காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் துதி

கச்சியின் அமுதைக் கருணையின் விழுதைக் காமகோடி அருட் குருவை
நிச்சய அறிவாய் நேர்த்திடும் பயனை நினைப்பவர் விருப்பருட் தருவை
உச்சியில் மதியை உற்றவன் வடிவை உயர்விஜ யேந்திரர் அடியை
மெச்சிடும் அடியார் மெய்ப்பயன் அடைவார்! மெய்யருட் சிவகுரு பரனே! (1)

செம்மறை விளக்கும் உண்மையின் விளக்கைச் செகமெலாம் ஒளிருமா மதியை
மும்மலம் விலக்க மூட்டிய சுடரை முழுநிறை வருட்பெரு நிதியை
நம்முடன் இருந்து நல்வழி தொடர்ந்து நகுவிஜ யேந்திரர் அடியை
இம்மியும் விலகேன் என்மனம் அகலேன்! எமக்கருள் சிவகுரு பரனே! (2)

காஞ்சியின் ஒளியைக் கதியருள் வழியைக் கரையிலாக் கருணையில் விழியை
வாஞ்சையி லடியார் வாழ்வினி லின்பம் வழங்கிடும் தேன்மழைப் பொழிவை
தீஞ்சுவை அமுதைத் திரளிடும் குருவை திருவிஜ யேந்திரர் அடியை
நீஞ்சிடும் உள்ளம் நிலையுறக் கொள்ளும்! நிறைவருள் சிவகுரு பரனே! (3)

பெரியவர் என்றொரு பெருமிசை மாதவர் பெயர்க்குகு யிசையென வந்தீர்!
உரியவர் என்றருள் உகவெழும் ஆதவன் உருவின ராயருள் தந்தீர்!
விரியுல கெதிலும் சரியறம் புரியும் விமலவிஜ யேந்திரர் அடியைப்
பரிவுறச் சுமந்து பணிவினிற் தொழுவேன்! பயனருள் சிவகுரு பரனே! (4)

முக்குள்ள கிருட்டிண மூர்த்தியர் தவத்தில் முகிழ்த்தவ ரைத்தேர்ந் தெடுத்து
தக்கவர் சிவனார் தலைநில வாமெனத் தனதருள் நிழலினில் இருத்தி
மக்களுக் காமென மாமுனி அளித்த மணிவிஜ யேந்திரர் அடியைச்
சிக்கெனப் பிடித்துச் சிரம்பணிந் தேனென் சிந்தையிற் சிவகுரு பரனே! (5)

அத்துவி தமெனும் அருளொளி முத்தை அருமறைக் கடல்கடைந் தடைந்து
மித்துவி தத்திருள் மெலிந்திட அரிந்து மேன்மைச் சுகவுணர் வடைந்து
புத்துணர் வருளிப் புவிநலம் புரியும் புகல்விஜ யேந்திரர் அடியை
மெத்தெனத் தலையின் மேலணி கின்றேன்! மெய்யருள் சிவகுரு பரனே! (6)

குருமணி சங்கரக் குலவிழு தேயருட் கோபுர மேதிருக் காஞ்சியிலே
திருவளர் மங்களத் தேன்நில வேபுவி தேடிய சத்குரு வாஞ்சியமே!
அருளப யம்பெறவே விழைந்தே அன்புவிஜ யேந்திரர் அடியை
ஒருமன மொன்றிப் பாடுகி றேன்நல மொன்றியருள் சிவகுரு பரனே! (7 )

உண்மையைத் தெளிந்து ஒளியுற இருந்து உலகினில் எவர்க்கும்நல் லானாய்
நன்மைகள் புரிந்து நலமுற விளங்கி நயமிக வாழ்வுற வேண்டும்!
அண்மையில் விளைந்த அற்புதப் பயனை அருள்விஜ யேந்திரர் அடியை
என்மனம் பதித்து இன்புறத் துதித்தேன்! எனிலிரு சிவகுரு பரனே! (8)

பற்றற வாழுவர் கற்றவராக நற்றவத் தாலுயர் வுற்றவ ராக
கற்றற ஆளுமை பெற்றவ ராக மற்றவர் குற்றற வாக
முற்றுற வேகிய பொற்றடி யான முனிவிஜ யேந்திரர் அடியைச்
சற்றக லாதினிச் சரணடைந் தேனே! சங்கர சிவகுரு பரனே! (9)

ஜயஜய சங்கர ஜயஜய சங்கர ஜயஜய எனுமிசை ஒன்றே
பவபயப் பங்கற பழுதற மங்களப் பயனரு ளிடுவது என்றே
தயவுற பரகதித் தகையடைந் திடமனம் தகவுரைப் பதுநல மின்றே
ஜயஜய சங்கர ஜயஜய சங்கர ஜயஜய சிவகுரு பரனே! (10)

Related Posts

Share this Post