ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

மறைபொருள் அமிர்தம் (1)

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் –  லலிதா என்பது விளையாடுபவள் எனப் பொருள்தருகிறது.

‘லீலா’, ‘லலிதம்’  எனும் சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு விளையாட்டு என்று பொருள்.  ‘ சஹஸ்ர நாமம்’ என்றால் ஆயிரம் பெயர்கள் எனப்பொருள்.  அப்படியானால் லலிதா சஹஸ்ரநாமம் என்பதன் மூலம் விளையாடுபவளின் ஆயிரம் பெயர்களைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

எது விளையாட்டு?  யார் விளையாடுவது? எதற்கு ஆயிரம் பெயர்கள்? ஏன் இந்த லலிதா சஹஸ்ரநாமம் எனும் மந்திரங்கள் ரஹசியமானதாயும், அதிசயமானதாயும், அம்பிகையாக இறைவனை வழிபாடு செய்வதற்கு ஆதாரமான பாடல்களாகவும் கருதப்படுகின்றன?

இங்கே விளையாட்டு என்பது இறைவனின் படைத்தும்  வளர்த்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடக்கின்ற இயற்கை இயல்பினைத்தான் குறிக்கின்றது.

வானும், கடலும், கோள்களும், நட்சத்திரங்களும்,   சூரியனும், சந்திரனும்,  கோடானு கோடி உலகங்களும்,   நாம் வாழும் பூமியும், பூமியில் அமைந்த உயிர்களும், பொருட்களும், நாமும், நம்முடல், மனம், அறிவு, அனுபவம் எனும் நிலைகளும் – என எல்லாமும் ஒரு பெரிய விளையாட்டு என்றும், அவ்விளையாட்டை விளைத்த மாபெரும் சக்தியே லலிதா எனும் அன்னை என்றும்  அந்த அன்னைக்கே ஆயிரம் பெயர்கள் எனவும் காட்டுவதாக அமைந்ததே லலிதா சஹஸ்ரநாமம்.

எப்படி உலகம் ஒரு விளையாட்டாக முடியும்?  நம் வாழ்க்கையிலே நமக்குத்தான் எவ்வளவு கஷ்டங்கள்!  பிறப்பிலே, வளர்வதிலே, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதிலே என ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எவ்வளவு கஷ்டப்படுகின்றோம்?  அப்படி இருக்கும்போது, எப்படி வாழ்க்கையும், வையமும் விளையாட்டாக இருக்க முடியும்?  நமக்கு சந்தேகம் வருகிறதல்லவா?

விளையாட்டு என்றால் நமக்கு என்ன தோன்றுகிறது?  இன்பம், மகிழ்ச்சி,  கவலையில்லாமல் பொழுதைக் கழிக்கும் செயல் என்றுதானே! இக்காலத்தில் வேண்டுமானால், விளையாட்டு என்பது பண முதலீடும், லாப முனைப்புமாக நடக்கின்ற தொழிலாக இருக்கலாம்!   ஆனால் அது அல்ல விளையாட்டு!   உடலும் மனமும் களிக்க,  தாமும் ஆடி மகிழ்ந்து, மற்றவரையும் மகிழ வைக்கின்ற பொழுதுபோக்கே விளையாட்டு.  அங்கே தோல்வியும் வெற்றியும் நமக்கு சாதரணமாகவே படுகிறது.  நாம் விளையாடி மகிழ்கின்றோம், அல்லது பிறரை மகிழ்விக்கின்றோம்,  அல்லது விளையாட்டைப் பார்த்து மகிழ்கின்றோம். எல்லா வகையிலுமே,  விளையாட்டு என்றால், அதன் வெற்றி தோல்விகளை ஏற்கின்ற பக்குவமும், ரசிக்கின்ற முதிர்ச்சியும், விளையாட்டில் நாம் எந்தப் பங்கு வகித்தாலும், விளையாடி முடிந்தவுடன் அப்பாத்திரம் முடிந்துவிடும் என்ற விட்டுத்தள்ளும் அறிவும் நமக்குப் புரிகிறது. அதனால் விளையாட்டின் விளைவுகள் எதுவானாலும், அது ஒரு பொருட்டல்ல என்பதும், அவ்விளையாட்டின் பாத்திரங்கள் அடுத்த விளையாட்டிலே மாறலாம் என்பதும் நமக்குப் புரிகிறது.  விபரீதமானதோ,  பெரும் துயரானதோ எதுவானாலும், அதுவும்  ஒரு  விளையாட்டுதான்  என்றால், அதனை விளையாட்டாகவே ஏற்றுக் கொள்ளவும் நம்மால் முடிகிறது.

