Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

இயற்கை

இயற்கை –

இயல்பென வரித்த இறையவன் தூரிகை
இயக்கிட விரித்த இப்புவி காரிகை

வனக்கூந்தல் மலைக்கொங்கை வார்த்தகடல் உடற்சேலை
புறப்பாலை அருட்பாதம் பூத்தவயல் பேருதரம்
நதிஉதிரம் நகைவளங்கள் நயனங்கள் நந்தவனம்
ஜதிநாசி இளங்காற்று சப்தங்கள் இனியமொழி

விரல்பரந்த கண்டங்கள் வெண்நகமோ கடலோரம்
குரல்புள்ளின் குழலோசை கோபவிழி எரிமலைகள்
பருவங்கள் குணமாற்றம் பார்வைபகல் போர்வைஇருள்
உருவங்கள் எலாமுனது உதிருமுடல் படர்முடிகள்

மண்மாதா மணிவயிறு மாசுஇலாக் கருவூலம்
பொன்மணிகள் புகைவாயு பூத்தகுடற் குகைவரைகள்
ஆர்த்தமுகம் போர்த்தமுகில் ஆழ்ந்துறங்க நிலாப்பூச்சு
கோர்த்தமணி விண்மீன்கள் கோலமிடும் நீள்வானம்

இயற்கைஎன இருக்கின்ற இனியவளே பூமாதா!
உயிற்குயிராய் உள்ளுணர்வாய் உனக்குள்யாம் வசிக்கின்றோம்!
அறிவிதனை ஆய்ந்துணர்ந்தே ஆகமகங்கள் மறைவேதம்
நிறைவிலிவை இறைவனென நீண்டபுகழ்த் துதிஓதும்!

பனித்துளியுள் தீப்பொறியை பாலைமணற் புனலுருவை
கனிக்குள்மறை மாமரத்தை காலம்வரை ஜாலத்தை
இனிப்படிக்க முயல்கின்றோம்! இயற்கையினை மதிக்கின்றோம்!
பிணித்திருக்கும் பேராசைப் பேய்விலக்கி உதிக்கின்றோம்!

விஞ்ஞான வளர்ச்சியியென விஷவித்துப் போடாமல்
எஞ்ஞான்றும் உன்மேனி ஏற்கும்சுகம் வளர்க்கின்றோம்!
இப்பொழுது, இந்நேரம், இந்தஇடம், இந்நிகழ்ச்சி
எப்பொழுது திரும்பவரும் எனத்தெரிய மாட்டாதால்

அத்தனையும் அனுபவித்து அமைதிசுக உறுதிபெற
நித்தமுனை நினைத்து நின்னலனில் சுகிக்கின்றோம்!
காணிநிலம் வளர்த்தாலே கைவல்யம் வருமென்ற
ஞானவரம் தந்ததனால் நானியற்கைச் சிறுதூசு!

நான்இயற்கை, நான்இயல்பு நான்இறையின் நற்சிதறல்
ஏனெனக்கு மறந்ததம்மா? எனக்குஇனிப் புரிந்ததம்மா!

மீ. ராஜகோபாலன்,
8 ஏப்ரல் 2007

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post