ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவெம்பாவை

ஸ்ரீகாஞ்சிப் பெரியவர்கள் அருளாசியுரை

திருச்சி ஸ்ரீ மீ. ராஜகோபாலன் இயற்றியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவெம்பாவை என்னும் நூல் திருவானைக்கா சுேத்திரத்தில் கோயிற் கொண்டிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் மஹிமைகளை சப்தப்ராஸம் பொருட்செறிவுடன் கூடிய இருபத்திரண்டு பாடல்கள் ருபமாக வர்ணிக்கிறது. ஸ்ரீஆண்டாள் அருளியுள்ள திருப்பாவை, ஸ்ரீமாணிக்கவாசகர் அருளியுள்ள திருவெம்பாவை இவைகளை அனுசரித்து இயற்றப்பட்டுள்ள இந்நூலின் உதவியுடன் ஆஸ்திகர்கள் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை பஜித்துக் கொண்டு தேவியின் அருளால் எல்லா மங்களங்களையும் அடைவார்களாக.

நாராயணஸ்ம்ருதி

சொன்னாலே யானைக்கா சோதியெனும் அருள்மாரி
கண்ணாலே பெய்யும் கருணைத் திறம்பாடி
ஒண்ணா தமுதமொழி யோடே இசைபாடி
எண்ணா தறவே திருசேவகம் பாடி
பெண்ணா ணலிகளெனும் பேதம் நீத்துத்தம்
உண்ணா டுளமாடும் உண்மை வளம்பாடி
பண்ணா லவள்பாதம் பாடும்பே ரானந்தம்
எண்ணா துறங்குவையோ ஏந்திழையீர் எம்பாவாய் (1)

அன்னையை அழகை அகிலாண் டேஸ்வரி
கன்னலைக் கருணைக் கடலை மனத்திடர்
இன்னலை இல்லா தினித்தருட் சுடரை
நன்னல மானைக்கா நயந்த பேரருளை
இன்னந் துதியாயோ ஏனோ துயிலுதியோ
முன்னந் துயின்றமுழு மோகமோ வைகறையில்
வண்ண மிகுந்திரு வானைக்கா நாயகியை
எண்ணத் திறங்கொண் டாடேலோ ரெம்பாவாய் (2)

ஆனைக் காவினை ஆண்டனை அன்னையை
வானைத் துாவிய வடிவினைப் பாடிப்போய்
ஏனைத் தோழியர் எழுப்பினர் வெள்ளிடை
மானைத் தோகை மயிலினைப் புள்ளினம்
கானத் தாலாட்டக் கண்டனர் கண்மலர்
ஊனத் துறங்கினை உழன்றனை பேதமை
தேனைத் தருதமிழ்த் திறனைத் துதிமலர்
ஞானத் திருமொழி நவிலேலோ ரெம்பாவாய் (3)

கீறிய செம்மைக் கீழ்த்திசைக் கோலம்
ஊறிய செம்மண் உலரு நற்காலம்
நேரிய வாசல் நிறைத்தனர் பெண்டிர்
நெறியா லரியோர் நிகழ்த்தினர் மாமறை
தூரிய மாநிலை தொடரத் தெரியும்
காரிகை கரிக்கா கருணசா கரமே
மாறிடர் மறைந்தது மகிழ்ந்தது உலகம்
மறையாக் காதல் மனத்தேலோ ரெம்பாவாய் (4)

வஞ்சகி எம்மைநீ வைகறையில் எழுப்பெனக்
கெஞ்சினாய் அழைக்கையில் கேளா துடல்மறந்து
மஞ்சம் கிடக்கிறாய் மறந்தாயோ ஆனைக்கா
கொஞ்சும் நாயகியைக் கோமளத்தைப் பாடுதற்கு
நெஞ்சம் இல்லையோ நேரமிது தானிலையோ
கொஞ்சம் விழிமலர்த்திக் கோதின்றி நீராடித்
தஞ்சம் அடைந்தனிய தமிழமுது பாடுதற்கு
நஞ்சு துயில்விட்டு நாடேலோ ரெம்பாவாய் (5)

தங்காய் மணிக்கதவம் தாள்திறவாய் தண்கழல்கள்
சிங்கார மாயெந்தன் சென்னிமேற் சேவித்த
துங்கா மணிவிளக்கைத் துாவிமலர் சேவிக்க
மங்கா யானைக்கா மந்திரத்தைப் போயடைய
பொங்கா கதிர்முன்னே புறப்பட்டுச் செல்வதென
இங்கே எமைத்தான் எழுப்புவதாய்ப் பேசியநீ
சிங்கா ரமளியின்மேற் சித்திரம்போல் கண்வளர்வாய்
எங்கா யீதேநின் னியல்பேலோ ரெம்பாவாய் (6)