என்றாலும், நாமெல்லாம் விளையாட்டு என்பது,  வாழ்க்கை எனும் மிகவும் முக்கியமான பயணத்தில் அவ்வப்போது பொழுதுபோக்க உதவுகின்ற இடைச் செருகல் என்றுதான்  கருதுகின்றோம்.   ஆனால், வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று  ஆகிவிட்டால்…..?  அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், குரு, சீடன் என்ற பலவித பாத்திரங்களாக இருந்து, இயற்கை தரும் காலத்திரைகளின் இடைவெளியிலே, உலகமெனும் மேடையிலே நாம் நடத்தும் விளையாட்டே வாழ்க்கை என்றும் வைத்துக் கொண்டால்…….. !  பிறகு வாழ்க்கை விளையாட்டிலே துன்பம் என்பது ஏது?

ஆனால் எப்படி வாழ்க்கை விளையாட்டாக முடியும்?  எப்படி கடலும், வானும், வையமும், அண்டங்களும், காலமும் தேசமும் விளையாட்டாக முடியும்?

இதனைத் தீர்ப்பதற்கு, எல்லா விளைவுகளுக்கும்  வித்தான காரணத்தை நாம் ஆராய வேண்டும்.

செயலும் விளைவும் (cause and effect) எதுஎதுவென ஆராய்கிறது விஞ்ஞான அறிவு.  விரிய விரியப் பெருகும் அண்டப் பெருவெளி ஆராய்ச்சியானாலும் சரி,   சுருங்கச் சுருங்கக் குறுகும் அணுத்துளி ஆராய்ச்சியானாலும் சரி,  விஞ்ஞான ஆய்வுப் பயணங்கள்  எல்லாம்,  முடிவில்லா முயற்சியாகவே  இருப்பதும்,  விஞ்ஞான ஆய்வுகளின் நோக்கமும், எல்லாவற்றுக்கும் முதலும் முடிவும் மூலமும் ஆன பொருள் ஒன்று என்றே இருக்க வேண்டும் (point of singularity)  என்ற அனுமானமாக இருப்பதும் நமக்குத் தெரிகிறது.

இவ்வறிவியல் பயணமும், ஆன்மஞானம் எனும் தன்னை அறியும் தவமாகிய பயணமும் ஒருவிதத்திலே ஒன்றுதான். அண்டத்தை அறிவதைப் போன்றதே பிண்டத்தை அறிவது என்பதையும்,  அதனால் நம்மை நாம் ஆய்வதே கடவுளை ஆய்வதற்கான வழி எனவும்  நமது ஆன்மவியல் காட்டுகின்றது.  பகுத்தறியப்பட்ட பல சமயங்களும்  கடவுள் என்ற பெயரிலே,  எல்லாவற்றுக்கும் ஆதாரமானது ‘ஒன்றே’ என்று அறுதியிட்டுக் கூறுகின்றன.  ‘அல்லா’ என்று இஸ்லாம் கூறுவதும்,  ‘புனிதத்தந்தை’ என்று கிறிஸ்தவம் கூறுவதும், ‘பரப்பிரம்மம்’ என்று ஸநாதன நெறி கூறுவதும்  – முதலும் முடிவும் மூலமும் ஆன ஒன்றே.

ஒன்று என்று மட்டுமே உறுதிசெய்யப்பட்ட அம்மூலம், அல்லது கடவுள், பிறகு எவ்வாறு வேறு வேறான உலகங்களைப் படைத்தார்?  ஏன் படைத்தார்?  எப்படிப் படைத்தார்?

இக்கேள்விகளே அறிவியலாலும், ஆன்மவியலாலும், மதநெறிகளாலும்  பலவித வடிவங்களிலே அமைக்கப்பட்டு, பலவித வழிகளிலே பலவிதமான பதிலையும், புதிரையும் தருகின்றன.

