ōṁ asatō mā sadgamaya |

Śāṁti Pāṭha

(Read in ENGLISH)

Download PDF for full text with meaning.

Inspired Interpretation


ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ௐ அஸதோ மா ஸத்3க3மய |
தமஸோ மா ஜ்யோதிர்க3மய |
ம்ருத்யோர்மா அம்ருதம் க3மய |
ௐ ஶாந்தி ஶாந்தி ஶாந்தி ||.

இந்த அழகிய மந்திரம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் உள்ள மந்திரம் ஆகும். எனினும், இதனுடைய ஆழ்ந்த கருத்தும், வேண்டுதல் போன்ற அமைப்பும், இம்மந்திரத்தை ஒரு சாந்தி பாடப் பிரார்த்தனையாகக் கருதச் செய்துள்ளது. எளிமையும், இனிமையும் கொண்ட இம்மந்திரம், வேதாந்த உட்்கருத்தை சுருக்கமாகச் சுமந்திருக்கின்ற மருந்தாக இருப்பதாகப் பெரியோர்கள்் கருதுகின்றனர். வேறுபாடுகளற்ற அத்வைதம் எனும் பேருண்மையைத் தருவதாகவும், உணர்ந்தார்க்கு, பூரணத்வம் எனும் முழுமையான நிறைவைப் பயனாக அளிப்பதாகவும், இம்மந்திரம் விளங்குகிறது.

இதனுடைய பொருள்:

ஓம்! இல்லாமையிலிருந்து (அஸதோ) இருப்பை (ஸத3) யான் (மா) அடையச் செய்க (க3மய )! அடர் இருட்டிலிருந்து (அஸதோ) சுடர் ஒளியை (ஸத3) யான் (மா) அடையச் செய்க (க3மய) ! இறப்பிலிருந்து (ம்ருத்யோர்) இறவாமையை (அம்ருதம் ) யான் (மா) அடையச் செய்க (க3மய) ! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

சிலர் இதன் முதல் அடிக்கு “கேடுகளில் இருந்து நன்மையை யான் அடையச் செய்க” எனவும் இரண்டாம் அடிக்கு “அறிவின்மையிலிருந்து நல்லறிவினை யான் அடையச் செய்க” எனவும் பொருள் கொள்வர். அதுவும் சரியே, ஏனெனில் நாம் அனைவருமே உலகில் நன்மையும், அறிவில் ஆற்றலும் கொண்டு விளங்கத்தானே எப்போதும் விழைகிறோம்! எனினும் உலகம் பற்றிய அறிவிலும், செயலிலும் வலிமை கொள்வதனால் மட்டுமே இம்மந்திரத்தின் மூன்றாம் அடியினில் விழையப்படும் ‘மரணமில்லாப் பெருநிலை’ கிடைக்கப் போவதில்லை. எனவே இம்மந்திரத்தின் உட்பொருள் ஆழமானது என ஆய்ந்து உணருவது தேவையாகின்றது.

முதலில், ‘மா க3மய’ எனும் தொடரின் உட்பொருளை உணர்வோம். சம்ஸ்கிருத மொழியில், ‘க3மய’ எனும் தொடர், ‘அடையச் செய்’ அல்லது ‘போகச் செய்’ எனும் பொருளைத் தரும். ‘மா’ என்பதற்கு ‘யான், என்னை’ எனவும் ஒரு பொருள். எனவே ‘மா க3மய’ எனும் தொடரினால், ‘யான் அடையச் செய்வாயாக’ எனும் வேண்டுகோள் காட்டப்பட்டது. இந்த மந்திரம், ‘மா க3மய’ எனும் தொடரினையே பயன்படுத்துவதால். இதனைத் துதிப்பவர், தான் அடைய வேண்டிய பலனை ஏதோ மந்திர ஜாலத்தால் அப்படியே தனது கைகளில் அடைய வேண்டும் எனக் கேட்காமல், தாம் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கிச் செல்வதற்கான, உறுதி, அறிவு, செயல் (இச்சை, ஞானம், கிரியை) எனும் சக்தியினைக் கொடு எனக் கேட்கிறார்.

வேதங்கள், நாம் அடைய வேண்டிய எந்தக் குறிக்கோளுக்கும், அதற்கான சரியான, மற்றும் முறையான முயற்சி (பிரயத்தனா), அம்முயற்சியின் பயனாக வரும் விளைவு (ஈஸ்வரப்ரஸாதம்), இவற்றை ஏற்பதற்்கான தகுதி (சத்குணம்) எனும் மூன்றும் இன்றியமையாதன எனக் காட்டுகின்றன. இங்கே துதிப்பவர், இறைவனிடம் தனக்கு அத்தகைய வலிமையைத் தரவேண்டும் எனவும், அதனால், தாமே குறிக்கோளை அடைய வேண்டும் எனவும் கேட்பது தெளிவாகிறது. இதுவே இம்மந்திரத்தின், முதல் முக்கியப் பாடம்.

இதில் உள்ள இரண்டாவது முக்கியப்பாடம், ஒருவர் தம்முடைய நிலைமையைச் சரியாகத் தெளிந்து கொள்ளல் முக்கியம் என்பதாகும். எவரும் தம் நிலையை, அதிலும் முக்கியமாகத் தம்முடைய இயலாமையைத் தெரிந்து கொண்டால்தான், அதற்கான விடையை, நல்ல முன்னேற்றத்தைத் தேடுவதற்கான காரணமும் அவருக்குக் கிடைக்கும். இம்மந்திரத்தில், அப்படி நன்மையை விழைபவரைத் தேடுபவர் (the Seeker) எனக் காண்கிறோம். அவருக்குத் தம்முடைய நிலை போலியாகவும், இருளாகவும், மரணம் எனும் முடிவினால் மட்டுப்படுத்தப்பட்டு் இருப்பதாகவும் தெரிந்திருக்கிறது.

அவருக்குத் தன்னுடைய நிலையில்லாத் தன்மை புரிந்திருக்கிறது. வாழ்வு நிரந்தரமானது இல்லை, மாறிக்கொண்டே இ்ருக்கின்ற உலகத்துடன் தாம் கொண்டிருக்கின்ற உறவும் நிரந்தரமாக இல்லை. மரணம் தம்மையும் ‘இல்லாமை’ என ஒரு காலத்தில் ஆக்கிவிடும் என்பதும் தெரிந்திருக்கிறது. அதனால், தன்னுடைய அடையாளம் ஒரு ‘போலி ’, ‘இல்லாமை’ என அவரது மனதில் எண்ணம் வருகின்றது. அதனால், தேடுபவர் தன்னுடைய நிலையை ‘அஸத்’ எனக் குறை கொள்கின்றார்.

வாழ்க்கை நிரந்தரமாக இல்லை என்பதையும், மாறிக் கொண்டே இருக்கும் உலகுடன் நாம் கொண்ட உறவும் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதையும் உணர்வது, ஆன்மீக அறிவுக்கான ஒரு நல்ல அடையாளமே ஆகும். ஆனால், நிலையில்லாதது வாழ்வு என்று அறிவினை மட்டும் பெற்று, ஆனால் அதற்கான மாற்றத்திற்கான செயலை ஒருவர் செய்யவில்லை என்றால், அதனால் அவருக்கு முன்பைவிட அதிகமான துன்பம்தான் எழும். ஏனென்றால், அத்தகைய அறிவு இல்லாத போதாவது, ‘அறியாமை’ எனும் போர்வை ஒருவிதமான சுகத்துக்குள் அவரை மூடி வைத்திருந்திருக்கும். ஆனால், தம்முடைய நிலை பரிதாபத்துக்குரியது என்பதை அறிந்து விட்டால், அதை நீக்குவதற்கான விடையைத் தேடி மனதில் ஏக்கமும், பாரமும் நிறைந்திருக்கும்.

அப்படிப்பட்டவருக்குத் தம்முடைய துயரத்துக்கான வழி ஒன்று இருக்கிறது எனத் தெரிந்திருந்தால், அதைவிடப் பெரும் பேறு வேறு இல்லை. அது இருட் குகையின் முடிவில் ஓர் ஒளித்தீபம் இருப்பதைப் பார்த்தது போல் ஆகும். இதுதான் மூன்றாவது முக்கியப் பாடம்.

