ஈஸாவஸ்ய உபநிடதம் – யஜுர் வேதம்

ஈஸாவஸ்ய உபநிடதம் – பகவான் ஆதிசங்கரர் இவ்வுபநிடதத்தை முதலாக அமைத்தே, உபநிடத விளக்கங்களை நமக்குத் தந்துள்ளார். ஈஸாவஸ்ய உபநிடதம் ஒரு சிறிய உபநிடதம். எனினும் அது பதினெட்டே மந்திரங்களில் வேதசாரத்தைக் கொடுத்து, ஸ்ரீபகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் சாரத்தின் சாரமாக இருப்பது. முதல் மந்திரத்திலேயே இதன் சாரம் முற்றும் தெளிகிறது. அதாவது கடவுளே எல்லா இடத்திலும் இருக்கிறார். அவரது அருளே எங்கும் நிரம்பி உள்ளது; அவரது ஆளுமையே எல்லாம். ஆதலினால் எமது என்று ஏதுமில்லை. அனைத்தையும் இறைவனுடையதாய் அர்ப்பித்து, நாம் அடைவதெல்லாம் இறைவரமாய் ஏற்க வேண்டும். அத்தகையோனுக்கு, தக்கன தக்கபொழுதில் கிடைக்கும். அதனால், பேராசையோ, பொறாமையோ நம்மை அணுகமுடியாது.

இவ்வுபநிடதத்தின் முக்கிய கருத்து ஆன்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே, எதனையும் செய்ய வேண்டும். பலன் கருதாமல் கர்ம யோகம் செய்வதும், உருவ அருவ வழிபாடுகள் செய்வதும் நம்மைத் தீய போக்கை நீக்கியும், நல்ல போக்கினை வளர்த்தும் பண்படுத்துகின்றது. ஆனாலும், ஆன்ம ஞானம் இல்லாமல் இவற்றைச் செய்வது என்பது மீண்டும் மீண்டும், இருவினை வருத்தும் பிறவிப் பெருங்கடலிலேயே வீழ்த்தும்.

ஆதலினால், சத்தியமே தத்துவத்தில் ஆன்மஞானம் என்றும், சத்தியமே வழிபாட்டிலே இறைவன் என்றும், சத்தியமே செயற்கருமத்திலே தருமம் என்றும் உணர்ந்து கொண்டு, தங்கத்தட்டால் மூடப்பட்ட குத்து விளக்காக, உலக விஷயங்களால் மறைக்கப்பட்ட ஒளிப்பிரவாரமான ஆன்ம ஜோதியை சத்தியமாக உணர வேண்டும். அதற்கு இறையருளே காரணமாக வேண்டும்.

சாந்தி பாடம்
ஓம் |
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
ஓம்
நிறைவே அது; நிறைவே இது;
நிறைவே நிறைவின் விளைவானது!
நிறைவில் நிறைவை எடுத்தாகினும்
நிறைவோ அது! நிறைவானது!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பரம்பொருளானது எங்கும் நிறைந்தது. அந்த நிறைவிலிருந்து விளைந்த அனைத்தும் நிறைவாகவே உள்ளது. பரிபூர்ணமான அப்பரம்பொருளிலிருந்து விளைந்த நிறைவை எல்லாம் கழித்துப் பார்க்கினும், அப்பரம்பொருள் நிறைவாகவே உள்ளது! ஓம் அமைதி! அமைதி! அமைதி!

(சாந்தி பாடம் என்பது வேத மந்திரங்கள் உபநிடதங்களுக்குள் இல்லை. ஆனால், உபநிடதங்களைப் பயிலும் முன்னும், பின்னும் சாந்தி பாடங்களைத் துதிப்பது மறையோர் வழக்கு. அந்த வகையிலே, பூர்ணமத என்னும் இப்பாடம், எல்லாம் பரம்பொருளே என உணர்த்துகின்றது. ஈசாவஸ்ய உபநிடத்தின் சாரமே இத்தத்துவம் என்பதால், சாந்தி பாடம் சாலப் பொருந்தியதாக ஞானிகள் கணிப்பு.)