ஆனால் இந்துமதம் என்று தற்போது அழைக்கப்படுகின்ற ஸநாதன நெறியிலேதான்,   நமது அறிவால் உயர்ந்த பெரியோர் இக்கேள்விகளுக்கான பதில்களை, எல்லோரும் புரிந்து கொள்ளவும், படிப்படியாக உணர்ந்து கொள்ளவும், மொழி, உருவம், கதை, காவியம் எனும் பலவித சாதனங்களால் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.   அறிவு பூர்வமாக ஆய்ந்து, தர்க்க ரீதியாக விவாதித்து, தத்துவ வழிகளால் காண்பிக்கப் பட்டவை இப்பேருண்மைகள்.  அவற்றின் ஆதார மூலம்தான்  ‘மறை’ எனத் தமிழிலே அழகாகப் பெயரிடப்பட்ட வேதங்கள்.

அவ்வேதங்கள் என்ன சொல்கின்றன?

‘ஏகம் ஸத்யம்’  – ஒன்றே உண்மை.  எல்லாவாற்றுக்கும் மூலமான ஒரே பொருள் பரப்பிரம்மம். அப்பரப்பிரம்மம் உரு, பெயர், குணம், செயல் என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. அப்பரப்பிரம்மம் ஒன்றே  எப்போதும் இருப்பது, எல்லாம் அறிந்தது, முழு நிறைவுடன் இருப்பது.  அதனாலேயே  பரப்பிரம்மம்  இதுவென எதுவாலும் அடையாளம் காட்டப்பட முடியாதது.  ‘அலிங்கம்’ அதாவது அ + லிங்கம் ஆனது.  லிங்கம் என்றால் ‘குறி’ அல்லது ‘அடையாளம்’. அது சத் – எப்போதும் இருப்பதாய், சித் – எல்லாம் அறிந்ததாய், ஆனந்தம் – முழுமையாய் நிறைவுடையதாய் இருக்கிறது.

அப்படி என்றால் எப்படி மற்றவையாகத் தோன்றுவன எல்லாம் பிறந்தன?   படைத்தல் ஒரு செயல் அல்லவா?  பரப்பிரம்மம் செயலற்றதாக அல்லவா இருக்கிறது?  செயலாக்க வேண்டுமென்றால், அதற்கான ஆவல் அல்லது இச்சை இருக்க வேண்டுமல்லவா?  பரப்பிரம்மம் குணங்களுக்கப்பாற்பட்டல்லவா இருக்கிறது?    எல்லாக் குணங்களுக்கும், எல்லாச்  செயல்களுக்கும், எல்லா உருக்களுக்கும், எல்லாப் பெயர்களுக்கும் அதுவே வித்தாக இருக்கிறது.

வேதங்கள் என்ன சொல்கின்றன?

அப்பரப்பிரம்மத்தின் சக்தி – அப்பரப்பிரம்மத்தின் விருப்பத்தால் – அப்பரப்பிரம்மத்தை ‘அஹம்’ அல்லது ‘நான்’ என உணரவைக்கிறது.  அந்த உணர்வே  சிவம் எனும் சச்சிதானந்தப் பேரொளி.  அதுவே ‘பிரஹாசம்’.   தனது சக்தியாகிய  கண்ணாடியில் தன்னைப் பார்த்ததாலேயே, சிவம் ‘தான்’ என உணர்கிறதாம்.    அதாவது சக்தியே  சிவனை விளக்கும் விமர்சன கர்த்தா.   சக்தியே சிவப்பிரஹாச விளக்கம்.  அதனாலேயே,  லலிதா சஹஸ்ரநாமம்

விமர்ஸரூபிணி வித்யா வியதாதி ஜகத்ப்ரஷு
சர்வவ்யாதி பிரசமநி சர்வம்ருத்யு நிவாரணி (112)

என்று அன்னையை ‘விமர்ஸரூபிணி’  என்று அழைக்கிறது.

‘நான்’ (அஹம்)  என்ற உணர்வு வந்தாலே பிறகு ‘இது’ (இதம்)  எனப் பிரித்து அறியும் நிலை வந்து விடுகிறது அல்லவா?   அதனாலேயே,  ‘அஹம்’ என்று உணர்த்திய பரப்பிரம்மத்தை ‘சிவம்’ என்றும், ‘இதம்’ என்று விரித்த பரப்பிரம்மத்தை ‘சக்தி’ என்றும் வேதங்கள் காட்டுகின்றன.