இம்மந்திரத்தில், தேடுபவருக்குத் தன் துயரம் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற ஒரு நல்ல மாற்றும் இருப்பதும் தெரிந்திருக்கிறது. அதில் அவருக்கு உறுதியான நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது, ‘அஸத்’ எனும் போலியான நிலைக்கு மாற்று, ‘ஸத்’ எனும் நிலைப்பாடு. அதுபோல், ‘தமஸ்’ எனும் அறியாமைக்கு ‘ஜோதி’ எனும் நல்லறிவு. ‘ம்ருத்யு’ எனும் அழிவுக்கு, ‘அமிர்தம்’ எனும் அழியாமை.

வெற்றி பெற விழையும் எவருக்கும், தம்முடைய குறிக்கோள் எதுவென நிச்சயித்துவிட்டால், உடனே, அதை அடைந்தாக வேண்டும் எனும் விழுப்பு எழவேண்டும். அது சரியான செயலாகவும் மாற வேண்டும். அச்செயல் சரியான ஈடுபாட்டுடன் நடத்தப்பட வேண்டும். ஓருவேளை அப்படி ஒரு விழுப்பம் இருந்து, அதனை அடைய வேண்டிய இலக்கும் தெரிந்து இருந்தாலும், அதற்கான பாதை என்ன என்பது தெரியவில்லை என்றால் என்ன செய்வது?

அதற்கான ஒரே வழி, வழிகாட்டுபவரைத் தேடுதல்!

இறைவனைத் துதித்து, அவரது அருள் நல்வழி காட்டுகின்ற சத்குருவின் திருவடிகளை நோக்கி நம்மைத் திருப்ப வேண்டும். அத்தகைய சத்குருவின் அறிவுரையாகிய கூர்வாள், நமது அறியாமை எனும் இருட்திரையை, வெட்டி வீழ்த்திவிடும். அக்கணமே, நாம் தேடிய மாற்றம் எனும் பேருண்மை, நம்முள்ளேயே விளைந்து நற்பயனாகும்.

இதுவே இம்மந்திரத்தில் நாம் அறியும் நாலாவது முக்கியப்பாடம்.

இனி மந்திரத்தின் மற்ற சொற்களை ஆராய்வதற்கு உதவ, இம்மந்திரத்தின் நோக்கத்தையும், அதற்கான வேதாந்தச் சூழலையும் சுருக்கமாகப் பார்க்க வேண்டும்.

இம்மந்திரத்தின் நோக்கம், பிரம்மத்திலிருந்து வேறானது எதுவும் இல்லை, அதனால் நாம் ஒவ்வொருவரும் பிரம்மம் என்பதே. அதாவது ‘நான் பிரம்மம்’ எனும் மறைபொருள் உண்மையை உணரச் செய்வதே ஆகும்.

‘நான்’ என்பது பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவும்் அடையாளமும் இருக்கிறது. அது ஒவ்வொருவரின் அறிவிற்கேற்பப் பலவகையாகவும் இருக்கிறது. ஆனால் பிரம்மம் என வேதங்கள் அழைக்கின்ற, ஒன்றேயான இறைச்சக்திக்்கு நம்மால் விளக்கம் கூற முடியாது. அதற்கு வேதங்களின் சொற்களே வழிகாட்டி.

பிரம்மம் சொற்களால் வருணிக்கப்பட முடியாதது, அறிவினால் விளக்கப்பட முடியாதது என்றெல்லாம் வேதங்கள் சொல்லியிருந்தாலும், பிரம்மத்தை உணருவதற்கு ஒரு வழி நமக்குத் தேவை என்பதால், வேதமே அதற்கும் வழி செய்கிறது.

தைத்திரிய உபநிடதம், மூன்று சொற்களால் பிரம்மத்தைச் சுட்டிக் காட்டுகிறது.


सत्यं ज्ञानमन्तं ब्रह्म
ஸத்யம்் ஞானமனந்தம் ப்4ரஹ்ம

மாற்றமில்லா இருப்பு (ஸத்யம்), முழுமையான அறிவு (ஞானம்), எல்லையில்லாதது (அனந்தம்) பிரம்மம் ( ப்4ரஹ்ம)
பகவான் சங்கரர் காட்டியபடி, ஸத்யம், ஞானம், அனந்தம் எனும் சொற்கள், பிரம்மத்திற்கான அடைமொழிச் சொற்கள் அல்ல. ஏனெனில் அடைமொழிச் சொற்கள், ஒரே மாதிரியான பொருட்களில், ஒன்றைத் தனித்துக் காட்டும் சிறப்புச் சொல். ‘சிவப்பு மலர்’ என்பது போல. ஆனால் பிரம்மம் ‘ஒன்று’, அது ஒரு ‘பொருள்’ அல்ல என்பதால், மூன்று சொற்களும், பிரம்மத்தையே குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் பிரம்மம் ஸத்யம்; பிரம்மம் ஞானம்; பிரம்மம் அனந்தம்.

வேதாந்தத்தில் ‘ஸத்யம’் என்றால், எது எப்போதும், எவ்வித மாற்றமும் கொள்ளாமல் இருப்பதோ அது. கடந்த, நிகழ், வரும் காலங்களில் (த்ரிகாலல்பா3த்4யம்) இருப்பது. காலங்களால் கட்ட முடியாதது. மாற்றம் இல்லாமல் இருப்பது. ஆனால், எல்லாப் படைப்புக்களுக்கும் பிரம்மமே ‘காரணம்’ என அனுமானிக்கும்போது, காரணத்தின் மாற்றமே விளைவு என்பதால், பிரம்மம் மாற்றம் பெறுகிறது எனும் முரண்பாடு வந்துவிடும். இதனைத் தவிர்க்கவே, அடுத்த வரியில், பிரம்மம் ஞானம் எனச் சொல்லப்பட்டது. அதாவது அறிவாக விரியும் உணர்வே பிரம்மம். எனவே பிரம்மம் ‘அறிகின்றவர’் எனக் கொண்டால், ஒவ்வொரு பொருளும் மாற்றம் அடைவதால், அப்பொருள் பற்றிய அறிவினால் பிரம்மமும் மாற்றம் அடைகிறார் என்றாகிவிடும். எனவே அறிபவர் என்பதைவிட, அறிவே பிரம்மம் என்பது சரியானது.ஞானம் எனும் சொல்லினால், அந்த அறிவு, நிறைவான உணர்வாகக் காட்டப்பட்டது.

பிரம்மம் ஸத்யம் என்பதால், பிரம்மம் காலத்தினால் கட்டுப்படாதது. அதனால் ‘தேசம்’ எனும் வெளியினாலும் கட்டப்படாதது. அதாவது, பிரம்மத்திற்கு நீள, அகல, உயர, ஆழ, அடர்வு மற்றும் எல்லைப் பரிமாணங்கள் இல்லை. அதனால் அது அனந்தம். முழுமையாக நிறைந்திருப்பது. இவ்வாறு பிரம்மத்தைப் பற்றிய வேதாந்த விளக்கத்தை முன்வைத்து, மந்திரத்தின் நோக்கமான ‘நான் பிரம்மம்’ எனும் உண்மையை எப்படி அடைவது எனப் பார்க்க வேண்டும். அதற்கு, மந்திரத்தின் ஒவ்வொரு வரிகளிலும் உள்ள, ‘ஸத்-அஸத்’, ‘தமஸ்-ஜோதி’, ‘ம்ருத்யு-அமிர்தம்’ எனும் மூன்று ஜோடி எதிர்ச்சொற்களின் உட்பொருளை ஆய்ந்து ஆராதிப்போம்.

ௐ அஸதோ மா ஸத்3க3மய |

இவ்வரியில் உள்ள ‘அஸத்’, ‘ஸத்’ எனும் இரு சொற்களுக்கு, சம்ஸ்கிருத மொழியில் பல பொருட்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஸ்ரீ பகவத்கீதையில் (காண்டம் 17, பாடல் 23), பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.


