ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் துதி

ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
ஸ்ரீசந்திர சேகர ஸரஸ்வதியே
பவபய வரமருள் சிவமய நெறிமுறை
பகலுநற் குருபர ஜகத்குருவே (1)

சுத்தா மனதைச் சுத்தி நிறுத்தி
சுத்தம் அளிக்கும் சித்தரிடம்
வித்தா அத்வை தாயருந் தத்துவ
முத்தாய் உணர்த்துந் தத்துகடல் (2)

திங்கள் அணிமணி சங்கர சம்புவின்
மங்கள சங்கம கயிலாயம்
திருப்பணி பொறுப்பணி சிறப்பணி ஏற்றுச்
சிவப்பணி யாற்றிடும் மணிமகுடம் (3)

எச்சிய இருளழி துச்சின இடரழி
உச்சியில் ஏற்றிய மணிதீபம்
ஏகாம் பரசிவ நாகாபர ணணின்
தூதாய் ஜகத்குரு ஆளுமிடம் (4)

உலகம் என்பது கலகமி லாமலேப்
பழகிடப் பிறந்த பெருங் குடும்பம்
பலரும் இதயம் வளரும் உதயம்
பரிந்திட அவதரித்தது குருபீடம் (5)

காலடி மேலொரு காலம் எழுந்தருள்
சீலனும் ஆதி சங்கரனும்
கச்சியில் தட்சிணா லட்சண மூர்த்தியும்
கலந்தருள் பாலிக்கும் குருசரணம் (6)

ஓதறி வானது வேதமென் றானது
மேதகு வித்தை மேதாவி
தீதற வேதியர் கோதிலா தோதிட
சாதக உத்தமத் தவஞானி (7)

மந்திர மாமறை தந்தருள் வாயுரை
எந்திசையே புகழ் தவசீலா
சந்திர சேகர ஸரஸ்வதி அருட்குரு
சிந்தையி லாழ்பர சிவஞானா (8)

மாதவ வேதவி வாதசம் பூரண
சாதன சத்குரு தவராஜா
ஓதவ ராதன கீத உதாரண
நாத சதாசிவ பரிபாலா (9)

எளிமைக் கெளிமையும் இனிமைக் கினிமையும்
எல்லாம் அறிந்த புன்னகையும்
வலிமைத் தலைமையும் வழியைத் தெளிவுற
வகைத்துப் புரிந்த நந்நெறியும் (10)

பெரியவா என்றரு உரியசொல் அழகால்
பேருல கெங்கும் மாறுதலைப்
பேசிய வார்த்தையில் வீசிய நேர்த்தியில்
மாசிலா மனிதருள் மஹா ஆத்மா (11)

தந்திரம் அறிந்துளம் வந்தது சந்நிதி
ஸ்ரீசந்திர சேகர ஸரஸ்வதியே
தாயென நீமன மேயிரங் காயெனில்
சேயெனை ஆதரிப் பவராரே (12)

ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
ஸ்ரீசந்திர சேகர ஸரஸ்வதியே
பவபய வரமருள் சிவமய நெறிமுறை
பகலுநற் குருபர ஜகத்குருவே (13)

Related Posts

Share this Post