பூவாய் மஞ்சத்துள் பொதிந்து கிடப்பாயோ
சாவாய் வாழ்வதற்கு சாதித்து நிற்கின்ற
பாவாய் ஆனைக்கா பணிவாய் பாமாலை
தூவாய் துாக்கம் துடைப்பாய் நாளெல்லாம்
நாவாய் நடனங்கள் நடத்தும் வாழ்வென்னும்
நாவாய் சிதையாது நன்னிலை தவறாது
மேவாய் மாயம் மெலிவாய் பரஞ்சோதி
வாவாய் மொழிகூறி வாழ்த்தேலோ ரெம்பாவாய் (7)

சின்னப் பெண்ணோநீ சினத்தால் நானின்று
சொன்ன சொல்விட்டுச் சோர்ந்து அமளியின்மேல்
கண்ணயர்ந் தின்னுங் காண்கிறாய் ஆனைக்கா
வண்ணத் திலகத்து வடிவத்தைப் பாடாமல்
என்னே பேதமைத்து இருப்பாய் புறப்பட்டு
கன்ன லமுதமொழிக் கவிதை வயப்பட்டு
பின்ன மொழிப்பாய் பிறவி விடுபட்டுத்
திண்ண முடையாய் திகழ்வேலோ ரெம்பாவாய் (8)

இட்டமுடன் அகிலாண்ட ஈஸ்வரியின் பாதமலர்
பட்டவுடன் செய்கின்ற பாவமெலம் போகுமெனுஞ்
சட்டமது எந்நாளும் சத்தியமே மொழிகின்ற
கட்டழகுத் தமிழுந்தன் காதுகளில் பயனுற்று
விட்டதென எண்ணியே விட்டேனே பாவிநீ
கெட்டதொரு தூக்கமெனும் கேளிக்கை வயப்பட்டு
விட்டதென்ன கேளின்று விளம்புகின்ற பாடல்மனப்
பெட்டகத்தில் வைத்துப் பேசேலோ ரெம்பாவாய் (9)

ஆடுவது வேடமென ஆதியிலே வந்தமொழி
பாடுவது வேலையெனப் பாவை சொன்னமொழி
நாடுவதைக் கொண்டு நயந்து உரைத்தமொழி
பேடுஎனப் பலகாலம் பேசிப் பொருளுறவு
தேடுவதைக் கொண்டாய் தேறாதுட லிளைத்து
ஆடுவதைக் கண்டாய் அமளிமேற் பலநேரம்
கூடுகிறாய் ஆனைக்கா குலவிளக்கை ஏற்றிப்
பாடுவதைக் கேட்டுப் பாடேலோ ரெம்பாவாய் (10)

காவிரியின் மாதங்கம் காத்த சிற்சபையில்
பூவிரியப் பொன்மலர புவனம் ஒளிமிளிர
மேவியருள் மலரடியில் மெய்யுணரத் துதிமாலைப்
பாவிரியக் காலையிலே பாடாயோ வாராமல்
சாவறிய ஓடுதற்கோ சாரமற்று நேரம்விட்டு
நோவறிய விழிமுடி நோகின்றாய் தோழிநீ
நாவறியத் துதிமாலை நாயகியின் பூம்பாதத்
தேவிரிய என்னோடு தேறேலோ ரெம்பாவாய். (11)

புள்ளினம் பாட பூமலர்ந் தாட
வெள்ளிய வேதியர் வேதம் இசைத்தாட
கள்ளீநீ இன்னமும் கண்மலர் முட
பள்ளியி லாடப் பார்க்கிறாய் பாரிங்கு
எள்ளி நகையாட எழுந்தது செங்கதிர்
அள்ளிய பேரொளி ஆனைக்கா லருஞ்சுடர்
தள்ளிப் படுப்பையோ தாளினைத் திறப்பயோ
துள்ளிப் புறப்பட்டுத் துய்யேலோ ரெம்பாவாய் (12)

வேத விளக்காக வெம்மைக் கதிராக
நாதப் பொருளாக நல்லோர்க் கருளாக
சேதத் தெளிவாக செல்வத் தகையோரின்
போதப் பயனாக பொய்யாப் பலனாக
ஓதப் புகழ்மாலை ஒன்றித் துதிபாட
ஆதித் திறம்பாட ஆனைக்கா மாபாட
கீதக் கவிபாடக் கீழ்வான் கதிராடப்
பாதப் பணிமாலை பாடேலோ ரெம்பாவாய் (13)

