தடை இடர் உடை

ஐயாவுடன் உரையாடல் (20)

நாங்கள் நேபாள நாட்டில் காட்மாண்டு நகரத்தில் உள்ள ஸ்ரீ பசுபதிநாதர் ஆலயத்தைத் தழுவிக் கொண்டு ஓடும் பாக்மதி நதியின் கரையினில் அமர்ந்திருந்தோம். மாலைப் பொழுது தனது திரையினால் கதிரொளியை ஏற்கனவே மறைத்துவிட்ட சமயம். ஆலயத்தின் சுவற்றின் மேலும், நதியின் படித்துறைகளிலும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த எண்ணைத் தீபங்களின் பொன்மணிச் சுடர்கள், மங்கத் தொடங்கியிருந்த வானப் போர்வையிலே தங்க வர்ணங்களைத் தெளித்துக் கொண்டிருந்தன. அந்தப் பொழுது மனதை இதமாய்த் தடவித் தூங்க வைப்பதாக இருந்தது. ஆற்றின் குளிரைச் சுமந்து வீசுகின்ற இளங்காற்று முகத்தை வருடி, காதுகளுக்குள் சலசலவெனும் பாக்மதியின் அலை ஓசைகளைத் இனிய தாலாட்டாக நிரப்பிக் கொண்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக உமாவும் நானும், எங்கள் இளைய மகள் கீர்த்தியுடன் நேபாள நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தோம். ஸ்ரீ பசுபதிநாதரின் ஆலயத்துக்கு முன்பே வந்திருந்தாலும், அப்புனிதக் கோவிலுக்கு மீண்டும் மீண்டும் வருவதற்கும், மனதை மயக்கும் பாக்மதி நதி தீர தீபஆராதனையை தரிசிப்பதற்கும் ஒரு காரணமும் சொல்லத் தேவையில்லை.  ஆனாலும் அந்த மாலை நேரம் நாங்கள் அங்கு சென்றதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அய்யா தன்னுடைய இமயமலைப் பயணம் முடித்து அங்கு வந்திருந்தார்.

நதிக்கரையில் கூட்டம் மெதுவாக பெருக்கத் தொடங்கியது. ஒவ்வொருவரும் ஆர்த்தி தொடங்குவதற்கு முன்பாகச் சரியான இடத்தைத் தேடி அமர்ந்து கொண்டிருந்தனர். நாங்கள் ஆற்றின் மேலிருக்கும் சிறிய பாலத்தை ஒட்டிய படிகளில் அமர்ந்திருந்தோம்.

“நேபாளி மக்கள் மென்மையாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள்” என்றார் உமா.  கூடவே “ஆனால் அவர்கள் கோவிலை வைத்திருக்கும் விதமும், அவர்களது பிரார்த்தனை வழிகளும் எனக்குச் சங்கடம் தருகின்றன.”

“ஏன், என்ன தவறு?” நான் கேட்டேன்.

“ஏன் நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் கால்களில் செருப்பை அணிந்து கொண்டே கோவிலுக்குள் செல்கிறார்கள்.  பல இடங்களில் சுவாமியைத் தொடுகிறார்கள்.  ஏதோ சுவாமியும் மக்களில் ஒருவர் போல அவர்கள் ட்ரீட் செய்வது,   புனிதத் தன்மை இல்லாமற் செய்வது போல் இருக்கு.”

“ம்…. அப்படிச் செய்வதால், அவர்கள் தெய்வங்களை அவமரியாதை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.”

“இல்லை இல்லை! அவர்களுக்கு பக்தி இல்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஜஸ்ட் அவர்களுக்கு அடிப்படையான வழிபாட்டு நெறிகள் எல்லாம் தெரியவில்லையே என்றுதான் கவலைப் படுகிறேன்.   அப்படி வழிகாட்டுபவர்கள் இல்லாமல், குழம்பிப் போய்விட்டார்களோ எனத் தோன்றுகிறது.”

கீர்த்தி சொன்னாள், “அம்மா,  இது அவர்கள் பழக்கம்.  உண்மையிலேயே நேபாள நாட்டில் பல மதங்கள்,  பழக்க வழக்கங்கள் எல்லாம் இருந்து, அதெல்லாம் கொட்டிக் கலந்து ஒரு குழம்பாய் ஆகியிருக்கு!”

“அதேதான் நான் சொல்றேன்.  அதனால்தான் இவர்கள் எல்லாம் குழம்பி இருக்கிறார்கள் என்று.”