Om Isavasyamidam sarvam yatkiñca jagatyam jagat |
tena tyaktena bhuñjitha ma grdhah kasyasvid dhanam || 1||
ஓம்
ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச்க ஜகத்யாம் ஜகத் |
தேன த்யக்தேன புஞ்ஜீதா: மா க்ருத: கஸ்ய ஸ்வித்தனம் || 1 ||
ஓம்
அனைத்துயிருன் உயிர்க்கருவும் ஆண்டவனே அதனால்
அர்ப்பணித்து தற்பயனை அனுபவித்து வாழ்வீர்!
தினைத்துளியும் பிறருடமை தீண்டும் நினைவின்றி
தெய்வமயம் தியாகநிலை போகமற வாழ்வீர்!

ஈச + ஆவஸ்யம் எனும் பதம் எல்லாம் இறைவனால் ஆனது எனக்குறிக்கும். ஆதிசங்கரர், மேலும் ஈச + வாஸ்யம் எனக்காட்டி, அதனால் எல்லாவற்றையும் ஈசன் எனும் அருளால் மூடியிருப்பதாக உணரச் செய்கிறார். ஜகத்யாம் ஜகத் எனும் பதத்தால், எல்லா புவனங்களுக்கும், அதன் உயிர்களுக்கும் கருவின் கருவாக இறைவன் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. ஈசனது அருளே அகிலமெல்லாம் என உணர்ந்தால், போகமில்லாமல் (எவ்வாறு பிறர்பொருளின்மேல் ஆசை கொள்ளல் முடியும்?) பேராசை இல்லாமல் தியாகசீலனாக வாழமுடியும். இம்மந்திரம், தன்னுடைய (சுவாத்மா), பிறருடைய (பராத்மா) மற்றும் இறைவனுடைய (பரமாத்மா) உடமைகளையும், கடமைகளையும் குறிப்பிடுகிறது.

குர்வன்னேவேஹ கர்மானி ஜிஜீபிஷேச்சதம் ஸமா: |
ஈவம் த்வயி நான்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே || 2 ||
கருமநெறி யாலீண்டு கண்டிடவே நூறாண்டு
தருமவழி யேவேண்டு! தவிரேது? – திருவருள
செயலாக்க மேவழங்கு! செய்கரும மோவிலங்கு?
பயனாக்கும் ஆசையதே பிணை (2)

இந்த உலகத்தில் (தருமம் தவறாத) கடமையைச் செய்தவாறே நூறு ஆண்டுகள் வாழ்வதற்காக விரும்பு. உடலைத் தாங்கி உள்ள உனக்கு இதனைவிட்டால் வேறு வழி ஏது? அவ்வாறு செய்யப்படும் கர்மங்களின் செயலாக்கத்தால் நீ கட்டப்படமாட்டாய். ஆனால் கர்மங்களினால் வரும் பயனில் வைக்கப்படும் ஆசையினாலேயே மனிதன் கட்டப்படுகின்றான்.

அஸூர்யா நாம தே லோகா அந்தேன தமாஸாவ்ருதா: |
தாம்ஸ்தே ப்ரேத்யாபிக்ச்சந்தி ஏ கே சாத்மஹனோ ஜனா: ||3||
பரஅருளை உணராதார் பணிக்கடனைத் தொடராதார்
நரஇருளார் கொல்வர் நல்லான்மா – திரைவிழவோ
தீதிருளின் தேக்கத்தில் தீயசுரர் நோக்கத்தில்
மீதிவழிப் புகுவார் மெலிந்து.

(மேலே கூறிய தருமம் தவறாது, பயனில் ஆசைப்பிணை வைக்காது வாழ வேண்டும் என்கின்ற) ஆன்ம ஞானத்தை உணரத்தவறியவர்கள், ஆன்மாவைக் கொன்றவராக (அதாவது ஆன்ம ஞானத்தை விலக்கியவர்களாக) ஆவார்கள். அவர்கள், தமது உடல் வீழ்ந்த பின்பு, கொடிய இருள் ழூழ்ந்ததான ‘ஆசுரம்’ எனப்படும் யோனியில் அகப்பட்டு, மீண்டும் களைப்பைத் தரக்கூடிய பிறவிச் சுற்றில் தள்ளப்படுவர்.