அலிங்கமான பரம்பொருள்,  சிவம் என்று உணரப்படும்போது,  அது உருவமில்லா, அருவமில்லா, உருஅருவமில்லா பரம்பொருள் என்று காட்டும் அடையாளமாக ‘சிவ லிங்கமாக’க் காட்டப்பட்டது.  ‘அண்டம்’  என்றால் முட்டை வடிவம்.  ‘அகிலாண்டம்’,  ‘பிரம்மாண்டம்’  என்ற வார்த்தைகளால் உலகங்கள் காட்டப்படுவது,  எல்லா உலகங்ககளும்  முட்டை வடிவாகவும், முட்டை வடிவாலான பாதையில் பயணிப்பதாகவும் உணர்த்துவதற்கே!  அதுபோலவே முதலும் முடிவும் அற்றதான அடையாளமாகவே முட்டை வடிவாக சிவலிங்கம் காட்டப்பட்டது.

சம்ஸ்கிருத மொழியில், ‘சக்’ எனும் மூலத்தின் பொருள் ‘வலிமை தரவல்ல ’ என்பது ஆகும். அதன் மாற்றமே ‘சக்தி’  எனும் சொல்.  ‘சக்தி’ என்பதற்கு ‘வல்லமை’ என்றும், ‘சக்திமான்’ என்றால் ‘வல்லமையுடையவர்’ என்றும் பொருள்.  சிவமே சக்திமான். வல்லமையுடையான்.  சிவத்தின் வலிமையே சக்தி. அதனால் சிவம் வேறு சக்தி வேறு என்பது இல்லை. அப்படி இரண்டாகத் தோன்றிய விளையாட்டின் விளைவே அகிலங்களின் விரிவு; அவற்றின் இரண்டறக் கலந்த கலையே அகிலங்களின் விடிவு, முடிவு.

படைப்பவள் அன்னை என்பதும் பெண்மை என்பதும் நமக்கெல்லாம் தெளிகிறது என்பதாலேயே, பரப்பிரம்மத்தின் சக்தி வடிவினை ‘பெண்மையின் முதன்மையாக’, அன்னையாகக் காட்டுகின்றன நமது மறைகள்.  கிரியை அல்லது செயலற்ற சச்சிதானந்தம்  சிவம்.   சிவத்தை இணைந்து ‘இது’ ‘அது’ என உலகங்களை விரித்துப் படைக்கும் செயலே சக்தி. சிவம் தந்தை என்றால், சக்தி தாய் என்று காட்டி,  மற்ற சமய நெறிகள் எதனாலும் காட்டப்படாத உண்மையாக,  ஒன்றான கடவுளையே , ‘பெற்றோர்’ எனும் இருதெய்வங்களாகக் காட்டி நமக்கு எளிதாகப் புரிய வைக்கிறது நமது  சநாதன தர்மம்.

பகவான் ரமணர் ‘நான் யார்’ என உணர்வதே ஞானமுக்தி எனக் காட்டியது இவ்வுண்மையையே.  நான் யார் என உணர்வது என்பது, ‘அஹம்’, ‘இதம்’ எனும் வேறுபாடுகளைக் களைவது அல்லவா? அது சிவ சக்தி ஐக்கியம் அல்லவா? அது ஒன்றே உண்மையான முக்தி அல்லவா?   அதனால்  இந்த ‘அஹம்’, ‘இதம்’ எனும் வேறுபாடு கொடுத்து, உலகமெனும் இயக்கத்தை நடத்துகின்ற   மாசக்தியின் விளையாட்டின் நோக்கம்,  சிவப்பிரஹாச உணர்வும், சிவசக்தி ஐக்கியமுமே என்று கொள்ளலாம் அல்லவா?  அப்படி என்றால், அந்த விளையாட்டில் பொம்மைகளாக உயிர்த்திருக்கும் நாம், நமது சிந்தையாலும்,  செயலாலும், சிவசக்தி ஐக்கியமெனும் முக்திநிலையை அடைவதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?  அதுவே முக்தி அல்லவா?

இவ்வுண்மை நமக்குப் புரியும் வரை,  காலம், தேசம், கர்மம் எனும் கட்டுக்குள் நாம் விளையாட்டுப் பொம்மையென அலைக்கலைக்கப்பட்டுப் பிறவிஎனும் வலைக்குள் பின்னப்பட்டு வருவது உறுதி என்று வேதங்கள் காட்டுகின்றன.