“அப்படியும் இருக்கலாம் உமா”, நான் சொன்னேன்.

“பார்த்தியோ, இந்த அழகான சின்ன நாடு, பல மதங்களைச் சுமந்து கொண்டு இருந்தது. இப்பவும் சுமந்து கொண்டுதான் இருக்கு. புத்தம், சமணம், இந்து மதம், அதில் இருக்கும் சாக்தம் முதலான பல பிரிவுகள், திபெத்தியன் மதம் எனப்பலவும், ஒரே சமயத்தில் செழித்து வளர்ந்துள்ளன.  அதனால், அவற்றுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் எல்லாம் தெளிவில்லாமல் போய்விட்டது. நோம்பு, பூஜை, கோவில் அமைப்பு என எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் எல்லா மதங்களின் கலப்பாகப் போய்விட்டது.  இந்த ஆலய வடிவங்கள், விழா, ஓவியம் என எல்லாவற்றிலும் இந்தக் கலப்பு தெரிகிறதே!”

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு சொன்னேன். “ஆனால் இதெல்லாம் தாழ்வு அல்ல”

அய்யா புன்னகையுடன் உமாவை நோக்கிக் கேட்டார்.

“நீங்கள் இந்த நேபாளியர்கள் ஒரு குழம்பிய மக்கள் கூட்டம் என நினைக்கிறீர்களா?”

“ஓ நோ! அப்படி இல்லை”, சற்றே பதட்டத்துடன் உமா சொன்னார்.

“அய்யா, நேபாளியர்கள் உண்மையிலேயே மிகவும் திருப்தியுடன் இருப்பவர்களாகவே தெரிகிறார்கள். எல்லோரும் அவரவர் வழியில் மகிழ்வாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.”

“அப்படியே!  ஏனெனில் குழம்பிய மனம் இருந்தால் துயரமும் பதட்டமும் இருக்கும்.  இந்த மக்கள் அப்படி அல்ல.  அவர்கள் குழம்பி இருக்கவில்லை.  ஒருவேள நம்மில் சிலருக்குத்தான் குழப்பம். ஏனென்றால் நாம் பொதுவாக எதையும் நமது அளவுகோளால் அளக்கிறோம். நமக்கு உறுதியான வழிமுறைகள் இருப்பதனால்,  கட்டுப்பாடு இல்லாததுபோல் தோன்றும் மற்ற வழிகளை நாம் ஏற்பதில்லை.   என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நாம் அப்படி இருப்பதும் உயர்வானதுதான்.  ஆனால் எதையும் பகுத்தறிந்து செயல்படுவதிலும், பக்தி, சிரத்தை எனும் பண்புகள் இல்லாமற் போய்விட்டால், நமக்கும் குழப்பங்கள் வந்துவிடும்.  இவர்களுக்கு நம்பிக்கைதான் முக்கியம். வழி வழியாக வந்த பழக்கங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குழப்பம் இல்லை.”

நான் சொன்னேன். “இருக்கலாம் அய்யா.  ஆனாலும், கோவில்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, நம்முடைய ஆசாரங்களை அனுசரிப்பது எனச் சில பாடங்களை இவர்கள் கற்றாக வேண்டும்.”

கீர்த்தி குறுக்கிட்டாள். “ஆனால் நிச்சயமாய் பிள்ளையார் இங்கே ஒரு குழப்பம்தான்!”

“என்ன!”, அவள் சொன்னதை நான் வியந்து நோக்கினேன்.

“ஆமாம். நான் கணேஷ் சிலையை புத்தர் கோவிலில் பார்த்தேன். சமணர் கோவிலில் பார்த்தேன். திபெத்தியன் கோவில், சைனீஸ் கோவிலிலும் தான். இதெல்லாம் குழப்பம்தானே!”

“இல்லை, உண்மையிலேயே விக்னேஷ்வர  தத்துவம் எல்லா மதங்களிலும் இருக்கு. ஆசிய நாடுகளில் மட்டுமில்லை, மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஆப்பிரிகா நாடுகளில் கூட யானைத் தலையுடன் கூடிய வடிவங்களை, இடரினை நீக்கும் சக்தியாக வணங்குகிறார்கள். விக்னேஷ்வர தத்துவம் அங்கெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் இவை காட்டுகின்றன” என்றேன்.

“விக்னேஷ்வர தத்துவம் என்றால் என்ன?”, கீர்த்தி கேட்டாள்.

