ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி வணக்கம்

ஹாரோ நகரம், லண்டன்

முன்னைப் பின்னை நடுவைக் கடந்த
என்னைக் கலந்த எழிற்சிவ சுதனை
பின்னப் பயமறு பிரணவப் பொருளை
என்னப் பனைநல் லிபா முகனை
முன்னப் பழவினை முதலால் பயனால்
வண்ணத் தமிழ்வரி வடிவால் பணிவேன்!

நாப்பிறை வானம் நயந்திடு நந்நாள்
மூப்பறி யாத முத்தமிழ் துதித்து
வெளியும் வளியும் ஒளியும் நீரும்
களியும் ஐதெனும் காரண மூலம்

கையில் குழைத்து கருத்தில் நிறுத்தி
மெய்யென அறியும் மேநிலை குறித்து
அருவைக் கருவை அறிவால் அறியாத்
திருவை மறையார் தெரியாத் தெளிவை

உருவாய் இழைத்து உணர்வால் இணையத்
தருவாய் தருணம் தயவால் இயைய
பிரணவப் பொருளே பேரருட் கடலே
கரணம் விரித்த கணபதி அருளே

திருவுரு வாகித் திகழ்வாய் எனவே
உருமன முருகி உருப்படைத் தேனே!
துளியாய் என்னுள் தூரிய வடிவாய்
ஒளியாய் உயிராய் ஒன்றிய ஆன்மா

களியால் அமையும் கணபதி உருவில்
கனிவாய் எழவே கரம் குவித்தேனே!
ஓமெனும் பிரணவ ஒப்பறி யாவுரு
தாமெனக் காட்டும் தலைவா வருக!  (1)

இடக்கால் மடித்தருள் இன்பம் விதைக்க
வலக்கால் பதித்தருள் வையம் விளைக்க
தேடிய பாதத் தேன்மலர் விரிக்க
சூடிய தண்டைச் சுடரொலி விளிக்க

சரியும் வயிறு சடையிடை அரவு
விரியும் இதழில் விடைதரும் அமிழ்து
அவாவறி வாக்கம் ஆகிய மும்மெய்
சிவாமய மாக்கும் திருநீர்ச் செம்மை

முப்புரி நூலணி மூவுடல் கடந்தருள்
அப்பரி பூரண ஆளுநற் போதன்
துதிக்கை வலப்புறம் தூமணி மாலை
பதிக்கை வரப்பெரும் பாதணி வேளை

அடங்கார் அடங்க அங்குசங் காட்டி
தடம்பார் எனதருட் தாள்மலர் காட்டி
பற்றார் பற்றரு பாசமுங் காட்டி
கற்றார் கற்றரு காரணங் காட்டி

கூர்மழு ஒன்றும் குறைமழு ஒன்றும்
நேர்களி ராகிய நிறைமுகம் காட்டி
விரிசெவி அருள்தர விசிரிட ஆட்டி
நெறியறி சிறுபிறை நெற்றியில் கூட்டி

சீர்மணி மகுடம் சிரத்தினில் சூடி
கார்முகில் கிளரும் கதிரொளி ஆகி
வந்தாய் இபமா முகமா தவனே
நந்தா கணபதி நாகா பரணே! (2)

மாசிப்பச்சை மாவிலை துளசி
ஜாதிநொச்சி நாயுரு விதழை
கண்டங் கத்தரி கரிசிராங் கண்ணி
விண்ட எருக்கு விஷ்ணு க்ராந்தி

வன்னி அரளி வசமருக் கொழுந்து
நெல்லிவெண் மருதை வில்வம் இலந்தை
அருகம் புல்லூ மத்தை இலைகள்
உருகத் தூவி உனைத் துதித்தேனே! (3)

புன்னை எருக்கு புதுமாம் பூவொடு
மன்னுமந் தாரை மாதுளை தாழை
மாசறு தும்பை மகிழஞ் சண்பகம்
ஈசரின் கொன்றை எருக்கொடு முல்லை

வெட்டிவேர் அரளி வில்வம் ஊமத்தை
கட்டிய பவழ மல்லிசெவ் வந்தி
நந்தியா வட்டை நற்தா மரைப்பூ
சிந்தா மல்லிகை செங்கழு நீர்ப்பூ

எல்லாம் இறைய என்மனம் குழைய
நல்லாய் உனையே நான் துதித்தேனே! (4)

அய்யா தனியோய் அபயம் தரவோய்
கொய்யாக் கனிவளம் குவளை மலர்கள்
நாவல் மாபலா நற்கனி வாழை
மாதுளை தேங்கனி மதுரநெய்ப் பண்டம்

தீதகம் பாவத் தீவினை போக்கும்
மோதகம் பாயச முவ்வடை அன்னம்
அதிரச மப்பம் அறுகொழுக் கட்டை
பதிற்பால் பேணி பலவகை லட்டு

துளிர்வெற் றிலைகள் துவருடன் பாக்கு
தளிர்மலர் மஞ்சட் தங்கம் படைத்து
அப்பனே என்று அருட்பதம் பணிந்து
செப்பிய அகவற் சீர்தமிழ் தருவேன்! (5)