ௐ தத் ஸத்3 இதி நிர்தே3ஶோ ப்3ரஹ்மணஸ் த்ரி-வித3 ஸ்ம்ருத4
ப3ராஹ்மணாஸ் தேன வேதா3ஶ் ச யஜ்ஞாஶ் ச விஹிதா3 புரா

(தொடக்கத்திலிருந்தே) ‘ஓம் தத் ஸத்3’ எனும் சொற்றொடரே பிரம்மத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறே வேத மந்திரங்களை ஒலித்து, யாகங்கள் செய்கின்ற வேதியர்கள் தியானிக்கின்றார்கள்.

இங்கே ‘ஸத்3’ எனும் சொல் ‘பிரம்மம்’ எனும் பரம்பொருளைக் குறிக்கிறது. மற்ற இடங்களில் ‘ ஸத்3’ எனும் சொல்: ‘உயிர்’, ‘இருப்பு’, ‘உண்மை’, ‘ மாறாத நிலை’ என்றெல்லாம் பொருள் தருகின்றது.எடுத்துக்காட்டாக, ஸ்ரீ பகவத்கீதையில் (காண்டம் 9, பாடல் 19), பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.


தபாம்ய் அஹம் அஹம் வர்ஷம்நிக3ருஹ்ணாம்ய் உத்ஸ்ருஜாமி ச
அம்ருதம் சைவ ம்ருத்யுஶ் சஸத் அஸச் சாஹம் அர்ஜுன

ஓ அர்ச்சுனா, வெப்பம், மழை, தாகம் என அனைத்தையும் யான் ஆள்கிறேன். இறவாமையும் யானே! இறப்பும் யானே! எல்லா உயிரும், உயிரின்மையும் என்னுள்ளேதான் உள்ளன.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அன்னைக்கு, ‘பா4வ-அபா4வ-விநோதி3னி’ எனும் திருப்பெயர் காட்டுகிறது. அன்னையே இருப்பனவாயும், இல்லாதனவாயும் இருக்கிறார்.

இங்கே ‘ஸத்’ எனும் சொல் ‘இருப்பு’, ‘உண்மை’ எனவும், ‘அஸத்’ எனும் சொல், ‘இல்லாமை’, ‘போலி’ எனவும் பொருள் தருகின்றன.இப்படியான பொருளறிவுடன், மந்திரத்தின் முதல் வரியினை ஆராய்ந்தால், அதில் தேடுபவர் வேண்டுகோள் பின்வருமாறு:
‘உயிர்ப்பின்மையில் இருந்து, உயிர்ப்்பினை, (அல்லது) போலியில் இருந்து உண்மையினை, (அல்லது), இல்லாமையில் இருந்து, இருப்பினை, யான் அடைவேனாக’

ஏன் தேடுபவர் தன் நிலைமை ‘அஸத்’ எனச் சொல்கிறார்?

ஏனெனில் அவருக்கு வாழ்வின் நிலையாமை புரிந்திருக்கிறது. ‘தான் இந்த உடம்பு’ என எண்ணி நடப்பதன் பிழை புரிந்திருக்கிறது/ உடல், மனம், அறிவு எனும் இவை எல்லாம் கருவிப் பொருட்கள் என்பதும், அவை வெளிப் பொருள் அனுபவம் (objective experiences) ஒன்றையே முக்கியமாகத் தருகின்றன என்பதும் அவருக்கு விளங்கி விட்டது. பொறிகளால் அறியக் கூடிய வல்லுடல் (ஸ்தூல சரீரம்) இயற்கையில்் உயிர்ப்புத்தன்மை அற்றது என்பதும், ஆகையால் அழியக்கூடியது என்பதும் தெரிகிறது. மெல்லுடல் (ஸூட்சும சரீரம்) மனம், மற்றும் நுண்ணிய புலன்களின் கூட்டு. அதுவும் தானாக இயங்க வல்லது அல்ல என்பதும், ஆழ்ந்த உறக்கத்தினை ஆராய்ந்தால் புரிகிறது.
மெல்லுடல் என்பது, ‘மனஸ்’ எனும் எண்ணங்களின் வளர்ச்சிக்கான மேடையாகவும், ‘சித்தம்’ எனும் எண்ணங்களின் நினைவுத்தொகுப்புக்கான மூலமாகவும், ‘பு3த்3தி4’ எனும் எண்ணங்களைப் பகுத்தறியும் சக்தியாகவும், ‘அஹம்காரம்’ எனும் தன்னைப் பொய்யுடன் இணைக்கும் செருக்காகவும் இருக்கிறது. இவ்வாறு எப்போதும் ஆடுகின்ற மனம், ஏதோ ஒரு சக்தியின் கருணையினால் மட்டுமே ‘உயிர்ப்புத்தன்மை’ (‘sentience’) அடைகிறது. ஏனெனில் அதன் இயற்கையான சடத்தன்மை ஆழ்துயிலில் தெரிகிறது அல்லவா?
எனவே தேடுபவர், மனம் நெகிழக் கேட்கிறார்.

நான் என்னுடைய உடலோ மனமோ அல்ல! அப்படியாயின், அவற்றுடன் ‘நான்’ என என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. பிறகு, என்னுடைய இருப்பு எதிலே இருக்கிறது? உடல்களுடன் எனக்குள்ள அடையாளத்தை நான் துறந்தால், நான் யார்? அந்நிலையில், ‘இல்லாமை’ தானே என் நிலையாக ஆகிவிடும்? என் இருப்பு எது?

ஓ தெய்வமே! என் முயற்சிகளால் மட்டுமே என்னால் என்னை அறிய முடியாது. நின்னருளால் மட்டுமே அது முடியும்! எனவே நின்னருள், எனக்கு வலிமையைத் தந்து, ‘இல்லாமை’ எனும் நிலையிலிருந்து, ‘இருப்பு’ எனும் உண்மைக்கு அழைத்துச் செல்லட்டும்.
எனவே இந்த முதல் வரியில் நாம் அடையும் கருத்து, ‘நான் ஸத் எனும் மாறாத இருப்பு’ என்பதாகும்.

தமஸோ மா ஜ்யோதிர்க3மய |

வல்லுடலும், மெல்லுடலும் சடத்தன்மையுடையன, அதனால் உயிர்ப்பற்றன எனத் தெளிந்து கொண்ட தேடுபவர், அவற்றை ‘அஸத்’ எனத் தள்ளி, அவை தான் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்கிறார். ஆனால், வல்லுடலுக்கும், மெல்லுடலுக்கும் உயிர்ப்புத்தன்மையைக் கொடுப்பது எது? அதுதான் ‘ஸத்’ என்றால் அது எங்கே இருக்கிறது? இந்த உண்மையை, தேடுபவர் இன்னும் தெரிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு உயிர்க்கும் உள்ளிருக்கும் சுயமான உணர்வே ‘ஸத்’ என வேதாந்தம் சொல்கிறது. ‘பிரம்மம்’ எனும் பரம்பொருள் மட்டுமே சுய ஒளியினை உடையதாய் விளங்குகிறது. அதுவே, ஒவ்வொரு பொருளுக்குள்ளும், ஊடுருவி அவற்றின் இருப்பாகவும், அறிவு ஓளியாகவும் இருந்து, உயிர்ப்பிக்கின்றது. நமக்குள் ‘உணர்வாக’ விளங்கும் அச்சக்தியே ‘ஆத்மா’. அதுவே ‘ஸத்’ எனும் மாறாத இருப்பு.

இத்தகைய உயர் அறிவு வாக்கியங்களைக் கேட்பதால் மட்டுமே அவற்றின் பயன் நமக்குள் முழுமை அடைந்து விடாது. அதனை முற்றும் தெளிந்து உணர்வதற்குத் தேவையான தகுதியினையும் நாம் முயன்று பெற வேண்டும். அதன் பொருட்டே, அதனைத் தெளிந்து, தன்னை உணர்ந்த தவப்பயனை ஒருவரால் அடைய முடியும்.

