பணிவுரை

அரிதிலும் அரிதான மனிதப் பிறவி ஒன்றே அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கும் மூலப்பொருளை, முற்றும் பகுத்தறிந்து உணரும் ஆற்றல் பெற்றது. உலகில் மதங்களும், நம்பிக்கைகளும், இறை வழிபாடுகளும், இத்தகைய பகுத்தறியும் மனித சக்தியின் மேம்பாட்டிற்காகவே படைக்கப் பட்டுள்ளன. புண்ணிய பூமியான பாரத நாட்டில் மேலோங்கி நிற்கும், ஸநாதன தர்மம் என்ற அநாதியும், அழிவற்றதுமான இந்து தர்மம், வேதாந்தமென்கிற பகுத்தறிந்து உண்மையைப் புலப்பட வைக்கும் ஒப்பற்ற பயிற்சி முறையால், எல்லா உயிர்களுக்கும், உலகத்துக்கும் நல்லவழி காட்டுகின்றது. வேதங்களுள் அடங்கியுள்ள உபநிடதங்கள் என்ற பரரகசியப் பேரறிவு வரட்டு வாதமோ, அறிவுக்கு மட்டும் கிளர்ச்சியை உண்டு செய்யும் கருத்து ஜாலமோ அல்ல. ஒவ்வொரு உயிரின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான கருவிகளை, கருத்துக்களைத் தொகுத்து அளிக்கும் பரம வேதம்.

ஸநாதந தர்ம ஸாரம் என்ன? இறைவனாகிய பரமசக்தி உலகில் ஒன்றே. அவித்தை எனப்படும் அறியாமையினால், இதனைப் பலரும் பலபெயரிட்டு அழைத்தும், பலமுறையில் துதித்தும் வாழ்ந்தாலும், ஒன்றாகிய அந்த சக்தி, ஒவ்வொரு உயிரினுள்ளும், உறைந்து, சகல சாட்சியாக, சத்தியமாக நிறைந்திருக்கும். ஒவ்வொருவரும், இறுதியில் இதனைப் புரிந்து கொண்டு, துாய உள்ளத்தால், துல்லிய அறிவால், அப்பரம்பொருளாகத் தானே மாறுகின்ற முக்தி ரகஸியத்தை உணர்ந்தவர்களாகிறார்கள். விடுதலையில் பிறந்து, விடுதலையில் நிலைத்து, விடுதலையில் கலப்பதே உயிர்கள் என்பது உபநிடதம். இத்தகைய கருத்தினால் ஸநாதந தர்மம் நமக்கு முக்கியமான மூன்று பாடங்களைத் தருகிறது.

(1) மேற்கூறிய உண்மையை உணர்வதற்கு கட்டுப்பாடான வரைமுறைகளும், அறிவுறைகளும் உள்ள மதநெறிகளும், வழிபாடுகளும் போதாது. அதற்கு அனுபூதி என்கிற அநுபவ உணர்வு தேவை. அத்தகைய அனுபவ உணர்வு பெற, வார்த்தை வழி வைத்த உண்மை விளக்கங்கள் போதாது. தானே செயலாற்றிப் பழகும் (சாதனா) பயிற்சி நெறிகள் அவசியம். இதனையே ஏனைய மதங்களும் உரைப்பது ஆழப் பயில விளங்கும். என்றாலும், ஸநாதன தர்மத்தில் சொல்லப்பட்ட யோகம் என்கிற நெறிமுறை ஒன்றே, எல்லா மனிதப் பிறவிகளுக்கும் தக்கதாய், அனைவரும் தத்தம் மத, இன, சமுதாய நெறிகளை மாற்றிக் கொள்ளாமல், கற்று வளரக்கூடிய கல்வியாகும்.

(2) இப் பண்பினால், ஸநாதந தர்மம் உலகில் சமத்துவத்தையும், மற்ற நம்பிக்கைகளைப் பொறுத்துக்கொள்வது மட்டுமில்லாமல், ஆதரித்து வளர்க்கும் பக்குவத்தையும் வளர்க்கிறது.

(3) இவ்வாறு, ஒன்றே தெய்வம் என்ற உயரிய கொள்கையாலும், அனுபவ அறிவே உயர்ந்த கல்வி என்பதாலும், அத்தகைய அனுபவத்தைப் பெற சகல மனிதருக்கும் பொருத்தமான யோகப் பாடத்தைத் தருவதாலும், ஸநாதந தர்மம், பயிற்சி பெறுவோரின் மனதிற்கு அமைதியையும் விடுதலையையும் பரஅறிவையும், உலகறிவையும் இணையத் தெளிகின்ற தத்துவ அறிவாய் நிலைக்கிறது.

