Prayer

Om paarthaaya pratibodhitaam bhagavataa naaraayanenaswayam,
Vyaasena grathitaam puraanamuninaa madhye mahaabhaaratam;
Advaitaamritavarshineem bhagavateem ashtaadashaa dhyaayineem,
Amba twaam anusandadhaami bhagavadgeete bhavadweshineem.

(1) பகவத்கீதையே நம்மைப் பராமரிக்கும் தாய். அவருக்கு முதல் வணக்கம்.

ஓம் பகவத்கீதம் வேதகம் பார்த்தன் பயத்த சாதகம்
உலகத்துயரைப் போக்கிடும் உத்தமன் நாரணன் போதகம்
மாமுனி வியாசன் பாரதம் மாகவிவைத்த மந்திரம்
சாவினி தாவது ஏதினி சத்தியவேதா யந்திரம்
அன்பாலான அமிர்தமே அருபதி னெட்டு வடிவமே
பண்பால் தியானம் ஆற்றவே பக்குவஞானம் ஏற்றவே
தாயே தாதயாபரி தருமாமிர்தப் பராபரி
நீயேகதியென் நிம்மதி நிலைப்பது உந்தன் சந்நிதி
Namostu te vyaasa vishaalabuddhe phullaaravindaayatapatranetra;
Yena twayaa bhaaratatailapoornah prajwaalito jnaanamayah pradeepah.

(2) வேதவியாசனே நமது ஞானசற்குரு. அவருக்கு வணக்கம்.

வேதவியாசா விநாயகா வேள்வித் தருவே தயாபரா
ஓதற்கரிய சதுர்வேதம் ஒப்பற்கரிய உபதேசம்
மாபாரதமாம் ஆகுதியில் மலரும்ஞானப் பெருந்தீபம்
தாமாய்எரியத் தனதுவிழித் தாமரைமலரும் பரமாத்மா
ஞானசற்குரு நாராயணா நமஸ்கரிப்பேன் சடாட்சரா
மோனப்புலமை தருவாயே மும்மைப்பலனை அருள்வாயே
Prapannapaarijaataaya totravetraikapaanaye;
Jnaanamudraaya krishnaaya geetaamritaduhe namah.

(3) கீதாசிரியன் ஸ்ரீகிருஷ்ணரே. அவருக்கு வணக்கம்.

கீதாசிரியா கிருஷ்ணா கீர்த்தனா நமஸ்காரம்
வேதாபரணா குருவே வேணுகானா நமஸ்காரம்
பாரிஜாதா பரமபவித்ரா பரபிரம்மா நமஸ்காரம்
வாரியாதும் கல்பதரு வளவிருட்சா நமஸ்காரம்
ஞானப்பாலின் இடையா நாராயணா நமஸ்காரம்
மோனப்பொருளே முகுந்தா மோகனமுரளி நமஸ்காரம்
Sarvopanishado gaavo dogdhaa gopaalanandanah;
Paartho vatsah sudheer bhoktaa dugdham geetaamritam mahat.

(4) வேதமே காமதேனுவாகிய பசு. மயங்கிய சீவான்மாவாகிய விசயனே கன்று. பசுவைக் கறந்த தீம்பாலே கீதைஅருளுடன் அதனைக் கறந்தளித்த இடையரே ஏகாந்தன் கண்ணன்.

முன்னமே மொழிந்த வேதம் முளைத்த உபதேசப் பசுவைக்
கண்ணனே இடையன் ஞானக் காம்பினை இழுத்துக் கறவை
வண்ணமாய் விசயன் கன்று வாரியே மனிதர் இன்று
திண்ணமாய்க் குடிக்கும் கீதைத் தீஞ்சுவைப் பாலைத் தந்தான்
Vasudevasutam devam kamsachaanooramardanam;
Devakeeparamaanandam krishnam vande jagadgurum.

(5) ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோம்.

கம்ஸ மர்த்தனன் சாணுர நாசகன்
அம்ஸ தேவகி அருளுடை பாலகன்
வாசு தேவன் வார்ப்பினி தானவன்
மூசு மாயா முகிலழித் தாதவன்
வேத மாதவன் விற்பனன் நற்குரு
கீத மாதவன் கிருஷ்ணா சரணம்
Bheeshmadronatataa jayadrathajalaa gaandhaaraneelotpalaa;
Shalyagraahavatee kripena vahanee karnena velaakulaa;
Ashwatthaama-vikarna-ghora-makaraa duryodhanaavartinee;
Sotteernaa khalu paandavai rananadee kaivartakah keshavah.