சந்தனம் குங்குமம் தந்து பணிந்து
வந்தனத் துந்துதி முந்த இசைத்து
கிண்கிணி கிணிமணி இன்புற அசைத்து
முன்பணிந் தென்மன முனையு மிணைத்து

பத்தியும் பசுநெய்த் தீபமும் சூடமும்
முத்தியம் பலனுன் முன்னே காட்டி
அய்யா முழுமுத லாகிய பொருளே
மெய்யா யாருளும் மேலருஞ் சுடரே

கணபதி சிவசுத பரநிதி வடிவே
களிவடி வாகிய அழகிய முடிவே
எண்ணம் வாக்கு எடுசெயல் இனிக்கும்
வண்ணம் வாழ்க்கை வகையுறச் செய்வாய்,

ஏற்கும் பயணம் எல்லாம் இனிமை
நூற்கும் பாதை நுகரச் செய்வாய்,
முதலில் இடையில் முடிவில் விடையில்
தடைகள் இல்லாத் தருணம் அருள்வாய்,

கலைகள் கல்வி செய்தொழில் முதலாம்
நிலையில் நிலைக்க நின்னருள் தருவாய்,
என்றே பணிந்தேன் எழுந்தேன் மகிழ்ந்தேன்
நின்றே நின்முக நிர்மலம் அறிந்தேன்! (6)

காலடி கணுமுழங் கால்தொடை இடையும்
மூலமும் குறியும் முதுகும் வயிறும்
தோளும் கரமும் தோலும் விரல்களும்
மார்பும் கழுத்தும் மயிர்தலை முகமும்

செவியும் விழியும் சீர்விசை மூக்கும்
குவியும் இதழ்நா கொள்மகிழ் வாயும்
இரையின் குடலும் நுரைகல் ஈரலும்
உறையும் நாடிகள் ஊறிடும் அணுவும்

சதையும் எலும்பும் சாறும் உதிரமும்
விதையும் இதயம் விரிசிரை தமனியும்
மூளையும் ஆளென முறையாய்க் காட்டும்
பேழைத் தூவுடல் பேரழ குரவே

நோய்நொடி விலக்கி நுண்ணலம் பழக்கி
காயுடல் கனியக் கவினருள் தருவாய்! (7)

ஐம்புலன் அறிவும் ஐம்பொறி உணர்வும்
மெய்ப்பட வைக்கும் மெல்லுடல் ஆக்கும்
மூச்சும் பேச்சும் முழுவுடல் அறிவு
வீச்சும் விளக்கும் வீசிடும் காற்றுடல்

நலமாய் விளங்கிட நற்சுகம் துலங்கிட
வளமாய்க் கணபதி வல்லப அருள்வாய்! (8)

சீர்பட எண்ணம் சிந்தை கூர்பட
நேர்பட அன்பு நிலைபெற அமைதி
மனவுடல் எனவே மருவிய எண்ணத்
தினவுடல் ஆடும் திரைகட லாசைத்

தடங்கள் சமனுறத் தன்னிலை அறியும்
திடம்பல னடையத் திறமே அருள்வாய்! (9)

அறிவாம் செறிவு அகலத் தருவாய்!
அறிவாம் ஆள்மை ஆழம் தருவாய்!
எல்லா நெறியில் வழியில் வகையில்
நில்லாப் பொருளை நிழலைக் களைந்து

வல்லான் உள்ளான் வலியான் உனையான்
கல்லான் எனினும் கற்றான் ஆக்கிப்
பகுத்தறிந் தாய தொகுத்துணர்ந் தாள
மிகுத்தரி தாம்மதி மிக்கொளி தருவாய்!  (10)

மேலுடல் காற்று மெல்மனம் அறிவு
ஆளுடல் கடந்த அருட்சுக உடலெனும்
அடித்தளம் உணரும் ஆனந்தம் எனும்
வழித்தலம் வசப்பட வரமருள் தருவாய்! (11)

நின்னை நினைந்து  நின்தாள் பணிந்து
உன்னை என்னுள் உயிர்த்திடக் கனிந்து
நந்நீர் எனும் நயம்படு அறிவும்
நானென அறியும் நற்பால் உணர்வும்

கலந்திடக் குடித்துக் கரத்திலே எடுத்து
நலந்தரும் நின்னுரு நயம்பட உயர்த்து
கங்கை சிந்து காவிரி எனவே
மங்கள மாகிய மாநதி நினைந்து

நேரில் நின்ற நிர்மல உருவை
நீரில் கலந்து நிலத்தில் இறைத்தேன்! (12)

எல்லாப் பொருளும் எல்லாப் பெயரும்
எல்லா வடிவும் எல்லா உயிரும்
நல்லாய் நீஎனும் நந்நெறி அறிய
வல்லாய் நின்வடி வழகைக் கரைத்தேன்! (13)

நின்னரு ளாலே கடவுள் படைத்தேன்
நின்னரு ளாலே கடவுள் பயின்றேன்!
நின்னரு ளாலே கடவுள் உடைத்தேன்
நின்னரு ளாலே கடவுள் உணர்ந்தேன்!

Related Posts

Share this Post