சரித்திரத்தையும், சமுதாய மேம்பாட்டையும், நீதிக் கதைகளையும் பின்னிப் பிணைந்த மஹாபாரதம் எனப்படும் மாபெரும் காப்பியம் ஸநாதந தர்ம தத்துவ அறிவு விளக்கமாகும். யோகம், முக்தி, ஆத்மா என்கிற பரஅறிவுத் திருநெறிகளையும், கடமை, தர்மம், ஆட்சி, காதல், கருணை, குடும்பம், சமுதாயம் என்கிற பொது அறிவுப் பாடங்களையும், பழுதறக் கலந்த, உண்மையான, உணர்வதற்கினிதான காவியமே மஹாபாரதம். இத்தகைய மாபெரும் காவிய மலையின் உச்சியில் ஏற்றிய தீபமாய், ஸநாதந தர்மத்தின் விளக்கமாய், அறிவதற்கு அரிதாயும், அறிந்தால் உயிராயும் விளங்கும் உபநிடத உண்மைகளைப் பகுத்து, சமுதாயத்திற்கும், காலத்திற்கும் ஏற்ற வகையில், எடுத்துக்காட்டி விளங்க வைக்கும் ஞான விளக்காகவும் விளங்குகின்ற தத்துவ அறிவுப் பாடமே, ஸ்ரீபகவத்கீதை.

இத்தகைய தத்துவ அறிவால், மனிதருள் தெய்வமாகவும், தெய்வமே மனித வடிவாக வந்ததாகவும் விளங்குமாறு வாழ்ந்து காட்டி, உலகிற்கு நல்ல கதி அளிக்கப் பிறப்பவர்களே அவதார புருஷர்கள் எனப்படுவோர். இவர்கள் உலக உயிர்க்கெல்லாம் கருணையும் அமைதியும் கொடுப்பவராக (ஸர்வபூதஹிதன்), காலந்தோறும் தோன்றி மறைவதுண்டு. அத்தகைய அவதாரங்களில், ராமாயணத் தலைவனான ஸ்ரீராமனும், மஹாபாரதக் காவிய நாயகனான ஸ்ரீகிருஷ்ணரும் உன்னத உதாரண புருஷர்கள். ஸ்ரீராமர் தனது வாழும் முறையினால், மனிதன் வாழ வேண்டிய வழியை விளக்கினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரோ, மனிதனாய், தேவனாய், மன்னனாய், கண்ணனாய், குருவாய்க், கடவுளாய் பல வடிவத்தாலும், வாக்காலும், வாழ்க்கையாலும், அறிவு, எண்ணம், இயக்கம் ஆகியவற்றின் சீரிய ஒற்றுமையை விளக்கிய ஞான குரு. தனது பூவுலக வாழ்க்கையாலும், வடிவத்தாலும், தெய்வமும் மனிதனாகலாம் என்கிற விந்தையையும், மனிதரும் தெய்வமாகலாம் என்கிற நற்சிந்தையையும் மெய்ப்பித்த மஹாத்மா ஸ்ரீகிருஷ்ணர். அவரே மஹாபாரதக் காவிய நாயகன்.

உபநிடதம் என்கிற காமதேனுவாகிய பசுவைக் கறந்து ஸ்ரீபகவத்கீதை என்கிற ஞானப் பாலைக் கன்றாகிய விசயனுக்குக் கொடுத்த இடையனே ஸ்ரீகிருஷ்ணர் எனக் கூறுகிறது ஓர் பழைய ஸமஸ்கிருதப் புகழ்மாலை. ஸ்ரீபகவத்கீதையை, இரண்டு நல்ல நண்பர்களுக்கிடையே நடக்கும் உரையாடலாய், குருவுக்கும் சீடனுக்கும் நடக்கும் உபதேசமாய், தந்தை மகற்காற்றும் அறிவுரையாய், இறைவன் உயிர்க்கருளும் தரிசனமாய், விஞ்ஞானமாய், சமுதாய நெறியாய், போர்ப்பாட விளக்கமாய், தரும நெறியாய், ஆத்ம வித்தையாய், எல்லாவற்றுக்கும் மேலாக, மனதிற்கு அமைதியைத் தந்து துன்பத்தை விரட்டும் மருந்தாய்ப் பலரும் பலவிதமாகப் பயிலும் வண்ணம் கவிதையாய் அமைத்து, இறைவனின் அருளைப் பொதுநல நோக்கால் பரப்பிய மாகவி வேத வியாஸர்.

