Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

பாரதியின் குயில்பாட்டு

தமிழுலகம் ஆய்கின்ற புதிர்ப்பாட்டு

Presented at the book release function: “Bharathiyin Kuil Pattu ” by Karunanatharaja

அன்பர்களே

ஆன்ம திருப்திக்காய் ஆழ்மனதின் கவித்துவத்தை
ஈன்று அதனொளியை இல்லத்துக் குடத்துக்குள்
சான்று ஏதுமின்றி சமர்த்தாகக் காக்கும் என்னை.
“மூன்று புத்தகத்து முனைத்தேனைக் குடியுங்கள்
வந்து இம்மாலை வண்ணமிகு கனகதுர்க்கை
அன்னை காலடியில் அமர்ந்துள்ள அன்பரிடம்
புத்தகத்தில் பூத்த புலனுருக்கும் தமிழ்த்தொண்டை
தத்துவத்தை நீங்கள் தயங்காமல் சொல்க” என
வாய்ப்பரிய வாய்ப்பை வாசல்வந்து தந்துவிட்ட
ஆய்த்த கவிஞன், அருந்தமிழன், பேராய்வு
தோய்த்த வார்த்தைகளை, துல்லிய உணர்ச்சிகளை,
போரிடரில் ஈழம் புண்பட்ட காயத்தை
நேரெதிரில் சந்தத்தீ நிறுவித்தரும் மாயத்தை,
ஆன்மாவில் விதைத்து ஆக்கிவரும் புலவன்,
கருணா னந்த ராஜன் கவிஞன் பேராய்வாளன்
வள்ளுவனின் காதல் எனும் வார்த்த காவியத்தால்
எல்லையிலா பக்தியினால் ஈழத்தாய் சபதத்தால்
குயில்பாட்டின் தத்துவ மர்மக் கவித்துவத்தால்
அன்பென்ற கீதமும், அன்னை நிலச்சோதனை
வெல்கின்ற நாதமும், அமரகவி பாட்டறிந்து
சொல்கின்ற வேதமும் சோடனையாய் இன்றுஇவரை
வேதியராய், திராவிடத்து வேர்நனைக்கும் பெருமழையாய்
காரியத்தால் உயர்வாக்கும் காவியத்தால் பேறுபெற்ற
ஆரியனாய் வரம்பில்லா ஆய்கலைஞன் ஆக்கியதே!
இலக்கினை இதுவென இயம்பிடும் இலக்கியன்
உளத்தமிழ் உணர்வினால் உள்ளம் கலக்கியன்
எத்தகைய வாய்ப்பை எனக்குக் கொடுத்துவிட்டார்?
மெத்தஎன் உள்ளத்தில் மெய்யான நன்றி அய்யா!

பாரதியின் குயில்பாட்டு –
பலகாலம் தமிழுலகம் ஆய்கின்ற புதிர்ப்பாட்டு
பாரதியே சாரதியாய், பாவலரை ஆய்வுஎனும்
சாலையிலே ஓட்டிச் சந்திக்கும் சுவைப்பாட்டு!
முதலில் குயில் பாட்டின் முழுக்கதையை நாம் அறிவோம்.

பூஞ்சோலை பூங்காற்று புள்ளினங்கள் விலங்கினங்கள்
ஊஞ்சலிடும் இளங்காற்று ஓசையிசை அவ்விடத்தே;
சித்தத்தை லயப்படுத்திச் சீரமைத்துக் கவனித்தால்
மொத்த சுகமும் மோதுகின்ற தேனலையாய்
தித்திக்கும் குரல் கேட்கும் தீங்குரலில் சோகத்தை
நித்தம் மறக்கும் நிலையான மோகத்தில்
வித்தையென குயிலொன்று விளைக்குமொரு சங்கீதம்.
பார்த்து நின்ற பாரதிக்கோ பறவையின் மேல் காதல்;
காத்திருந்து குயில் ஓர்நாள் கன்னியென ஆனால் தான்
சேர்த்ததணைத்து கவித்துவத்தில் சென்றிணைந்து கொள்வதென…..
பார்த்திளைத்து முகிழ்த்திருந்தான் பாரதி மாகவிஞன்!

மறுநாள் அங்கே மாறுபட்ட காட்சி;
குரங்கொன்றைச் சார்ந்து குயிலதுவோ கூவும்;
“நீயே மேலான நிலையன் ஆதலினால்
நானே உனைநாடி நல்லிசையைப் பாடுவதாய்….”
குரங்கோ குயில்தன்னைக் கூடுமென ஆர்ப்பரித்துக்
குதிக்கும், தன் சேட்டைக் கும்மாளத்தால் எங்கும்
மிதிக்கும் மண்பெயர்த்து மேலெல்லாம் இறைக்கும்;
பார்த்திருக்கும் பாரதிக்கோ ஆதங்கம், அவமானம்!
கூர்த்திருக்கும் குறுவாளைக் குறிபார்த்து எரிந்துவிட
மந்தி மறையும், அந்தி மறைக்கும்.

