Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

சமாதானம்

Read at the Tamil Peace Conference – London

சமாதானம்

தானம் –
தனக்குடமை யானதனைத் தனக்குரிமை யானதனால்
தனக்கேதும் கருதாமல் தந்துவிடும் பேராண்மை!
பயன் கருதாப் பண்பாடு! பகிர்கின்ற உடன்பாடு!

அன்னதானம் –
தானத்தில் இதுதான் சிறப்பு,
என மேன்மக்களின் தீர்ப்பு!
பசித்தோர்க்குப்
புசிக்கத் தருவதினால் இதுஅருமை!
ருசிக்கத்தருவது அதைவிட வெகுபெருமை!
என்றாலும்,
அன்னதானம் முடிந்த அரைநாளிலே
அடிவயிறு நிறைஉணவு
மடிசரியச் சீரணித்தால் –
பசிப்பிணி மீண்டும் பிறக்கும்;
அறப்பணி செய்தது மறக்கும்;
சமநிலை இல்லா
ஒருநிலை இருக்கும்!

அறிவுதானம் –
அதைவிடச் சிறப்பு.
கல்விஎனும் வளர்செல்வம்
அள்ளியிடும் உபகாரம்!
பள்ளியிலும் பயிற்சியிலும்
பகிர்ந்தளிக்கும் நலமாகும்!
மீனுணவு ஓர்நேரப் பசிமீட்டிடும்!
மீன்பிடிக்கும் அறிவாற்றல் வழிகாட்டிடும்!

ஊனுடலை காத்துதவும் அன்னதானம்,
உள்ளறிவை வார்த்துதவும் அறிவுதானம்,
மானுடத்தில் தனிமனித வளர்ச்சிகாண
மகிழ்வோடு செயல்படுத்தல் நியதியாகும்.

தனிமனிதன் வளரட்டும்! வளரும்போது,
தன்னுடைய இனம்வளர உதவவேண்டும்.
தனிமரமோ தோப்பாகும்? ஆகாதன்றோ?
தன்மையினால் மனிதரெலாம் ஒன்றுபட்ட
இனியதொரு அமைப்பன்றோ சமுதாயமாகும்!
இதற்கென்று அமைந்த அறம் சமாதானமாகும்!

சமா என்பது சமநிலை.
மனதால் மதியால்,
குதியா நதியாய் குடம்நிறை நீராய்
நிறைந்து இருப்பது!
நிறைவைக் கொடுப்பது!
மறைகள் குறிப்பது!
வேண்டுதல் வேண்டாமை யாண்டும் இலாது
தூண்டுதல் இன்றித் துணிவுடன் இருப்பது!
பகுத்தறியும் நுண்ணறிவும்
தொகுத்தறியும் தொலைநோக்கும்
உணர்ச்சிகளைக் கடந்த
உயிர்த்துவமும் பக்குவமும்
சாரப் பெற்ற மனதில்
நேரப் பெற்றது!

சமாதானம் என்பது
தன்னுடைய சமநிலையை
மன்னுயிர்க்கு அறிவித்து
இன்னுயிர்கள் யாவர்க்கும்
இதமாய் இருப்பது.
சுகமாய்ச் சுகிப்பது.

மற்ற தானங்களிலே
கொடுப்பவன் ஒருவன் பெறுபவன் ஒருவன்
ஏற்பது இகழ்ச்சி எனத்துணிவோர்க்கு
தானம் இவையோ தாழ்வுணர்வளிக்கும்!
சமாதானத்திலோ
சமநிலையே பரிமாறல்!
கொடுப்பவனும் பெறுவதினால்,
பெறுபவனும் கொடுப்பதினால்,
தாழ்வென்றும் வருவதில்லை!
வாழ்வென்றும் விழுவதில்லை!
ஆதலால்
சமாதானமே தலைசிறந்த தானம்!
சமுதாய வளமாகும் விருந்தாக ஆகும்!

அந்நிலை வரவேண்டுமெனில்
செந்நிலையில் மானுடத்தில்
சீலம் வரவேண்டும்!

நிதானம் என்கின்ற நியதிநம் உள்ளத்தில்
அனாதியான அன்பென்ற வெள்ளத்தில்
சதா வரவேண்டும், சத்திய உரம் வேண்டும்!

சரி! அத்தகைய சாத்வீக அனுபவத்தை
சண்டைகள் நிறைந்த சமுதாயத்தில்
எப்படி விதைப்பது? எங்ஙனம் வளர்ப்பது?

மழலைகளை, மாந்தர்களை மதியற்ற இனமூடர்
விழலைகளைக் களைவதுபோல் வேரறுக்கும் போது,
சமநிலையை –
யார் கொடுத்து, யார் பெறுவது?
ஒரினம் –
வேறினத்து வேரே வேண்டாமென வெறுத்து
தூரெடுக்கத் துணிந்தால்,
துணைவருவது என்ன?
அங்கே யாரிடம் தோன்றும் சாந்தி?
அவ்விடத்தில் நமக்கு –
கோபம் வரவேண்டாமோ?
வேகம் வரவேண்டாமோ?
ஆயுதம் எடுத்துதவி அல்லல் களையாமோ?
வெற்றி வேண்டாமோ?
வெகுமதியாய் அமைதி எனும்
தகுதியினி வேண்டாமோ?
தக்கவழி ஏதிதற்கு?