“விக்னேஷ்வரப் பெருமான் இடர் தரும் தடைகளை விலக்கி, நமது அச்சத்தை நீக்கும் சக்தியாக விளங்குறார்.  இடர் தரும் தடைகளிலிருந்தும், பயத்திலிருந்தும் பரிபூரணமாக விடுதலை அடைய வேண்டும் என்பது உலகில் எவராலும் விரும்பப் படுவதுதானே!  எனவே, அப்படி இடரையும், பயத்தையும் போக்கும் புனித வடிவம் ஒன்று இருக்கிறது என்றால், அதனை உலகில் எவரும் விரும்பி ஏற்பது இயல்புதானே!”

இப்படிச் சொல்லிவிட்டு நான் அய்யாவைப் பார்த்தேன்.  அய்யா நிச்சயமாக மற்றொரு ஆழமான பார்வையைக் கொடுப்பார் என நினைத்தேன்.

“மனித இனம் பூமியிலே யானையைத்தான் மிகவும் பலம் மிகுந்த, பெரிய அதே சமயம் ஓர் மென்மையான உயிரினமாகப் பார்த்து வந்திருக்கிறது. யானை 120 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியதாம். மனிதர்களுக்கும் 120 ஆண்டுகளே வரையரையாகச் சொல்கிறார்கள். நம்மைப் போலவே   யானைகளும் குடும்பங்களாக, குழுக்களாக, ஒருவருக்கொருவர் உறுதுணை தருவனவாக வாழ்கின்றன. இப்படியான காரணங்களாலோ என்னவோ, யானை வடிவம், பாதுகாப்புத் தரும்  தெய்வ வடிவங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என எண்ணி இருக்கலாம்.  விக்னேஷ்வரரின் யானை முகத்துக்கான நிறையக் கதைகளும்,  காராணங்களும் நமது புராணங்களில் இருக்கின்றன. விக்னேஷ்வர் இடர் அறுக்கும் பெருமான் எனக் காட்டுகின்றன.” என்றார் அய்யா.

“என்ன இடர்? எனக்கு வரும் தடைகளை எப்படி சுவாமி நீக்க முடியும்?” –  கீர்த்தி கேட்டாள்.

அய்யா கீர்த்தியை நோக்கித்  திரும்பி அமர்ந்து கொண்டார். இளைஞர்கள் நுண்மையான கேள்விகளைக் கேட்டால், அய்யா எப்படி ஆர்வமாக ஈடுபாடு கொள்கிறார் என நான் பார்த்து வந்திருக்கிறேன்.

“கீர்த்தி, முதலில் இந்த மாதிரி இடரை அகற்றவும், பயத்தை நீக்கவும் ஓர் தெய்வ வடிவத்தை  வைத்து இருக்கும் தத்துவமே, மிக நுண்ணியமானது.  பொதுவாக,  நாம் கேட்டதைக் கொடுக்கும் சக்தி என்றுதான் இறைவனை அணுகுவோம். விக்னேஷ்வரப் பெருமானின் தத்துவத்தில், அவருடைய சிறப்பு, நமக்கு வரும் இடரை அகற்றவும், பயத்தைப் போக்கவும் எனக் குறிப்பிட்டு  வைத்திருப்பதால், அதன் சிறப்பை நாம் சிந்திக்க வேண்டும்.”

அய்யா தொடர்ந்தார்

“பொதுவாக நாம் பிரார்த்தனை.செய்தால், நமது ஆசைக்குரிய பொருளைத் தானே கேட்போம்? அந்த வேலையக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு, அந்தச் சொத்து கிடைக்கச் செய் என்று!   நமக்கு எந்தப் பொருள் சுகம் கொடுக்கும் என நாம் நினைக்கிறோமோ அந்த ஆசைப்படும் பொருளை நாடித்தான் நம்முடைய பெரும்பான்மையான் பிரார்த்தனைகள் இருக்கின்றன.”

“ஆமாம்”

“ஆனால் ஆசைப்படும் பொருள் கிடைத்தால் போதுமா?  அதனை அனுபவிக்க முடியாமல் போனால், அதனை அடைந்து என்ன பயன்?”

“கரெக்ட்,  அதை அனுபவிக்கும் சக்தி நமக்கு வேண்டும் என்பதுதானே நீங்கள் சொல்வது?”