மற்றொருநாள் அங்கே மாடொன்று மேயும்
சற்றும் சளைக்காமல் சங்கீதக் குரலெடுத்து
பெட்டைக் குயில் பாடும், பெருமானாய் ஒருமாட்டை
இட்டப்படுத்தி இன்பமுற வரவேற்கும்.
பார்த்திருக்கும் பாரதிக்கோ பதைபதைக்கும் மனம் வதைக்கும்!
நேற்று ஒருதோற்றம், இன்று ஒரு மாற்றம்
காற்றை இசையாக்கும் கவின் குயிலின் தடுமாற்றம்!
வாடிய பாரதி சூடிய வாளை ஏவியபோது ஓடிடும் மாடு…

நான்காம் நாள் மனம் வெறுத்து நம்தலைவன் பாரதி
கூனாக மனம் கோண குறிப்பின்றி நடக்கையிலே
வானத்தில் குயில்ப்பறவை வழிகாட்டிச் செல்வது போல்
கூடப் பறக்கும், தான் நின்றால் அது நிற்கும்,
தான் நடக்க அது பறக்கும்.,
“தாங்க முடியாமல் தடுமாறும் மனமெதற்கு குயிலே” எனக்கவிஞன்
ஓங்க வினா தொடுக்க, உண்மையது முன்பிறவிச்
சோகம் சொல்வேனென சொல்லியது குயில்பேடு

“முற்பிறவியிலே நான் சின்னக்குயிலி;
பரந்த தமிழ்நாட்டின் பரவும் விந்தியத்தின்
வேடன் வீரமுருகன் இளம் மகவு;
மாடன் எனும் மனிதனுக்கு ஓர்நாள்
காதல் இல்லாமல் கடமையினால் கைப்பிடிக்க
உறுதி தந்துவிட்டேன் உபத்திரவம் பின்கடிக்க!
குரங்கன் என்பானும் குடும்பத்தார் உடன்பாட்டால்
இணங்கி எனைமணக்க ஏற்பாடும் ஆனதய்யா!
காதலினால் இல்லை! கடமையினால்; அல்லஅல்ல
மடமையினால், ஏதோ மயக்கத்தால் யாசகத்தால்!
இப்படியோர் ஏற்பாடு! எனக்கில்லை உடன்பாடு!
பின்பொருநாள் இளவரசன் பேரழகன் கண்பட்டான்;
கண்உண்டான்; கண்ணுண்டோம்; காதல்வசப்பட்டு
பெண்பட்டுப் போனதனால், பேசாது இணைகையிலே
புண்பட்டாற் போலே மாடனும் குரங்கனும்
வந்துவிட்டார் அங்கு, வாள்எடுத்து எறிந்திட்டார்.
இளவரசன் இடைவாளை எடுத்தவரைக் கொன்றாலும்
உடைபட்டு என்மடியில் உறுதியிட்டு மறைந்துவிட்டான்
‘என்னாளும் நீயே என்மனையாட்டி ஆதலினால்
பின்னாளும் நாமிணைவோம் காதலினால்,
அல்ல இந்தச் சாதலினால்..’
அதனாலே நானிந்த அவனியிலே குயிலாகி
எதனாலோ என் தலைவன் இன்னும் எனைச் சேரவில்லைஎன
காத்திருந்தேன்” எனக் கவிக்குயில் கூறும்!

பார்த்திருந்த பாரதி – ஆத்மாவில் இளவரசன்!
ஆதலினால், காதலினால், முத்தம் கொடுக்க,
குயில் முழுவடிவப் பெண்ணாக,
சத்தியமாய் சக்தியுரு நித்தியமாய் ஆனதய்யா!

இக்கவிதைக்குப் பலரும் பலவகைப் பொருள் தந்தாலும்
பளுவான பாரதியின் பதங்களுக்குள் பொருள்நெய்த
களுவாஞ்சிக்குடி பிறந்து கற்றதனால் நெடிதுயர்ந்த
நண்பர் கருணானந்த ராஜன் அவர்கள்
நாட்டிவைத்த ஆய்வுரையில் காட்டிநிற்கும் பொருள்அரிது
சின்னக்குயிலான பெண்மணியும், குயில் பேடும்
“சித்தம்” என்னும் ஆழ்மனத்து கவித்துவம்!
மாடன் என்பானும் மாடாகி நின்றானும்
வேடம் தரித்து வேண்டுவன நோக்கி
இழுத்துச் செல்கின்ற புற அறிவு, “புத்தி”!
குரங்கும் குரங்கனும் குறிப்பின்றி தவிக்கின்ற
அங்கும் இங்கும் அலைபாயும் “மனம்”,
ஆர்ப்பாட்டம் செய்கின்ற அரைகுறைப் புலவரினம்!
ஆத்மபலமெல்லாம் ஆன்றவிந்த சுதந்திரமே
அதற்குரிய வித்து கவித்துவத்தால் என உணர்ந்து
சித்தம் எனும்குயிலைச் சேரத் துடிக்கின்ற
புத்தன் இளவரசன் புலவன் பாரதிதான்!

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post