அதற்கான வழிகள்் என்ன?

தேடுபவர் இன்னும் அவற்றை அறியாததால், தன்னுடைய நிலை, காரிருளில் மூழ்கித் துழவுவதாக, ‘அறியாமை’ எனும் இருளாக எண்ணி, கதியற்றவராய்க் கலங்குகிறார். இதுவரை படித்து அறிந்த உலகம் சார்ந்த எல்லாக் கல்விகளும், தன்னுடைய உண்மை நிலை என்ன என்பதை ஆய்வதற்கு ஒருவிதத்திலும் பயனளிக்கவில்லை என அவருக்குப் புரிகிறது. அதனால் சாத்திரங்கள் சொற்படி, எக்கல்வி ஒருவருக்குத் தன்னைப் பற்றிய உண்மையான அறிவினைத் தருமோ அக்கல்வியே ‘வித்யா’ எனப்படுவது என்பதில் அவருக்கு ஒப்புதல் வந்துவிட்டது. ஏனெனில் மற்ற கல்விகள் எல்லாம் பொருளனுபவத்தைச் சார்ந்ததாக இருந்து, தான் யார் எனும் அறிவினை விட்டு விலகிச் செல்கின்்றன. மேலும், உலக அறிவு முடிவற்றது என்பதால், அதன் ஈடுபாட்டினால், தன்னை அறியும் முயற்சிக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காமலே வாழ்க்கை முடிந்்துவிடுகின்றது. எனவேதான் பகவான் சங்கரர், தன்னைப் பற்றிய உண்மையினைத் தராத எல்லாக் கல்வியும் ‘அவித்யா’ எனக் கூறுகிறார்.

எனவே தேடுபவர் தன்னுடைய மதிக் குழப்பமாகிய இருளுக்குத் தன்னுடைய அறியாமையே காரணம்் எனத் தெரிந்து, அதிலிருந்து விடுபட, ஓர் ஒளியினைத் தேடுகின்றார். அந்த ஒளி, அறிவு மயமானது. அதனைத் தரும் கல்வி ‘ஆத்ம-வித்யா’ என்பது. அது ஒன்றே தேடுபவரை ‘நான் யார்’ எனும் வினாவிற்கான விடைக்கு அழைத்்துச் செல்லும். அது தேடுபவரின் ஆன்மீக விழைவின் வீச்சாலும், நற்பண்பினாலும், தான் தேடுகின்ற ஒளி, அவருக்கு இருட்குகையின் முடிவில் ஓர் எரியும் தீபமாகத் தெரிகிறது.

அவருக்கு ஓர் தயக்கம். எப்படி ‘நான் யார்’ என நான் அறிவது?

தன்னைத் தானே அறிவது என்பது, ‘அறிபவரையே அறிதல்’ என்றும், தன்னைத் தானே பார்ப்பது என்பது ‘பார்ப்பவரையே பார்ப்பது’ என்றும் ஓர் புதிராக ஆகிவிடாதா? அது முடியாதே! என்னுள் பார்ப்பவன் யார் என்று நான் பார்த்தால், நான் யாரைப் பார்க்க முடியும்! மேலும், ஒன்றை அறிய முடியும் என்றால், அது அறியப்படக் கூடிய பொருள் என்று ஆகிவிடும். எவை எல்லாம் ‘பொருள்’ ( anything objectified) என்றாகிறதோ, அவை கட்டுப்பாடுள்ளன. அவை பகுக்கப்பட்டன. அவை ‘ஸத்’ ஆக முடியாது.

எனவே தேடுபவர் தன்னுள் நெகிழ்ந்து கேட்கிறார்.

அந்தோ! ‘உடலும் மனமுமே நான்’ என யான் வைத்திருந்த நெடுநாள் அடையாளத்தை இப்போது விட்டவுடன், ‘யார் நான்’ எனத் தெரியாமல் ஓர் அறியாமை இருளில் இருக்கின்றேன். ‘உடலே நான்’ என இருந்தபோதும், இவ்விருளில்தான் யான் இருந்து வந்துள்ளேன். ஆனால் அப்போது, இருளெனத் தெரியாததால், மயங்கி இருந்தேன். இப்போது, இருளும் தெரிந்துவிட்டது, ‘நான் யார்’ எனும் இருளை அழிக்க வல்ல ஓர் அறிவின் ஒளி இருப்பதும் புரிந்து விட்டது! ஆனால், அதனை எப்படி அறிவது? மனம் ஒரு சடப்பொருள் என விலக்கி விட்டால், பிறகு அறிவுக் கருவி எனக்கு ஏது? ஆத்மாவை எப்படி அறிவது? ஆத்மாதான் அறிகிறது என்றால், ஆத்மாவை ஒருபோதும் அறிய முடியாதே! அது முடியும் என்றால், அறிபவரும், அறியப்படுவதும் ஒன்றாக இருந்தாக வேண்டும். ஆத்மாவே அறிவாக இருக்க வேண்டும். அதைத்தான் வேதங்கள் சொல்கின்்றன. ஒவ்வொருவருக்குள்ளும், உணர்வு வடிவாக விளங்கும் சக்தியே ‘சித்’ என அழைக்கப்படுகிறது. அந்த ‘சித்’ சக்தியே ஆத்மா. அந்த உணர்வே நான்். இவ்வுண்மையை மறைப்பது அவித்யா என்னும் அறியாமைத் திரை. எனவே யான் வேண்டுவது எல்லாம், அவித்யா எனும் திரையை வீழ்த்துகின்்ற அறிவு. சூரியனை மறைக்கின்ற மேகங்களைச்் சூரிய ஒளியின் எழுச்சியே அகற்றிவிடுவதைப் போல, என்னுள் இருக்கும் அறியாமை எனும் மேகமும், இறைவா, நினது அருள் ஒளியால்கலையட்டும்.

அப்போது ‘நானே சித’் எனும் அறிவு ஒளி துலங்கட்டும்!

இவ்வாறு, இரணடாம் வரி ‘நான் சித் எனும் அறிவு ஒளி’ என உணர்த்துவதாகும்.

ம்ருத்யோர்மா அம்ருதம் க3மய |

முதல் இரு வரிகளின் தொகுத்த பயன், இந்த மூன்றாம் வரியில் சிறப்பித்துக் காட்டப்பட்டது. அது ‘அழியாமை’ எனும் மரணமில்லாப் பெரும் பேறு.

தேடுபவர் இவ்வரியில், இறப்பிலிருந்து, இறவாமையை அடைய விழைகிறார்.

‘இறப்பு’ என்பது பூதவுடல் வாழ்வின் அழிவு. வேதங்களின்படி, இற்ப்பிற்குப் பின் மீண்டும் ஓர் பிறப்பு வருகிறது. அதனால், பிறந்து இறந்து சுழல்கின்ற தொடர் நிலை நமக்கு இருக்கிறது. இதனை ஸம்ஸாரம் எனச் சொல்வர். எனவே மரணம் என்பது ஸம்ஸாரம். எனவே இறவாமை என்பது, ஸம்ஸாரம் எனும் சுழலிலிருந்து பெறும் விடுதலை.

ஸம்ஸாரம் என்பது, தன்னை பிரம்மத்திலிருந்து வேறாக உணர்வதால் வரும் பிரிவுத் துயரம் என வேதாந்தம்் சொல்கிறது.ஏனெனில் பிரிவு என்பது வேறுபாட்டினை விளைக்கிறது. தன்னைத் தவறாக உடல், மனக் கூறுகளுடன் அடையாளப் படுத்திக் கொள்வதால், நமக்குப் பொய்யான ‘நான்’ எனும் ஆணவம் (அஹம்காரம்) வருகிறது. அதனால், ‘என்னுடையது’ என (மமகாரம்) நம்மைச் சார்ந்த வர்களிடமும், பொருட்களிடமும் உரிமையும், பற்றும் வருகிறது. இதன் விளைவாக விருப்பு-வெறுப்பு (ராக3-த்3வேஷா). அதை ஒட்டியே, அச்சமும் (பயம்) விளைகிறது. விருப்பு-வெறுப்பின் காரணமாகச் செய்கின்ற செயல்கள் எல்லாம் ஆசை அல்லது பயத்தின் பொருட்டே செய்யப்படுகின்றன. அச்செயல்கள் (காம்யகர்மா) அறம், பாவம் எனும் இருவினை கலந்த பலன்்களாக (கர்மபலம்) சேமிக்கப்பட்டு, அவற்றை நாம் உடல்களை எடுத்து அனுபவித்து மட்டுமே அழிக்க முடியும் எனும் நியதிகளாக, நம்மை மீண்டும் மீண்டும் ஸம்ஸாரத் துயரில் சிக்க வைக்கின்றன.