“ஆமாம். ஆரோக்கியமான உடலும் மனமும் நமக்குத் தேவை. அதனால் அவற்றைப் பெறுவதற்கான பிரார்த்தனைகளையும் நாம் செய்கிறோம்.”

“ஆம் அய்யா.  நாம் விழையும் பொருளையும், அதனை அனுபவிக்கத் தோதான உடல் நலத்தையும் நாம் பெற வேண்டும்.”

அய்யா தொடர்ந்தார்.

“அவை இரண்டுமிருந்தாலும்,  நாம் அவற்றை அனுபவிப்பதற்கான சூழ்நிலை அவசியம் அல்லவா?  நிறைய பணத்தை வைத்துக் கொண்டிருந்தாலும், ஒரு வரண்ட காட்டில் நாம் இருந்தால் என்ன பயன்?  காலம், இடம், சூழ்நிலை எல்லாம் முக்கியம்.  அதாவது நம்முடைய அனுபவ உலகம் நமது சுகத்துக்கு ஏதுவாக இருக்க வேண்டும்.   ஆனால் நல்ல சுற்றுச் சூழல் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதற்குப் பரந்த மனமும், பிறர் நல விழைவும் ஒருவருக்கு இருந்தாக வேண்டும்.”

“இதெல்லாம் பொது அறிவுதான் அய்யா.  இவை எல்லாம் நமக்குப் பிரார்த்தனை மூலம் கிடைத்துவிட்டது என வைத்துக் கொண்டால், அப்புறம் நாம் எதற்குச் செயல் என்றோ, அதில் தடைகள் என்றோ கவலைப் பட வேண்டும்?”

“நல்ல கேள்வி.  இப்படியான் கேள்விகளை எழுப்புவதாலேயே விக்னேஷ்வர தத்துவம்  சிறப்பானது எனச் சொல்லப்படுகிறது.”

அய்யா தொடர்ந்தார்.

“கவனி!  பயம் என்பது ஆசையின் மறுபக்கம். எங்கே ஆசை இருக்கிறதோ, அங்கே பயமும் சேர்ந்தே இருக்கும்.  சாதாரணமாக நாம் வேண்டிச் செய்கின்ற பிரார்த்தனைகள் எல்லாமே இப்படி பயத்தாலும், ஆசையாலும் விளைவனவே.   இறைவன் நம்முடைய பிரார்த்தனைகளை எல்லாம் வரிசையாக வாங்கிக் கொண்டு  அதற்கான பலனை எல்லாம் எப்போதும் கொடுப்பதற்காக இருக்கிறார் என்று இருந்துவிடக் கூடாது. பிரார்த்தனையாலே எல்லாம் அடைந்து விடலாம் என்றால், உலகில் யார்தான் செயலாற்றுவார்!”

“ஆமாம் அய்யா, உண்மைதான்” என்றாள் கீர்த்தி.

உமா சொன்னார். “நமக்கெல்லாம் சின்ன வயசில் இருந்தே, இறைவனிடம் எல்லாவற்றுக்கும் பிராத்தனை செய் என்றுதானே சொல்லி வளர்த்தார்கள்.  பெரிய ஞானிகள் எல்லாம், பிரார்த்தனையால் எதையும் சாதிக்க முடியும் என்றுதானே சொல்லியிருக்கிறர்கள்?”

“ஆமாம்.  பிரார்த்தனை என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்தால், அதன் மூலம், முதலில் இறைவனின் கருணை வெளிப்பாட்டை நாம் உணர முடியும். இறுதியில் நமக்குள்ளே ஓர் அரிய மாற்றமும் ஏற்படும். ஆனால் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், பிரார்த்தனை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.  கடவுள் எல்லோரையும், எப்போதும் காத்து வருகிறார்.  கடவுளுக்கு நமது  பிரார்த்தனை அவசியம் அல்ல. ஆனால் நமக்குத்தான் பிரார்த்தனை அவசியம். அதன் மூலம்தான் கடவுளின் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும்.”

“தெளிவாகப் புரியவில்லை அய்யா”

“பொறுப்பு – இதனைத்தான் நான் சொல்கிறேன்”

அய்யா தொடர்ந்தார்.