அனேஜதேகம்மனஸோ ஜவீயோ
நைனத்தேவா ஆப்னுவன் பூர்வமர்ஷத் |
தத்தாவதோ sந்யானத்யேதி திஷ்ட்த்
தஸ்மிந்நபோ மாதரிச்வா ததாதி ||4||

ஒன்றதுவே! மனவேகம் வென்றதுவே! மதியறியாச்
சென்றதுவே! மற்றதெலாம் பின்வாங்க – நின்றதுவே
நிலையதுவே! ஆன்மனெனும் நிஜமதுவே! ஈங்கியற்கை
விளையதுவே! வேருமதே வித்து!

அத்தகைய ஆன்மதத்துவம் ஒன்றே ஒன்று; சிறிதும் அசைவற்றது, மனதைவிட வேகமானதால், மனதிற்கு எட்டாததாய் இருக்கிறது. அதனால் நுண்ணுர்வாகிய தேவர்களாலும் அறியப்படாததாய், நின்றவாறே ஓடுகின்ற மற்றவற்றைப் பின்னே தங்கச் செய்கிறது. (அதாவது, மாற்றம் எனும் ஓட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லாவற்றுக்கும், மூலகாரணமாய் இருப்பதால், அத்தகைய ஓட்டங்களுக்கு எல்லாம் முதற்காரணமாக இருக்கிறது). அதனாலேயே, உயிர்களின் ஓட்டமும், உலகமெனும் இயற்கையின் இயக்கமும் விளைகிறது.

ததேஜதி தன்னைஜதி தத்தூரே தத்வந்திகே |
ததந்தரஸய ஸர்வஸ்ய த்து ஸர்வஸ்யாஸ்ய பாஹயத: || 5 ||
அசைப்பதுவாய் அசையா திருப்பதுவாய் அருகாமை
இசைப்பதுவாய் எட்டா துருவாய் – விசைக்கருவாய்
உள்ளேயும் வெளியேயும் உலகெலாம் உயிர்க்கெலாம்
எல்லாயும் ஆனதுவே ஈது!

அத்தகைய ஆன்மதத்துவமே அனைத்திலும் அசைவது; அதே சமயம் அசையாமல் இருப்பது. வெகு வெகு தூரத்தில் இருப்பதும் அதே சமயம், வெகு வெகு நெருக்கத்தில் இருப்பதும் அதுவே. எல்லாவாற்றுக்கும் உள்ளேயும், அதே சமயம் எல்லாவற்றுக்கும் வெளியேயும் இருப்பதும் அதுவே. (அதாவது, பரம்பொருள் ஒன்றே எல்லாமுமாய் ஆனதால், நேரம்/காலம், தூரம்/தேசம், அசைவு/நிலைப்பு, உள்/வெளி என எல்லாவுமாய், எல்லாம் கடந்ததாயும் விளங்குகிறது.

யஸ்து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபச்யதி |
ஸர்வபூதேஷு சாத்மானம் த்தோ ந விஜுகுப்ஸதே || 6 ||
ஆன்மனிலே எல்லாமாய் அனைத்தினிலே உள்ளானாய்
ஆன்மநிலை உணர்வாரே அறிவாளி – மேன்மையரே
எல்லாமும் ஒன்றென்பார் ஏதறிவார் தீதறியார்
நல்லாராய்ச் சுகிப்பரவர் நயந்து

எவன் எல்லாவற்றிலும் ஆன்மாவையே பார்க்கின்றானோ, ஆன்மாவிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றானோ, அவனே அறிவாளி. ஏனென்றால், எல்லாமொன்றெனும் உண்மையை உணர்ந்த காரணத்தினால், அவனுக்கும் எதன்மீதும் வெறுப்பு எனும் தீது வராது. அதனால் நலமாகிய சுகம் அடைவர்.

