்.

கற்பகத் தருவே கீதை காம தேனுவே கீதை
அற்புத வேத சாகரம் ஆழ்ந்த முத்தே கீதை
நற்பய னாலே என்னை நாடிய பக்தர்க் கிதனைச்
சொற்பய னறியச் சொல்லும் சோதரன் என்னைச் சேர்வான்
ந ச தஸ்மான்மனுஷ்யேஷு கஶ்சின்மே ப்ரியக்ருத்தம​: .
ப₄விதா ந ச மே தஸ்மாத₃ன்ய​: ப்ரியதரோ பு₄வி (18-69)

109 (18-69) அவ்வாறு கீதையின் ஞானத்தை நல்லோரும், எளியோரும் அறியச் செய்பவன் எனக்கு மிகவும் பிரியமானவன் ஆவான்.

உயற்கருவி யாகும் கீதை உபதேசம் ஏற்றுச் சித்தர்
பயிற்சிஎன நாளும் தருமப் பணியையே ஆற்றிப் பக்தர்
முயற்சியுறக் கீதைச் சொற்பணி முனையறியச் செய்யும் நற்பணி
செய்றகரிய செய்வான் புனிதன் செகத்திலே எனக்கு இனியன்
அத்₄யேஷ்யதே ச ய இமம் த₄ர்ம்யம் ஸம்வாத₃மாவயோ​: .
ஜ்ஞானயஜ்ஞேன தேனாஹமிஷ்ட​: ஸ்யாமிதி மே மதி​: (18-70)

110 (18-70) இந்த ஞானயக்ஞம் ஆகிய உரையாடலை எவன் ஒருவன் படிக்கிறானோ, அவனால் நான் வணங்கப்பட்டவன்.

ஞான யக்ஞம் கீதை நான்மறை சாரம் கீதை
ஊன மழிக்கும் கீதை உண்மை விளக்கம் கீதை
மோன முறைக்கும் கீதை முற்றும் விளக்கும் கீதை
காணக் கற்பது ஒன்றே கடவுள் வணக்க மாகும்
ஶ்ரத்₃தா₄வானனஸூயஶ்ச ஶ்ருணுயாத₃பி யோ நர​: .
ஸோ(அ)பி முக்த​: ஶுபா₄ம் ̐ல்லோகான்ப்ராப்னுயாத்புண்யகர்மணாம் (18-71)

111 (18-71) நம்பிக்கையோடும், பொறாமையின்றியும் யார் இதனைக் கேட்கிறார்களோ, அவர்களும் புண்ணியத்தால் விடுதலை அடைகிறார்கள்.

வித்தகக் கீதா சாரம் விளம்பிடும் விளக்கம் கேட்டு
சத்தியம் இதுவே என்ற சங்கல்பம் செய்து கொண்டு
நித்தியம் இதனை உள்ளம் நிர்மலம் அடையப் பேணும்
பத்தியன் பக்தன் என்னைப் பாவித்து அடையும் முக்தன்
கச்சிதே₃தச்ச்₂ருதம் பார்த₂ த்வயைகாக்₃ரேண சேதஸா .
கச்சித₃ஜ்ஞானஸம்மோஹ​: ப்ரனஷ்டஸ்தே த₄னஞ்ஜய (18-72)

112 (18-72) இதுவரை நான் சொன்ன இந்தப் பெரிய ரகசிய ஞானத்தை, ஒரு முனைப்பட்ட மனத்துடன் கேட்டாயா? அதனால் உனது அறியாமையும், மயக்கமும் நீங்கியதா? சொல் பார்த்தனே.

பார்த்தனே ஒருமைப் பட்ட பக்குவம் மனதில் உண்டோ
வார்த்திடும் கீதா சாரம் வந்ததோ கல்வி கண்டோ
போர்த்திய மாயப் பூச்சு புலர்ந்ததோ மயக்கம் விட்டு
நேர்த்திய தாமே நியதி நிலைத்ததோ இறைவன் கேட்டான்

அர்ஜுன உவாச .