“குழந்தைப் பருவத்தில் இருந்து வளரும்போது,  நாம் ஒவ்வொருவரும் நமக்கென்று ஒரு அடையாளத்தை எடுத்துக் கொள்கிறோம். அதுவே நமது பெர்சனாலிடி எனப் பெரிது படுத்திக் கொள்கிறோம். இதற்கு அடிப்படை  ‘நான்’ எனும் உணர்வு. அதன் ஆதிக்கம் பெருகி,  இந்த உடல், இந்த மனிதர், இந்த ஜாதி, இந்தப் பதவி என்றெல்லாம் தப்பான அடையாளங்களிலேயே ‘நான்’ என நம்மை இருத்திக் கொள்கிறோம்.  இதனை  ‘அபிமானம்’  அல்லது ‘அகந்தை’ என வேதங்கள் சொல்கின்றன. அபிமானம் பெரிதாகப் பெரிதாக, தான், தன்னுடையது என்றும், வேற்றுமைகள் வளர்த்து, விருப்பு வெறுப்பு அதனால் பயம் எல்லாம் வருகின்றன.  எனவே அபிமானம் என்பதுதான் உண்மையிலேயே கவனிக்கப்பட வேண்டியது.”

அய்யா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“ஒரு குழந்தையைப் பாருங்கள். அதற்குப் பயமோ, ஆசையோ இல்லை. ஏனெனில் அதற்கு அபிமானம் என்பது இல்லை.   ஆனால் நாம்தான் குழந்தைகளுக்கு அபிமானத்தை ஊட்டி ஊட்டி வளர்த்து விடுகிறோமே!”

“அய்யா! அது வாழ்வின் இயல்புதானே?  அப்படி இருக்கும்போது, அபிமானம் இருப்பதால் தாழ்வானவர் எனச் சொல்வது சரியா?”

“அபிமானம் வருவது இயல்பு, அது இயற்கை பதித்த அவசியம்தான்.  அபிமானம் இருப்பதால் தாழ்மை எனவும் நான் சொல்லவில்லை.   அபிமானம் என்பது அறியாமை என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.  இங்கே முக்கியமான கருத்து, நம்முடைய இயல்பில் மாற்றங்கள் வரும்போது, இறைவனுடன் நம் உறவும் மாற்றம் அடையும் என்பது தான்.”

“எப்படி?”

“அபிமானம் இல்லாதபோது, கடவுள் எப்போதும் எல்லாவற்றையும் தருகிறார். பிரார்த்தனை எனும் சாதனமே அவசியமில்லை.  அபிமானம் இல்லாமல் வாழ்பவர்கள், எப்போதும் இறைவனின் கருணையினால் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

“அப்படியானால், அபிமானம் எதுவும் இல்லாத குழந்தைகளுக்கு மட்டுமே  அந்தப் பெருமை. அப்படித்தானே?”

“குழந்தைகளுக்கு! அதுபோலவே அபிமானம் இல்லாமல் வாழும் ஞானியருக்கு.  சொல்லப் போனால், எவர் உலகில் தன்னுடைய கடமைகளைப் பிறருக்காகச் செய்து கொண்டு,  பற்றில்லாமல் வாழ்கிறாரோ, அவரும் பிரார்த்தனைகள் எதுவும் செய்யாமலேயே இறைவனின் கருணையினால் நலமாக வாழ்வார். அவர்களுக்குத் தடையோ, பயமோ இல்லை.”

“ஏன் அப்படி அபிமானம் அற்றவர்களுக்கு மட்டும் நிபந்தனை அற்ற கருணை? பாரபட்சம் அல்லவா?”

“இல்லை! அதில் நியாயம் இருக்கிறது.  ‘நான்’ எனும் அபிமானம் கொண்டவர்களிடம் கடவுள் கூறுகிறார்:-

உனக்கு அபிமானம் இருப்பதால், உனது வாழ்வின் இன்ப துன்பங்களை நீயே சம்பாதித்துக் கொள், பொறுப்பினை நீயே ஏற்றுக் கொள்.  உலகத்தைப் படைத்து அவற்றில் எல்லாவிதமான  செல்வங்களையும் உனக்காகப் படைத்துக் கொடுத்துள்ளேன். போ, உனக்கான பாதையை வகுத்துக் கொண்டு, அனுபவி. நான் என்ன செய்வேன் என்றால், பொதுவாக எதிலும் ஈடுபடாமல்,  அமைதியாக அமர்ந்து உன்னைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  ஆனால் உனக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். நீ செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் முறையான பலனை, சரியான அளவில், சரியான நேரத்தில் உனக்கு அளிப்பேன்.   –

இப்படிச் சொல்லிவிட்டு கடவுள் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்துள் ஒளிந்து கொண்டு, ஒளிர்ந்து கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அதுதான் அவருக்கு சாட்சியாக இருப்பதற்கு ஏற்ற இடம்.”