யஸ்மின் ஸர்வானணி பூதானி ஆத்மைவாப்பூத்விஜானத: |
தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்வ மனுபச்யத: || 7 ||
எவன்நோக்கில் ஆன்மாவின் ஈரறியாச் சேகரமும்
தவநோக்கில் மீண்டுவரும் தரிசனமோ – அவன்நோக்கில்
மோகம் ஏதுமிலை முழுதுணர்ந்த காரணத்தால்
சோகம் ஏதுமில்லை சுகம்

ஆதலினால், எல்லாவற்றிலும் ஒற்றுமையை மட்டுமே, ஆன்மரூபமாய்க் கண்டுகொண்டவனுக்கு, அதன்பிறகு மயக்கம் ஏதுமில்லை. அதனால் கலக்கமோ துயரமோ இல்லை. (நிரந்தர சுகமே).

ஸ பர்யகாச் சுக்ரமகாயமவ்ரணம் அஸ்நாவிரம் சுத்தமபாபவித்தம் |
கவிர் ம்னீஷீ பரிபூ: ஸ்வயம்பூ: யதாத்யதோsர்த்தான்
வ்யத்தாச் சாச்வதீப்ய: ஸமாப்ய: ||8||
உருவாளாய் உடலறியா ஒளிவேளாய் சுற்றம்
திருவாகும் பரஅறிவால் திளைப்பார் – அருஞ்ஞானி
தொலைநோக்கக் கவியாளர் துடிமனத்துக் கடிவாளர்
நிலையாக்கப் பரந்தார் நிதம்

அத்தகைய ஆன்ம ஞானி, ஒளி பொருந்தியவராக, அதாவது பிணியற்ற உடலும், மனமும் உடையவராகவும், அவற்றின் உபாதைகளைக் கடந்தவருமாக, பர அறிவாகிய ஆன்ம தத்துவமே எப்புறமும் சூழ, பரந்த அறிவும், தொலைநோக்கும் கொண்டு கவித்துவமாக எதனையும் பார்ப்பவராக, மனதினைக் கட்டுப்படுத்தி நிலைத்திருப்பவராக என்றும் விளங்குவார்.

அந்தம் தம்: ப்ரவிசந்தி ஏ அவித்யாம்ய்பாஸதே |
த்தோ பூய இவ தே தமோ ய வு வித்யாயாம் ரதா: ||9 ||
அறிவன அறியாதல் அவித்தை, வித்தையோ
அறிவன துணிதலறி வானாலும் – அணையாத
அவித்தை பிறவியாம் இருளுட்டும் பேரிருள்
வித்தை வெறித்தவர் வினை

பொதுவாக அறியத்தக்கனவற்றை அறியாதிருத்தல் அவித்தை எனவும், அறியடத்தக்கனவற்றை அறியும் பயிற்சி வித்தை எனவும் கூறப்படும். ஆனால், ஆன்ம தத்துவம் உணராமால், (கர்மமாகிய) அவித்தையில் மட்டும் ஈடுபடுவோர் சம்சாரம் எனும் இருளில் மீண்டும் மீண்டும் புகுவர். ஆன்ம தத்துவம் உணராமல், செய்ய வேண்டிய கர்மங்களையும் விட்டு, உலக ஆசையுடன் தெய்வ வழிபாடெனினும், அத்தகைய வித்தைகளில் ஈடுபடுபவர், அதைவிடப் பெரிய இருளில் மூழ்குவர்.

(மிகவும் நுண்ணியமான கருத்து இது. ஆன்மஞானம் என்பதும் கர்மமாகிய அவித்தை, இறைவழிபாடு ஆகிய வித்தைகளுக்கு அப்பாற்பட்டதெனும் புரட்சிகரமான உண்மையைக் கூறுகிறது ).

அந்யதேவாஹுர் வித்ய்யா அந்யதாஹூரவித்யயா |
இதி சுச்ரும தீராணாம் யே நஸ் தத் விச சக்ஷிரே || 10 ||
அந்நியமாய் ஆனதது அவித்தை வித்தையிலா
நுண்ணியமாய் ஆன்மனெனும் நூதனமே – புண்ணியராய்
மறைதீரர் அளித்தார் மறையுண்மை பெருஞானம்
இறையோன் உணர்த்தும் இதம்

ஆன்ம தத்துவம் என்பது கர்மங்களை மட்டும் செய்வதான அவித்தையிலிருந்து வேறுபட்டதெனவும், ஆசைகளை விடாத வித்தையிலிருந்து வேறுபட்டதெனவும், புண்ணியரான வேத ஞானத்தை உணர்ந்த தீரர்கள் நமக்கு, இறைஉண்மையை உணர்வதற்காக, விளக்கியுள்ளார்கள்.