சரி, எப்படி நம்மால் சிவப்பிரஹாச நிலையை உணரவும், சிவசக்தி ஐக்கியத்தை அடையவும் முடியும்?  அதனையும்,  கருணையுடன் வேதங்களும், வேதம் சார்ந்த இதிகாச புராணங்களும் நமக்கு விளக்குகின்றன.

சுருக்கமாகக் கூறினால், எந்த வகையாலும் – தந்நலமற்ற கடமைகளாலும் (கர்ம யோகம்), தடையில்லா அன்பினாலும் (பக்தி யோகம்), தன்னை விலக்கிடும் யோகத்தினாலும் (தியான யோகம்),  தன்னையே விளக்கிடும் ஞானத்தினாலும் (ஞான யோகம்)  –  பலப்பல வழிகளில், நாம் படிப்படியாக உயரலாம், பரம்பொருளை உணரலாம் என்று வேதங்களும், பகவத்கீதை முதலான பாடங்களும்  நமக்கு வழி காட்டுகின்றன.

லலிதா சஹஸ்ரநாமம் எனும் இப்பாடல்களோ,  மறைபொருளான மாபெரும் தத்துவங்களை , ‘சக்தி வழிபாடு’ எனும் வழிமுறையில்,  வேத, யோக சாத்திரங்களின் சாரைப் பிழிந்து தருகின்ற அமிர்தமாக விளங்குகின்றது.

சக்தி வழிபாடு,  பரம்பொருள் சக்தியை, அன்னையாய்,   அழகின் அழகான பெண்மையாய்க் காட்டியதன் பொருள் என்ன?

படைக்கும் செயலுக்கு மூலம் ஆசை அல்லவா?   பரம்பொருளுக்கு ஆசை ஏது! சிவபெருமான் கோபத்தினால் மன்மதன் எனும் காமனை எரித்தார் என்று சொல்வார்கள்.  அதன் பொருள் என்ன?  சிவனுக்கு எப்படிக் கோபம் வரும்?  சிவமென்றாலே அன்பல்லவா?  சிவனுடைய நெற்றிக்கண் என்பது ஞானக்கண் அல்லவா?  ‘ரு’ என்னும் சொல்லுக்கு நிலைப்படுத்தல், சரிசெய்தல், அகற்றல் எனப் பல பொருள் உண்டு. ‘திரா’ என்பது ‘திருஷ்டி’ அல்லது பார்வை என்பதன் மூலம்.  ‘ருத்ரா’ எனும் சொல், நேரான பார்வையினால் நிலைப்படுத்தும் நோக்கம் என்பதே ஆகும்.   அதனால், சிவபிரானின் உருத்திரப் பார்வையினால், அறியாமை எனும் இருளே அகலும்.      ஆசை எனும் குணத்தை எரித்து, அதனுடனே தான் வேறு, பிற வேறு எனும் அஞ்ஞானத்தையும் எரித்து, பரப்பிரம்மமாக லயித்து இருப்பது சிவம்.   அதுவே புராணங்களில், காமனை எரித்த கடவுளாக, சிவபிரானைக் காட்டுகின்றது.

ஒன்றுமட்டுமே  என்று இருந்தால், அங்கே அழைப்பதற்குப் பெயர் ஏதும் இல்லை,  ஆசைப்படுவதற்குப் பொருளேதும் இல்லை!  அதனால்  ஒன்றான பரப்பிரம்மம் தனியாக, தானாக இருக்கின்றது.  அப்பரப்பிரம்மம் இரண்டாகி, இன்னும் பல கோடியாக  உருவாக்கி விளையாட வேண்டுமென்றால், அப்பரப்பிரம்மத்திற்கு  படைத்தும் விரித்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஆள்கின்ற இச்சை அங்கே வர வேண்டும்.  அதனாலேயே,  அப்பரப்பிரம்மத்தின் சக்தியே  காமேஸ்வரியாக, அழகினாலே, அசையாச் சிவனையும் அசைக்கின்ற ஆதிசக்தியாக எழுந்து,  சச்சிதானந்த சிவமும்  தன்னை,  காமேஸ்வரனாக உணரும்படி செய்து,  அன்னையை மடிமேல் அமர்த்தி,  அவ்வைக்கியத்தினால்  அகிலங்களை எல்லாம் படைக்க அருளினார் என்பதாகக் காட்டப்படுகின்றது.  லலிதா சஹஸ்ரநாமத்திலே,  அன்னை லலிதாவின் இருப்பிடமாகப் பல இடங்களைக் காட்டி இருந்தாலும்,  முதலில் வருகின்ற இருப்பிடம், சிவனின் மடி  (சிவாகாமேஸ்வரங்கஸ்தா) என்றே காட்டப்படுகின்றது.

