கண்ணன் ஸ்துதி

அருள்மிகு கண்ணன் துணை

எப்படி வருவாயோ கண்ணா

தவழ்ந்து வருவாயோ கண்ணா!
தவழ்ந்திடு வாயென – மனத்
தாழ்திறந்து தவித்தேன்!
தாவிஅணைப் பாயெனத்
தாயனெவே இனித்தேன்!

தத்தி நடப்பாயோ கண்ணா!
தத்திநடப் பாயென – அகத்
தரையினையும் துடைத்தேன்!
ததும்பி வழிவாயெனத்
தாகத்துடன் சுகித்தேன்!

உருண்டு வருவாயோ கண்ணா!
உருண்டிடு வாயென – உன்
உரலாகி வரித்தேன்!
உவந்திடு வாயென
ஊகித்துச் சிரித்தேன்!

உள்வரு வாயோ கண்ணா!
உள்வரு வாயென – என்
உளக்கதவந் திறந்தேன்!
உனைஅணைப் பேனென
உலகினையும் மறந்தேன்!

எப்படி வருவாயோ கண்ணா!
எப்படி வந்தாலும் – எனை
எடுத்தணைப் பாயே!
கற்பனை அல்லாத
கருணை செய்வாயே!

சொப்பென எனையே கண்ணா!
சொப்பெடுத் தாடி – நற்
சுகமருள் வாயே!
சொப்பன வாழ்விதிற்
சுடரருள் வாயே!

விட்டல பாண்டு ரங்கா

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

மட்டில தானதருள்
கிட்டிய தாலடியில்
ஒட்டிய பேரமுது – ஹரி விட்டல

கட்டியங் கூறிஅருட்
பட்டயங் கோடிநலம்
இட்டருள் கூடிவரும் – ஹரி விட்டல

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

புத்தியி லூடியிரு!
சித்தியெ லாமுமிடு!
முத்தியுன் சேவடிகள் – ஹரி விட்டல

சத்திய மாமுனது
நித்தியப் பூவடிகள்
பத்திர மாகியது – ஹரி விட்டல

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க
விட்டல பாண்டுரங்க – ஹரி விட்டல

மண்ணைத் தின்ற கண்ணா

மண்ணைத் தின்ற கண்ணா இன்று
என்னைத் தின்றனை!
உன்னைக் கண்ட திந்நாள் எந்தன்
உள்ளுள் சென்றனை!
வெண்ணைத் தாழி எந்தன் நெஞ்சுள்
உந்தன் கைவிரல்!
கண்ணை மூடிக் கொண்ட போதும்
கண்ணன் பொன்னுடல்!
(மண்ணை)

அன்னை உரலில் கட்டினாளே
அன்று வலித்ததா!
அன்பில் உயிரில் கட்டுமெந்தன்
ஆசை பலித்ததா!
இன்னும் ஏது இன்னல்! என்னுள்
இன்பம் ஊர்வலம்!
என்றும் வேணு இன்ப கானம்
நெஞ்சம் பூவனம்!
(மண்ணை)

தென்றல் வந்து தொட்ட போதுன்
தேகம் தொட்டது!
தீயுள் கையைச் சுட்ட போதுன்
தேயம் பட்டது!
கன்னல் போலுன் கன்னம் மின்னல்
சின்னப் புன்னகை!
என்னுள் நீயென மின்னும் ஞானம்
என்றும் நின்தயை!
(மண்ணை)

மீ. ரா

வாசல் மனம்தெளித்து வழிக்கோலங் களிழைத்து

வாசல் மனம்தெளித்து வழிக்கோலங் களிழைத்து
நேசன்நினை அழைத்து நெடுங்காலம் ஆனதினால் – (கண்ணா)

குப்புறத் தவழ்ந்துலவும் கோபுரமே காவியமே
செப்புமொழிச் செவ்வாய் சிந்தும் உமிழமுதே
தவழுங்கால் வலிக்குமோ, தண்டைமணி ஒலிக்குமோ
புவனம் அளந்தபரி பூரணருள் பலிக்குமோ – (கண்ணா)

பஞ்சுமலர் அடியெடுத்து நெஞ்சில் பதிப்பையோ
பிஞ்சுவிரல் கொண்டு பிரண்டிச் சிரிப்பையோ
அஞ்சுகமே அத்தா அனந்தா எனப் பாடிக்
கெஞ்சுகிறேன் இதைக் கேட்டு அருள்புரிய – (கண்ணா)

அலைமுடியும் தலையசைய அழகுமயிற் சிறகசைய
கலையழகே கற்கண்டே காதல் இளங்குருத்தே
மொட்டு விழிகொட்டி முறுவல் இதழ்விரித்த
பட்டே பசும்பொன்னே பவளவாய்ச் சுகப்பேறே – (கண்ணா)

பூப்பந்தாய்த் தூக்கவா! பூமாலை கோக்கவா!
மூப்பறியாக் கன்னத்தில் முத்தங்கள் சேர்க்கவா!
தோளில் சுமக்கவா! தூமாலை ஆக்கவா!
காலில் உரலாய் கட்டிக் கொண்டாடவா – (கண்ணா)

வெண்ணை மனமுருக விடநாக மனமொடுங்க
என்னுள் நடமிடுக என்றுனைக் கேட்டதனால் – (கண்ணா)
எங்கலியோ கிருஷ்ணா ஏற்றருளி ஆட்கொள்ளத்
தங்கமே வந்தாய் தவழ்ந்தே வருமின்பம் – (கண்ணா)

சூட்சுமம் அறியேன் சுதாமன் போல்யானும்
மாட்சியில் வறியன் மழைக்கோர் குடையாகும்
நேசனாய் என்னை நினைப்பாய் அருள்காட்டிப்
பேசுவாய் முத்தம் பெறுவாய் அருகேநீ (கண்ணா)

ஓம்என்னும் உட்பொருளே உத்தமனே வாராயோ
ஓதுமறைப் பண்ணே உள்ளத்துள் வாராயோ
நல்லறிவுப் பால்கடைந்து நவநீதத் திரளை
அள்ளக் குறையாமல் அருள்தரவே வாராயோ! (கண்ணா)

மோஹத் திரையவிழ முளைத்த சுடர்மின்னல்
மேகக் கருவண்ணா மெய்யுணர்த்த வாராயோ!
வாசலிலே மணிக்கோலம் வழியெல்லாம் தீபவொளி
பூசனைகள் நினதழகைப் புகழுமொலி மந்திரங்கள் (கண்ணா)

சுகவமுது இதுவென்று சுட்டுதற்கோ கால்விரலைப்
புகலென்று வாய்வைத்துப் புசித்தாய் கோபாலா!
தேசுநீ! கண்கண்ட தெய்வம்நீ! நின்னடியிற்
பூசும் நல்லின்பம் பொற்தண்டை என்சிந்தை (கண்ணா)

வாக்கும் மனமுடலும் வகையுறவே நினதடிகள்
காக்கும் எனக்காட்டும் கற்கண்டே வாராயோ
யார்க்கும் பொருளே! யதுகுலத் திலகமென
நீக்கமற நிற்கும் நிறைவே நித்திலமே! (கண்ணா)

மீ. ரா

Related Posts

Share this Post