வித்யாம் சாவித்யாம் ச யஸ் தத் வேதோபயம் ஸ ஹ |
அவித்யாம் ம்ருத்யும் தீர்த்வா வித்ய்யா ம்ருதமச்னுதே || 11 ||
சாவைக் கடப்பதற்குச் சாதனமாய் அவித்தைவரும்
சாகா நிலையை வித்தைதரும் – ஆகிவரும்
ஆன்ம தத்துவத்தை அறிந்தோர்க்கு இவ்விரண்டும்
காண்ம கத்துவத்தைத் தான்.

ஆன்ம நோக்கிருந்தால் அவித்தை நழுவிவிடும்
ஊன்மடிதல் இல்லா உயரும் – தானறியும்
வித்தை பலப்பட்டு விவேகம் பதிப்பித்து
நித்தம் நிலைக்கும் வரம்

வித்தை, அவித்தை இவ்விரண்டுடன் ஆன்ம தத்துவத்தை அறிகிறவர்கள், அவித்தையால் சாவைக் கடந்து, அதன் பலனாக, வித்தையால் சாகா நிலையை அடைகிறார்கள். ( அதாவது, பலன் கருதாமல் கருமங்களைச் செய்வது, தருமநெறியுடன் இறை வழிபாடு/சமுதாயப் பணி அகியவைகளைச் செய்வது ஆகிய அவித்தை, வித்தை இவ்விரண்டினோடு, ஆன்ம தத்துவமாகிய மூன்றாவது உண்மையும் சேர்த்து இருத்தல் அவசியம்.)

அந்தம் தம்: ப்ரம்விசந்தி ஏsஸம்பூதிமுபாஸதே |
ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாம் ரதா || 12 ||
ஆன்ம ஞானமின்றி அடிப்படையாய் நிர்க்குணத்தைப்
பேணித் துதிப்போர்க்குப் பேரிருளே – காணுலகில்
சற்குணத்தைச் சபித்தாலும் காரிருளே ஆன்மநெறி
நிற்க மறந்தார் கதி

மேலே 9-11 மந்திரங்களில், அறிவால் பகுத்தறிந்து வாழும் வகையினை வலியுறுத்தின. இனிவரும் மந்திரங்கள் இதயத்தால் தொகுத்துணர்ந்து வாழும் அவசியத்தை விளக்குகின்றன.

ஆன்ம தத்துவம் எனும் உண்மையை விட்டுவிட்டு, ‘ஸம்பூதி’ எனும் நிறைவான, குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்க்குண சமாதி நிலையை அடைய முயற்சிப்பவர்க்கும், ‘அஸம்பூதி’ எனும் நிலையில் சர்க்குண வடிவ தெய்வ வழிபாடு செய்பவர்க்கும், (நல்வினை, தீவினைகளால் ஆக்கப்பட்ட பிறவிஎனும்) பேரிருளே கிடைக்கும். (ஆதலால், இதயபூர்வமாக ஆன்ம தத்துவத்தை உணர்ந்தே, ‘ஸம்பூதி’, ‘அஸம்பூதி’ ஆகிய இரண்டையும் அடையவேண்டும்.

அந்யதேவாஹூ: ஸம்பவாத் அந்யதாஹூரஸம்பவாத் |
இதி சுச்ரும தீராணாம் ஏ நஸ்தத் விசசக்ஷிரே || 13 ||
நிறைவாகும் விகாசம் ஈதன்று நிரோதமெனும்
மறைவாகும் மார்க்கமும் இதுவன்று – மறைதீரர்
ஆராய்ந்து காண்பித்தார் ஆன்மநெறித் தத்துவமே
வேறாக அறிதல் வரம்.