சர்வாருன நவத்யாங்கி சர்வாபரண பூஷிதா
சிவா காமேஸ்வரங்கஸ்தா சிவா ஸ்வாதீன வல்லவபா (21)

சிவஞானத் தீயில் விளைந்த பரசக்தியான அன்னையின் அழகினையே, முதல் 22 மந்திரங்களிலே  லலிதா சஹஸ்ரநாமம் ஆராதிக்கின்றது.  ஆதிசக்தியான அன்னையே இவ்விதமாக பரசிவத்துடன் கலந்து விளையாடி  பலவுலகங்களையும் படைத்து விளையாடுகிறாள்.    பார்க்குமிடம் எங்கும்  நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் சக்தி வடிவாக, அழகாக விளங்கின்றது. அவ்வழகை ஆராதிக்கும் ஞான ஒளியை நாம் அடைந்து உலகை ரசிப்பதே நமது பிறவியின் பயன்.

பரப்பிரம்மம் ஒன்றே உண்மை என்றால்,  இவ்வுலகங்களைப் படைப்பதற்கு எப்பொருள் பயன்பட்டது?  வேறு ஒரு பொருள் இருந்தது என்றால், அதனைப் படைத்தது யார் என்ற விடையில்லாக் கேள்வி எழுகிறது அல்லவா?  எனவே, படைப்பதற்கான அறிவும், படைப்பதற்கான சக்தியும், படைப்பதற்கான பொருளும் பரப்பிரம்மமே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?  ஆதலாலேயே  எல்லா உடல்களும் இறைவனே என்றும், எல்லா உடலிலும் பொருளிலும் இருப்பவன் இறைவனே என்றும் காட்டுகின்றன வேதங்கள்.  முதன்மையான  ‘ஈஸாவசிய’ உபநிடதம் இக்கருத்தினையே தனது தலைப்பாகவும்  கொண்டிருக்கிறது.

அப்படி என்றால்,  ஆதிசக்தியே விளையாட்டின் மூலம் பலவுலகையும், உயிர்களையும் படைத்து, அதனுள்ளே பரசிவமாக நிறுவி, பரசக்தியாகப் பரவி இருக்கிறாள்.  படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தந்து விளையாட்டினை ஆடிக்கொண்டிருக்கிறாள்.

படைத்தல் என்பது ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்குதல். காத்தல் என்பது உருவானவற்றை மாற்றம் எனும் கட்டளையால் மாற்றிக் கொண்டே இருத்தல். அழித்தல் என்பது படைத்தவை மற்றுமொரு கால தேசப் பரிமாணத்தில் கலத்தலைக் குறிப்பது. மறைத்தல் என்பது, இல்லாத்தை இருப்பதாயும், இருப்பதை இல்லாத ஒன்றாயும், காட்டி மயக்குதல்.  அதனாலேயே ஒன்றே பலவாகி, மாறி மாறிப் பிறப்பதும் இறப்பதுமாக இருப்பதை உணராமல் நாம், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு எனும் முதல் மூன்று நிலைகளாக மட்டுமே உலகைப் பார்க்கிறோம்.  அதனாலேயே, தொடர்ச்சியாக, இந்த பிறப்பு, வளர்ப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் நம்மை நாமே திணித்துக் கொண்டிருக்கிறோம்.  இதனை உணர்த்தி, உண்மையான விடுதலையைத் தருவதே அருள்தல் ஆகும்.  இவ்வைந்து தொழிலுக்கும் மூலமும் சாட்சியும் பரசிவம். இவ்வைந்து தொழிலையும் நடக்க அருளும் சக்தி, பரசக்தி!  அப்பரசக்தியே ஜகன்மாதா.