இரண்டாவதாக, பிரிவு அச்சத்்தினை விளைக்கிறது. பிரம்மம் வேறு, நான் வேறு எனும் பிரிவினால் விளைகின்ற மிகப் பெரிய அச்சம் ‘மரண பயம்’. பிறந்தன எல்லாம் இறந்திடும் எனும் நியதியை நாம் கண்கூடாகப் பார்த்து உணர்ந்திருப்பதால், மரணம் நம்மை அச்சப்படுத்தவோ ஆச்சரியப்படுத்தவோ கூடாது. ஆனால், நாம் நம்முடைய அடையாளத்தை அழிகின்ற உடமைகளில் வைப்பதாலும், ஆசையினால் உடமைப் பொருட்களின் அழிவிலும் நமக்கு அச்சம் வருவதாலும், மரணம் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் அச்சத்தை மட்டுமே தருகிறது. அதுவும் ஒருவரிடம் உலகப் பொருட்களின் மேல் ஆசைகள் வளர வளர, அவரின் மரண பயமும் வளர்கிறது.

இங்கே தேடுபவர் ஒரு சாதாரண மனிதர் அல்லர். அவர் உடலுக்கு இறப்பு என்பது உறுதி என்பதைத் தெரிந்து வைத்திருப்பதைப் போல, இறவா நிலை என ஒன்றுமிருக்கிறது எனவும் தெரிந்து, அதில் உறுதியான நம்பிக்கையும் கொண்டு இருக்கிறார். தோன்றுவன எல்லாம் அழியும் என்பதால், தோன்றிய உடற்கருவிகளுக்கும் இறவாமைக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது. எனவே முதல் வரியிலேயே, ‘இறப்பில் கழிகின்ற உடற்கருவிகள் யான் அல்ல’ என்பதை அவர் உறுதியாகக் கொண்டு விட்டார். மேலும் ‘தமஸ்’ எனும் அறியாமை இருளில் இருந்து விடுபட்டு, ‘ஜோதி’ எனும் அறிவு ஒளியைத் தருகின்ற ஆத்ம வித்தை எனும் ஒளிப்பாதையினையும் தேடுபவர் உணர்ந்து விட்டார். தற்போது அவரது தேவை எல்லாம், அதன் விளைவாக இறப்பிலிருந்து இறவாமை எனும் நற்பயனை அடைவதுதான்.

ஒருவருக்கு, அழியும் பொருட்களில் இனி ஈர்ப்பு இல்லை என்றால், விருப்பு-வெறுப்புக்கள் அவரை ஆட்கொள்ளாது. எனவே அவருக்கு இறப்பில் அச்சம் இல்லை. அதனால் அவர் உள்ளம் எப்பொழுதும் நிறைவுடன் விளங்கும். உலக வாழ்க்கையில் அத்தகையவர் முன்போல் ஈடுபட்டிருந்தாலும், மற்றவர்கள் அவரை எப்போதும் போலவே பார்த்திருந்தாலும், அவருள், முழுமையான விடுதலை அடைந்தவராய், களங்கமற்ற மகிழ்ச்சியுடன் அவர் இருப்பார். அவருக்கு உலக வாழ்க்கை ஓர் உல்லாச விளையாட்டாக இருக்கும். அதனால், ‘நான் ஆனந்த வடிவம்’ என்பதே அவரது உறுதியாக விளங்கும்.

இவ்வாறு, இந்த மூன்று வரிகளில், நன்மையைத் தேடுபவர், உண்மையைத் தேடுபவராக, உண்மையைத் தேடுபவர், தன்னையே தேடுபவராக, அப்படித் தேடியதன் பயனால், தன்னை ‘சத்-சித்-ஆனந்தம்’ எனும் ‘இருந்தொளிரின்பம்’ எனப் பார்க்கின்றார்.
தேடுபவர் அதனால் இனி தெளிந்து ‘பார்த்தவர்’ ஆகிறார். அந்தப் பரவச உண்மையை எப்போதும் ‘பார்ப்பவர்’ ஆகிறார். அவரே உண்மையில் பார்ப்பனராகிறார்.

ஓர் ஐயம் விளைகிறது. இப்படி எல்லாம் உணரச் செய்வது, ஒரு புரிதலையும், மனதளவில் ஓர் அமைதி நிறைந்த ஒருமைப்பாட்டையும் தருவதற்குத் தானோ?

அதுவும் உண்மை. அதுவே முதற்பயன். ஏனெனில் பார்ப்பவர், தன்னைத் தன்னுள் அறிந்தவர் ஆதலால், உலகப் பொருட்களுடனும், செயல்களுடனும் ஈடுபாடு கொள்ளும்போது, அவற்றில் விருப்பு-வெறுப்பு எனும் உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் அவர் இருக்கிறார். அவருக்கு மனதில் அமைதியும், ஒருமுகத் தன்மையும் இருக்கிறது. இவை முதலில் வரும் நற்பயன்களே!

உண்மையில், பார்ப்பவர் விடுதலை அடைந்தவர். எப்போதும் பிரம்மத்துடன் ஒன்றி அத்வைதம் எனும் அமிர்தத்தில் கலந்திருக்கும் வளம் பெற்றவர். மற்றவர்கள் பார்வையில் அவர் எளியவராய்த் தெரியினும், அவர் ஸம்ஸாரத்தை அறுத்து பரம்பொருளின் திரளாக உடலில் இருக்கும் ஞானி.

அத்வைதம் எனும் அருமறைப் பொருளைப் புதிதாகப் பயில்பவர்களுக்கு, உலகம் மற்றும் எல்லாத் தோற்றங்களையும்் ‘அஸத்’ எனச் சொல்வது சற்றே எதிர்மறையான கருத்துக்களாகப் படலாம். முக்கியமாகப் பல வேதாந்தச் சொற்களுக்கான பொருளே, பலருக்குக்் குழப்பத்தைத் தரலாம். அவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அதன் விளைவு வேதாந்தச் சொற்களின் வெளிப் பொருளை மட்டுமே விவாதங்கள்் செய்து, கால விரயம் ஆக்கி, அதனால் வேதாந்தம் விளக்குகின்ற உண்மை என்ன என்பதை முற்றிலும் உணரத் தவறி விடுகிறார்கள். எனவே, சொற்களுக்கான பயன் என்பதை அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் வேதாந்்தம் என்ன சொல்கிறது, அதன் உண்மையை எப்படி உறுதிப்படுத்துகிறது, அதனால் நாம் எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்ள முடியும்் என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, வேதாந்தம் ‘சத்யம்’ எனும் சொல்லினால், ‘உண்மை’ என்பதையும், ‘மாறாத இருப்பு’ என்பதையும் காட்டுகிறது. ஆனால், நாம் வாழ்வில் இசொற்களுக்கு வேறு பொருளினைக் கொண்டிருக்கிறோம். இந்த வேறுபாட்டிற்கு, வேதாந்த எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.

கனவில் இருப்பவருக்குக் கனவுலகும், அதில் வரும் எல்லாமும் உண்மை, இருப்பு. அவருடைய கனவுக்குள் ஒருவர் சென்று, அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகம் உண்மை அல்ல எனச் சொன்னால், கனவு காண்பவர் ஏற்கவா போகிறார்? நிச்சயமாக அல்ல! ஏனெனில், கனவு உலகம் அவருக்கு ஒரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும், கனவு முடிந்து, அவர் விழித்தால், அவரே தனது கனவுலகம் உண்மை அல்ல என்பதைச் சொல்வார். எனவே நமக்கு ‘உண்மை’ அல்லது ‘மாறாத இருப்பு’ என்பது, நம்முடைய அனுபவ உலகங்களை ஒட்டியே இருக்கிறது.