(6) குருட்சேத்திரமாகிய (சம்சார) ஆற்றில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலங்களான கெளரவர்களைக் (ஆசாபாசங்களைக்) கடந்து, பஞ்சபாண்டவர்களும், திரெளபதியும் (ஐந்து கோசங்களும் சீவாத்மாவும்) கரை (முக்தி) சேரச் செய்ய, படகினை (யோகத்தை) கீதையாகிய துடுப்பால் (நல்லுபதேசத்தால்) நடத்திய நாயகன் ஸ்ரீகிருஷ்ணர் (பரமாத்மா).

ஆர்ப்பிக்கும் குருட்சேத் திரத்து
ஆற்றுக்கு இரண்டு பக்கம்
சேர்ப்பிக்கும் கரையே பீஷ்மன்
சேதனன் துரோணன் நீரைச்
சார்ந்தவன் சயத்ரதன் ஆங்கே
சாய்ந்தாடும் ஆம்பல் நீலம்
காந்தாரன் சல்லியன் முதலை
கர்ணன் கிருபன் அலைகள்
விழிநீர் வழியுஞ் சுறாக்கள்
விகர்ணன் அஸ்வத் தாமன்
சுழிநீர் துரியோ தனனே
சுழன்றே தத்த ளிக்கும்
படகினைப் பகவன் ஓட்டிப்
பாண்டவர் கரையைச் சேரும்
திடமினைத் தரவே திசைகள்
திருப்பிடும் துடுப்பே கீதை
Paaraasharya vachah sarojamamalam geetaarthagandhotkatam;
Naanaakhyaanakakesaram harikathaa sambodhanaabodhitam;
Loke sajjana shatpadairaharahah pepeeyamaanam mudaa;
Bhooyaadbhaaratapankajam kalimala pradhwamsinah shreyase.

(7) பராசரர் மைந்தனாகிய வியாசரால் அமைக்கப்பட்டு வேதநீரால் நிரப்பப்பட்ட பெரிய ஏரியில் மலர்ந்த தாமரைப் பயிரே மஹாபாரதம். இதனைத் தொட்டும் தொடாமலும் சுற்றித் திளைத்திருக்கும் இலைகளும், கொடிகளுமே பலவகையான இதிகாச புராண நீதிக்கதைகளும், வரலாறும். இவற்றினுாடே உயர்ந்தாங்கு விரியும் மலராகிய கீதையைத் தனது குழலாகிய மொழியால் ஊதித் திறந்து, நல்லறிவாகிய பரம ரஹசியத்தை நமக்கு அளித்த பேரருளே ஸ்ரீகிருஷ்ணர். நன்முயற்சியுடன், கீதாசாரமாகிய ஞானத்தேனை நயந்து குடித்துப் பிறருக்குப் பயன்படச் சேமிக்கும் தேனீக்களே நமது குருமார்கள். )

பராசரன் பாலன் வியாசன் பகுத்தறிந் தமைத்த வேதம்
சராசரம் உயரச் செய்யும் சத்தியம் நிறைத்த ஏரி
பரந்திடும் நீரில் கதிரைப் பார்த்ததும் மலரும் பூவே
சிறந்திடும் உவமை யாகச் செய்திட்ட பாரதப் பாவே
சூழ்ந்திடும் தண்டும் கொடியும் சுற்றியே தழுவும் இலையும்
ஆழ்ந்திடும் கதையும் நயமும் அமைந்திடு மிதிகாச இதழைச்
சரியான உரையால் மெல்ல ஹரிமாலன் திறந்து வைத்து
பரிவாக மலரின் வாசம் பரிமாறும் பகவத் கீதைத்
தேனைத் தெள்ளிய அமுதைத் தீதற்ற ஞானியர் தேனீ
தானாய்க் குடித்து எடுத்து தாரணி கொடுக்க வைத்தான்
Mookam karoti vaachaalam pangum langhayate girim;
Yatkripaa tamaham vande paramaanandamaadhavam

(8) மாதவா, நீயே ஊமையைப் பேசச்செய்வாய். ஊனனை நடக்கச்செய்வாய். பேரருளான பெருமாளே, பரமானந்தப் பரமாத்மா, உனக்கு எனது நமஸகாரங்கள்.

வாக்கில்லா ஊமைக்கு வாய்மொழியும் தருவாயே
போக்கில்லா முடவர்க்குப் போக்கிடமும் அருள்வாயே
நோக்கறிய நோக்கே நூதனமே பேரருளே
காக்கின்ற கார்மேகா கண்ணா நமஸகாரம்
Yam brahmaa varunendrarudramarutah stunwanti divyaih stavaih,
Vedaih saangapadakramopanishadair gaayanti yam saamagaah,
Dhyaanaavasthitatadgatena manasaa pashyanti yam yogino,
Yasyaantam na viduh suraasuraganaa devaaya tasmai namah.

