02 Kenopanisad

கேனோபநிடதம்

முகவுரை

கேனோபநிடதம் எனும் இப்பொக்கிஷம் சாம வேதத்தில் உள்ளது. ‘கேனா’ எனும் வடமொழிச் சொல்லுக்கு ‘எவரால்’ என்பது பொருள். அத்தகைய கேள்வியே முதல் பதமாகத் துவங்குவதால் இந்த உபநிடதம் அப்பெயராலேயே வழங்கி வருகிறது. நேரடியாகக் கேட்பதும், கேட்டவற்றுக்கு வெளிப்படையான விளக்கம் அளிப்பதும், விளக்கங்களும் அறிவு மற்றும் உணர்வால் ஆயத்தக்கதாக இருப்பதும் உபநிடதங்களை ஒரு மகத்தான தத்துவ விசாரணை நூல்களாக நமக்குக் காண்பிக்கிறது. இதன் சாந்தி பாடத்தில், தன் புலன்களும், பொறிகளும் நலம்பெறவும் அவற்றின் ஆதாரமான ஆன்மாவில் நேயம் என்றும் நிலைத்திருக்கவும் துதிக்கப்படுகிறது. இந்த உபநிடதத்தின் முக்கிய சாரம், தன்னுள் இருந்து தன்னை இயக்கும் ஆன்மாவே பிரம்மம். அவ்வான்மா புலன்களுக்கும், மனதுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டது. அதை அறிந்ததாகக் கூறுவது அறீவீனம். அறியப்படாதது என அறிதலே அறிவாகும். ஏனெனில் அறிதல், அறிபொருள், அறிபவன் எனும் பேதங்கள் பிரம்மத்தை உணரும் போது இருக்காது. அதனால் ஆன்மஞானி உலகில் வாழும்போது, ‘அறியாதது ஆன்மா என அறிந்தேன்’ என வாழ்கிறான். இதனை அறியாமல், தானே எல்லாம் செய்வதான அகம்பாவம் தவறு. வெளியே உருவமான தேவதைகளிலே மட்டும் பிரம்மம் இருப்பதாக எண்ணுவதும் முழுமை அன்று. ஆதலினால், தன்னை அறிந்து அதன்மூலம் ‘தத்வனம்’ எனும் பிரம்மம் தனக்குள் சுடர்விட்டுப் பிராகசிப்பதை உணரவேண்டும். இதனை உணர்த்த செருக்குற்ற தேவர்களிடம் பிரம்மம் சோதனை செய்து, ஞானத்தைக் கொடுத்த கதையும் கூறப்பட்டது. ஆகவே, மின்னலின் மின்னலாக, தன்னுள் இமைக்கும் போதாய்த் தோன்றும் ‘அதிதைவீதம்’ எனும் இறைக் கருணையை உணருங்கள். அந்தப் புனித வேட்கையினால், மனம் ஆன்மாவின் அருகில் இருப்பதாயும், அடிக்கடி ‘பளிச்’ என்று மனதில் ஒளி தோன்றுவதை ‘அத்யாத்மிகம்’ எனும் யோகமாயும் உணருங்கள். ‘தத்வனம்’ எனும் அப்பிரம்மத்தைப் பேணுங்கள். இவ்வுண்மையை உணர்ந்தவர்களே, எல்லா உயிர்களாலும் நேசிக்கப்படுபவர்களாக வாழ்வர். சுவர்க்கம் எனும் நிலையான வீடுபேறை அடை வார்கள் என உணருங்கள்!

|| சாந்தி பாடம் ||

om āpyāyantu mamāṅgāni vākprāṇaścakśuḥ
śrotramatho balamindriyāṇi ca sarvāṇi |
sarvaṁ brahmaupaniṣadaṁ
mā’haṁ brahma nirākuryāṁ mā mā brahma
nirākārodanirākaraṇamastvanirākaraṇaṁ me’stu |
tadātmani nirate ya upaniṣatsu
dharmāste mayi santu te mayi santu |
om śāntiḥ śāntiḥ śāntiḥ ||

சாந்திபாடம்

மெய்யுடல் உறுப்பும் வாக்கும் மேவிடும் மூச்சும் நோக்கும்
செய்விழி, செவியும் கேட்கும் சேதனம் நடத்தும் ஆக்கம்
தொய்வின்றி நடக்க வேண்டும்! தூயான்மா காக்க வேண்டும்!ஆன்மனே பிரம்மம் ஆகும்! ஆய்ந்துப நிடதம் கூறும்
ஆன்மனை அகலேன் யானும், அகன்றிடா ஆன்மா ஞானம்
ஊன்றிடும் உபநிட தங்கள் உணருவோர் உணரும் பேறு
ஈன்றினி என்னுள் என்றும் இனிமையாய் நிலைக்க வேண்டும்!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

ஓம், என்னுடைய அங்கங்களும், வாக்கும், மூச்சும், வலிமையும், விழிகளும், செவிகளும் ஆகிய எல்லா உறுப்புக்களும் தத்தம் தொழிலைத் திறமையுடன், ஆன்மனின் அருளால் நடத்தட்டும். இதுவே உபநிடதங்கள் விளக்கும் பிரம்மம் ஆகும். அந்தப் பிரம்ம ஞானம் என்னை விட்டு விலகாது இருக்கட்டும். யானும் பிரம்ம ஞானத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். அந்த உறவு என்றும் நிலைக்கட்டும்! ஆத்மாவில் மகிழ்ந்து வாழ்பவரிடமுள்ள உபநிடத தருமங்கள் எல்லாம் எனக்குள் நிலைக்கட்டும்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*