விழிப்புலக வாழ்க்கை கனவுலக வாழ்க்கையை விட வேறுபட்டது தான். எனினும் அதுவும் கால தேச வரையறுக்கப்பட்ட அளவுகளால் தோன்றி மறைவது. எனவே ஞானிகள் நம்மிடையே வந்து இந்த வாழ்க்கைப் பொருட்கள் உண்மையல்ல எனச் சொன்னால், நம்மால் எளிதில் ஏற்க முடிவதில்லை.

மேலும் விழிப்புலகில் நாம் நம்முடைய பொறி, புலன் அறிவினால் ஒன்றை அனுபவித்தால், அதனால் நாம் அடையும் அறிவு நமக்கு ‘விவரம’் (‘fact’) ஆகும். ஆனால் அந்த விவரம் நாம் நேரடியாக அனுபவித்தது என்பதற்காகவே உண்மை ஆகி விடுவதில்லை. விவரம் என்பது நம் கருவிகள் சேகரித்த ஒரு செய்தி. அது உண்மையாக இருக்க அவசியமில்லை.

எடுத்துக்காட்டாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும், கண்கூடாகப் பார்த்து அனுபவிக்கின்ற விவரம். அதனை உண்மை எனக் கொள்கிறோம். ஆனால், சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை, அவை வெறும் ‘தோற்றப் போலி’ என நமக்குத் தெரிந்ததும், அந்த விவரம், உண்மை அல்ல என்றாகிறது. இருப்பினும், நாம் அதனை உண்மையைப் போலவே பாராட்டி ஏற்கிறோம். அதில் தவறில்லை. நாம் அதனை உண்மையல்ல, தோற்றப்போலி எனத் தெரிந்தே, அவ்விவரத்தை உண்மையைப் போலப் பயன்படுத்துகிறோம். அதனால் உலக வாழ்க்கையில் நமக்குப் பயனுமிருக்கிறது. எனவே தோற்றப் போலி என்பதை வாழ்வில் நாம் ஏற்கனவே கையாள்கிறோம்.

முக்கியமாக அறிய வேண்டியது, அனுபவ அறிவு தரும் விவரங்கள் எல்லாம் உண்மையாகிவிடாது என்பதுதான். எனவே வேதாந்தம் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில், மற்றொரு நிலை தேவை எனக்கொள்கிறது. அது தோற்றப் போலி எனும் உண்மையப் போன்ற பொய்மை.

வேதாந்தம் ‘உண்மை’, மற்றும் அவ்வுண்மை என்ன எனத் தெளிவிக்க, நாம் உண்மை என நினைத்துக் கொண்டிருக்கும் ‘தோற்றப் போலி’ என அவ்விரண்டை மட்டுமே பேசுகின்றது. வேதாந்தத்தில் அதனால், பொய் என்பதே இல்லை. பொய் என்பது ‘தீயின் ஈரம’் போன்ற இல்லாமை. அவை வேதாந்தத்தில் இல்லை. வேதாந்த்தம், தோற்றப் போலிக்கு, ‘மித்யா’ எனும் பெயரிடுகிறது. பிரம்மன் சத்யம், மற்றன எல்லாம் மித்யா என்பது வேதாந்தக் கரு.

வேதாந்தத்தின் குறிக்கோள், மித்யா எனும் விளக்க முடியாத, ஆனாலும் விலக்கப்பட வேண்டிய தோற்றப் போலியை நாம் உணரச்செய்வது ஆகும். எனவே, மித்யா எனும் சொல்லினால், நாம் ‘பொய்மை’ எனக் கொள்ள வேண்டாம். எவை எல்லாம் தோற்றம் கொள்கிறதோ. எவை எல்லாம் அனுபவப் பொருட்களாகிறதோ, அவை எல்லாம் மித்யா என்பதே வேதாந்தம் தரும் கருத்து.
அப்படியானால், ஈஸ்வரனும் ஓர் மித்யா எனக் கொள்வதா?

ஆம். வேதாந்தக் கருத்துக்களின்படி, ஈஸ்வரரும் மித்யா ஆகும். எங்கும் நிறைந்து, எல்லாம் அறிந்து, எல்லா வலிவும் கொண்டிருந்தாலும்,
ஈஸ்வரரை ஓர் படைத்துக் காத்தருளும் இறை வடிவமாக மட்டுமே பார்த்தால், அவரும் மித்யா ஆவார்.இக்கருத்து சிலருக்கு மனவலியைக் கொடுக்கலாம். ஆனால், இக்கருத்து உண்மை, இதனால், நாம் வணங்கும் இறை வடிவங்களுக்குக் களங்கமும் இல்லை.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உத்தவ கீதையில், சொல்கிறார்: ‘என்னுடைய வடிவும் அழியும். எல்லா வடிவங்களும் என்னுடைய மாயா சக்தியினால் விளைந்த மித்யா.’

‘மித்யா’ என்பது, நம்முடைய உலக வாழ்க்கையில் நாம் உணர்ந்து கையாளப்பட வேண்டிய அறிவு. வேதாந்தம் உலகத்தை எல்லாம் பொய் எனச் சொல்லித் தள்ளச் சொல்லவில்லை. அது தவறான புரிதல். எல்லாமும் தோற்றப் போலி. நிலையாமை கொண்டு விளங்குபவை. எனவே அவற்றைக் கையாள அவற்றின் நிலையாமையை நாம் உணர்ந்தும், அவற்றுக்கு ஆதாரமாக விளங்கும் பிரம்மம் எனும் சத்தியத்தை மட்டுமே சார்ந்தும் நாம் வாழத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே வேதாந்தம் காட்டும் வழி. அதற்கான உதவியாகத்தான், ஈஸ்வரரது வடிவங்களும், திருப்பெயர்களும் பலவகையாக வேதங்களே நமக்குக் கொடுத்திருக்கின்றன.

சகுணப்பிரம்மம் எனத் திருவடிவும், திருநாமமும் கொண்டு ஈஸ்வரரை, அவரவர் வழிகளுக்கேற்ப வழிபட்டு உய்ய வேண்டும் என நமக்கு விதித்திருக்கிறது. ஈஸ்வரர், தம்முடைய சக்தியாக மாயையினால் எல்லாமும் விளைந்து இருக்கச் செய்கிறார். எனவே அவருக்கும் அவரது மாயா சக்திக்கும் நாம் என்றென்றும் தலை வணங்கிப் பணிதல் வேண்டும். ஓருவரும் இவ்வொழுக்கத்தை விடக் கூடாது, இது வேதாந்த உண்மைகளை உணர்ந்த, ஜீவன்-முக்தர் எனப் போற்றப்படும் ஞானிகளுக்கும்் பொருந்தும். அத்வைதம் எனும் ஈறில்லாப் பேற்றினை உணர்ந்த ஞானிகளும், உலகில் இருக்கும் மட்டும், ஈஸ்வர வழிபாட்டினைத் தொடர வேண்டும்.

பகவான் கீதையில் சொல்கிறார். (18-61)


ஈஶ்ஹ்வர ஸர்வ-பூ4தானாம் ஹ்ருஇத3-தே3ஶ்ஹே அர்ஜுன திஷ்ஹ்டதி
ப்4ராமாயான் ஸர்வ-பூ4தானி யந்த்ராரூடா4னி மாயயா

ஈஸ்வரர் எல்லா உயிர்க்குள்ளும் ஊடுருவி வாழ்கிறார். ஓ அர்ச்சுனா, ஒவ்வொருவரின் வினைகளுக்கு ஏற்ப, உயிர்களைத் திசை திருப்பி, அவர்களுக்கான உடல்களையும் (உலகங்களையும்) தனனுடைய மாயா சக்தியியால் கொடுக்கிறார்.

