வாழ்த்துரை

சுவாமி கமலாத்மநந்தர், ராமகிருஷ்ண மடம், சென்னை

…..தொன்மையான இந்து சமயம் தோற்றுவித்த பல அருள் நூல்களில், “பிரஸ்தானத்திரயம்” எனப்படுவதான முக்கியத்துவம் உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், ஸ்ரீபகவத்கீதை ஆகிய மூன்றுக்குமே தரப்பட்டுள்ளன. இவற்றுள், ஸ்ரீபகவத்கீதை ஒரு மோக்ஷக்ரந்தம் (முக்தி நூல்).

கீதா, கீதா எனத்திரும்பத் திரும்பச் சொன்னால், தாகி, தாகி (தியாகி) எனும் சொல் வருகிறது. வாழ்க்கையில் எவன் ஒருவன் ஆசையைத் துறக்கிறானோ அவனே கீதையின் ரஹஸியத்தை அறிந்தவனாவான். கீதையை முழுதும் படிக்க வேண்டியதில்லை. அதன் சாராம்ஸமான தியாகத்தைக் கடைப்பிடித்தாலே, கீதையைப் படித்ததன் முழுப் பலனும் கிடைக்கும் என்று பகவான் ஸ்ரீராமகிருஷணர் கூறுவது வழக்கம். சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்தமான, “வீரனாக எழுந்து நில்” என்ற கருத்துடன் துவங்கி “தர்மங்களையெல்லாம் அறவே விட்டு என்னையே சரணடைவாயாக. அதனால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை தருகிறேன்” என்ற சராணகதித் தத்துவத்துடன் (ஸ்லோகம் 18-66) ஸ்ரீபகவத்கீதை நிறைவு பெறுகிறது. தியாகமும், சரணாகதித் தத்துவமுமே முக்கியமானதென்றும், இப்பாடலே “சமரஸ்லோகம்” என்றும் ஆன்றோர் கருதுவர். ஸ்ரீபகவத்கீதை அனைவரும் பயிலவேண்டிய வாழ்க்கைப் பாடம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், முற்றும் துறந்த ஸந்யாசி கூடத் தன்னுடன் ஸ்ரீபகவத்கீதையை வைத்திருக்க வேண்டும் எனக் கூறுவார். தன்னுடைய பரிவ்ராஜிக வாழ்க்கையில் சுவாமி விவேகாநந்தர், ஒரு பகவத்கீதைப் புத்தகப் பிரதியை மட்டுமே தம்முடன் வைத்திருந்தார். மகாத்மா காந்திஜி அவர்களும், அவர்தம் சீடரான ஆச்சாரிய வினோபாவும், ஸ்ரீபகவத்கீதையைப் பயின்றும், பரப்பியும், அதற்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் வழிகாட்டியுள்ளனர்.

“ரிஷிகடன்” என்று ஒன்று உண்டு. வேதமாகிய செல்வத்தைப் பயிலுவதாலும், காப்பதினாலும், ரிஷிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தீருகிறது என்பது சான்றோர் வாக்கு. மஹான்களைப் போற்றுவது என்பது அவர்கள் வாக்குப்படி வாழ்வதும், அவர்தம் கருத்தைப் பிறர் அறியச் செய்வதும் ஆகும்.

“ஸ்வாத்யாய ப்ரவசநாப்யாம் நப்ரமதிதவ்யம்” – சாஸ்திரங்களை ஓதுவதையும், பிறருக்கு ஓதுவிப்பதையும் எந்த நிலையிலும் கைவிடாதே என்பது வேத வாக்கு.

“ஸ்ரீபகவத்கீதை : கண்ணன் மொழி – கவிதை வழி” என்ற இந்நூலை இயற்றியதன் முலம் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர் ஆகியோரின் மீது பக்தி கொண்ட ஸ்ரீ மீ. ராஜகோபாலன் தமது ரிஷி கடனைச் செலுத்தியிருக்கிறார். இதனைப் படிப்பதன் முலம் நாமும் நமது ரிஷி கடனைச் செலுத்தும் வாய்ப்பைத் தந்திருக்கிறார். தமிழ் நாட்டில் ஸ்ரீபகவத்கீதையைப் படிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அதைக் கவிதை வடிவத்தில், பலரும் படிப்பதற்குப் படைக்க முன் வருவார்கள் என்பது சந்தேகமே. எனினும் மீ. ராஜகோபாலன், தாம் கொண்ட பக்தியின் காரணமாகக் கண்ணன் மொழியை – கவிதை வடிவில் வழங்கி இருக்கிறார்.

“எங்கே ஸ்ரீபகவத்கீதை சிறிதேனும் படிக்கப்படுகிறதோ, கங்கா தீர்த்தம் துளியேனும் பருகப்படுகிறதோ, விஷ்ணுவின் அர்ச்சனை ஒரு முறையேனும் செய்யப்படுகிறதோ, அங்கே யமனால் சச்சரவுகள் இல்லை” எனும்படியான கீதா மஹாத்மியத்தை பஜகோவிந்தம் வலியுறுத்துகிறது.

தெய்வ பக்தியும், ஒழுக்கச்சீர்மையும் கொண்ட ஸ்ரீ மீ. ராஜகோபாலன் ஓர் இளைஞர். இவ்விளம் வயதிலேயே அவர் ஸ்ரீபகவத்கீதையைக் கவிதை வடிவாகக்கும் நற்பணியைச் செய்திருப்பது, அவரது நல்லுள்ளத்தைக் காட்டுகிறது. அவருக்கு இறைவன் அனைத்து ஆன்மீக நலங்களையும் தந்தருள்வாராக. ஸ்ரீபகவத்கீதைக்கு ஒரு புதிய வரவாக வெளிவரும் இந்நந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் பயன்படுத்திக் கொள்ளுமாக! வாழிய நலம்! வாழ்க உலகெலாம்!

இறைவன் தொண்டில், தங்களன்புள்ள

சுவாமி கமாலத்மானந்தர்
ராமகிருஷ்ண மடம்
மயிலாப்பூர், சென்னை
22 ஏப்ரல் 1996

Related Posts

Share this Post