“அப்படியானால், அவர் எனக்குள் இருந்து பார்க்கிறாரா?”, சற்றே பயத்துடன் கேட்டாள் கீர்த்தி.

“கண்டிப்பாக.  அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். நமக்கு பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  எப்போதும், எல்லோருக்குள்ளேயும்.”

“எமனுடைய கணக்கர் சித்திரகுப்தர் அப்படினு புராணங்கள் சொல்வது இதுதானா?” நான் கேட்டேன்.

“அப்படியும் சொல்லலாம். சம்ஸ்கிருத மொழியில் சித்திரகுப்த என்றால் இரகசியப் படம் என்று பொருள். புராணங்கள் மனதில் பதிகிற மாதிரியான கதைகளின் மூலம், நம்முடைய உள்ளுணர்வுதான் சாட்சி, அது நம்முடைய எல்லா ஆசாபாசங்களையும் அறிந்து வைத்திருக்கிறது எனக் காட்டுகின்றன.”

“கடவுள் எப்படி நமது செயலுக்கேற்ற பலனைத் தருகிறார்?”

“நம்முடைய செயலுக்கு எல்லாம் அவர் சாட்சியாய் இருப்பதால், கொஞ்சமும் தவறு இல்லாமல் எது நாம் சம்பாதித்தோமோ, அதைக் கொடுத்து விடுகிறார். நாம் சம்பாதித்தெல்லாம் கர்மபலன் எனும் பெயரில் பக்காவாய் சேமிக்கப்பட்டிருக்கும்.”

“ஆனால் கடினமாக உழைத்தும், சுவாமியிடம் உண்மையாகப் பிரார்த்தனை செய்தும், நான் செய்த வேலைக்கான பயன் எனக்குக் கிடைத்ததில்லை. என்ன நியாயம் இது எனப் பல முறை யோசித்துள்ளேன்.” என்றார் உமா.

“ம்ம்.. இதை நன்றாய்ப் புரிஞ்சுக்கணும். கடவுள் நமக்கான பலனைப் பகிர்ந்து அளிப்பதில், இரண்டு வேலை செய்கிறார்.”

கூர்மையாகக் கவனித்தோம்.

“முதலில், ஒரு குறிக்கோளுக்காக, நீங்கள் உங்களுக்கான வேலைகளை எல்லாம் முழுதாகச் செய்தாகி விட்டது என்றால், அதை எல்லாம் கடவுள் தன் கைகளில் எடுத்துக் கொள்கிறார்.  பிறகு உங்கள் நோக்கத்தாலும், செயலாலும், எவ்வகையான தாக்கம் உங்களுக்கும், மற்றவர்களுக்கும், உலகுக்கும் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, உங்களது கர்மபலன், மற்றும் உங்களது செயலால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரது கர்மபலன் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப உங்கள் செயலுக்கான பலனை மாற்றி அமைத்து அதனை மீண்டும் உங்களுக்கு அனுப்பி விடுகிறார்.   உலகை பரிபாலிக்க வேண்டும், அதே சமயம் ஒவ்வொருவருடைய கர்மபலனுக்கேற்ப பலனளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இறைவனுக்கு இருப்பதினால், அவர் இப்படிச் செய்கிறார்.”

“அய்யா, அப்படியானால், நான் என் குறிக்கோளை அடையவில்லை என்றால், அதற்குக் கடவுள்தானே காரணம்?” கீர்த்தி கேட்டாள்.

“இல்லை!  உனது குறிக்கோளை அடைவதற்கான உனக்குரிய எல்லாச் செயல்களையும், நீ முழுமையாகச் சரியாகச் செய்திருந்தால் மட்டுமே,  குறிக்கோளில் ஏற்படும் விளைவுகளுக்கு கடவுளைக் காரணமாகக் காட்டமுடியும்.  அவர் அப்படிச் செய்வதற்கும், உன்னுடைய பாவம்-புண்ணியம் ஆகிய கர்மபலனும், அவரது உலகை எல்லாம் காக்கின்ற தேவையும் காரணம் என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.”

“இப்படி எல்லாம்தான் நடக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்?”