உண்மைதான்!

சமாதானம் என்பது
சண்டைக்குப் பின்னே வருவது எனநினைத்தால்
அது மடமை!
ஒன்றின் முடிவால் ஒன்று வந்தால்,
அது வெறும் “விளைவு” அல்லவா?
சமாதானம்
மானுடத்தின் “இயல்பு” அல்லவோ?
மனித உணர்வல்லவோ?
சமாதானம் என்பதனை
அடைய வேண்டிய குறிக்கோள் எனப்பார்க்காமல்
அணுக வேண்டிய வழிக்கோடு எனப்பார்த்தால்
சண்டைகளுக்கிடையேயும்
ஓர் சன்னல் திறக்க முடியும்!
நம் இன்னல் விலக்க முடியும்!

கோபம் வேண்டும்!
“ரௌத்ரம் பழகு” எனப்பாடிச் சினந்தான் மாகவி பாரதி!
மருத்துவர் கரத்தில் இருக்கும் கத்திபோல்
உருத்திரம் இருப்பின்
நோயறுக்கும்! உயிர் கொடுக்கும்!
நோகாமல் உடனிருக்கும்!
மாறாக,
மதயானை உருவாக சினமானால்
அதமாகும், அழிவாகும்!
அத்தனையும் இழிவாகும்!
இனம் காக்க, மொழிகாக்க
இணைந்தோரின் உயிர்காக்க
கோபம் வேண்டும் –
ஒர் காரிய உணர்ச்சியாக! காழ்ப்புணர்ச்சியாக அல்ல!

அமைதியெல்லாம் சமாதானமாகாது!
இடும்வனத்தில் படுஅமைதி,
இருக்கிறதா சந்தோஷம்?
சிங்கத்தின் முன்னே சிறுமான் பதுங்கையிலே
அங்கிருக்கும் அமைதி! எங்கிருக்கும் சமாதானம்?

சமாதானம் என்பது
சமமாய் இருநிலை இருத்தி ஒருநிலைப்படுதல்!

ஆகையால்,
வெற்றி என ஒரினத்தை வேரறுத்துக் கிடைக்கின்ற
சக்தியிலே துளியுமில்லை சமாதான சாராம்சம்!
வெற்றி மற்றவரின் வீழ்ச்சியிலே மட்டுமல்ல!
விரோதத்தை விரோதிக்கும் சூழ்ச்சியிலும் இருக்கிறது!
உணர்ச்சிகள் எரியட்டும் – ஊதுபத்தி அளவாக!
உயர் அறிவு பரவட்டும் – உச்சிப் பகலாக!
ஆன்ம பலத்தை ஆளுமைப்படுத்தி
மேன்மைப் படுத்தும் மெய்யான போர்க்கோலம்
ஆயுதம்விடவும் ஆயுதத்தை விடவும்
பாயும்! பாரெல்லாம் பக்கபல மாக்கிவைக்கும்!
பணிவு என்பது –
பலசாலிக்கே உரிய துணிவு!
பணியாமை –
மூர்க்கமும் மூடமும் இணைகின்ற அழிவு!
உயிர் இழந்த உடம்பன்றோ விரைக்கும்?
உயிர்த்திருக்கும் நமக்கெதற்கு வீணான முறைப்பு?

வலுநமக்கு இருப்பதால் வாய்மை உடனிருப்பதால்
வருங்கால சமுதாய நலங்காண நினைப்பதால்,
தவிர்க்கமுடியாத தர்மயுத்தம் நடந்தாலும்
அவிர்ப்பாகமாக நம்ஆத்திரத்தை கொடுத்திடுவோம்!
பலத்தாலும் அறிவாலும் பரந்த தொலை நோக்காலும்
முன்வைக்கும் காலடியில் முதலுரிமை அமைதிஎனப்
பின்னமில்லாப் பேச்சால் பேசுவன பேசிடுவோம்!
கொடுத்து வாங்குகின்ற குவலயத்து வியாபாரம்
கெடுத்து விடாமல் கேள்விபதில் மாற்றிடுவோம்!

கயல்விளயாடும் வயல்நிலைத்த நாட்டில் – இனப்
புயலடித்த தெலாம் போதும், புத்துயிரைப் பெற்றிடுவோம்!
சமாதானம் எனும் சாதனையைப் பெற்றுவிட்டால்
சடுதியிலே முன்னேற்றம் சாதிக்க முடியாதா?
இகழ்ந்தாரும் புரிந்தெம்மை இதயத்தால் வரவேற்றுப்
புகழ்தாரம் பூணுகின்ற புதுமைசெய்ய முடியாதா?

மீ. ராஜகோபாலன்
1 அக்டோபர் 2006

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post