விஞ்ஞான வளர்ச்சியும், பாதிப்பும் கலந்த கலிகாலத்தில், உலகிற்குப் பகவத்கீதையே சரியான ஞானப் பள்ளி. அதில் சொல்லாதது இல்லை. இல்லாதது இனி வருவதில்லை. அனைவரும் பயில வேண்டிய ஆத்ம பாடமான ஸ்ரீபகவத்கீதைக்கு, பகவான் ஆதிசங்கரர் முதலாகப் பல அவதார புருஷர்களும், அறிவிற் பெரியோர்களும் நல்விளக்கமும், பொருளும் கற்பித்து உலகம் பயன்பெறச் செய்துள்ளனர். சமஸ்கிருதம் அறியாத பலருக்கும், எனைப் போன்ற குறைமதி யோருக்கும், விளங்கும் வகையில் தற்காலத்தில் நல்லோர் பலர், ஸ்ரீபகவத்கீதையைத் தமிழ், ஆங்கிலம் முதலான மொழிகளில் எளிமையும் இனிமையுமாய் வடிவமைத்துத் தந்துள்ளனர்.

இவற்றின் நடுவே, எளியேனுடைய இந்த ஏடு, மயிலாடப் பார்த்தாடும் வான்கோழியின் செயலைப் போன்றது. தமிழில் எளிய பாடல்களாக இயற்றும் நோக்கத்தால் எனது தந்தையால் துாண்டப்பட்டு, படிக்கப் படிக்கத் தெளிவும், இனிமையும் தரவல்ல ஸ்ரீபகவத்கீதையின் பொருள் விளக்க நுால்களைச் சிரமேற்றுக் கற்க முடிந்த அளவு கற்று, உணரத் தெரிந்த அளவு உணர்ந்து, கவிதையாகப் புனையத் தகைந்த அளவு புனைந்து உலகோர் படித்தறியச் சமர்ப்பிக்கிறேன். உணர்ச்சியாலும், மனதாரச் சொல்ல வேண்டும் என்ற அவாவினாலும் எழுதப்பட்ட பாடல்களைச் செந்தமிழின் யாப்பிலக்கண அளவால் நிறுத்தக் குறையலாம், நிமிரத் தவறலாம். எல்லாக் குற்றங்களும் என்னுடைய சிறுமதி விளைத்த பெரும்பிழையாய் ஏற்பது மேலோர் கருணை.

இதனைப் படிப்பதால், துாண்டப்பட்டு, பெருங் கடலான ஸ்ரீபகவத்கீதையை நல்ல பெரியோர்களின் புத்தகங்கள், வாய்மொழி வாயிலாகவும் மேலும் அறிய வேண்டும் எனத் தங்களுக்குத் தோன்றினால், அதுவே இப்புத்தகத்திற்காக நான் அடையும் வெகுமதி.

எல்லாம் வல்ல ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அருளை வியந்து, நானெனும் பொருளைத் தானென உணர்ந்தருளிய பகவான் ஸ்ரீரமண மஹரிஷிகளின் கருணைப் பார்வையில் குளிர்ந்து, காஞ்சி ஸ்ரீகாமகோடி டாதிபதி, கலியுகந் தழைக்க வந்த கற்பகத்தரு ஸ்ரீசங்கராச்சாரிய பரமகுருமார்களின் பாத கமலங்களுக்கு இப்பாமாலையைச் சமர்ப்பிக்கின்றேன்.

குறிப்பு

ஸ்ரீபகவத்கீதையின் அமைப்பையொட்டி இவ்வேடும் பதினெட்டு பாகங்களாக அமைகிறது. ஓவ்வொரு பாடலின் முன்பும் பாடலின் வரிசை எண்ணும், அடைப்புக் குறிகளுக்குள் (), ஸ்ரீபகவத்கீதையின் ஸ்லோக எண்ணும் பார்வைக்காகத் தரப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப ஒரு ஸ்லோகத்தை விளக்க ஒன்றிற்கு மேற்பட்ட தமிழ்ப் பாடல்களும், ஒரே தமிழ்ப் பாட்டில் ஒன்றிற்கு மேலான ஸ்லோகங்களுக்கான விளக்கமும் தரப் பட்டுள்ளன. பொருட்கோர்வையை முன்னிட்டு, சில இடங்களில் ஸ்லோகமில்லாத பாடல்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் முன்பும், மிகச்சுருக்கமான பொருளும் உரைநடையாகத் தரப்பட்டுள்ளது. இது சமஸ்கிருத ஸ்லோகத்தின் கருத்து விளக்கமே அன்றி, நேரடியான பதவுரை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post