பேதலித் தேமதி பெரிதே துயிலென்ன
சேதனத் தாலெதைச் சேர்வதென் றறியாமல்
வேதனைப் படுவையோ, வெறுப்பையோ வாழ்வினைச்
சாதனையாய் மனம் சலிப்பையோ, தோழிநீ
போதனை பெறுகநற் புலன்பெறு கத்தமிழ்
பாதனை ஓதிநற் பாக்கியம் பெறுகயிக்
கீதம் உரைத்துங் கேளாயோ, கண்மலர்ப்
பாதம் படிந்து பயிலேலோ ரெம்பாவாய் (14)

நினைப்பன நடக்கும் நீயே என்மனத்
துணைப்பய னதனால் துயரிலை ஏதோ
வினைப்பய னதனால் வித்துண தபயம்
தினத்துணை யானது தீஞ்சுடர் உபயம்
வனப்புன லானை வாழ்த்திய சம்பு
துணைப்பல மாகிய தூரிய வடிவே
முனைப்பன முளைத்தது முடித்திடுந் தருவே
முன்னவளே மறை முறையேலோ ரெம்பாவாய் (15)

நில்லா தவற்றை நிலையென்று கொண்டாட்டும்
புல்லறி வாண்மை புலம்பெய்த மாதாவை
கல்லா லதுவின்கீழ் கற்பிக்கும் நாயகனின்
நல்லாள் ஆனைக்கா நாயகியைத் தேந்தமிழின்
சொல்லால் பாடியருட் சோதிவரம் கோடிபெற
அல்லாமல் நீயோ அஞ்சனமாம் மஞ்சமதில்
உல்லாச மாயின்னும் உறங்குவையோ ஞானத்தால்
பொல்லாத் தூக்கம் போக்கேலோ ரெம்பாவாய் (16)

நேற்றென்ன சொன்னாய் நினைவில்லை உடலைச்
சாற்றினாய் சம்சார சாகரத் திளைக்கின்றாய்
கூற்றென்ன புரியாதோ கூற்றுவ னடையானோ
தேற்றறியாத் தேகம் தெரியாதோ கண்மலர்ந்து
போற்று வாயிந்தப் புவனங் காத்தாளை
ஏற்றுவா யானைக்கா எந்தாய் மலரடிகள்
சாற்றுவா யுனதுள்ளம் சந்திப்பாய் பெரும்பேறு
மாற்றுதல் கூறாநல் மனங்கொள்வீ ரெம்பாவாய் (17)

நந்தா விளக்ககில நாயகியின் பாதமலர்
சிந்தா அருளுண்டோ சீலநெறி வாழ்வுண்டோ
எந்தா யகிலமுயர் ஏற்றுவளர் ஆனைக்கா
வந்தா லழியுமுன தஞ்ஞானப் பொய்மாயம்
செந்தா மரையழகுச் சீமாட்டி நெஞ்சத்துள்
பந்தா யிருக்கின்ற பாந்தம் அறியாமல்
முந்தா திக்காலை முடங்கிக் கிடப்பாயோ
உந்தாயோ மஞ்சத்து உயராயோ எம்பாவாய் (18)

கற்பகத் தருவை கருணா லயத்தை
அற்புத மாகிய அகிலாண்ட நிஜத்தை
பொற்புடைத் தவத்தைப் பூரண சுகத்தை
நற்பர மாகிய நலத்தை சிவத்தை
சற்குண வடிவை சதா சிவத்தை
சொற்புரி வறியா சுகானு பவத்தை
நற்றவப் பயனால் நான்கண்டு கொண்டேன்
பற்றுக தோழீ பாடேலோ ரெம்பாவாய் (19)

தன்னள வில்லாத் தாயகிலாண் டேஸ்வரி
என்னள வில்லா இழிவினை எண்ணாது
விண்ணள வில்லா வெகுமதியை அருள்வித்த
நன்னல மாமந்த நலத்தைநீ நாடாதே
முன்னந் துயின்றமுழு மோகத்தால் வைகறைக்கே
இன்னந் துயிலுதியோ என்கூவல் கேட்டிலையோ
வண்ண மிகுந்திரு வானைக்கா லன்னைபதம்
எண்ணத் திறங்கொண் டாடேலோரெம்பாவாய் (20)

கலகலத் தோடும் காவிரிப் பேரலை
புலரச் சூரியன் பூசிடும் மஞ்சள்
மலரத் தாமரை மருளுமோ தும்பி
அலரப் பார்த்திளம் ஆநிரை தாவிடும்
வளரப் பொழுது வைகறை நல்லோர்
பழகப் பைந்தமிழ் பாடிடக் கேட்டுக்
கலையக் கவிழும் கண்விழி உறக்கம்
விலகப் பாடல் விளம்பேலோ ரெம்பாவாய் (21)