( மேலே கூறப்பட்ட ‘ஸம்பூத’, ‘அஸம்பூத’ அனுபவத்தால் வரக்கூடிய) நல்ல போக்குகளை வளர்த்தல் (விசாகம்), தீய போக்குகளை அடக்குதல் (நிரோதம்) ஆகியன, ஆன்ம தத்துவத்திலிருந்து வேறுபட்டது. இவ்வுண்மை மறைதீரர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். (ஆதலால், ஆத்ம ஞானம் பெறுவதற்கு, அத்தகைய தீரர்களை குருவாக அடைய வேண்டும்).

ஸம்பூதிம் ச வினாசம் ச யஸ் தத் வேதோபயம் ஸஹ: |
வினாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாம்ருதம்ச்னுதே || 14||
விகாசம் நிரோதமொடு விளக்காக ஆன்மநெறிப்
பிரகாசம் கொண்டோரே பேராளர் – தகாதெனச்
சாக்காடு தாண்டுவார் நிரோதத்தால் விகாசத்தால்
நூற்கார் அமிர்தம் நுகர்ந்து

மேலே கூறப்பட்ட ‘விகாசம்’, ‘நிரோதம்’ இவற்றின் மூலமான ‘ஸம்பூத’, ‘அஸம்பூத’ எனும் இவ்விரண்டு அனுபவங்களை, ஆன்ம ஞானமெனும் உண்மையௌ உணர்ந்து இருந்தார்கள் என்றால், அதன் துணையால், நிரோததின் மூலம் சாவைக் கடந்தும், பின் விகாசத்தின் மூலம், சாவில்லா நிலையையும் அடைவர்.

இந்த மந்திரத்தில் ‘வினாசம்’ எனும் சொல் ‘அஸம்பூத’ அனுபவத்தினைக் குறிக்கிறது. ‘அஸம்பூதி’ புதிய தீவினைகள் வாராது வாழுதல், ‘வினாசம்’ என்பது, பழைய தீவினைகளைக் களைதல். பெரியவர்கள் ‘நிரோதம்’ எனும் பதம் ‘ஆஸம்பூதி’ மற்றும் ‘வினாசம்’ எனுமிரண்டையும் குறிப்பதாகக் கூறுவர்.

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸயாபிஹிதம் முகம் |
தத் த்வம் பூஷன்ன பாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்டயே || 15 ||
கண்ணான சத்தியத்தின் கவின்முகத்தை மாயையெனும்
பொன்னான போஷனைகள் மூடியதே – விண்ணாளும்
ஆழியேமூடி அகற்றாயோ மறை முகத்தின்
ஊழியன் எந்தன் வினா

ஆதவனே அறிவு அரும்பொன் தட்டு
ஓதறியா உண்மைக்கு மூடி – காதலினால்
சூரியனைத் துதித்துச் சுடரறிவைத் திறக்க
நேரியனாய் ஆன்மன் நிஜம்.

ஆன்மாவாகிய பேருண்மை, பொன்னாலாகிய மூடிபோல, வளமையாகிப் பிரகாசிக்கின்ற வெளியுலக விஷயங்களினால் மூடப்பட்டிருக்கிறது. அந்தப் பேருண்மையை நாடும் எனக்கு, இந்த மறைப்பை அகற்றுவாயாக!

( இறைவனே சத்தியம். சத்தியமே இறைவன். தத்துவதில் சத்தியமே ஆன்மா. வழிபாட்டில் சத்தியமே கடவுள். கர்மவினைகளுக்கு தர்மமே சத்தியம். ஆதலினால் அந்த சத்தியத்தினை உணரவேண்டியதே உயிர்களின் கடன்.)

பூஷன்னே கர்ஷே யம ஸூர்ய
ப்ரஜாபத்யவ்யூஹ ரச்மின் ஸமூஹ: |
த்யோஜோ யத் தே ரூபம்
கல்யாண-தமம் தத் தே பச்யாமி || 16 ||
பரிதியே, புவனப்பரிசே, பார்வையே, பரிவர்த்தனனே
கருதியே தூண்டும்தேவே, கதிரருள் காட்டுமய்யா!
இளவொளிக் கிரணக்கீற்றை, இன்புற விரியும்நாற்றை
மனமதி குவியநோக்கி மகிழுவன் ஈண்டுயானே!