நஷ்டோ மோஹ​: ஸ்ம்ருதிர்லப்₃தா₄ த்வத்ப்ரஸாதா₃ன்மயாச்யுத .
ஸ்தி₂தோ(அ)ஸ்மி க₃தஸந்தே₃ஹ​: கரிஷ்யே வசனம் தவ (18-73)

விசயன் வணக்கம்

113 (பகவத்கீதை என்ற பரஞான மழையில் நனைந்து, உள்ளம் உருகி, உடல் பணிந்து, மனம் தெளிந்த விசயன் மகிழ்ச்சியாலும், பணிவாலும் வணக்கத்துடன் சொல்கிறான். )

ஆனந்த மழையில் நனைந்தவன் அற்புத நெறியில் இணைந்தவன்
வானந் திளைத்த பறவையாய் வடிக்கும் சுதந்திரம் அடைந்தவன்
ஞானன் பாரதப் போரினை நடத்தும் நாயகன் அடியவன்
காணக் கிடைக்கா காட்சியைக் கண்டவன் காண்டீபன் சொல்வனே

114 (18-73) அச்சுதா, உன் அருளால் மயக்கம் தெளிந்து, சுய அறிவைப் பெற்று உறுதியாக உள்ளேன். இனி உன் ஆணைப்படி நடப்பேன்.

அச்சுதா என்ன சொல்ல ஆனந்தம் பராம னந்தம்
இச்சையை இங்கே சொன்ன இன்னருள் கீதா சாரம்
இலச்சையை ஒழித்து எந்தன் இலட்சியம் அளித்த வேதம்
நிச்சயம் அறிவேன் இனிமேல் நின்னுரை மதிப்பே னய்யா

115 ( உயிர்களின் பிறப்பும், வளர்ப்பும், அழிவும், அவைக்கான காரணங்களையும் கண்டேன். )

மாறாத நிலையைக் கண்டேன் மதிகண்டேன் விதியைக் கண்டேன்
கூறாத மொழியைக் கேட்டேன் குவலயத் துயரும் உயிர்கள்
தீராத வினையால் பிறவி திரும்பிடும் அவலம் கண்டேன்
நேரான கரும யோக நெறியெனும் தருமம் கேட்டேன்

116 (கடமையைப் பற்றற்றுச் செய்யும் இயற்கை நெறி புரிந்தது. )

மடமை அழிந்தது எந்தன் மயக்கம் அழிந்தது செய்யும்
கடமை விரிந்தது நெஞ்சம் கலக்கம் தெளிந்தது உந்தன்
உடமை பரந்தது அதனால் உலகம் உயர்ந்தது சிந்தை
படவும் பக்தியும் கருமப் பணிவும் அறிந்தது என்றான்

ஸஞ்ஜய உவாச .

இத்யஹம் வாஸுதே₃வஸ்ய பார்த₂ஸ்ய ச மஹாத்மன​: .
ஸம்வாத₃மிமமஶ்ரௌஷமத்₃பு₄தம் ரோமஹர்ஷணம் (18-74)

சஞ்சயன் உரை

117 (18-74) மன்னா, இதுநாள் வரை ஸ்ரீகிருஷ்ணருக்கும், விசயனுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டு எனக்கு மகிழ்ச்சியால், அதிர்ச்சியும், சிலிர்ப்பும் உண்டானது.