“உன்னைச் சுற்றிலும் நடப்பதைப் பார். நேரடியாக விளக்க முடியாத காரணங்களால் நடக்கும் விளைவுகளைப் பார்.  தடைகள் வருவதும், அதனால் நமது முயற்சியும், பலனும் நலிவு அடைவதைப் பார்.  சில தடைகள், நம் அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது.  சில தடைகள் பிறரால் வருவது. மற்றவை இயற்கையால், நம்முடைய கட்டுப்பாட்டினை மீறி வருவன.  எல்லாவிதத் தடைகளும் நமது முயற்சிகளுக்கு இடர் செய்கின்றன.”

“விக்னேஷ்வரப் பெருமான் தடைகளை எல்லாம் அகற்றிவிடுவாரா?”

“ஆமாம்.”

“எப்படி, மிராக்கிளா?”

அய்யா பலமாகச் சிரித்தார்.

“அன்பே,  உலகத்திலே எல்லாமே மிராக்கிள் – இந்திர ஜாலம்தான்.   நீ உற்றுப் பார்த்தால் அது தெரியும்.  குழந்தைகளுக்கு அவர்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே மாஜிக்தான். என்ன, நாம்தான் வளர வளர,  உலகம் ஒரு மிராக்கிள் அப்படினு பார்க்கும் ஒப்பற்ற வலிமையை இழந்து விட்டோம்!  நமக்கு அபிமானம் வளர, இப்படி மாஜிக்கலா உலகைப் பார்க்கிற மென்மை நம்மை விட்டுப் போய்விட்டது.”

அய்யா தொடர்ந்து கூறினார்.

“எப்போ நீ கடைசியா, ஒரு மொட்டு மலராக விரிகின்ற மாஜிக்கைப் பார்த்தே? எப்போ கடைசியா, கோடிக் கணக்கான நட்சத்திரங்களுடன் ஜொலிக்கும் வானத்தைப் பார்த்து அதிசயப்பட்டிருப்பாய்!  பகுத்தறிவு அப்படினு கருதி, கூகுள்ல போய் எல்லாத்தையும் ‘எப்படிங்கிற’ பார்வையிலே அலசி ஆராய்கிறோம். ஆனால் ‘ஏன்’ அப்படிங்கிற உணர்வு பூர்வமான சிந்தனையை விட்டு விட்டோம்.  உன்னையே பாரேன்.  நீயே ஒரு மிராக்கிள்தான். எப்படி உன் மூச்சு ஓடுகிறது? யார் தூக்கத்தை கொடுத்து, காலையில் இதமாய் விழிக்க வைப்பது?  எல்லாம் மேஜிக்தான்.  ஆனால், அதை ஆராய எடுத்துக் கொண்டால், லாஜிக்கும் இருக்கும்.”

ஓர் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு அய்யா சொன்னார்.

“இப்போ உனது கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஆமாம். கடவுள் மிராக்கிள் செய்துதான் தடைகளை உடைக்கிறார். பயத்தினை அழிக்கிறார். ஆனால் அதைப் புரிந்து கொள்ள நீதான் ஆர்வமுடன் பார்க்க வேண்டும்.   உனக்கு நடக்கும் மிராக்கிள், உன் அனுபவத்துக்கு மட்டும்தான் கிடைக்கும்.  அதனால், உறுதியோட, நம்பிக்கையோட பார்.    இறைவன் உன்னிடம் அப்படி ஈடுபட்டு அருள் செய்யும் மேஜிக்கை, நீ விவேகத்துடன் சிரத்தையுடனும் ஆராய்ந்தால், அதில் லாஜிக்கும் இருக்கும்.”

தனது இரு கைகளையும்  ஒரு சில நொடிகள் வானில் காட்டிவிட்டு அய்யா சொன்னார்.

“யாரால் சொல்ல முடியும் இறைவனின் செயலை! கனவில் நீ கண்டு துயரப்படும் ஒரு கெட்ட கனவு,  நனவில் நீ அடிபட்டுத் துயரப்பட வேண்டிய ஒரு கர்மபலனுக்கு மாற்றாக இறைவன் உனக்குச் செய்த கருணையாக இருக்கலாம்! யாருக்குத் தெரியும்!  சிரத்தை இருந்தால் மட்டுமே, இறைவன் இவ்வாறு எப்பொழுதும்  உனக்காகச் செய்து கொண்டிருக்கும் கருணையைப் புரிந்து கொள்ள முடியும். சிரத்தையைப் பிடித்துக் கொள்!”