(9) பிரம்மன், வருணன், இந்திரன், ருத்ரன், மாருதி ஆகியோரால் பக்தி&&ன் வணங்கப்படுவபராயும், ஸாம வேத விற்பன்னர்களுடைய சந்தங்களாலும், அங்கங்களாலும், கிரமங்களாலும், உபநிடதங்களாலும் பூசிக்கப்படுபராயும், யோகிகளால் தியானத்தால் துதிக்கப்படுபவாரயும், தேவ அசுரர்களால் ஆதியும்
அந்தமும் தேடியும் காணக்கிட்டாதவாராயும் விளங்கிடும் பரம்பொருளே உனக்கு நமஸ்காரம்.

பிரமன் பேணிய பொருளே போற்றி
வருணன் வணங்கும் வடிவா போற்றி
இந்திரன் உன்கால் இருப்பான் போற்றி
ஈசன் ருத்திரன் வகுப்பான் போற்றி
சந்தமும் பதமும் சாற்றிய கிரமும்
வந்தமை ஸாம வேதோப நிஷதமும்
பாடிய பெரியோர் பவப்பொருள் போற்றி
தேடிய யோகம் திகையும் வளவர்
மூடிய மனதில் முடக்கிய மூச்சில்
நாடிய தியானம் நவின்ற மந்திரத்தின்
மூலப் பொருளே முழுமுதற் கருணை
காலங் கடந்த கலியுகத் தருவே
முதலும் முடிவும் முழுநிலை அறியா
சிதலம் அழியச் சீலரும் அசுரரும்
காணக் கிடைக்கா கதியே கருமம்
பேணக் கிடைக்கும் பதியே போற்றி.

10. ( பாடல் வடிவிலும், வாக்கிலும், படிக்கும் வகையிலும், புரிந்த நிலையிலும் விளைந்த தவறுகளை ஏற்று, எனக்கு அருள வேண்டும். இனி பகவத்கீதையே எனது வாழ்க்கைப் பாதையாக அமைய வேண்டும். )

அன்பே அருளே அகண்டா னந்தப்
பண்பே பயிரே பகவான் என்றே
உலகம் போற்ற உலவிய திருவே
கலகம் அழித்த கற்பகத் தருவே
ஏற்க என்னுரை எழுதிய பாடல்
பார்க்க பாட்டில் பதியுந் தவறுகள்
பட்டென அறுத்துப் பரிதாபப் பட்டு
விட்டென எந்தன் விசனம் விட்டு
அருளே அபயம் அளிப்பாய் உபயம்
தருவே னென்று தருவாய் உறுதி
எழுதிய சொல்லில் ஏற்படும் பிழைகள்
வழுதிய வார்த்தை வந்திடும் தவறு
எதுவா யினுமது மெதுவாய் நீக்கிப்
பொதுவா யுலகம் போற்றிடப் பயின்று
நாளும் பொழுதும் நடைபெறும் உடலில்
மூளும் போரே குருட் சேத்திரத்தில்
கண்ட சண்டை காண்பது உவமை
உண்டு வளர்த்த உடம்பே அமர்க்களம்
மனமும் அறிவும் மாறிடும் புலனும்
தினமும் ஆசை திணிப்ப தனாலே
நடத்தும் ஆட்டம் நாடக மாக்கும்
படத்துள் படித்த பாரதப் போரே
நிதமாய் வாழ்க்கை நிகழும் உண்மை
அதனால் நாங்கள் அனைவரும் அர்ச்சுனர்
நீயே சாரதி கீதையின் பாரதி
தாயே எந்தை தனயன் நற்குரு
கூடப் பிறப்பு குலவிய நட்பு
வேடம் கலைத்து விளக்கிடும் தீபம்
கண்ணா முரளி காவியப் பேரொளி
எண்ணா தமையும் ஏற்புடை ஜோதி
நீல வதனன் ஞால உதரன்
கோல நயனன் கோபா லாவெனும்
முகுந்த மாதவ மோகன முரஹரே
தகுந்த போதனை தந்த தாலுன்னை
நாளும் நினைக்க நல்லது நடக்க
மூளும் துயரம் முற்றிலும் விலகப்
பணிவேன் உந்தன் பகவத் கீதை
அணிவேன் எந்தன் உலகப் பாதை 

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post