சேரத் திரண்டு திருவானைக் காவிலுறை
பாரச் செங்கருணைப் பைங்கடலை நின்னாசை
தீரப் பருகிமதி தேக்கியுன் னுள்ளத்து
வீரத் துறவேகி வெம்மாயை வேரறுத்து
தேறத் தெளியாயோ தீஞ்சுடர்த் தடாகத்து
நேரக் கதிராலே நிறைக்கும் மாதாவைக்
கூறத் தெரிவாயோ கோதிலாப் பேரின்பம்
வாரப் பொழியும் மழையேலோ ரெம்பாவாய் (22)

கண்ணழகு கண்டால் கவலை கரையாதோ
சொன்னழகு ஆனைக்கா சோதியருள் நிறையாதோ
பொன்னழகு பாதமலர் போற்றப் பெருகாதோ
விண்ணழுகுச் சபையேறி வீற்றிருக்க முடியாதோ
தண்ணழகு மொழியிந்தத் தமிழமுதப் பாமாலை
உன்னழகு உள்ளத்துள் ஒட்டாதோ, தோழிநீ
மண்ணழகு காணுதற்கோ மாய்கிறாய் உறக்கத்தில்
பண்ணழகு கொண்டின்று பாடேலோ ரெம்பாவாய் (23)

கள்ள மிலாதமளி கரந்துறங்கி வஞ்சித்த
கள்வீ எழுந்திராய் கண்கழுவித் தாள்திறவாய்
எள்ளி இகழாதே ஏசாதே ஆனைக்கா
வெள்ளி அணியன் வேதவல்லி சீர்பாடும்
கிள்ளை மொழியைக் கோளாயோ கோதைநீ
மெள்ளப் புரண்டு மேனிசுகந் தேடாமல்
துள்ளிப் புறப்பட்டுத் தூயதமிழ்ப் பாபாடி
பள்ளிவிட் டேகிப் பாடேலோ ரெம்பாவாய் (24)

விரிந்தது கதிரொளி விடிந்தது வையம்
சரிந்தது பனித்துளி சார்த்திய பூக்கள்
கரைந்தது புள்ளினம காற்றினில் மாமறை
உரைந்தது வேதியர் உணர்த்திய பாக்கள்
புரிந்தது ஞானியர் புகன்றது உண்மை
வரிந்தது கரிக்கா வார்த்திடும் பெண்மை
தெரிந்தது அதனால் தீந்தமிழ்க் காதல்
பரிந்தினி தானந்தப் பாடேலோ ரெம்பாவாய் (25)

கோவாழ நல்லோர் குலம்வாழச் சோலைலொம்
பூவாழ உயிர்களெலாம் பூதலத்தே வாழ
பாவாழ பயிர்வாழ பல்லாண்டு வாழநிதம்
நாவாழப் பாடலொலி நயந்து இசைத்தானைக்
காவாழ நின்றாடுங் கற்பகத் தருள் வாழ
நீவாழ வந்தாயுன் நெஞ்சத் தறம் வாழ
ஆவாழ தருமநெறி அரசாள வளமெங்குந்
தான்வாழ தருமத்தால் தாளேலோ ரெம்பாவாய் (26)

போற்றி வணங்கப் பொய்மாயப் புறநீக்கம்
போற்றிப் பிறவீனப் போக்கும் புலனாகும்
போற்றிப் பரஞானம் போதிக்கும் பரமாத்மா
போற்றித் துதிமாலை புனைவார் சிரமேற்று
போற்றிப் புவனமெலாம் புண்ணியரே நன்நெறியால்
போற்றி வளர்வார் போக்குவார் வினைமாயம்
போற்றி அகிலாண்டம் பூப்பிக்கும் வேதமலர்
போற்றிப் பாடப் புறப்படவீ ரெம்பாவாய் (27)

வாழ்த்துவா யானக்கா வடிவத்து ஆலயத்தை
வாழ்த்துவா யரசாளும் வண்ணத் திலகத்தை
வாழ்த்துவா யன்னை வாழ்விப்பாள் என்றுள்ளம்
வாழ்த்துவா யென்றும் வணங்கும் அடியாரை
வாழ்த்துவா யினிதாக வைகறைப் பொழுதாக
வாழ்த்துவா யுலகத்து வளத்தைத் தருவாளை
வாழ்த்துவா யன்பாய் வாழ்வாய் எந்நாளும்
வாழ்த்துவா துயில்விட்டு வாழ்வேலோ ரெம்பாவாய் (28)

Related Posts

Share this Post