“நான் அப்படி மிராக்கிள் எனப் புரிந்து கொண்டதில்லை. ஆனால் வாழ்க்கை கற்றுக் கொடுத்தது, உலகில் சுகம் தரும் எந்தப் பொருளும், துன்பத்தையும் தருகிறது என்பதுதான்.” – உமா உறுதியுடன் கூறினார்.

“ஆம். விக்னேஷ்வரப் பெருமான் அப்படியான அறிவு நிலைக்குத்தான் நம்மை வழி நடத்துவார். அதுவே துயரத்திலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை அளிக்கும் பாதை.  எது வந்தாலும் ஏற்றுக் கொண்டோம் என்றால், தடைகள் எது வந்தாலும் அவற்றை இடர் என நாம் கருத மாட்டோம்.   அதனால் ‘தடைகளை அகற்றல்’ எனும் பயன் ‘தடைகளினால் பாதிக்கப்படாமல் இருத்தல்’ எனும் உயரிய நிலைக்குக் கொண்டு சேர்க்கும்.  அந்த நிலையே மிக வலிமையான, சமமான நிலை.   அதை அடைவதற்கு நம்முள்ளே நல்லதொரு மாற்றம் அவசியம். அதற்கு ‘உண்மை அறிவே’ திறவுகோல்.”

“உண்மை அறிவு என்பது என்ன?”

“உண்மை அறிவு என்பது என்ன?”

“எல்லா வடிவிலும், உயிரிலும், உள்ளே ஒளிந்து, ஒளிர்ந்து கொண்டிருக்கும் இறைவனாகிய சாட்சியே ஆத்மா.  நீ அதுவாக இருக்கிறாய்.  இதுவே உண்மை அறிவு. இந்த அறிவினால், அபிமானம் எனும் பொய்யான அறிவு அழிகிறது.  விநாயகப் பெருமான், இந்த உண்மை அறிவினை நமக்கு அளிக்கின்றார்.  அதனால்தான் எல்லாத் துயரங்களிக்கும் காரணமான அபிமானத்தை அழிப்பவர் என – ‘ஷோக விநாச காரண’ – என அவருக்குத் திருப்பெயர்.”

“அய்யா, அப்படியான உண்மை அறிவு, எங்களுக்கு எப்போது இறையருளால், குருவருளால் கிடைக்குமோ அப்போது கிடைக்கட்டும்.  இப்போது, இடர் தரும் தடைகளை உடைத்தெறிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாகத் தெளிவாகச் சொல்லுங்கள்”

எல்லோர் சார்பிலும் நான் அய்யாவிடம் கேட்டேன்.  தத்தளித்து முதல் நடை எடுக்கும் குழந்தையின் நடையைப் போல அல்லவா நமது ஆன்மீக நடைப் பயணம்!

“கடவுள்  உங்கள் எல்லாச் செயல்களிலும் சம்பந்தப் பட்டிருப்பதால், எல்லாச் செயல்களின் பலனையும் இறைவன் அளித்த பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள். அது எப்படி இருந்தாலும்!  இறைவனை நாம் முற்றிலும் அறிய முடியாது என்பதால், அவரது பரிசையும் நாம் அளக்க முடியாது. அதனால் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்பதைப் பெரிதாக வைக்காதீர்கள்.   அபிமானம் இல்லாத குழந்தையோ, ஞானியோ நாம் அல்ல! எனவே செயல் ஆற்றித்தான் நாம் பலன் அடைய முடியும். அகையால், விநாயகப் பெருமானின் அருளை முற்றிலும் வேண்டி, உங்கள் கடமைகளைத் துணிவாக, முழுதாக, இன்பமாகச் செய்யுங்கள்.”

அப்போது ஆர்த்திக்கான மணிகள் ஒலிக்கத் தொடங்கின. பாக்மதி நதியின் எதிர்க்கரையில் பூசாரிகள் பெரிய தீபங்களை ஏற்றி பசுபதிநாதரையும், துணையாளாகிய பாக்மதி மாதாவையும் ஆராதித்தனர். படியின் மேல் செதுக்கப்பட்டிருந்த விக்னேஷ்வரரின் புன்முறுவல், மஹா ஆர்த்தியின் ஒளியில், இடர் தரும் தடைகளை உடைத்திடும் கூர்வாளாக மின்னியது.

பக்தர்கள் பக்தியால் பருத்த இதயங்களுடன் கூவினர். ‘சம்போ ஜய சம்போ!’

மீ. ராஜகோபாலன்

13-September-2018

[/vc_column_text][/vc_column][/vc_row]

Related Posts

Share this Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*