பெரும் ஞானிகளான பகவான் சங்கரர், பகவான் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், மஹா பெரியவா என ஜீவன் முக்தர்களும் ஈஸ்வர வழிபாட்டைப் பலவகையிலும் நடத்தி நம்மை நல்வழிப்படி நடக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்த மந்திரத்தால் நாம் கற்றது என்ன?

‘ஆத்மா’ அல்லாதனவற்றை (அநாத்மா) நாம் ‘ஆத்மா’ அல்லது ‘நான்’ எனக் கொள்கிறோம். அதனால் ‘பிரிவுத்துயர்’ விளைய ‘ஸம்ஸாரம்’ எனும் வலையில் வீழ்கிறோம். இதற்குக் காரணம் ‘அவித்யா’ எனும் அறியாமை. அதை நீக்குவதற்கான ஒரே வழி ‘ஆத்ம-வித்யா’ எனும் அறிவு வழி. அதனை இறையருளால், ஓர் புனிதமும், திறனும் கொண்ட சத்குருவின் மூலமாக நாம் அடைய வேண்டும். அவ்வாறு அறிந்து அடங்கி உய்பவர், தன்னை ஆத்மா எனக் கண்டு, அதனால், ‘தான் சத்-சித்-ஆனந்தம்’ எனத் தெளிகிறார்.

தன்னை உடல் என நினைத்து அதன்படி, உடலின்பத்திற்கும் உலகப் பொருளின்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்கள், தேஹாத்மவாதி எனப்படுவர். அவர்களுக்குத் தாம் தம்மைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதனால் இருளில் உழல்கிறோம் எனும் அறிவும் இருக்காது. எப்போது, அவர்கள் செய்த நற்செயல்களின் பயனால் அவர்களுக்குள் அறிவு வெளிச்சம் விளங்கி தன்னுடைய நிலையை ஆராயத் தோன்றுகிறதோ, அப்போதுவரை அவர்களுக்கு இருளே ஒளி!

தன்னுடைய உடல் தான் அல்ல என்ற அறிவினை ஏற்றுக் கொண்டு, அதே சமயம், ‘என் உடல்’, ‘என் உடமை’, ‘என் பொருள்’ என மமகாரம் எனும் பற்றுடன் வாழ்பவர்கள் ஜீவாத்மவாதி ஆவார்கள். அவர்கள் ஒவ்வொரு உயிரும் தனிப்பட்ட ஜீவன், அவை ஒவ்வொன்றும் எப்போதும் வேறுபட்டு, ஒரு உடல் விட்டு மறுவுடல் எடுத்து, இவ்வுலகம், அல்லது பிற உலகம் என வாழ்ந்து கொண்டே இருக்கும், எனவே ‘இருமை’ எனும் வேற்றுமையே உண்மை என எண்ணியிருப்பார்கள். அவர்களில் இறையறிவு கொண்டவர்கள், நல்ல வழியில் உடலும், உலகமும் பெற்று இனிது வாழ அதற்கான கர்மங்களைச் செய்து கொண்டிருப்பார்கள்.

இந்த மந்திரத்தில் நாம் சந்தித்த தேடுபவர், ஓர் ஜீவாத்மவாதியாகத் தொடங்குகிறார். எனினும், ஆன்மீக அறிவினால், தன்னுடைய உடலும்
வாழ்வும் நிலையற்றது என்பதைத் தெளிந்து இருக்கிறார்.அவர் தன்னாசை இல்லாமல் கடமைகளைச் செய்தல் (கர்ம யோகம்) எனத் தெரிந்து அதன்படி நடந்து, அதன் பயனாக மனதில் தூய்மையும், பண்பில் மேன்மையும், அறிவில் கூர்மையும் கொண்டு விளங்கிகிறார். அதனால், வேதாந்த உரைகளை உணர்ந்து, தன்னுள்ளே உணர்வாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் ஆத்மாவே மற்ற ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிந்துள்ளார். அத்தகைய அறிவு நிலைப்பட்டு, அதற்கேற்ப அவரது நடத்தையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால், அந்த ஜீவாத்மவாதி, அதற்குப் பிறகு ஏகாத்மவாதி என எல்லாவற்றிலும், எல்லோரிலும், தன்னையே காண்கிறார்.

அந்த ஏகாத்மவாதிக்கு பிரம்மத்தின் கதவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன. எல்லோருள்ளும் விளங்கும் ஆத்மாவே, எங்கும் நிறைந்த பரமாத்மா என உணர்ந்து விட்டதால், இறையருளால், எக்கணமும் எவ்விடத்தும், அவரால் பிரம்மமாகவே நிலைத்து, அத்வைத அமிர்தம் உண்டவராக முடியும். அவர் பிரஹ்மவாதி எனும் முழுநிறைவு பெற்ற விடுதலையுற்ற பரம்பொருளாகிறார்.

வேதாந்தம் இந்த அனுபவ உண்மைகளுக்கு, ஒரு அடிப்படை அறிவாகச் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறது.

மண்பானை பலவிதமாக உள்ளது. தோற்றம், தன்மை ஆகிய வற்றால் பலவகைப்பட்டு மண்பானைகள் இருந்தாலும், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஊடுருவிய வெளி (கடாகாசம்) வேறுபட்டது அல்ல. அவை எல்லாம் ஒன்றே. ஒவ்வொரு மண்பானைக்கும் அதுவே வடிவத்தைக் கொடுத்து, அதனுள் நிறைந்திருப்பது. பானை உடைந்தால், அதன் வடிவம் அழிந்து போகும். ஆனால் அதனுள் இருந்த வெளி எங்கும் போவதில்லை. அது எங்கும் பரந்த வெளியில் (மஹாகாசம்) கலந்து இருக்கிறது.

மண்பானைக்குப் பதிலாக, ஓர் மாபெரும் மண்டபத்தை எடுத்துக் கொண்டால், அதே போலத்தான். அந்த மண்டபத்துக்கு ஒரு உருவினைக் கொடுத்து, உள்ளே நிறைந்திருக்கும் வெளி (மடாகாசம்) . அது எங்கும் பரந்த வெளியே தவிர வேறில்லை.

இந்த எடுத்துக்காட்டுக்களில், கடாகாசம் என்பது ஜீவர்களின் உணர்வான ஜீவாத்மா, மடாகாசம் என்பது ஈஸ்வரனாகிய பரமாத்மா, மற்றும் மஹாகாசம் என்பது எந்த வரையறையும் இல்லாத பிரம்மம். இவை யாவும் ஒன்றே. வேற்றுமைகள் எல்லாமும் தோற்றப் போலி, மித்யா.
இந்த அறிவுக்கு யார் ஆதாரம்? பிரம்மம் மட்டுமே உண்மை என்றால், படைத்தல் எனும் செயல் உண்மையா, ஏனெனில் பிரம்மம் செயலற்றது (அகர்த்தா) அல்லவா?

வேதம் ஒன்றே இந்தப் பேரறிவிற்்கு ஆதாரம். இதனை நாம் ஏற்காவிட்டால், நமக்கு இருக்கும் ஒரே ஒரு வழியும் அடைபட்டுப் போய்விடும். ஏனெனில், ஆத்மா எனும் தன்னைப் பற்றிய உண்மையை அறிவதற்கு வேதம் ஒன்றே துணை. உலகத்தில் உள்ள மற்ற எக்கல்வியும் உதவாது. அவை எல்லாம் பொருளார்ந்த கல்வி. எனவே வேத அறிவை நாம் விழைந்து ஏற்க வேண்டும்.