(மேலே கூறப்பட்ட பொன்மய மூடியான உலகங்களைத் தந்து ஒளியால் படைத்துக் காக்கும் பரிசே, நீயே படைத்தவன், பார்த்திருப்பவன், நிர்வாகம் செய்கிற பரிவர்த்தனன். ஆன்ம ஒளியாக இருந்து கொண்டு, எம்முள் உமது ஒளிக்கீற்றை விரித்துக் காட்டு! அந்த ஒளியை, பிரகாசிக்க எழும் கதிரை நான் (தானும் எனும் நிலை இழந்து) பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனந்திக்கிறேன். அந்த ஆன்ம ஒளி யானே என அறிகிறேன்.

வாயுரனிலம்ம்ருத மதேதம் பஸ்மாந்தம் சரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர, க்ருதம் ஸ்மர,
க்ரதோ ஸ்மர, க்ருதம் ஸ்மர || 17 ||
[வாயுவும் பிராணனாகி வடிவான தங்கத்தட்டாய்
தூயநல் லான்மாவினது தூமுக மூடியாகும்
மாயமும் மலமும்நீங்கி மதிமுகம் காண்பதற்கு
நேயமாய் வாயுதேவன் நிமலனே அருளவேண்டும்!]

பிராணகலை உயிர்கலந்து ஜீவனிலை உறைகரைந்து
வானமய பிரம்மனிலை வடிக்கட்டும்! ஊனமயம்
கருகட்டும் உறுதியுடன்; கடவுளியல் கருணைநினை!
கடவுளியல் கருணைநினை, கடவுளியல் கருணை நினை

இந்த உயிர், ஆன்மாவாகிய ஒளியில் கலக்கட்டும். உடல் சாம்பலாகட்டும். ஏ மனமே! உறுதியுடன், உள்ளே கட்ந்து இருக்கும் அந்த ஆன்மாவாகிய கடவுளின் கருணையை நினைந்து கொண்டே இரு!

அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்
விச்வானி தேவ வயுனானி வித்வான் |
யுயோத்யஸ்மஜ் ஜூஹூராணமேனோ
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம || 18 ||

[தீயாகத் தெய்வத்தைத் தேர்ந்திங்கு துதிப்பாடல்
நோயான பிறவிக்கு நுண்மருந்து – போயாள
காலன் வருங்காலம் கடவுளியல் கருணைக்
கோலம் நினைக்க வழி, ]

வழிகாட்டும் ஒளியான அதிகாரி நீயே –
வாழ்நெறிகள் யாவுமறிவாய்!
வலியில்லா வழியிலெனை நடத்திப்பே ரானந்த –
வரபோக லாபம் அருள்வாய்!
பழியிலா தெனது பாவவலைக் கோணலகல் –
பக்குவப் படுத்தி விடுவாய்!
பணிவாக மீண்டும் மீண்டுமுனை வேண்டினேன் –
பரஞான யோகம் அருள்வாய்.

ஏ வழி துலக்கும் ஒளிவிளக்கே! உலகின் எல்லாத் தத்துவங்களும் அறிந்த குருவே, எளிதான வழியிலே அந்தப் பேரானந்ததிற்கு என்னை அழைத்துச் செல்! நேர்மையிலாது (கோணல் மாணலான) எனது வாழ்க்கையினை நேராக நடத்திஸ் சென்று,பழியற்ற நிலையை வழங்கு. அதற்காக, பணிவுடன் உம்மை மீண்டும், மீண்டும் வேண்டிக் கொள்கிறோம்.

|| ஈசோபநிஷத் நிறைவு ||

சாந்தி பாடம்

ஓம் |
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம்
நிறைவே அது; நிறைவே இது;
நிறைவே நிறைவின் விளைவானது!
நிறைவில் நிறைவை எடுத்தாகினும்
நிறைவோ அது! நிறைவானது!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Related Posts

Share this Post