நாம் எல்லாரும் அவளது குழந்தைகள். அவளது விளையாட்டுப் பொம்மைகள்.  சிவசக்தி ஐக்கியமே  உலகங்கள்.  சிவசக்தி ஐக்கியமே விஷ்ணு.  அதனாலேயே ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ – எல்லா உலகங்களும் விஷ்ணுவின் மாற்றத்தாலேயே ஆனது என்று சொல்லப்பட்டது.    சிவன், சக்தி எனச் சைவ நெறி காட்டுவதையே ஆதிநாரயணன், ஆதிநாராயணி என்று வைணவம் அழைக்கின்றது.  எப்படி அழைத்தாலும்,  பரசக்தியே உலக மாதா.   அம்மாதாவின் அரும்விளையாட்டை உணர்த்தும் பெயரே லலிதா.

எதற்கு ஆயிரம் பெயர்கள்?  ‘நாம ரூப பேதம்’ – பெயர், உரு வேறுபாடு எப்போது உண்டாகிறது?

ஒன்று என்பது பலவாகித் தெரியும்போதுதான் பெயரும் உருவேறுபாடும் தேவைப்படுகின்றது!  ஆயிரம் என்பது ஒரு கணக்கின் அடையாளமே…. அளவிட முடியாதது என்பதற்காக வைக்கப்பட்ட அடையாளம்.  ஆகையால் ஆயிரம் பெயர்கள் என்பது அளவிட முடியாத பெயர்கள் என்றும்,  அளவிட முடியாத பெயர்கள் என்றால், அளவிட முடியாத உருவங்கள் எனவும் ஆகிறது.  ஆம்!  எல்லா உருவங்களும் அன்னையின் உருவே!  உருவங்களும் பெயர்களும் பலவாகும் போது,  காலத்தின் கட்டாயத்தால்,  அடிப்படை ஒன்றே எனுமுண்மையினை மறந்து, உருவங்களும், பெயர்களும் தனித்துவம் பெற்றதாகவும்,  வெவ்வேறு வழிகளிலே அணுகுகின்ற பழக்கமாகவும் மாறிவிடுவது இயற்கை.  இந்தியாவிலே,  பலகோடி மக்கள் வாழும் கலாச்சாரக் கடலிலே,  இதனாலேயே, பரம்பொருள் அறிவினை உணரும் வழிகள் பலவாறாகப் பரந்தன.  வேத உண்மைகளை  வேதம் காட்டிய வழியாலும், வேதங்களுக்கு ஒவ்வாத வழிகளிலும் அடைவதற்கான பிரிவுகளும், வழிமுறைகளும் தோன்றின.  ‘சக்தி வழிபாடு’  எனும் பாதை, முக்கியமாக  தக்ஷிணாசாரம் (தென்வழி) மற்றும் வாமாசாரம் (வடவழி) எனும் இரு பிரிவுகளாக அமைந்தன.  இதனால் பெயர்களும், உருவங்களும், வழிமுறைகளும், விதிமுறைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும், அடிப்படை உண்மை ஒன்றே என்று காட்டுவதற்காகவே, சஹஸ்ரநாம வழிபாடுகள் அமைக்கப்பட்டதாக அறிவோர் கூறுவர்.

அவ்வகையிலே அமைந்தது தான் லலிதா சஹஸ்ர நாமம்.  ஒன்றேயான சக்தியே  ஆயிரம் பெயர்களாலும், ஆயிரம் முறைகளாலும் துதிக்கப்படுகிறாள் எனும் உண்மையை உணர்த்தி, ஒற்றுமைப்படுத்தவும், சஹஸ்ரநாம பாராயணம் உதவுகின்றது.    ‘நாம ரூப விவர்ஜிதா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்திலே வ்ருவதால்,  ஆயிரம் பெயரிட்டு அழைத்தாலும், பரசக்தி  பெயர், உரு எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தி என்பதும் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமம்  தக்க குருவிடம் அமர்ந்து பயில வேண்டிய பாடம்.  அதன் ஆழ்ந்த கருத்துக்களும், ரஹசிய உண்மைகளும்  பணிவுடன் பயில விழையும் மாணவருக்கும், பக்குவமடைந்த குருவுக்கும் மட்டுமே உரியது என்பது பெரியோர் விதித்த விதி.

