(Read in ENGLISH)

கறை படிந்த கடல்

Presented during the Tsunami Victim Support Meeting, in London

தாலாட்டிக் கால்மாட்டில் தலைகவிழ்த்து அலை செதுக்கி
காலிடுக்கில் நூலிழைத்து கைநழுவிப் போகின்றாய்!
மெத்தென்று உன்மடியின் மேல்தவழும் படகுகளை
மெதுவாக அசைக்கின்றாய்! மேலெல்லாம் நுரைக்கின்றாய்!
சலசலனெ உன்சத்தம் சங்கீதம்! வெண்மணலின் துலவுகின்ற
என்கையைத் தொட்டு நனைக்கின்றாய்!
கடலழகே நீகாந்தம்! கண்டதனால் உன்னருகில்
தடமறிந்து நாங்கள் தங்கி இருக்கின்றோம்.

என்றாலும் உன் காற்று – இதமில்லை இன்று!
மன்றாடும் என் உள்ளம் – மறக்காது ஒன்று.

ஆர்ப்பரித்து நீசெய்த அமர்க்களத்தை என்னசொல்ல!
பூப்பறித்துக் கசக்கியதாய் பூமியிலே எம்மைந்தர்!
ஆப்பிழந்த தேராய் ஆங்காங்கே தேகங்கள்!
வாக்கிழந்து மனமொடிந்து வாய்ப்பிழந்து நிற்கின்றோம்!
அவசரத்தில் ஆழ்குழியில் அள்ளிப் புதைக்கின்றோம்!
சிவசிவத்த கண்ணில் சிந்துகின்ற வெள்ளத்தில்
புதைநிலத்தை நனைத்து, புலப்பட்ட உடல்பார்த்து
புரியாமல், விரல்நுனியால், தலை முடியால், முகமழகால்
“ஈதன்றோ என்செல்வம்” என்றே எம்மக்கள்
அந்திக்கருமத்தை அநியாய நேரத்தில்
சிந்திக்க கூடாமல், சிலநொடியில் முடிக்கின்றார்!

உப்பான கடலே, நீ உவர்ப்பென்று காட்டிவிட்டாய்!
வற்றாத எம்கண்ணீர் வற்றட்டும், வற்றாதெனில்
உப்பில்லா இளநீராய் ஊற்றட்டும், ஊற்றதனில்
எப்போதும் ஆனந்த எழுச்சி தோன்றட்டும்!

கடல்மகளே,
பூமித்தாய் மடியசைத்தால் பொறுமைநீ இழந்தது ஏன்?
சுனாமிப்பேய் வடிவத்தால் சுகத்தைநீ அழித்தது ஏன்?
விளையாடும் குழந்தைகளை வீசிக் கொன்றாயே?
நிலையான குடும்பத்தை நிர்மூலம் செய்தாயே?
பயணிகளை மரணமெனும் பாதையிலே எய்தாயே?
பாவையரைத் துவைத்துப் பாசாங்கு செய்தாயே?

நீ சக்தி! ஜகன்மாதா! நிச்சயமாய் பலசாலி!
யாரிங்கே உன்வலிவை ஆராயத் தூதுவிட்டார்?
அழிப்பதும் அமைப்பதும் அருள்வதும் இயற்கையின்
வழிப்பயன் என்ற வாய்மை புரிந்தாலும்,
அம்மாஉன் ஆங்காரம் அடிவயிற்றில் ரீங்காரம்!
நுரைப்பூக்கள் கோபத்தில் நூர்த்தெடுத்த தீச்சாரல்!
வரைகடந்த அலைச்சுவரோ வார்த்தழிக்கும் வலைவீச்சு!
கரைஎன்றால் தாண்டாது கட்டுண்ட எல்லை!நீ
கரைதாண்டிப் பாய்ந்து கறைபட்டுப் போனாயே?

ஒன்றுறுதி! கண்டாயோ உலகத்தில் மானுடத்தை!
அன்புருகி மனிதரெல்லாம் ஐக்கியத்தால் இணந்தின்று
மற்றவரின் கண்ணீரை மனமுவந்து துடைப்பாரே!
கற்றதனால் ஆயபயன் என்றறிவு படைப்பாரே?

உன்னாலே கூட ஒருபோதும் நனையாத
கண்ணான ஜோதி எம்கைவசத்தில் இருக்கிறது!
அன்பெனும் அகல்விளக்கில் ஆழ்மனத்தில் தூய்வடிவில்
எண்ணத்தின் பின்னே எழுந்தாங்கு நிற்கிறது!
அதுஅறிவோம், ஆதலினால், ஆவதெது ஆனாலும்
பொதுஅறிவால், காதலினால், பூமியிலே மானிடராய்
உதவிஎனும் கடமையினால், உண்மையிலே அன்புணர்வால்
எதுவரினும் எதிர்கொள்வோம்! என்றேனும் துயர்வெல்வோம்!

அம்மா, ஜகன்மாதா அறிவிதனைத் தந்துவிட்டாய்!
சும்மா இரு, சுகந்தரு தரு!
சுனாமிஎனும் யமனின்
பினாமியைப் பின்னால் இழு, நன்நாள் வகு!

Related Posts

Share this Post