மன்னா இதுநாள் வரையில் மாதவன் மதுசூ தனனே
தன்னால் இயங்கும் விசயன் தரம்பெறக் கூறும் கீதம்
சொன்னா னருளிச் சொன்ன சொற்ளே கேட்டேன் எந்தன்
கண்ணா லருவிமேல் மயிற் கால்களும் சிலிர்த் தய்யா
வ்யாஸப்ரஸாதா₃ச்ச்₂ருதவானேதத்₃கு₃ஹ்யமஹம் பரம் .
யோக₃ம் யோகே₃ஶ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத₂யத​: ஸ்வயம் (18-75)

118 (18-75) வியாஸரின் அருளால், நான் பரம ரகஸியமான ஞான உரையை ஸ்ரீகிருஷ்ணரே நேரடியாகச் சொல்வதைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

ஈசன் ஸ்ரீ கிருஷ்ணன் ஈங்குரை செய்யும் போதில்
வியாசன் இரக்கங் கொண்டு வழங்கிய ஞானக் கண்ணால்
பேசுவ தெல்லாம் கேட்டேன் பெரிய ரகஸியம் கேட்டேன்
காசினி தேது வேண்டும் களிப்பிலே திகைத்து நின்றேன்
ராஜன்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத₃மிமமத்₃பு₄தம் .
கேஶவார்ஜுனயோ​: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு​: (18-76)

119 (18-76) புண்ணியத்தை அளிக்க வல்ல கேசவாருச்சுனரது ஞான உரையாடலை எண்ணி எண்ணிக் களிப்படைகிறேன்.

புண்ணியம் அளிப்ப திந்த புருஷோத் தமரின் வாக்கு
எண்ணிய தாலே எந்தன் எழுவினை யாதும் போக்க
தண்ணிய னானேன் தர்மன் தயாபரன் உரைத்த தம்
சென்னியி லேற்றி நின்றான் சீலன் சஞ்சய னையன்
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்₃பு₄தம் ஹரே​: .
விஸ்மயோ மே மஹான் ராஜன்ஹ்ருஷ்யாமி ச புன​: புன​: (18-77)

120 (18-77) ஹரியினுடைய மிக அற்புதமான வடிவினையும், வார்த்தைகளையும் நினைக்க, நினைக்க, அரசே, எனக்கு மகிழ்ச்சியும், அறிவும் உண்டாகிறது.

ஹரியின் உபதே சத்தைக் களித்தே கேட்டே னய்யா
சரியெது என்ப தான சத்தியம் அறிந்தே னய்யா
புரிவது கருமம் என்றும் புலர்வது ஞானம் என்றும்
பரிவது பக்தி என்றும் பாடம் பயின்றே னய்யா
யத்ர யோகே₃ஶ்வர​: க்ருஷ்ணோ யத்ர பார்தோ₂ த₄னுர்த₄ர​: .
தத்ர ஶ்ரீர்விஜயோ பூ₄திர்த்₄ருவா நீதிர்மதிர்மம (18-78)

121 (18-78) எங்கெல்லாம் யோகேசுவரனான ஸ்ரீகிருஷ்ணரும், வில்லேந்திய பார்த்தனும் இருக்கின்றனரோ (எங்கே உண்மையும், யோக தர்மமும் உள்ளதோ) அங்கெல்லாம் சந்தோஷமும், நீதியும் நிலைத்திருக்கும்.

எங்கெங்கு எல்லாம் கிருஷ்ணன் ஏகாந்த யோக நாதன்
பங்கென்று பாடம் கேட்கும் பார்த்தன் பயிற்சி யாளன்
தங்குவர் உண்டோ அங்கே தருமமும் நீதி வெல்லும்
அங்கங்கே எல்லாம் சீவன் ஆனந்தம் நிறைய வாழும்

ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
மோக்ஷஸம்ன்யாஸயோகோ₃ நாம அஷ்டாத₃ஶோ(அ)த்₄யாய​: (18)

இவ்வாறு உபநிஷத்தும் பிரம்ம வித்தையும் யோகநூலும் ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன ஸம்பாஷணையுமான ஸ்ரீமத் பகவத்கீதையில்
மோட்ச ஸந்யாச யோகம் (முக்தி துறவு நெறி) எனும் பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுறும்.

  17 –

  பகவத்கீதை பயிலும் பலன்

Related Posts

Share this Post