பொதுவாக, வார்த்தைகளுக்குச் சான்றோர் மூன்று விதமாகப் பொருள் பெறுவர்.  அவை  ‘சாமன்ய அர்த்தம்’ எனும் சொற்பொருள், ‘லக்ஷணார்த்தம்’ எனும் கருப்பொருள், ‘ தத்வார்த்தம்’ எனும் மறைபொருள் ஆகும்.  உதாரணமாக, ‘உணவு’ என்றால் அதன் சொற்பொருள் ‘சாப்பாடு’ எனக் கொள்ளலாம்.  அதன் கருப்பொருள், சொல்லின் இடம்,செயல், காலம், தேசம் ஆகியவற்றின் தன்மையால் வேறு பொருளைக் காட்டும். உதாரணமாக  ‘செவிக்கு உணவு’ என்னும் போது, உணவு என்பது செய்தி அல்லது கேட்டுணரவேண்டிய கருத்து என்று ஆகும்.  மறைபொருள் என்பது,  அச்சொல்லின் மூலம் உணரப்படவேண்டிய ஆதார உண்மையைக் குறிப்பது ஆகும்.     மறைபொருள் என்பது அறியப்படுவதை விட உணரப்படுவது என்பதே பொருத்தமாகும்.  அந்த வகையிலே, லலிதா சஹஸ்ரநாமத்தின் சொற்பொருள் தரப் பல அரிய நூல்கள் இருப்பினும், அதன் கருப்பொருளும், மறைபொருளும் தக்க குருவிடமிருந்தே பெறக்கூடிய பாக்கியம் ஆகும்.

அடியேனுடைய உரை, சிற்றறிவில் வெடித்த பேராசை. ஆழ்மனத்தில் சுரந்த  அன்பு மழை.  பக்தியால் பயில்வதில் பயிர்த்த அணுக்கூறு. மேகத்தின் சிதறலைச் சிறுகுழந்தை கணப்பொழுதும் மாறும் சித்திரமாகப் பார்ப்பதுபோல, லலிதா சஹஸ்ரநாமம் எனும் வான விதானத்தைப் பயிலும்போது, பலவிதமான தத்துவங்களும் படங்களாக விரிகின்றது. ஏதோ பெரிய பொக்கிஷத்தைக் கண்டாற்போல, குதூகலித்து மற்றவர்களுக்குத் தன் சுட்டுவிரலால் மேக ஒவியங்களைக் காட்டி மகிழும் குழந்தையின் செயலைப் போன்றதே, யான் அனுபவித்த லலிதா சஹஸ்ரநாமம் தரும் மறைபொருள் அறிவினைச்  சுட்டிக் காட்ட முயலும்  இவ்வுரை.    லலிதா சஹஸ்ரநாமம் ஒரு தேன் கூட்டைப் போன்றது; நுணுக்கமான கட்டமைப்பு;  ஒன்றுக்குள் ஒன்று அடங்கி இருக்கும், விரிவான கருத்துச் சுரங்கம்! எல்லா இடத்திலும் இனிய வருணனைத் தேன் வழியும் சாரம்.  தேன் கூட்டை எப்படி அளப்பது, பிரிப்பது!  அதனாலேயே,   மறைந்திருப்பது போல் தோன்றும் வேதப்பொருளான உயர் கருத்துக்களை, லலிதா சஹஸ்ரநாமக் கவி நயத்தினை, எனக்குத் தோன்றிய வகையிலே  பல  கோணங்களிலே  பகிரத் துணிகிறேன்.  அமிர்தம் சுவைப்பது ஒன்றே குறிக்கோள் என்றால்,  தேனை எப்படி அணுகினால் தான் என்ன?

வாக்கு எனும் தேவதையினைப் படைத்து, அவ்வாக்கு தேவதையினை லலிதா சஹஸ்ரநாமத்தைப் படைக்கச் செய்தவள் அன்னை.  ஆதலினால், அடியேன் வடித்த வாக்கில் உண்மை நிறைப்பதும் நிலைப்பதும் அன்னையின் ஆணை.   இம்மாமந்திரங்களில் மறைத்துள்ள உபதேசங்களைத்  தக்க குருவிடமே பயில வேண்டும் என்பது விதி என்பதாலும்,   வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரும் நூல்களைப் பல பெரியோர்கள் தந்திருக்கிறார்கள் என்பதாலும்,  அடியேன் அறிவிற் குறையனாய், தகுதியிலாத் தன்மையனாய் இருப்பதாலும், இவ்வுரை மற்றவருக்கு விளக்குமுரை அல்ல என்றும், என் அனுபவத்தைப் பகிரும் உரை என்றும் நிச்சயிக்கிறேன்.

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post