உலகம் இருக்கிறது, உலகில் எண்ணற்ற உயிர்களும் பொருட்களும் இருக்கின்றன. இவை எல்லாம் ஒருவரால் படைக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் செயல்-பயன் எனும் காரண-காரிய வாதம் கொண்டு பார்த்தால், படைத்தவர் என ஒருவர் தேவைதான். இதனை ஒட்டியே பிரஹதாரண்யக உபநிடதம் (2.5.19) சொல்கிறது: ‘ஈஸ்வரர் தம்முடைய மாயாசக்தியினால பலதரப்பட்ட உலகங்களைத் தோற்றுவித்தார்’.
ஈஸ்வரர் பிரம்மமே அன்றி வேறல்லர். படைத்தல் எனும் கருத்து இருப்பதால், அதற்குக் காரணமாக, பிரம்மத்தை நேரடியாகக் காட்ட முடியாது என்பதற்காகவே, ஈஸ்வரர் என மாயா சக்தியினை வெளிப்படுத்தும் வடிவமாக, பிரம்மம் காட்டப்பட்டது. ஈஸ்வரரின் சக்தியே மாயா. மாயா சக்தியினால் விளைந்த மித்யா எனும் தோற்றப்போலிகளே உலகங்கள்.

ஜீவர்களின் மனம் எப்படிக் கனவுலகங்களைத் தங்களுக்குள்ளேயே படைத்து வளர்த்து அழிக்கின்றதோ, அப்படியே, ஈஸ்வரரின் மனமாகிய மாயா சக்தி, எல்லா உலகங்களையும் படைத்து, வளர்த்்து, அழிக்கின்றது. எப்படி ஜீவர்களின் மனம், ஆத்மாவின் ஒளியினாலேயே சக்தி பெறுகின்றதோ, அப்படியே மாயா, ஈஸ்வரரின் அருளினாலேயே வெளிப்படுகின்றது. எனவே வேதாந்தத்தின்படி, உலகம் படைக்கப்படவில்லை. அது தோற்ற முதல் அற்றது (அநாதி). அதன் தோற்றம் ஈஸ்வரருக்குள் எப்போதும் உருவற்ற வித்தாக (அவ்யக்தம்) இருக்கிறது, மாயா சக்தியினால் வெளிப்பட்டு (வியக்தம்) பல வடிவங்களாக விளங்குகிறது. பிறகு மீண்டும் உருவற்ற வித்தாக, ஈஸ்வரருக்குள் மறைகிறது.

அதனால்தான், வேதாந்தம், அறிவியல் கூறும் படைப்பு விளக்கத்தைப் போல அல்லாமல், மித்யா வாதம் எனும் தோற்றப்போலியைக் காட்டி, பிரம்மம் எனும் உண்மைக்கு மட்டுமே நம்மை ஈர்க்கிறது. பகவான் சங்கரர், உலகம் என்பன இருப்பதற்கும், உலகத்தை உணர்கின்ற நம் ஒவ்வொருவரின் உணர்வே காரணம் என்பதால், உணர்வே சத்தியம் என்றும் உலகம் மித்யா என்றும் கூறுகிறார். பகவான் சங்கரருக்கும் மூத்த குருவான பகவான் கௌடபாதர், இன்னும் நேரடியாக படைப்பு என்பதே இல்லை (அஜாதவாதம்), எல்லாமும் எப்போதும் ஏதோ ஓர் நிலையில் இருப்பதாகச் சாதித்துள்ளார்.வேதாந்தத்தில் இவ்வுண்மை பல கோணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஸ்வேதாஶ்வர உபநிடதம், (4.9) ஈஸ்வரர் உலகைத் தோற்றுவித்தார் எனச் சொல்கிறது. தைத்திரீய உபநிடதமோ, எல்லாம் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டன எனச் சொல்கிறது. இதில் ஒன்றும் முரண்பாடு இல்லை என்பதற்கும் மேலே கூறிய சுருக்கமான விளக்கங்கள் உதவும்.

மித்யா எனும் அறிவால் நமக்கு வாழ்வில் என்ன பயன்?

பொதுவாக நாம் உலகம் வெளியில் இருக்கிறது, அது உண்மை என நினைக்கிறோம்். உலகம் நம்மைச் சார்ந்து இல்லை. நாம்தான் உலகைச் சார்ந்து இருக்கிறோம் எனவும் நினைக்கிறோம். அதனால்தான் எப்போதும் உலகிற்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக் கொள்வதும், உலகத்தைப் பயன்படுத்தவும், முடிந்தவரை உலகில் தாக்கத்தை, முடிந்தால் அதிகாரத்தை ஏற்படுத்தவும் முயல்கிறோம். ஆனால் இந்த முயற்சிகளால் முழுமையான பயன் கிடைக்கவில்லை. வேதாந்த உண்மை என்னவென்றால், உலகம் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறது. உலகம்தான் நம்முடைய உணர்வினைச் சார்ந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் தம்முடைய அனுபவ உலகங்களைத் தங்கள் உணர்வினால்தான் படைக்கிறார்கள். எப்போது உலகைப்பற்றிய உணர்வு ஒருவருக்கு இல்லையோ, அப்போது அவருக்கு உலகம் இல்லை.

எனினும், வேதாந்தம் உலகத்தை நம்முடைய வாழ்க்கையில் இருந்து விலக்கச் சொல்லவில்லை. நாம் அறிந்து கொண்ட மித்யா எனும் தோற்றப்போலியே ‘உலகம், உலகப் பொருட்கள்’ என்பதை முதன்மைப்படுத்தி, அதற்கேற்ப உலகில் நாம் சந்திக்கும் இன்ப துன்பங்களைச் சமமாக ஏற்கும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஏனெனில், ‘மித்யா’ எனும் தோற்றப்போலிக்கு ஆதாரமாய் இருப்பது ‘ஸத்யம்’ எனும் ஆத்மா. அந்த ஆத்மாவே நாம் எனும் அறிவும், அதன் உணர்வால் வரும் அனுபூதியும் நம் உலக வாழ்க்கையை அமைதியாக்கும்.

இதனைச் சொல்வது எளிது. செய்வது எளிதா?

ஈஸ்வரர் மாயை அடக்கி ஆள்பவர். அதனால், மித்யா எனும் தோற்றப்போலிக்குள் ஆட்படாதவர். ஈஸ்வரரின் மாயா சக்தியை நம்மால் என்ன செய்ய முடியும்? எனவே எப்படி அதனால் விளையும் மித்யா எனும் தோற்றப்போலிகளைச் சரியாகக் கையாளும் அறிவினை ஆற்ற முடியும்?
இப்படியான கேள்விகள், அரிதும், சிறப்பானதும் ஆகும். அவை, நன்றாய் படித்துணர்ந்த சான்றோர்களும் மனதில் சுமக்கும் சுமையாக இருக்கின்றன.

எனினும், இதற்கும் ஒரு நல்விடை, நல்வழி இருக்கின்றது.

விளக்க முடியாத, வெல்ல முடியாத சக்தி மாயா சக்தி என்றாலும், ஈஸ்வரரின் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு அச்சமில்லை. ஏனெனில் அவர்களின் அறிவில், மாயா சக்தியால் எவ்விதக் குழப்பங்களும் இருக்காது. வேதாந்த உண்மையை உணர்ந்து வாழும் ஈஸ்வரரின் அடியார்களுக்கு, நிறைவும், விடுதலையும் நிச்சயம் உண்டு.
இதனை ஸ்ரீமத் பாகவதம் (3.2.10) உறுதி செய்கிறது/


தே3வஸ்ய மாயயா ஸ்ப்ருஷ்டா யே
சான்யத்3அஸத்3-ஆஶ்ரிதா
ப4ராம்யதே தீ4ர் ந தத்3-வாக்யைர்
ஆத்மன்ய் உப்தாத்மனோ ஹரௌ

எந்தச் சூழ்நிலையிலும், மாயா சக்தியால் உந்தப்பட்டவர்களின் வார்த்தைகள் (செயல்கள்), (ஈஸ்வரரைச்) முற்றும் சரணடைந்தவர்களின் அறிவில் எவ்விதக் குழப்பத்தையும் ஏற்படுத்த இயலாது. (அதனால் பாதிப்பு எப்போதும் இல்லை)

எனவே முற்றும் சரணடைதலே இறைவனைத் துணையாகப் பெறுவதற்கான ஒரே வழி.

ௐ ஶாந்தி ஶாந்தி ஶாந்தி ||.

 


Register/Login to download PDF.



 

Related Posts

Share this Post