இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

இமைப்பொழுது என்பது, நாம் கண் சிமிட்டும் அளவினாலன காலத்துளி.  இமைப்பொழுது என்பதையும்விட, காலம் மேலும் துல்லியமாகவும் அளக்கப்படக் கூடியதுதான்.  எனினும், மனிதர்களாகிய நமக்கு, இமைப்பொழுது என்பதே, அனுபவத்தில் காணக்கூடிய துல்லிய காலம். எனவேதான் மாணிக்கவாசகர், இமைப்பொழுது எனும் கால அளவைக் காட்டி, அந்த இடைவெளியிலும்கூட நம்மை விட்டு விலகாமல் நம்முள்ளேயே இறைவன் இருக்கின்றான் எனக் கூறுகின்றார்.

அந்த இறைவன் நம்முள்ளே எங்கே இருக்கிறான்?

‘அகப்படும் சிவம்’ அல்லவா, அதனாலே, சிவன் எல்லோரின் நெஞ்சிலும் இருக்கின்றான். ‘ஹ்ருதயம்’ எனும் சம்ஸ்கிருதச் சொல், தசைகளாலான ‘இதயம்’ எனும் உறுப்பினை காட்டுவது அல்ல.  அதன் பொருள், உள்ளமாகிய மையம்; அதுவே நெஞ்சம், நமக்குள் எல்லா உணர்வுகளுக்கும் ஆதாரமாய் இருப்பது.

தங்கத்தமிழில் சொற்சுகங்கள் கோடி.

உதாரணமாக, எல்லா இடத்திலும் நிறைந்து, அகன்று, இறைந்து கிடப்பதால், பரம்பொருளுக்கு ‘இறைவன்’ என்பது ஒரு பெயர். அப்பரம்பொருளே நுணுக்கமாய், அறிவினையெல்லாம் கடந்து, உள்ளத்துள் ஆழ்ந்து இருப்பதால், ‘கடவுள்’ என்றும் அழைக்கப்படுகிறது. இறைவனாயும், கடவுளாயும் பரசிவன், நம் நெஞ்சினுள், ஒரு கணமும் நீங்காமல் இருக்கின்றார் என்றும், அன்னாரின் திருவடிகளை வணங்குவோம் என்பதும் இவ்வரியின் பொருள்.

நம்முள்ளே எப்போதும் நீங்காமல் இருக்கின்ற சக்தி எது?

துல்லியமான எண்ணங்களோ என்றால், எல்லா எண்ணங்களும் வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன. எண்ணங்களை விளைக்கும் மனதும் எப்போதும் நிலையாக இல்லை. மறதியால், நினைப்பும், அறிவும்கூட அழிந்து விடுகின்றன.

எனவே எது எப்பொழுதும் மாறாமல் நமக்குள்ளே இருப்பது?

அது ‘நான்’ எனும் உணர்வு. வெளி அடையாளங்களின் அவசியமோ, புலனறிவின் துணையோ எதுவும் தேவையில்லாமல், எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருப்பதுதான் அந்த ‘நான்’ எனும் உணர்வு. இருட்டில் இருந்தாலும், ‘நான் உள்ளேன்’ எனும் அனுபவம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறதே! துயிலும் போது, வெளிப்படுத்தும் அறிவுதான் இல்லையே தவிர, நான் எனும் உணர்வு நம்முள் நிலையாகவே இருக்கிறது. ஏனெனில் எழுந்த போது, துயிலையும் பார்த்துக் கொண்டிருந்த சக்தி நம்முள் இருந்திருக்கின்றதே! அதனாலன்றோ, விழிப்பு, கனவு, துயில் எனும் அனுபவங்களுக்கெல்லாம், நம்மால் ஒரு தொடர்பினைக் கொடுக்க முடிகிறது! அந்த ஆதார சக்தியே, ‘ஆத்மா’ வாகிய இறைச் சக்தி.

அப்படியாயின், ‘நான் யார்’ எனும் வினாவுக்கும், உள்ளத்தைக் கடந்து, ‘நான்’ எனும் உணர்வுக்கு ஒளியாக விளங்கும் ஆத்மாவே விடையாக வேண்டும். அப்படியாயின், ‘கடவுள்’ அல்லாமல், ஆத்மா வேறாக இருக்க முடியாது. இவ்வரிய வேதாந்த முடிவும், இவ்வரிகளிலே மாணிக்கவாசகப் பெருந்தகையால் காட்டப்பட்டது.

‘இருப்பது’ என்பதற்கான தமிழ்ச் சொல், ‘உள்ளது’ என்பதாகும்.  உள்ளது உண்மையானது.  ‘உள்ளது’ என்பதன் ஆழ்பொருள், ‘உள் + அது’.  அதாவது, உள்ளுக்குள்ளே, ‘அது’ இருக்கிறது. ‘அது’ என்பது, வேதாந்தம் ‘தத்’ எனும் சொல்லினால் காட்டும் பரமாத்மாவைக் குறிக்கின்றது. அப்படியானால், அதுவே ‘சத்தியம்’,  மாறாமல் எப்போதும் விளங்குவது. எனவே ஆத்மா என நம்முள்ளே விளங்கும் கடவுளாகிய சக்தியே, பரமாத்மாவாக எங்கும் நிறைந்த இறைவன் என்றும் நமக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

இவ்வாறு, இறைவன் நமக்குள்ளேயே எப்போதும் இருக்கிறார் என்று உணர்வதால், நமக்கு இரண்டு அரிய மாற்றங்கள் கிடைகின்றன.

ஒன்று, நமது செயல்களை எல்லாம் ஒரு சக்தி நமக்குள்ளேயே எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், அச்சக்திக்குப் பணிந்தாவது, நாம் நமது செயல்களை அறமுடையதாயும், தீதற்றதாயும் அமைத்துக் கொள்ள முயலுவோம் என்பது. அதாவது, நமக்கு நற்பண்புகள் வருவதற்கு, நம்முள்ளே கடவுள் இருக்கிறார் எனும் நந்நம்பிக்கை ஒரு காரணமாக இருக்கிறது.

மற்றொரு மாற்றம், பரம்பொருள் நம் உள்ளத்திலேயே இருக்கிறது என்றால், உலக வாழ்க்கையில் நமக்கு எந்நிலை வரினும், அதனால் நமக்கு பாதிப்பு என்பதே கிடையாது எனும் உறுதியும், தன்னுள்ளே விளங்கும் இறைத் தன்மையினால் அழியாத உயர்விலேயே நம்மால் இருக்க முடியும் என்ற வலிமையும்,  நமக்குக் கிடைப்பது ஆகும்.

1. நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

3. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

Related Posts

Share this Post